பணிகளைப் பற்றுதல் இல்லாமல் செய்யுங்கள்
தியானத்திற்கு பணிகள் தடங்கல் இல்லை

“நான் செய்கிறேன்” என்ற மனநிலை இல்லாமல் பணிகள் செய்வது எப்படி

ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள்

~~~~~~~~

உரையாடல் 46.

திரு. ஏகநாத ராவ்: உலக வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்ளுக்குத் தேவையான சம்பளம் சம்பாதிப்பதை, சுய விசாரணை போன்ற செயலுடன் ஒருவர் சமரசப்படுத்துவது எப்படி? 

மகரிஷி: செயல்களால் பிணைப்பு உண்டாவதில்லை. “செய்பவர் நான்” என்ற பொய்யான கருத்து தான் பிணைப்பு ஆகும். இத்தகைய எண்ணங்களை விட்டு விடுங்கள். உடலையும், புலன்களையும் உங்களது குறுக்கீடு இல்லாமல், அதனதன் பாகத்தை நடத்திச் செல்ல விடுங்கள். 

~~~~~~~~

உரையாடல் 58.

மகரிஷி: ஒருவர் தான் வினையாற்றுபவர் இல்லை, தான் ஒரு உயர்ந்த சக்தியின் ஒரு கருவி தான் என்று உணர வேண்டும். உயர்ந்த சக்தி எது செய்யப்பட வேண்டுமோ அதைச் செய்யட்டும், நான் அதன் ஆக்ஞையின் படியே நடந்துக் கொள்வேன் என்று கருத வேண்டும். செயல்கள் என்னுடையதில்லை. எனவே, அவற்றின் விளைவுகளும் என்னுடையதாக இருக்க முடியாது. இவ்வாறு கருதியபடி ஒருவர் செயல்பட்டால், இன்னல் எங்கே இருக்கிறது? இறுதியில் இதெல்லாம் ஒன்றைத்தான் குறிப்பிடுகிறது. அது ஆன்ம சுய சொரூபத்தில் உறைவது தான்.  

பக்தர்: பகவத் கீதை செயல்படுவதற்காக கற்பிக்கப் பட்டது. 

மகரிஷி: கீதை என்ன சொல்கிறது? அர்ஜுனர் போரில் ஈடுபட மறுத்தார். 

கிருஷ்ணர் சொன்னார்,  “நீ போரில் ஈடுபட மறுக்கும் வரையில், உனக்கு “நான் செய்கிறேன்” என்ற உணர்வு இருக்கிறது. செய்ய விரும்புவதற்கும், மறுப்பதற்கும் நீ யார்? அந்த “செய்பவர் நான்” என்ற கருத்தை விட்டு விடு. அந்த உணர்வு மறையும் வரை, நீ செயல்படத்தான் செய்வாய். ஒரு உயர்வான சக்தியினால் நீ கையாளப்படுகிறாய். அதனிடம் சமர்ப்பிக்க நீ மறுப்பதனாலேயே இதை நீ ஒப்புக்கொள்கிறாய். அதற்கு பதிலாக, சக்தியை அங்கீகரித்துக் கொண்டு, அதனிடம் ஒரு கருவியாக உன்னை சமர்ப்பித்துக் கொள். அல்லது, இன்னொரு விதத்தில் சொல்லப் போனால், நீ மறுத்தால், பலவந்தமாக அதில் இழுக்கப் படுவாய். இஷ்டமில்லாத பணியாளராக இருப்பதற்கு பதிலாக, விருப்புமுள்ள பணியாளராக இரு. அதாவது, ஆன்ம சுய சொரூபத்தில் பொருந்திக் கொண்டு, உனது தன்மையின் படி, ‘நான்   செய்கிறேன்’ என்று கருதாமல் பணியில் ஈடுபடு. இப்படி செய்தால், வினைகளில் விளைவுகள் உன்னை பாதிக்காது. இது தான் தைரியம் ஆகும்,  வீரமும் ஆகும்.” 

மகரிஷி தொடர்ந்தார். எனவே, ஆன்ம சுய சொரூபத்தில் உறைவது தான், கீதையின் சாராம்சம் ஆகும். கடைசியில் மகரிஷி மேலும் சொன்னார். ஒரு மனிதர் ஆன்மாவில் பொருந்தி உறைந்தால், இந்த சந்தேகங்கள் எல்லாம் எழாது. அங்கு அவர் உறையும் வரையில் தான் அவை எழும். 

பக்தர்: பிறகு இத்தகைய பதிலால், கேள்வி கேட்பவருக்கு என்ன பலன்? 
மகரிஷி: சொற்களில் வலிமை உண்டு. அவை சிறிது சிறிதாக நிச்சயமாக பணியாற்றும். 

~~~~~~~~

உரையாடல் 113.

ஒரு பக்தர் கர்ம யோகத்தைப் பற்றி கேட்டார்.

மகரிஷி சொன்னார்: “ஒரு மனிதர் நாடக மேடையில் நடிக்கும் ஒரு நடிகர் போல செயல்பட வேண்டும். எல்லா செயல்களிலும் அடிப்படையானதாக மெய்மை உள்ளது. அதை நினைவில் வைத்துக்கொண்டு செயல்படுங்கள்”.

~~~~~~~~

உரையாடல் 68.

ஒரு பெண்மணி கேட்டார்.

பக்தர்: தியானம் செய்வது எப்படி? 
மகரிஷி: எண்ணங்களை அகற்றி விடுங்கள்.

பக்தர்: பணிகளை தியானத்துடன் சமரசப்படுத்துவது எப்படி?

மகரிஷி: வேலை செய்பவர் யார்? யார் வேலை செய்கிறாரோ அவர் இந்தக் கேள்வியைக் கேட்கட்டும். நீங்கள் எப்போதுமே ஆன்மா தான். நீங்கள் மனம் இல்லை. மனம் தான் இத்தகையக் கேள்விகளைக் கேட்கிறது. ஆன்மாவின் முன்னிலையில் தான் செயல்கள் நடைபெறுகின்றன. ஆன்ம சுய சொரூப ஞானத்திற்கு பணிகள் தடங்கல் இல்லை. யார் வேலை செய்கிறார் என்பது பற்றிய தவறான அடையாளம் தான் ஒருவரை இன்னல் படுத்துகிறது.  பொய்யான இணைப்பை விலக்கி விடுங்கள். 

~~~~~~~~

உரையாடல் 542.

பக்தர்: எனக்கு வேண்டியதெல்லாம் எளிதாகக் கிடைக்கும் ஒரு இடத்தில்,  எனது எல்லா நேரத்தையும் தியானத்தில் செலுத்தி, தனிமையில் வாழ நான் அடிக்கடி விரும்புகிறேன்.   இத்தகைய விருப்பம் நல்லதா கெட்டதா?

மகரிஷி: இத்தகைய எண்ணங்கள், அவை நிறைவேறுவதற்காக இன்னும் ஒரு ஜன்மத்தை வழங்கும். நீங்கள் எங்கே எப்படி பொருத்தப்பட்டால் என்ன? முக்கியமான அம்சம் என்னவென்றால் மனம் அதன் மூலாதாரத்தில் பொருந்தி தங்க வேண்டும். உட்புறம் இல்லாத எதுவும் வெளிப்புறத்தில் இல்லை. மனம் தான் எல்லாம். மனம் சுறுசுறுப்பாக இருந்தால், தனிமை கூட ஒரு சந்தை போல் ஆகி விடுகிறது. கண்களை மூடிக் கொள்வதால் பயனில்லை. மனதின் கண்ணை மூடுங்கள், எல்லாம் சரியாக இருக்கும். உலகம் உங்களுக்கு வெளிப்புறத்தில் இல்லை. நல்ல மனிதர்கள் தங்கள் செயல்களுக்கு முன்னால் திட்டமிட விழைய மாட்டார்கள். ஏன் அப்படி? ஏனெனில், நம்மை இந்த உலகத்திற்கு அனுப்பியுள்ள கடவுளிடம், அவரது திட்டமே ஒன்று உள்ளது; அது நிச்சயமாக நிறைவேறி விடும்.  

~~~~~~~~

உரையாடல் 552.

ஆசிரமத்தில் சில கட்டிடங்கள் இருக்கின்றன. முழுவதுமாக பின்பற்ற முடியாத ஒரு திட்டம் இருந்து வந்தது. 

இதில் ஈடுபட்டிருந்த பக்தரும் சர்வாதிகாரியும் அதன் விவரங்களில் ஒத்துக் கொள்ளவில்லை. அவர்களுக்கு இடையில் சச்சரவு இருந்தது. ஒரு முறை பக்தர் இந்த விஷயத்தைப் பற்றி மிகவும் வெறுப்புற்றார். அவர் பகவானிடம் இத்தகைய சூழ்நிலையில் என்ன செய்வது என்று கேட்டார். 

மகரிஷி சொன்னார்: “இங்குள்ள கட்டிடங்களில் எது இந்த மனிதர்களின் திட்டப்படி ஏற்பட்டது? கடவுளிடம் அவருடைய திட்டங்கள் உள்ளன. இவையெல்லாம் அவற்றின்படி நடைபெறும். என்ன நடக்கும் என்று யாரும் கவலைப் பட வேண்டாம்.”

 

பணிகளைப் பற்றுதல் இல்லாமல் செய்யுங்கள்
தியானத்திற்கு பணிகள் தடங்கல் இல்லை

“நான் செய்கிறேன்” என்ற மனநிலை இல்லாமல் பணிகள் செய்வது எப்படி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!