What is Meditation? How to do it? (3) Video
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (4)
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (2)

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (3) 

~~~~~~~~

உரையாடல் 371.

பக்தர்.: தியானம் என்றால் என்ன? 

மகரிஷி.: ஒரே ஒரு எண்ணத்தை மட்டும் பிடித்துக் கொண்டு, மற்ற எல்லா எண்ணங்களையும் புறக்கணிப்பது தான் தியானம். 

பக்தர்.: எதன் மேல் தியானம் செய்ய வேண்டும்? 

மகரிஷி.: உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதன் மேல். 

பக்தர்.: சிவன், விஷ்ணு, காயத்ரி – இவை எல்லாம் ஒரே விதமாக செயல் விளைவுகள் உடையவை என்று சொல்லப்படுகிறது. எதன் மேல் நான் தியானம் செய்ய வேண்டும்?

மகரிஷி.: நீங்கள் மிகவும் விரும்புவதன் மேல். விளைவுகளில் இவை எல்லாமே சமம் தான். ஆனால் நீங்கள் ஒன்றின் மீது மட்டும் கவனம் செலுத்த வேண்டும். 

பக்தர்.: தியானம் செய்வது எப்படி?

மகரிஷி.: உங்களுக்கு மிகவும் பிடித்ததன் மேல் ஒருமுக சிந்தனை செய்யுங்கள். ஒரே ஒரு எண்ணம் மட்டும் நிலவினால், மற்ற எண்ணங்கள் அகன்று போகும், கடைசியில் அடியோடு அழிந்து போகும். பல் வகைமை இருக்கும் வரையில் கெட்ட எண்ணங்கள் உள்ளன.  அன்புள்ள பொருள் நிலவும்போது, நல்ல எண்ணங்கள் மட்டுமே இருக்கின்றன. எனவே, ஒரே ஒரு எண்ணத்தை மட்டும் பொருத்தி வைத்துக் கொள்ளுங்கள். தியானம் தான் பிரதான பயிற்சி. 

தியானம் என்றால் போராட்டம். தியானம் செய்ய ஆரம்பித்தவுடனே, மற்ற எண்ணங்கள் எல்லாம் கூடி, வலிமையாகி , நீங்கள் பிடித்து வைத்துக் கொள்ள முயலும் அந்த ஒரே எண்ணத்தை மூழ்கடிக்க முயலும். மேலும் மேலும் பயற்சி செய்வதால், சிறிது சிறிதாக நல்ல எண்ணமானது வலிமையாக வேண்டும். அது பலமடைந்த பிறகு, மற்ற எண்ணங்கள் பறந்து சென்று விடும்.  

இத்தகைய இராஜரீகமான போர் தான் தியானத்தில் எப்போதும் நடைபெறுகிறது. 

ஒருவர் துயரத்தை அகற்ற விரும்புகிறார். அதற்கு மன அமைதி தேவை. அதன் பொருள் என்னவென்றால், பலப்பல விதமான எண்ணங்களினால் எழும் மனக் கலக்கம் இல்லாமல் இருக்க வேண்டும்.  மன அமைதி தியானத்தினால் தான் கொண்டு வரப்படுகிறது. 

பக்தர்.: பிறகு பிராணாயாமம், மூச்சுக் கட்டுப்பாடு ஏன் தேவை? 

மகரிஷி.: நேரடியாக எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியாத ஒருவருக்கு பிராணாயாமம் உள்ளது. அது ஒரு காரின் பிரேக், (அதாவது ஒரு தானுந்துவின் நிறுத்துக் கருவி) போல் உதவுகிறது. ஆனால், அதனுடன் ஒருவர் நின்றுவிடக் கூடாது; வெளிப்புற தாக்கங்களிலிருந்து பின்வாங்குதல், ஒரே ஒன்றின் மேல் ஆழ்ந்த சிந்தனை செய்தல், தியானம் செய்தல் – இவற்றில் எல்லாம் அவர் மேலும் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.  தியானம் நிறைவானபின், மனம் பிராணாயாமம் இல்லாவிட்டால் கூட கட்டுப்பாட்டில் வரும். 

ஆசனங்கள், உடல் தோற்றப்பாடுகள் பிராணாயாமத்திற்கு உதவுகின்றன. அது முறையே தியானத்திற்கு உதவுகிறகு. மன அமைதி விளைகிறது. இதன் காரணமாகத் தான் ஹத யோகா உள்ளது.

சிறிது நேரத்திற்குப் பிறகு மகரிஷி தொடர்ந்து பேசினார். 

தியானம் நன்றாக நிலைநாட்டப்பட்ட பின், அதை விட்டு விட முடியாது. நீங்கள் வேலையில் ஈடுபட்டிருந்தாலும், விளையாட்டிலும் கேளிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தாலும், அது தானாகவெ சென்றுக் கொண்டிருக்கும். அது தூக்கத்தில் கூட நிலவும். ஒருவருக்கு தமது தன்னியல்பாக அமைவது போல் தியானம் மிகவும் ஆழமாகப் பதிய வேண்டும்.  

பக்தர்.: தியானத்தின் முன்னேற்றத்திற்கு என்ன சடங்கு அல்லது செயல்பாடு தேவை? 

மகரிஷி.: தியானமே தான் செயல்பாடு, சடங்கு, முயற்சி – இவையெல்லாம் ஆகும். அது எல்லாவற்றையும் விட மிகவும் தீவிரமானதும், சக்தி வாய்ந்ததும் ஆகும். வேறு முயற்சி எதுவும் தேவையில்லை. 

பக்தர்.: ஜபம் தேவையில்லையா?  

மகரிஷி.: தியானம் என்பதே பேச்சு இல்லையா? பிறகு ஜபத்திற்கு என்ன அவசியம்? தியானம் செய்யப் பெற்றுவிட்டால், வேறு எதுவுமே தேவையில்லை. 

பக்தர்.: மௌன விரதம் கடைப்பிடிப்பது உபயோகமாக இருக்காதா? 

மகரிஷி.: விரதம் என்பது ஒரு விரதம் தான், அது தியானத்திற்கு ஓரளவுக்கு உதவலாம். ஆனால், வாயை மூடி வைத்துக் கொண்டு, மனதை கலவரமாக கண்டபடி ஓட விடுவதால் என்ன நன்மை? மனம் தியானத்தில் ஈடுபட்டிருந்தால், பேச்சுக்கு என்ன தேவை?தியானத்தைப் போல நல்லது வேறு எதுவுமே இல்லை. ஒருவர் விரதம் எடுத்துக் கொண்டு பின் செயல்களில் ஈடுபட்டால், விரதத்தின் பயன் என்ன? 

பக்தர்.: ஞான மார்க்கம், ஆன்ம அறிவு பாதை, என்றால் என்ன?

மகரிஷி.: நான் எவ்வளவு காலமாக இதைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்! ஞானம் என்றால் என்ன? ஞானம் என்றால் மெய்மையை அறிந்து உணர்வதாகும். அது தியானத்தால் சாதிக்கப் படுகிறது.  மற்ற எண்ணங்கள் எல்லாம் இல்லாமல், மெய்மையை மட்டும் தொடர்ந்து பிடித்துக்கொள்ள தியானம் உதவுகிறது. 

பக்தர்.: இத்தனை வித கடவுள்கள் ஏன் சொல்லப்படுகின்றன? 

மகரிஷி.: உடம்பு ஒன்று தான். ஆனாலும், எத்தனைப் பணிகள் அதனால் செய்யப்படுகின்றன. இந்தப் பணிகளின் மூலாதாரம் ஒன்றே ஒன்று தான். கடவுள்களும் அதே போலத்தான். 

பக்தர்.: ஒரு மனிதர் ஏன் துயரத்தால் துன்புறுகிறார்? 

மகரிஷி.: துயரத்திற்கு, பலப் பல விதமான எண்ணங்கள் தான் காரணம். எண்ணங்கள் எல்லாவற்றையும் ஒன்று திரட்டி, ஒருங்கிணைத்து, ஒரே ஒரு அம்சத்தின் மேல் பொருத்தி வைத்துக் கொண்டால், துயரம் இருப்பதில்லை, இன்பம் தான் விளைகிறது. அதற்குப் பிறகு, “நான் செய்கிறேன்” என்னும் எண்ணம் கூட இருப்பதில்லை. அதோடு, செயல்களின் விளைவுகள் மீதும் நோக்கம் இருக்காது. 

