What is Meditation? How to do it? (2)
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (3)
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (1)

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (2) (கட்டுரை)

 

“நான் யார்?” (தியானத்தைப் பற்றிய சில அறிவுரைகள்)

~~~~~~~~

மனம் அமைதி அடையும்போது மூச்சு அடங்குகிறது. மூச்சு அடங்கும்போது, மனம் அமைதி அடைகிறது. பிராணாயாமம் (சுவாசக் கட்டுப்பாடு) என்பது மனதை அமைதியுறச் செய்ய ஒரு பயிற்சி தான்.  

சுவாசக் கட்டுப்பாட்டைப் போல், கடவுளின் உருவங்களின் மீது தியானம் செய்வதும், மந்திரங்களை உரைப்பதும், உணவைக் கட்டுப்படுத்துவதும், மனதை அமைதியுறச் செய்வதற்கான சகாயங்கள் தான்.

கடவுளின் உருவங்களின் மீது தியானம் செய்வதாலும், மந்திரங்களை உரைப்பதாலும், மனம் ஒருமுகமாகிறது. மனம் எப்போதும் அலைந்துக் கொண்டே தான் இருக்கும். ஒரு யானையின் தும்பிக்கைய்யில், பிடித்துக் கொள்ள ஒரு சங்கிலியைக் கொடுத்தால், அது எப்படி அதைப் பிடித்துக் கொண்டே கூடவே வருகிறதோ, அப்படியே, மனம் ஒரு நாமத்துடனோ, ரூபத்துடனோ மும்முரமாக ஈடுபட்டிருக்கும்போது  அதை மட்டுமே பிடித்துக் கொண்டிருக்கும். எண்ணிலங்கடங்காத எண்ணங்களின் வழியாக மனம் விரிவடையும் போது, ஒவ்வொரு எண்ணமும் பலவீனமாகிறது. ஆனால், எண்ணங்கள் மனதில் தீர்ந்து போனபின், மனம் ஒருமுகமாகவும், வலிமையாகவும் ஆகிறது. இத்தகைய மனதுக்கு, சுய விசாரணை எளிதாக ஆகும். 

எல்லா கட்டுப்பாடு விதிகளிலும், நல்ல தரமான உணவை, மிதமான அளவில், உண்ணுவதைச் சார்ந்த விதிகள் தான் சிறந்ததாகும். இந்த விதியை பின்பற்றுவதால், மனதின் நல்ல சாத்வீகமான தன்மை அதிகரிக்கும்; இது சுய விசாரணைக்கும் உபயோகமாக இருக்கும். 

~~~~~~~~

ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள்

~~~~~~~~

உரையாடல்  52.

ஒரு வருகையாளர் கேட்டார் : “என் மனம் இரண்டு மூன்று நாட்களுக்கு தெளிவாக இருக்கிறது. பிறகு இரண்டு மூன்று நாட்களுக்கு மந்தமாக மாறி விடுகிறது. இப்படியே மாறிமாறி செல்கிறது. எதனால் இப்படி ஆகிறது?

மகரிஷி.: இது இயல்பானது தான். இது ஒளிமிகுந்த நல்ல குணம், அதிகமாக அலையும் குணம், மந்தமான குணம், இவை மூன்றும் மாறிமாறி செயல்படுவதாகும். மந்தமான குணம் இருக்கும்போது அதற்காக வருந்தவேண்டாம். ஆனால் சாத்வீகமான ஒளிர்வு இருக்கும்போது, அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு, அதன் பலனை சிறந்த முறையில் உபயோகித்துக் கொள்ளுங்கள். 

பக்தர்.: தியானம், ஆழ்நிலை சிந்தனை, என்றால் என்ன?

மகரிஷி.: சாதாரணமாக, தியானம் என்ற சொல், ஒரு பொருளைப் பற்றி ஆழ்ந்து சிந்திப்பதைக் குறிப்பிடுகிறது. ஆனால், நிதித்தியாசனம், அதாவது ஆழ்ந்த உள்முக விசாரணை என்பது, ஆன்ம சுய சொரூபத்தைப் பற்றிய சுய விசாரணைக்கு உபயோகிக்கப்படுகிறது.  விழிப்பு, கனவு, தூக்கம் என்னும் மூன்று நிலைகள், சொரூப ஞானம் உண்டாகும் வரையில் விடாமல் இருந்து வருகின்றன. சாதகரைப் பொருத்தவரையில், தியானமும் நிதித்தியாசனமும் ஒன்றே தான். ஏனெனில் அவை இரண்டும் மூன்று நிலைகளைச் சார்ந்து உள்ளன. அவை பக்தியை ஒத்ததாகும். 

பக்தர்.: தியானம் எப்படி செய்யப்பட வேண்டும்?

மகரிஷி.: தியானம் மனதை ஒருமுகபடுத்துகிறது. மிகுந்த வலிமையான ஒரு கருத்து மற்ற எல்லாவற்றையும் அகற்றி வைக்கிறது. மனிதருக்கு மனிதர் தியானம் வேறுபடுகிறது. சிலருக்கு அது கடவுளின் ஒரு அம்சத்தின் மீது இருக்கலாம், அல்லது ஒரு மந்திரத்தின் மீது இருக்கலாம், அல்லது ஆன்ம சொரூபத்தின் மீது இருக்கலாம். இப்படி பலவிதம். 

