
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (7)
ரமண மகரிஷியின் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள்
~~~~~~~~
உரையாடல் 310.
திரு. க்ரீன்லீஸ்:
பக்தர்: தொழில் பணிகள், தியானம் செய்வதற்காக தனியாக நேரம் எடுத்துக் கொள்ள விடுவதில்லை. இடைவிடாமல் “நான்” என்று நினைவுறுத்திக் கொண்டே, வேலை செய்யும்போது கூட அதை உணர முயன்றுக் கொண்டே இருந்தால், அது போதுமா?
மகரிஷி: மனம் வலிமையான பின் அது நிலையாக ஆகி விடும். மீண்டும் மீண்டும் செய்யும் பயிற்சி மனதை வலிமையாக்குகிறது. இத்தகைய மனம் தியான ஓட்டத்தை பற்றிக் கொள்ள தகுதியுள்ளதாக ஆகிறது. அதனால், வேலையில் ஈடுபட்டாலும், ஈடுபடா விட்டாலும், தியான ஓட்டம் பாதிக்கப்படாமலும், தடையில்லாமலும் விளங்குகிறது.
பக்தர்: இதை விட்டு தனியாக தியானம் ஒன்றும் தேவையில்லையா?
மகரிஷி: தியானம் இப்போது உங்களுடைய உண்மைத் தன்மை. மற்ற எண்ணங்கள் உங்கள் கவனைத்தைச் சிதறச் செய்துக் கொண்டிருப்பதால், நீங்கள் அதை தியானம் என்று சொல்கிறீர்கள். இந்த எண்ணங்கள் விரட்டப்பட்ட பின், நீங்கள் தனியாக விளங்குகிறீர்கள்; அதாவது, எண்ணங்கள் இல்லாத தியான நிலையில். அது தான் உங்கள் உண்மை சுய நிலை. அதைத்தான் நீங்கள் இப்போது எண்ணங்களை அகற்றி வைப்பதால் அடைய முயற்சி செய்கிறீர்கள். இப்படி எண்ணங்களை அகற்றி வைப்பது இப்போது தியானம் என்று சொல்லப்படுகிறது. பயிற்சி ஸ்திரமாக ஆன பிறகு, உண்மைத் தன்மை உண்மையான தியானமாக காட்சி அளிக்கிறது.
தியானம் செய்ய முயலும் போது, மற்ற எண்ணங்கள் இன்னும் வலுக்கட்டாயமாக எழுகின்றன.
மகரிஷி இப்படி சொன்னவுடன், சில பக்தர்களிடமிருந்து சேர்ந்திசைந்து கேள்விகள் எழுந்தன.
மகரிஷி தொடர்ந்தார்: ஆமாம், தியானத்தில் எல்லா விதமான எண்ணங்களும் எழும். அது சரி தான். உள்ளுக்குள் ஒளிந்துக் கொண்டிருப்பது வெளியில் கொண்டு வரப் படுகிறது. அவை மேலே எழாவிட்டால், அவை எப்படி அழிக்கப் பட முடியும்? அதனால், சரியான சமயத்தில் அழிக்கப்பட்டு மனதை வலிமையாக்குவதற்காக அவை தன்னிச்சையாக எழுகின்றன.
~~~~~~~
உரையாடல் 348.
பக்தர்: திருவண்ணாமலைக்கு என்னுடைய இந்த மூன்றாவது வருகை, என்னுடைய தான்மை உணர்வை தீவிரப்படுத்தியிருப்பதாகவும், அதனால் என் தியானம் அவ்வளவு எளிதாக இல்லாதது போலவும் தோன்றுகிறது. இது ஒரு முக்கியமில்லாத கடந்து செல்லும் ஒரு கட்டமா, அல்லது இனிமேல் இத்தகைய இடங்களை நான் தவிர்க்க வேண்டும் என்பதற்கு ஒரு அறிகுறியா?
