
44 – 46. தனிமை, மனம், ஒருமுக கவனம், மனக்கட்டுப்பாடு, உண்மையும் பொய்யும்
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்.
உரையாடல் 44.
திரு ஏக்நாத் ராவ், ஒரு பொறியாளர், திரு பகவானிடம், சுய விசாரணைக்கு தனிமை அவசியமா என்று கேட்டார்.
மகரிஷி: தனிமை எங்கும் இருக்கிறது. ஒரு நபர் எப்போதும் தனிமையாக தான் இருக்கிறார். அவரது விவகாரம் அதை உள்ளுக்குள் கண்டுபிடிப்பது தானே தவிர வெளியில் தேடுவது இல்லை.
பக்தர்: தொழில் செய்யும் தினசரி உலகம் மன கவனத்தை சிதறடிக்கிறது.
மகரிஷி: கவனத்தை சிதறடிக்க விடாதீர்கள். யாருக்கு மனச் சிதறல் என்று சுய விசாரணை செய்யுங்கள். சிறிதளவு பயிற்சிக்குப் பின் அது உங்களை துன்புறுத்தாது.
பக்தர்: அந்த முயற்சி கூட சாத்தியமற்றது.
மகரிஷி: செய்துப் பாருங்கள். பிறகு அது அவ்வளவு கஷ்டமானது இல்லை என்று தெரிய வரும்.
பக்தர்: ஆனால் உள்முக தேடலுக்கு பதில் எதுவும் வருவதில்லை.
மகரிஷி: விசாரிப்பவரே தான் பதிலே தவிர வேறு பதில் எதுவும் வர முடியாது. எது புதிதாக வருகிறதோ அது உண்மையாக இருக்க முடியாது. எது எப்போதும் இருக்கிறதோ, அது உண்மை.
உரையாடல் 45.
ஒரு வருகையாளர் கேட்டார் : ஆன்ம ஞான பாதை கஷ்டமாக இருக்கிறது. உலக விஷயங்கள் புரிந்துக் கொள்ள எளிதாக உள்ளன; ஆனால் ஆன்ம ஞான பாதை அப்படி இல்லை.
மகரிஷி: ஆமாம். மனம் தனது சொந்த ஞானத்தை தள்ளி வைத்து விட்டு, எப்போதும் வெளிப்புற ஞானத்தை நாடுகிறது.
பக்தர்: பகவானுடன் ஒரு நாள் இருப்பது நல்லது; இரண்டு நாட்கள் தங்குவது இன்னும் நல்லது; மூன்று நாட்கள் அதை விட மேன்மை; இன்னும் அதிகமாக, மற்றும் பல. இப்படி இங்கு தங்கிக் கொண்டேயிருந்தால், நாங்கள் எங்களது உலகைச் சார்ந்த வேலைகளை எப்படி செய்து முடிப்பது?
மகரிஷி: இங்கு தங்குவதும் வேறெங்கோ தங்குவதும் ஒன்றே தான், அதன் விளைவும் ஒன்றே தான், என்று புரிந்துக் கொள்ளப் பட வேண்டும்.
உரையாடல் 46.
மலையாள உபதேச சாரம் ஓதுவதைக் கேட்டபின், நாகர்கோயிலின் திரு ராமச்சந்திர அய்யர், மனம், ஒருமுக கவனம், மனக்கட்டுப்பாடு, இவற்றைப் பற்றி கேட்டார்.
மகரிஷி: மனம் என்பது ஆன்மாவை உடலுடன் ஐக்கியப்படுத்தி வைத்துக் கொள்வது தான். ஒரு பொய்யான தான்மை அகங்காரம் தான் ஏற்படுத்தப் படுகிறது (ego); அது முறையே பொய்யான நிகழ்ச்சிகளை ஏற்படுத்துகிறது; அது அவற்றில் நடமாடுவதாக தோற்றம் அளிக்கிறது; இவை எல்லாம் பொய்யானவை. ஆன்மா மட்டுமே தான் ஒரே உண்மை.
பொய்யான ஐக்கியம் மறைந்து போய்விட்டால், உண்மையான உள்ளமையான மெய்மையின் நிலையான தன்மை தெரிய வருகிறது. இதனால் மெய்மை (Reality) இங்கு இப்போது இல்லை என்று அர்த்தமில்லை. மெய்மை எப்போதும் இருக்கிறது, அது நித்தியமாக ஒன்றே தான். இது ஒவ்வொருவருடைய அனுபவத்திலும் கூட இருக்கிறது. ஏனெனில் ஒவ்வொருவரும் தான் யார் என்று அறிகிறார். அவர் யார்? தனிப்பட்ட சொந்த முறையில், “நான் யார்?” பொய்யான தான்மை பொருட்களுடன் தொடர்பு கொண்டுள்ளது; இந்த தான்மையே கூட தன்னுடைய பொருளே தான் ஆகும். புறநிலை பொய்யாகும். உள்ளவர், ஆன்மா தான் மெய்மை.