~~~~~~~~

உரையாடல் 328 

மகரிஷி.: மனம் என்றால் என்ன? கண்டுபிடியுங்கள். அதைத் தேடினால், அது தானாகவே மறைந்து விடும். ஏனெனில், அதற்கு உண்மையான உள்ளமை இல்லை. அது எண்ணங்களால் அமைக்கப் பட்டதாகும். எண்ணங்கள் நின்றவுடன், அது மறைந்து விடும். 

பக்தர்.: பிறகு நான் இருப்பேனா? 
மகரிஷி.: தூக்கத்தில் உங்கள் அனுபவம் என்ன? எண்ணங்கள் இல்லை, மனம் இல்லை, ஆனால் நீங்கள் மிஞ்சி இருந்தீர்கள். 

பக்தர்.: நான் தியானம் செய்ய முயலும்போது என் மனம் அலைவதால், என்னால் தியானம் செய்ய முடியவில்லை. நான் என்ன செய்வது? 

மகரிஷி.: உங்கள் கேள்வியே பதிலையும் அளிக்கிறது. முதலில், உங்கள் கேள்வியின் முதல் பகுதியை எடுத்துக் கொண்டால், “நான் ஒருமுக சிந்தனை செய்கிறேன், ஆனால் வெற்றி அடைவதில்லை” என்று நீங்கள் சொல்கிறீர்கள். ‘நீங்கள்’ என்றால் ‘சுய நிலை ஆன்மா’ என்று பொருள். எதன் மீது நீங்கள் தியானிக்கிறீர்கள்? எங்கு நீங்கள் தோல்வியடைகிறீர்கள்? ஒரு ஆன்மா மற்றொரு ஆன்மாவை தியானிக்க, இரண்டு ஆன்மாக்கள் உள்ளனவா? இப்போது தொல்வியைப் பற்றி குறை சொல்வது எந்த ஆன்மா?  இரண்டு ஆன்மாக்கள் இருக்க முடியாது. ஒரே ஒரு ஆன்மா மட்டுமே உள்ளது. அது ஒருமுக சிந்தனை செய்ய வெண்டிய அவசியமில்லை.

பிறகு நீங்கள், “பின் ஏன் சந்தோஷம் இல்லை?” என்று கேட்கிறீர்கள். தூக்கத்தில் நிலவிய ஆன்மாவாக இருப்பதைத் தடுப்பது எது? அது அலைபாயும் மனம் தான் என்று நீங்களே ஒப்புக் கொள்கிறீர்கள். மனதைக் கண்டுபிடியுங்கள். அது அலைபாய்வது நிறுத்தப்பட்டால், நீங்கள் நிலையான ஆன்மா தான், அதாவது உங்களுடைய “நான்” என்னும் ப்ரக்ஞை உணர்வு தான், என்று கண்டுபிடிக்கப்படும். அது அறிவுக்கும் அறியாமைக்கும் அப்பால் உள்ளது. 

மனதை ஆழ்ந்து நோக்கினால், எண்ணங்கள் நிற்கின்றன. மன அமைதி விளைகிறது. அது தான் உங்களுடைய உண்மைத் தன்மை. 

தியானம், ஆழ்ந்த சிந்தனை, மனதில் செய்யும் ஜபம், இவையெல்லாம் ஒன்றே தான். பல எண்ணங்களுடன் உறவாடுவது நின்றால், மற்ற எல்லா எண்ணங்களும் இன்றி ஒரே ஒரு எண்ணம் மட்டும் நிலவுகிறது. இது தான் தியானம் அல்லது ஆழ்ந்த ஒருமுக சிந்தனை என்று சொல்லப்படுகிறது. ஜபம், தியானம், இவற்றின் குறிக்கோள் பலவித எண்ணங்களைத் தவிர்த்து, ஒரே ஒரு எண்ணத்தை மட்டும் வைத்துக் கொள்வதாகும். பிறகு அந்த எண்ணமும் அதன் வரையற்ற, அறுதியான பிரக்ஞை உணர்வான, ஆன்மாவான மூலாதாரத்தில்  மறைந்து விடுகிறது. மனம் ஜபத்தில் ஈடுபட்டு, பிறகு தன்னுடைய மூலத்திலேயே மூழ்கிவிடுகிறது. 

மற்ற எண்ணங்களுடன் இருப்பதால், ஒரே ஒரு எண்ணம் தொடர்ந்து இருப்பதை நீங்கள் தியானம் அல்லது ஆழ்நிலை தியானம் என்று சொல்கிறீர்கள். அந்த தியானம் முயற்சியின்றி எளிதாக ஆகும்போது, அது உங்கள் உண்மைத் தன்மை தான் என்பது கண்டுபிடிக்கப்படும். 

~~~~~~~~

தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (4)
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (2)
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (3)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!