~~~~~~~~

உரையாடல் 462.

பெண்மணி.: நான் நோயுற்றேன். என்னால் தியானம் செய்ய முடியவில்லை. அதனால் நான் மனச்சோர்வு அடைந்தேன். 
மகரிஷி.: “என்னால் ஆழ்ந்து சிந்தனை செய்ய முடியவில்லை” என்ற இந்த எண்ணமே ஒரு தடங்கல் தான். ஏன் இந்த எண்ணம் எழவேண்டும்?

பக்தர்.: ஒருவர் 24 மணி நேரமும் எண்ணங்கள் இல்லாமலே இருக்க முடியுமா? நான் தியானமே செய்யாமல் இருக்க வேண்டுமா? 
மகரிஷி.: “மணி நேரங்கள்” என்றால் என்ன? அது ஒரு கருத்து தான். உங்களுடைய ஒவ்வொரு கேள்வியும் ஒரு எண்ணத்தால் தான் தூண்டிவிடப்படுகிறது. 

உங்களுடைய தன்மை சாந்தியும் சந்தோஷமும் ஆகும். சொரூப ஞானம் பெறுவதற்கு உங்கள் எண்ணங்கள் தான் தடங்கல்கள்.  ஒருவருடைய தியானம் அல்லது ஆழ்ந்த சிந்தனை என்பது தடங்கல்களை நீக்குவதற்கு தானே தவிர சொருபத்தைப் பெற அல்ல. யாராவது தன் சொரூபத்தை விட்டு அகன்று இருக்கிறாரா?  இல்லை! ஆன்மாவின் உண்மைத் தன்மை சாந்தி என்று பிரகடனம் செய்யப் படுகிறது. அந்த சாந்தி கண்டுபிடிக்கப் படாவிட்டால், அந்த கண்டுபிடிக்காதது, ஆன்மாவுக்கு அந்நியமான ஒரு எண்ணம் தான்.  இத்தகைய அந்நிய கற்பனைகளை அகற்றுவதற்காகத் தான் ஒருவர் தியானம் செய்கிறார். 

எனவே, ஒரு எண்ணம் எழந்த உடனேயே, அது அடக்கப்பட வேண்டும். எப்போது ஒரு எண்ணம் எழுந்தாலும், அதனால் தூக்கிச் செல்லப் படாதீர்கள். 