உங்களை ஒரு பொருளுடன், அதாவது உடலுடன், குழப்பிக் கொள்ளாதீர்கள். இது ஒரு பொய்யான தான்மை அகங்காரத்தை எழ வைக்கிறது; இதனால் உலகமும் அதில் உங்களுடைய நடமாட்டங்களும் எழுகின்றன, இதனால் துன்பம் விளைகிறது. உங்களை இது, அது, அல்லது ஏதோ ஒன்று என்றோ, இன்னவர் இன்னவர் என்றோ, இன்னின்னது இன்னின்னது என்றோ, நினைத்துக் கொள்ளாதீர்கள். ஆனால் பொய்யை மட்டும் விட்டு விடுங்கள். பிறகு மெய்மை தன்னை வெளிப்படுத்தும்.
ஆன்மா நித்திய சித்தர், எப்போதும் இருப்பவர் என்று மறை நூல்கள் சொல்கின்றன. ஆனாலும் அவை அக்ஞானத்தை, அறியாமையை அகற்றுவதைப் பற்றி பேசுகின்றன. ஆன்மா நித்திய சித்தரானால், அதாவது எப்போதும் இருந்தால், அக்ஞானம் அல்லது அறியாமை எப்படி இருக்க முடியும்? யாருக்கு அறியாமை? இவை முரண்பாடாக இருக்கின்றன. ஆனால், இத்தகைய அறிக்கைகள் தீவிரமான ஆன்மீகரை சரியான வழியில் வழிகாட்டுவதற்காக உள்ளன.
பகவத் கீதையில், “நீயில்லை, நான் இல்லை, இந்த அரசர்களும் இல்லை” என்பது போன்ற எளிய சொற்களில் உண்மையை எடுத்துச் சொன்னால், ஒரு பக்தர் அல்லது ஆன்மீகர் உடனடியாக அதைப் புரிந்துக் கொள்வதில்லை. உண்மையை திரு கிருஷ்ணர் உரைத்தார், ஆனால் அர்ஜுனரால் அதைப் புரிந்துக் கொள்ள முடியவில்லை. பின்னர், “ஜனங்கள் தம்மை உடலென்று குழப்பிக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் உண்மையில் தாம் மெய்மையே தான், தாம் பிறக்கவும் இல்லை, இறக்கப் போவதும் இல்லை” என்று கிருஷ்ணர் தெளிவாக சொல்கிறார். ஆனாலும், உண்மையை அர்ஜுனருக்குத் தெளிவாக்குவதற்கு, பகவத் கீதை முழுவதும் தேவைப் படுகிறது.
இதோ பாருங்கள், ஆன்மா என்பது உள்ளமை மட்டுமே தான், இது அது என்று இருப்பது இல்லை. அது வெறும் உள்ளமையாகும். “இரு” – பிறகு அறியாமைக்கு முடிவு வருகிறது. யாருக்கு அறியாமை என்று சுய விசாரணை செய்யுங்கள்.
நீங்கள் தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்ளும் போது, தான்மை அகங்காரம் எழுகிறது. ஆழ்ந்த தூக்கத்தில், நீங்கள் தூங்கிக் கொண்டிருப்பதாகவும், அல்லது நீங்கள் விழித்துக் கொள்ளப் போவதாகவும், அல்லது நீங்கள் இவ்வளவு காலம் தூங்கிக் கொண்டிருந்ததாகவும் நீங்கள் சொல்வதில்லை. ஆனாலும் நீங்கள் அங்கு இருக்கிறீர்கள். விழித்துக் கொண்ட பின் தான், நீங்கள் தூங்கினீர்கள் என்று சொல்கிறீர்கள். உங்களது விழிப்பு நிலை தூக்கத்தையும் கொண்டுள்ளது. உங்களது தூய உள்ளமையை அறிந்துக் கொள்ளுங்கள். உடலுடன் ஒரு குழப்பமும் வேண்டாம்.
உடல் என்பது எண்ணங்களின் விளைவாகும். எண்ணங்கள் எப்போதும் போல நடமாடும், ஆனால் அவற்றால் நீங்கள் பாதிக்கப் பட மாட்டீர்கள். தூங்கிக் கொண்டிருந்த போது நீங்கள் உடலைப் பற்றி கவலைப் படவில்லை. எனவே, நீங்கள் எப்போதும் இருக்க முடியும்.
திரு ஏக்நாத் ராவ்: இது போன்ற செயற்பாடுகளை, உலக மக்களுக்கு அவசியமான பணம் சம்பாதிப்பதுடன் ஒருவர் எவ்வாறு சமரசம் செய்ய முடியும்?
மகரிஷி: செயல்கள் பந்தத்தை உருவாக்குவதில்லை. “நான் செய்கிறேன்” என்ற பொய்யான கருத்து தான் பந்தம். இத்தகைய எண்ணங்களை விட்டு விட்டு, உடலும் புலன்களும் உங்கள் தலையீட்டால் ஏற்படும் தடையின்றி தங்கள் பங்கைச் செய்யட்டும்.
தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா

