Perform work with detachment

பணிகளைப் பற்றுதல் இல்லாமல் செய்யுங்கள்

ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள்


உரையாடல் 20.

பக்தர்: ஒரு ஞானிக்குத் தனிமை தேவையா?
மகரிஷி: தனிமை மனிதரின் மனதில் உள்ளது. ஒருவர் உலக விவகாரத்தில் ஆழ்ந்திருக்கலாம்; ஆனாலும் மன அமைதியுடன் இருக்கலாம்.  இப்படிப்பட்டவர் தனிமையில் இருக்கிறார். மற்றொருவர் காட்டில் தங்கலாம்; ஆனாலும் மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கலாம். அவர் தனிமையில் இருப்பதாகச் சொல்ல முடியாது. தனிமை என்பது மனதின் செயல்பாடாகும். ஆசைகளில் பற்றுள்ள ஒருவருக்கு அவர் எங்கிருந்தாலும் தனிமை கிடைக்காது. பற்றில்லாமல் உள்ள ஒருவர் எப்போதுமே தனிமையில் தான் இருக்கிறார்.  

பக்தர்: அப்படியானால், ஒருவர் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டே ஆசாபாசங்களின்றி இருந்து, தனிமையைக் கடைப்பிடிக்கலாம், இல்லையா? 
மகரிஷி: ஆமாம். பற்றுதலோடு செய்யப்படும் வேலை ஒரு விலங்காகும். அதற்கு மாறாக, பற்றுதல் இல்லாமல் செய்யப்படும் வேலை, பணி செய்பவரை பாதிக்காது. அவர் வேலை செய்துக் கொண்டிருக்கும்போது கூட தனிமையில் தான் இருக்கிறார். 

~~~~~~~~

உரையாடல் 80.

பக்தர்: தியானம் செய்வது அவசியமா?

மகரிஷி: பூமியே இடைவிடாத தியானத்தில் இருப்பதாக உபநிஷதங்கள் சொல்கின்றன.

பக்தர்: நல்ல செயல்கள், நல்ல கர்மம் செய்வது தியானத்திற்கு எப்படி உதவுகிறது? அது  ஏற்கனவே உள்ள நீக்கப்பட வேண்டிய சுமையை அதிகரிக்கச் செய்யாதா? 

மகரிஷி: தன்னலமில்லாமல் செய்யப்படும் காரியம் மனதைத் தூய்மையாக்கி, அதை தியானத்தில் ஆழ்த்த உதவுகிறது.

பக்தர்: ஒருவர் செயல்களே செய்யாமல், இடைவிடாமல் தியானத்திலேயே ஆழ்ந்திருந்தால்?

மகரிஷி: செய்துப் பாருங்கள். பூர்வ மனப்போக்குகள் (வாசனைகள்) உங்களை அப்படி செய்ய விடாது. ஆசானின் அருளினால், பூர்வ மனப்போக்குகள் படிப்படியாக பலவீனமாக்கப்படுவதால் தான் தியானம் செய்ய இயலும்.  

~~~~~~~~

உரையாடல் 30.

பக்தர்: எனக்கு என்னுடைய தொழில் பணிகள் உள்ளன. ஆனாலும் நான் சாசுவதமான தியானத்தில் ஈடுபட விரும்புகிறேன். இவை இரண்டும் முரண்படுமா?  
மகரிஷி: முரண்பாடு இருக்காது. நீங்கள் இரண்டையும் பயிற்சி செய்தவாறு, உங்கள் சக்திகளை விருத்தி செய்யும் போது, உங்களால் இரண்டின் மீதும் கவனம் செலுத்த முடியும். நீங்கள் உங்களது தொழிலை ஒரு கனவு போல் கருதத் தொடங்குவீர்கள். பகவத் கீதை சொல்கிறது : “எது எல்லா ஜீவன்களுக்கும் இரவாக இருக்கிறதோ, அது ஒழுக்கமான மனிதருக்கு விழிப்பு நேரமாகும். மற்ற ஜீவன்களெல்லாம் விழித்திருக்கும் போது, அது சுய சொரூபத்தைக் காணும் ஞானிக்கு இரவாகும். ” (11.69.)

~~~~~~~~

உரையாடல் 268.

பக்தர்: என்னுடைய வேலையில் என்னுடைய பெரும்பாலான நேரத்தையும் சக்தியையும் செலுத்த வேண்டியிருக்கிறது. பல முறை, ஆன்ம சிந்தனையில் ஆழ்வதற்கு நான் மிகவும் களைப்படைகிறேன். 

மகரிஷி: “நான் வேலை செய்கிறேன்” என்ற உணர்வு தான் தடங்கலாகும். விசாரியுங்கள், “வேலை செய்வது யார்?” நினைவு படுத்திக் கொள்ளுங்கள், “நான் யார்?” உங்கள் பணிகள் உங்களை பிணைக்காது. அது தானாகவே நடைபெற்றுச் செல்லும். வேலை செய்வதற்கோ அல்லது அதை விட்டு விடுவதற்கோ எத்தனம் செய்யாதீர்கள். உங்கள் எத்தனம் தான் உங்களது பிணைப்பு. எது நடக்க வேண்டுமென்று இருக்கிறதோ, அது நடைபெறும். 

நீங்கள் வேலையை விட்டு விட வேண்டுமென்பது உங்கள் விதியானால், நீங்கள் எவ்வளவு தீவிரமாகத் தேடினாலும், அது உங்களுக்குக் கிடைக்காது. நீங்கள் வேலை செய்ய வேண்டுமென்பது உங்கள் விதியானால், உங்களால் அதை விட்டு விட முடியாது. அதில் ஈடுபட நீங்கள் நிர்பந்தப்படுத்தப் படுவீர்கள். உங்கள் இஷ்டப்படி விட்டு விடவோ வைத்துக் கொள்ளவோ முடியாது.  

