What is Meditation? How to do it? (4)
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (5) (கட்டுரை)
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (3)

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (4) (கட்டுரை)

~~~~~~~~

உரையாடல் 80.

பக்தர்: தியானம் அவசியமா?

மகரிஷி: பூமி கூட எப்போதும் தியானத்தில் ஆழ்ந்துள்ளது என்று உபநிடதங்கள் உறைக்கின்றன.  

பக்தர்: நற்செயல்களும் பணிகளும் செய்வது எப்படி உதவுகிறது? அகற்றவேண்டிய ஏற்கனவே உள்ள கனமான சுமையுடன் இன்னும் சுமையைச் சேர்த்துக் கொள்ளாதா?

மகரிஷி:சுயநலமற்ற செயல்கள் செய்வது மனதைத் தூய்மையாக்குகிறது. தியானத்தில் ஆழ்த்த உதவுகிறது.

பக்தர்: செயல்களே செய்யாமல் ஒருவர் இடைவிடாத தியானம் செய்துக்கொண்டிருந்தால்…?

மகரிஷி:முயற்சி செய்துப் பாருங்கள். பூர்வ மனப்போக்குகள் (வாசனைகள்) உங்களை அப்படிச் செய்ய விடாது.  சிறிது சிறிதாக, ஆசானின் அருளினால் மனப்போக்குகள் பலவீனமடைவதால், படிப்படியாகத் தான் தியானம் வரும். 

~~~~~~~~

உரையாடல் 377.

ஒரு வருகையாளர் கேட்டார் : மனிதர் தெய்வீகமானவர் என்று சொல்லப்படுகிறது. பின் ஏன் அவருக்கு வருத்தங்கள், குறைகள் உள்ளன? 

மகரிஷி:தெய்வீகம் சுய சொரூப தன்மையைக் குறிப்பிடுகிறது. குறைகள் பிரகிருதியைச் சார்ந்தவை. (பிரகிருதி என்பது இந்து வேதாந்தத்தின்படி, மனம், பொருள் ஆகியவற்றால் உண்டான முழு முதற்பொருள்.) 

பக்தர்: ஒருவர் குறைகளை வெல்வது எப்படி? 

மகரிஷி:அவருள் உள்ள தெய்வீகத்தை உணர்வதால். 

பக்தர்: அது எப்படி?

மகரிஷி: பயிற்சி செய்வதால்.

பக்தர்: எந்தப் பயிற்சி?

மகரிஷி:தியானம்.

பக்தர்: தியானம் செய்யும் போது, மனம் நிலையாக இருப்பதில்லை.

மகரிஷி: பயிற்சி செய்யச் செய்ய, அது சரியாகி விடும். 

பக்தர்: மனதை நிலையாக, அசையாமல் இருக்கச் செய்வது எப்படி? 

மகரிஷி: மனதை வலிமையாக்குவதால். 

பக்தர்: மனதை வலிமையாக்குவது எப்படி?

மகரிஷி: ஞானியரின் சத்சங்கத்தினால், அவர்களுடன் சகவாசத்தால் அது வலிமையாகிறது. 

பக்தர்: பிரார்த்தனைகளையும் நாங்கள் செய்துக் கொள்ளலாமா? 

மகரிஷி:ஆமாம்.

~~~~~~~~

உரையாடல் 172.

ஒரு வருகையாளர் கேட்டார் : தியானத்திற்கும் சுய விசாரணைக்கும் என்ன வித்தியாசம்? 

மகரிஷி: பொதுவாக இரண்டும் ஒன்று தான். சுய விசாரணை செய்ய இயலாதவர்கள் தியானத்தில் ஈடுபட வேண்டும். இந்த பயிற்சியில், சாதகர் தன்னையே மறந்து, “நான் பிரம்மன்” அல்லது நான் “சிவன்” என்று தியானிக்கிறார். இவ்வாறு அவர் பிரம்மனுடனோ சிவனுடனோ மனதில் பற்றிக் கொள்கிறார். இது இறுதியில் பிரம்மனாகவோ சிவனாகவோ மிஞ்சி நிற்கும்; அதுவே தூய ஆன்மாவாக, அதாவது சுய சொருபமாக நிலவுவது உணரப்படும்.

சுய விசாரணையில் ஈடுபடுபவர், மனதில் தன்னையே பற்றிக் கொண்டு, “நான் யார்?” என்று கேட்கிறார். பிறகு அவருக்கு சுய சொரூபம் தெளிவாகிறது.  

~~~~~~~~

உரையாடல் 238.

பக்தர்: ஆன்ம சொரூபத்தை அறிவது எப்படி?
மகரிஷி: ஆன்மா என்பது என்ன என்று பாருங்கள். நீங்கள் தற்போது சுய சொரூபமாக நினைத்துக் கொள்வது, உண்மையில் மனம் அல்லது புத்தி அல்லது “நான் – எண்ணம்” ஆகும்.  “நான் – எண்ணம்” எழுந்த பிறகு தான் மற்ற எண்ணங்கள் எழுகின்றன. அதைப் பற்றிக் கொள்ளுங்கள். சுய சொரூபத்தை மட்டும் மிஞ்சி நிற்க விட்டு விட்டு, மற்றவை மறைந்து விடும். 

பக்தர்: அதை அடைவதில் தான் கஷ்டம் இருக்கிறது.
மகரிஷி: அடைவதற்கு ஒன்றுமே இல்லை. ஏனெனில் அது எப்போதும், இங்கும், இப்போதும் உள்ளது. 

ஆன்மாவைப் புதிதாகப் பெறுவதாக இருந்தால், அது நிரந்தரமாக இருக்காது.

~~~~~~~~

உரையாடல் 322.

ஒரு வருகையாளர் கேட்டார் : மனம் அசையாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? 
மகரிஷி: முதலில் மனம் பிடிக்கப்பட்டு இங்கு கொண்டு வரப் படட்டும். பிறகு அதை அசையாமல் இருக்கச் செய்யும் வழிகளைப் பற்றி யோசிப்போம்.

பக்தர்: நான் என்ன சொல்ல நினைத்தேன் என்றால், மனம் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கிறது; ஜபம் செய்யும் போது கூட.
மகரிஷி: மனதை அசையாது இருக்கச் செய்வதற்குத் தான் ஜபம் உள்ளது. 

பக்தர்: எந்த ஜபம் அதற்கு நல்லது? 
மகரிஷி: பொருத்தமான எதுவும் சரி தான், காயத்ரியைப் போல. 

பக்தர்: காயத்ரி போதுமா?
மகரிஷி: அதை விட சிறந்தது வேறு இருக்க முடியுமா? அதைச் செய்ய முடியாதவர்கள் தான் மற்றதை நாடுவார்கள். அது மொத்த அர்த்தத்தையும் கொண்டுள்ளது. ஜபம் செய்வது தியானத்திற்கு வழிகாட்டும். அது தான் ஆன்ம ஞானம் பெற வழியாகும். 

பக்தர்: ஒரு நாளில் பாதி நேரம் செய்தால் போதுமா?
மகரிஷி: அது எப்போதும் செய்யப் பட வேண்டும். அல்லது உங்களால் எவ்வளவு நேரம் முடிகிறதோ அது வரை.

~~~~~~~~

உரையாடல் 390.

பக்தர்: நான் எதன் மீது தியானிப்பது? 

மகரிஷி: தியானிப்பதற்கு ஒரு பொருள் தேவைப்படுகிறது. ஆனால் சுய விசாரணையில் நபர் மட்டுமே தான் இருக்கிறாரே தவிர பொருள் இருப்பதில்லை. தியானம் சுயவிசாரணையிலிருந்து இந்த விதத்தில் தான் வேறுபடுகிறது.   

பக்தர்: ஆன்ம ஞானம் பெற தியானம் ஒரு திறம்பட்ட செயல்முறை இல்லையா? 

மகரிஷி: தியானம் ஒரு பொருளின் மீது ஒரு முக சிந்தனைச் செய்வதாகும். அது பலவிதமான எண்ணங்களை அகற்றி, ஒரே ஒரு எண்ணத்தின் மீது பொருத்தும் குறிக்கோளை நிறைவேற்றுகிறது. அந்த எண்ணமும் ஆன்ம ஞானத்திற்கு முன்பு மறைய வேண்டும். ஆனால், ஆன்ம ஞானம் புதிதாகப் பெற வேண்டியதில்லை. அது ஏற்கனவே உள்ளது, ஆனால் எண்ணங்களின் ஒரு திரையினால் தடைசெய்யப் பட்டுள்ளது. 

நம்முடைய எத்தனங்கள் எல்லாம் இந்த திரையை நீக்கத்தான். பிறகு சுய சொரூபம் வெளிப்படுத்தப்படுகிறது. 

ஒரு உண்மையான சாதகரை தியானிக்கச் சொன்னால், பலர் இந்த அறிவுரையுடன் திருப்தி அடைந்து சென்று விடுவார்கள். ஆனால், அவர்களுக்குள் ஒருவர் திரும்பி, “ஒரு பொருள் மீது தியானிக்கும் நான் யார்”, என்று கேட்கலாம். இத்தகைய ஒருவருக்கு ஆன்மாவைக் கண்டுபிடிக்கும்படி சொல்ல வேண்டும். அது தான் இறுதியான நிலை. அது தான் சுய விசாரணை.

பக்தர்: தியானம் செய்யாவிட்டால், சுய விசாரணை மட்டும் போதுமா? 

மகரிஷி: சுய விசாரணை தான் செயல்முறை, அது தான் குறிக்கோளும் கூட. “நான்” என்னும் உள்ளமை தான் குறிக்கோள், அதுவே இறுதியான உண்மை சுய நிலையும் கூட. அதை எத்தனத்துடன் பற்றிக் கொள்வது சுய விசாரணையாகும். அது தன்னிச்சையாக, சுயமாக, இயல்பாக இருக்கும்போது அது தான் ஆன்ம ஞானம். 

~~~~~~~~

உரையாடல் 319.

பக்தர்: குறைபாடு, அறியாமை, இச்சை, இவற்றின் மாசு, தியானத்தின் வழியில் தடங்கல்கள் ஏற்படுத்துகின்றன. அவற்றை எப்படி வெற்றி கொள்வது? 

மகரிஷி: அவற்றால் தடுமாறாமல் இருப்பதால்.

பக்தர்: அருள் தேவை. 

மகரிஷி: ஆமாம். அருள் தான் தொடக்கமும் ஆகும், முடிவும் ஆகும். உள்முக திருப்பம் அருளால் தான். விடாமுயற்சி அருள் தான். ஆன்ம ஞானம் அருள் தான்.  “மாமேகம் ஷரணம் வ்ரஜா”, அதாவது “என்னிடம் சரணடைந்து விடு” என்று சொல்லப்படுவதற்கு காரணம் அது தான். ஒருவர் முழுவதுமாக சரணடைந்து விட்டால், அருள் வேண்ட ஏதாவது பகுதி மிஞ்சியிருக்குமா என்ன? அவர் அருளால் விழுங்கப் படுகிறார். 

பக்தர்: தடங்கல்கள் மிகவும் வலிமையாக உள்ளன. அவை தியானத்தை தடுக்கின்றன. 

மகரிஷி: ஒரு உயர்ந்த சக்தி கண்டுணரப்பட்டு சரணடையப்பட்டால், அவை எப்படி உங்களை தடுக்கும்? அவை மிகவும் வலிமையாக உள்ளன என்று நீங்கள் சொன்னனால், அவை உங்களைத் தடுக்காமல் இருப்பதற்கு, அவற்றின் சக்தியின் மூலாதாரத்தைப் பற்றிக் கொள்ள வேண்டும்.  

~~~~~~~~

உரையாடல் 223.

பக்தர்: தியானிக்கும் போது கூட மனம் ஏன் இதயத்தில் மூழ்குவதில்லை? 

மகரிஷி: மிதக்கும் ஒரு பொருள், ஏதாவது சில உபாயங்கள் செய்யாமல், எளிதாக மூழ்காது. மூச்சுக் கட்டுப்பாடு மனதை அமைதியாக்குகிறது. மனம் கவனமாக இருக்கவேண்டும். சாந்தி நிலவும் போது கூட, இடைவிடாமல் தியானத்தில் ஈடுபட வேண்டும்.  பிறகு அது இதயத்தில் மூழ்கும். அல்லது மிதக்கும் ஒரு பொருள் கனமான எடைகளால்   சுமையேற்றப் பட்டு, மூழ்கடிக்கப் படலாம்.  அதே போல், ஞானியரின் சகவாசம், மனதை இதயத்தில் மூழ்க வைக்கும். 

இத்தகைய சகவாசம் மனம் சார்ந்ததுமாகும், உடல் சார்ந்ததுமாகும். தெளிவாக வெளிப்பட்டு தெரியும் குருவின் சொரூபம், மனதை உட்புறம் தள்ளுகிறது. அவர் சாதகரின் இதயத்திலும் உள்ளார்; எனவே அவர் சாதகரின் உட்புற நோக்கமுள்ள மனதை இதயத்திற்குள் இழுக்கிறார். 

ஒருவர் தியானிக்க ஆரம்பித்த பின், அதன் கஷ்டத்தை உணரும்போது தான் இந்த கேள்வி கேட்கப்படுகிறது. அவர் சிறிதளவே மூச்சுக் கட்டுப்பாடு செய்யட்டும், பிறகு மனம் தூய்மையாக்கப் படும். பூர்வ மனப்போக்குகள் இருப்பதால், இப்போது மனம் இதயத்தினுள் மூழ்குவதில்லை. ஏனெனில், பூர்வ மனப்போக்குகள் தடங்கல்களாக நிற்கின்றன. அவை மூச்சுக் கட்டுப்பாட்டினாலோ, அல்லது ஞானியரின் சகவாசத்தினாலோ நீக்கப்படுகின்றன.  உண்மையில், மனம் எப்போதுமே இதயத்தில் தான் உள்ளது. ஆனால் அது பூர்வ மனப்போக்குகளால், முரடாக, அடங்காமல், அலைந்துக் கொண்டு இருக்கிறது. மனப்போக்குகளை பயனற்றுப் போகச் செய்தால், மனம் அடங்கியும், அமைதி மிகுந்ததாகவும்  இருக்கும்.  

மூச்சுக் கட்டுப்பாட்டினால், மனம் தற்போதைக்கு தான் அமைதியாக இருக்கும். ஏனெனில், மனப்போக்குகள் இன்னும் உள்ளன. மனம் சுய சொரூபமாக உருமாற்றப்பட்ட பின், மனம் ஒரு போதும் தொந்தரவு செய்யாது. இந்த விளைவு தியானத்தால் தான் அடையப் படுகிறது. 

தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (5) (கட்டுரை)
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (3)
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (4) (கட்டுரை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!