ஆன்மா மனச் சோர்வு அடைவதில்லை; அது குறையுள்ளதில்லை. அது எப்போதும் சந்தோஷமாக இருக்கிறது. அதற்கு மாறானதாக எழும் உணர்வு ஒரு எண்ணம் தான்; அதற்கு உண்மையில் திண்மை ஏதும் இல்லை. எண்ணங்கள் இல்லாமல் இருங்கள். ஒருவர் ஏன் தியானம் செய்ய முயல வேண்டும்? ஆன்ம சொருபமாக இருப்பதால், ஒருவர் எப்போதும் ஆனம் ஞானம் அடைந்தே தான் உள்ளார். எண்ணங்கள் இல்லாமல் மட்டுமே இருங்கள். அவ்வளவு தான். 

~~~~~~~~

உரையாடல் 398.

பக்தர்.: மனதை ஒருமுகச் சிந்தனையில் ஆழ்த்துவது பயிற்சிகளில் ஒன்றா? 
மகரிஷி.: ஒருமுகச் சிந்தனை என்பது ஒரு பொருளைப் பற்றி யோசிப்பது இல்லை. அதற்கு மாறாக, அது நமது உண்மைத் தன்மையை மறைக்கும் எல்லா எண்ணங்களையும் அகற்றுவதாகும். 

நமது எல்லா எத்தனங்களும் அறியாமையின் முகத்திரையை விலக்குவதற்கு தான். இப்போது எண்ணங்களை அடக்குவது கஷ்டம் போல் தோன்றுகிறது. சீர்திருத்தப்பட்ட மேம்பாடு கொண்ட நிலையில், எண்ணங்களை அழைப்பதற்கு தான் இன்னும் கஷ்டமாக இருக்கும். ஏனெனில் நினைப்பதற்கு என்ன பொருட்கள் உள்ளன? ஆன்மா மட்டும் தான் உள்ளது. பொருட்கள் இருந்தால் தான் எண்ணங்கள் செயல்பட முடியும். ஆனால் பொருட்கள் ஏதும் இல்லை. எண்ணங்கள் எப்படி எழ முடியும்?  

நம்முடைய பழக்கம், யோசிப்பதை நிறுத்துவது கடினம் என்று நம்மை நம்ப வைக்கிறது. இந்த தவறு கண்டுபிடிக்கப்பட்டால், ஒருவர் முட்டாள்தனமாக, யோசனை செய்தவாறு அநாவசியமாக தம்மை சிரமப்படுத்திக் கொள்ள மாட்டார். 
~~~~~~~~

உரையாடல் 91.

ஒரு வருகையாளர் கேட்டார்: மனதை கட்டுப்படுத்துவது எப்படி? 
மகரிஷி.: “மனம்” என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்?

பக்தர்.: நான் கடவுளைப் பற்றி நினைக்க உட்கார்ந்தவுடன், எண்ணங்கள் மற்ற பொருட்களுக்கு அலைந்து செல்கின்றன. நான் அந்த எண்ணங்களைக் கட்டுப்படுத்த விரும்புகிறேன். 
மகரிஷி.: மனதின் தன்மை அலைவது தான் என்று பகவத் கீதையில் சொல்லப்பட்டிருக்கிறது. ஒருவர் தமது எண்ணங்களைக் கடவுள் மீது அமையச் செய்ய வேண்டும்.  நீண்ட சாதனைக்குப் பிறகு மனம் கட்டுப்படுத்தப்படும்; நிலையாக நிற்கும்.  

மனம் இங்கும் அங்கும் அலைவது என்பது, மன வலிமைக்கு எண்ணங்களின் உருவில் ஏற்படும் சிதறலினால் உண்டாகும் பலவீனம் ஆகும்.  ஒருவர் மனதை ஒரே ஒரு எண்ணத்துடன் இணைத்துக் கொண்டால், வலிமை சேமிக்கப்படுகிறது, மனமும் மேலும் வலிமையாகிறது.

பக்தர்.: மன வலிமை என்பதன் அர்த்தம் என்ன? 
மகரிஷி.: மனத்தால், ஒரே ஒரு எண்ணத்தின் மீது, கவனம் சிதறாமல் ஒருமுகமாக ஆழ்ந்திருக்க முடியும் ஆற்றல்.  

பக்தர்.: அதை எப்படி சாதிப்பது?
மகரிஷி.: பயிற்சியினால். ஒரு பக்தர் கடவுள் மீது ஆழ்ந்த சிந்தனை செய்கிறார். ஞான மார்க்கத்தைப் பின்பற்றும் ஒரு சாதகர், ஆன்மாவை நாடி தேடுகிறார்.  பயிற்சி இருவருக்கும் கடினம் தான். 

பக்தர்.: ஒருவர் ஆன்ம சொரூபத்தை தேடுவதன் மேல் மனதைச் செலுத்தினால் கூட, மிகுந்த நேரம் போராடிய பின்னர், மனம் அவரிடமிருந்து  நழுவ ஆரம்பிக்கிறது. மிகுந்த நேரம் கடந்து போகும் வரை, மனிதர் இந்த சில்மிஷத்தை உணருவதில்லை.
மகரிஷி.: அப்படித் தான் இருக்கும். முதல் நிலைப்படிகளில், நீண்ட இடைவெளிகளுக்குப் பிறகு, மனம் விசாரணைக்குத் திரும்பும். பயிற்சி செய்யச் செய்ய, குறைந்த இடைவெளிகளுக்குப் பிறகு திரும்பும். கடைசியில் அது அலையவே அலையாது.  அதற்கு பிறகு தான் உள்ளடங்கி செயலற்று இருக்கும் சக்தி வெளிப்படும். சாத்வீகமான சுத்தமான மனம் எண்ணங்களில்லாமல் இருக்கிறது. ஆனால், உணர்ச்சிவசப்பட்ட மனம் முழுதும் எண்ணங்கள் உள்ளன.  சாத்வீகமான மனம் உயிரோட்டத்தில் சேர்ந்து விடுகிறது.

~~~~~~~~

உரையாடல் 150.

அமெரிக்காவிலிருந்து வந்திருக்கும் திரு கெல்லியும் திருமதி கெல்லியும், அவர்களுடன் இருந்த மற்றவர்களும், வசதியின்மையாலும் மற்ற அசௌகரியங்களாலும் பாதிக்கப்படாமல் ஒருமுகச் சிந்தனை செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ள விரும்பினர்.  
மகரிஷி.: உங்களுடைய ஆழ்ந்த சிந்தனை சரியாக இருந்தால், அசௌகரியங்கள் உங்களை பாதிக்காது. அசௌகரியங்களை சட்டை செய்யாதீர்கள். மனதை நிலையாக தியானத்தில் ஆழ்த்தி வைத்துக் கொள்ளுங்கள். அசௌகரியங்களை பொறுத்துக் கொள்ளும் வலிமையும் பொறுமையும் இல்லாமல், நீங்கள் ஆன்ம ஞானம் பெற எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? எல்லா இடர்ப்பாடுகளுக்கும் நடுவில் தான் ஆனம் ஞானம் பெற வேண்டும்.  நீங்கள் உங்களை மிகவும் வசதிபடுத்திக் கொண்டு, படுத்துக்கொண்டால், பிறகு தூங்கி விடுவீர்கள். தொல்லைகளை எதிர்கொள்ளுங்கள். ஆனால் உங்களை நிலையாக தியானத்தில் வைத்துக் கொள்ளுங்கள். 

~~~~~~~~

உரையாடல் 152.

திருமதி கெல்லி, சிறந்த விதத்தில் தியானம் செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ள விரும்பினார். 

மகரிஷி, கத்தோலிக்கர்கள் செய்வது போல் ருத்ராக்ஷங்களை உபயோகப்படுத்தி ஜபம் செய்தது உண்டா என்று கேட்டார்.  திருமதி கெல்லி, “செய்தது இல்லை” என்று பதிலளித்தார். 

மகரிஷி.: கடவுள், அவரது குணங்கள், முதலியவற்றைப் பற்றி நினைத்திருக்கிறீர்களா?
பக்தர்.: இத்தகைய கருத்துக்களைப் பற்றி படித்திருக்கிறேன், பேசியிருக்கிறேன். 

மகரிஷி.: சரி. இதுவே புலன்களின் மூலம் வெளிப்படுத்தப்படாமல், மனதிலேயே சுழன்றால், அது தான் தியானம். 

பக்தர்.: நான் சொல்வது, “ரகசிய பாதை” என்ற நூலிலும், “நான் யார்?” என்ற நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ள தியானம். 

மகரிஷி.: அதற்காக தீவிரமாக ஏங்குங்கள். பிறகு மனம் பக்தியில் கரைந்து போகும். கற்பூரம் எறிந்து போனவுடன், ஒன்றுமே மிஞ்சி இருப்பதில்லை. மனம் தான் கற்பூரம். அது துளிக்கூட மிஞ்சாமல் ஆன்ம சொரூபத்தில் ஒன்று சேரும்போது, அது தான் ஆன்ம சொரூப ஞானம். 

~~~~~~~~

தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா

 

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (3)
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (1)
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (2) (கட்டுரை)

One thought on “தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (2) (கட்டுரை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!