~~~~~~~~

உரையாடல் 319.

கோவாவில் வசிக்கும் ஒரு இந்து, திரு ஶ்ரீதர், கேட்டார்: “யோக கர்மசு கௌசலம்”, அதாவது “திறமையுடன் செயல்படுவது தான் யோகம்” என்று சொல்லப்படுவதில், அந்த திறமை என்பது என்ன? அதைப் பெறுவது எப்படி? 
மகரிஷி: செயல்களை அவற்றின் விளைவைப் பற்றி யோசிக்காமல் செய்யுங்கள். செயலைச் செய்பவர் நீங்கள் என்று எண்ணாதீர்கள். பணிகளை கடவுளிடம் சமர்ப்பித்து விடுங்கள். அது தான் திறமை. அது தான் திறமையைப் பெறும் வழியும் கூட. 

பக்தர்: “சமத்வம் யோகஹ உச்யதே”, அதாவது “உள்ள சமநிலை தான் யோகம்” என்பதில், அந்த “உள்ள சமநிலை” என்பது என்ன? 
மகரிஷி: அது பல்வகைமையில் உள்ள ஒருமையாகும் (unity in diversity). இப்போது பிரபஞ்சம் பல வகையாகத் தோன்றுகிறது. எல்லா பொருள்களிலும் உள்ள பொதுவான, சம அம்சத்தைப் பாருங்கள். அது செய்யப்பட்டால், எதிர்படமாக உள்ள ஜோடிகளில் சமத்துவம் தானாகத் தொடரும். சாதாரணமாக இது தான் சமத்துவம் என்று சொல்லப்படுகிறது. 

பக்தர்: பல வகையானவற்றில் பொதுவான அம்சத்தைக் காண்பது எப்படி?  
மகரிஷி: காண்பவர் ஒருவர் தான். காட்சிகள் காண்பவர் இல்லாமல் தோன்றுவதில்லை. மற்றவை எவ்வளவு மாறினாலும், காண்பவரில் மாற்றம் ஏதும் இல்லை.

யோகஹ கர்மசு கௌசலம், அதாவது “திறமையுடன் செயல்படுவது தான் யோகம்”,
சமத்வம் யோகஹ உச்யதே, அதாவது “உள்ளச் சமநிலை தான் யோகம்”,
மாமேகம் சரணம் விரஜா, அதாவது “என்னிடம் மட்டுமே சரணடைந்து விடு”,
ஏகமேவஅத்விதீயம், அதாவது “இரண்டாவது ஏதும் இல்லாத ஒன்று”,

இவை முறையே, கர்மம், யோகம், பக்தி, ஞானம், இவற்றை குறித்துக் காட்டுகின்றன. இவை எல்லாம் பலவித அம்சங்களில் வழங்கப்படும் ஒரே மெய்மை தான். 

~~~~~~~~

உரையாடல் 495.

ஒரு பேராசிரியர் கேட்டார்.

பக்தர்: நான் என்னுடைய கடமைகளை பற்றுதல் இல்லாமல் செய்வது எப்படி? எனக்கு என் மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள். நான் அவர்களுக்கு என் கடமையைச் செய்ய வேண்டும். அன்பு தேவைப்படுகிறது. நான் சொல்வது சரியா?
மகரிஷி: கல்லூரியில் உங்கள் வேலையை எப்படி செய்கிறீர்கள்?

பக்தர்: (சிரித்துக் கொண்டே சொல்கிறார்) சம்பளத்திற்காக.
மகரிஷி: உங்களுக்கு பற்றுதல் இருப்பதால் செய்வதில்லை. உங்கள் கடமையை நிறைவேற்றுவதற்காகச் செய்கிறீர்கள்.

பக்தர்: ஆனால், என்னுடைய மாணவர்கள் என்னுடைய அன்பை எதிர்பார்க்கிறார்கள். 
மகரிஷி:  “உள்ளுக்குள் பற்றின்மை, வெளிப்புற தோற்றத்தில் பற்றுதல்” என்று யோக வசிஷ்டம் சொல்கிறது. 

~~~~~~~~

உரையாடல் 521.

சில காங்கிரஸ்காரர்கள் பல கேள்விகளை மகரிஷியிடம் சமர்ப்பித்தனர். 

கேள்விகளுக்கு ஒவ்வொன்றாக பதில் அளிக்கப்படவில்லை. மகரிஷி பொதுவாக இவ்வாறு சொன்னார். 
காந்திஜி தெய்வத்திடம் சரணடைந்துக் கொண்டு, அதன்படி சுய நல விருப்பங்கள் இல்லாமல் செயல்படுகிறார். அவர் விளைவுகளைப் பற்றி கவலைப் படுவதில்லை; அவை எப்படி நேருகிறதோ அப்படியே ஏற்றுக் கொள்கிறார். நாட்டிற்காக செயல்படும் தேசியர்களுடைய மனப்பாங்கும் இப்படித்தான் இருக்க வேண்டும்.  

பக்தர்: பணிகள் வெற்றியில் முடிவுறுமா?
மகரிஷி: கேள்வி கேட்பவர் தெய்வத்திடம் சரணடையாததால் இந்தக் கேள்வி எழுகிறது. 

 

"நான் செய்கிறேன்" என்ற மனநிலை இல்லாமல் பணிகள் செய்வது எப்படி
பணிகளைப் பற்றுதல் இல்லாமல் செய்யுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!