மகரிஷி: அது கற்பனையானது. இந்த இடமும் மற்ற ஒன்றும் உங்களுக்குள் தான் இருக்கிறது. மனதின் நடவடிக்கைகளுக்கும் இடங்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லாமல் இருக்கும்படி, இத்தகைய கற்பனைகள் முடிவடைய வேண்டும். உங்களுடைய சூழ்நிலைகள் கூட உங்கள் இசைவினால் இருப்பதில்லை. அவை நிகழ வேண்டிய மார்க்கத்தின் படி உள்ளன. நீங்கள் அவற்றுக்கு அப்பால் எழ வேண்டும். அவற்றுடன் சிக்கிக் கொள்ளக் கூடாது.
~~~~~~~
உரையாடல் 427.
பக்தர்: ஆன்ம ஞானம் அடைவதில், ஆன்மீகரின் முன்னேற்றத்தை குறிப்பிட்டுக் காட்டும் அறிகுறிகள், அவரது சுய அனுபவ தன்மையிலோ, அல்லது வேறு விதமாகவோ, ஏதாவது இருக்குமா?
மகரிஷி: தேவையற்ற எண்ணங்கள் எந்த அளவுக்கு இல்லாமல் இருக்கிறதோ, ஒரே எண்ணத்தின் மீது ஒருமுக சிந்தனை எந்த அளவுக்கு இருக்கிறதோ, அந்த அளவுகள் தான் முன்னேற்றத்தை கணிக்கும் முறைபாடாகும்.
~~~~~~~
உரையாடல் 580.
பக்தர்: தியானம் செய்வது எப்படி?
மகரிஷி: தியானம் என்றால் என்ன? பொதுவாக அது ஒரே ஒரு எண்ணத்தின் மீது ஒருமுக சிந்தனை என்று புரிந்துக் கொள்ளப் படுகிறது. அந்த சமயத்தில், மற்ற எண்ணங்கள் அகற்றி வைக்கப் படுகின்றன. அந்த ஒரே எண்ணமும் சரியான சமயத்தில் மறைய வேண்டும். எண்ணங்கள் இல்லாத பிரக்ஞை உணர்வு தான் குறிக்கோள்.
~~~~~~~
உரையாடல் 155.
திரு. கோஹென்: நான் தியானம் செய்யும்போது, சாந்தி என்றும், தியானிக்கும் மன நிலை என்றும் சொல்லும்படியான ஒரு நிலமுனையை அடைகிறேன். அடுத்த நிலைப்படி என்னவாக இருக்க வேண்டும்?
மகரிஷி: சாந்தி தான் ஆன்ம ஞானம். சாந்தி, மன அமைதி, தொந்தரவு செய்யப்பட வேண்டாம். சாந்தியைத் தான் ஒருவர் குறிபார்க்க வேண்டும்.
பக்தர்: ஆனால் எனக்கு அந்த திருப்தி இல்லை.
மகரிஷி: ஏனெனில் உங்கள் சாந்தி தற்காலிகமானது. அது நிரந்தமாக்கப்பட்டால், அதற்கு ஆன்ம ஞானம் என்று பெயர்.
~~~~~~~
உரையாடல் 214.
அடிக்கடி வரும் வருகையாளர் திரு. ஏக்நாத் ராவ் கேட்டார்:
பக்தர்: சூழ்நிலைகளுக்குத் தகுந்தபடி தியானத்தில் ஏற்ற இறக்கங்கள் இல்லையா?
மகரிஷி: ஆமாம். இருக்கின்றன. சில சமயம் ஒளியூட்டம் உள்ளது, அப்போது தியானம் எளிதாகிறது. மற்ற சமயங்களில், மீண்டும் மீண்டும் முயற்சி செய்தும் கூட தியானம் முற்றிலும் இயலாமல் போகிறது. இது ஒருவரின் தன்மையில் இயற்கையாக உள்ள மூன்று குணங்களின் செயல்பாடாகும்.
பக்தர்: ஒருவரின் நடவடிக்கைகளாலும், சூழ்நிலைகளாலும், தியானம் பாதிக்கப்படுகிறதா?
மகரிஷி: அவை தியானத்தை பாதிக்காது. செயலைச் செய்யும் தான்மை உணர்வு, கர்த்ருத்துவ புத்தி, இது தான் தடங்கலாக அமைகிறது.
~~~~~~~
உரையாடல் 220.
திரு. பி. சி. தாஸ் என்னும் பௌதீக விரிவுரையாளர் கேட்டார் :
பக்தர்: மனக்கட்டுப்பாடு இருந்தால் தான் தியானம் செய்ய முடியும். தியானம் செய்வதால் தான் மனக்கட்டுப்பாடு அடைய முடியும். இது ஒரு தீய வட்டம் (vicious circle) இல்லையா?
மகரிஷி: ஆமாம், அவை இரண்டும் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று சார்புள்ளவை. அவை அடுத்தடுத்து, ஒன்று மற்றதுடன் செல்ல வேண்டும். பயிற்சியும் வைராக்கியமும் விளைவை படிப்படியாக கொண்டு வரும். மனம் வெளிப்பட்டு காட்சிப்படுத்துவதை கண்காணித்து அடக்குவதற்காக வைராக்கியம் கடைப்பிடிக்கப்படுகிறது; மனதை உட்புறம் திருப்புவதற்காக பயிற்சி செய்யப்படுகிறது. கட்டுப்பாட்டுக்கும், தியானத்திற்கும் எப்போதும் ஒரு போராட்டம் நடக்கிறது. இது எப்போதும் இடைவிடாமல் உள்ளுக்குள் நடந்துக் கொண்டிருக்கிறது. சரியான சமயத்தில் தியானம் வெற்றி அடையும்.
பக்தர்: எப்படி ஆரம்பிப்பது? உங்கள் அருள் அதற்கு தேவைப்படுகிறது.
மகரிஷி: அருள் எப்போதும் இருக்கிறது. மகரிஷி ஒரு மேற்கோள் அறிவித்தார். “குருவின் அருளில்லாமல் வைராக்கியம் பெற முடியாது, உண்மைச் சுயநிலையை உணர முடியாது, ஆன்மாவில் உறைய முடியாது.”
மகரிஷி: பயிற்சி, எத்தனம் தேவை. இந்த பயிற்சி, முரடாக உள்ள ஒரு எருதை, இங்கும் அங்கும் அலையாமல் இருக்க வைக்க, அதன் தொழுவத்தில் அதற்கு ருசிகரமான, சுவையான புல்லை அளித்து ஆசை காட்டுவது போலாகும்.
~~~~~~~
உரையாடல் 306.
பக்தர்: தியானம் செய்வதற்கு ஒரு ஸ்தூல பொருள் தேவைப் படுகிறது. “நான்” என்பதன் மேல் எப்படி தியானம் செய்வது?
மகரிஷி: நாம் உருவங்களில் வேரூன்றிப் போயிருக்கிறோம். எனவே தியானிப்பதற்கு ஒரு ஸ்தூல வடிவம் தேவைப்படுகிறது. நாம் எதன் மேல் தியானம் செய்கிறோமோ, அது தான் கடைசியில் மிஞ்சி விளங்கும். நீங்கள் தியானம் செய்யும்போது, மற்ற எண்ணங்கள் மறைந்து விடுகின்றன. நீங்கள் தியானம் செய்ய தேவைப்படும் வரையில் மற்ற எண்ணங்கள் உள்ளன. நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? நீங்கள் இருப்பதால் தியானம் செய்கிறீர்கள். ஏனெனில் தியானிப்பவர் தான் தியானம் செய்யவேண்டும். தியானிப்பவர் இருக்கும் இடத்தில் தான் தியானமும் இருக்க முடியும். தியானம் மற்ற எண்ணங்கள் எல்லாவற்றையும் விலக்குகிறது. நீங்கள் உங்களை மூலாதாரத்தில் ஆழ்ந்திருக்க வைக்க வேண்டும். சில சமயம், தூக்கம், மரணம், மயக்கம் போன்ற நிலைகளில், நாம் நம்மை அறியாமல், மூலாதாரத்தில் ஒன்று சேருகிறோம். தியானம் என்றால் என்ன? அது முழு உணர்வுடன் மூலாதாரத்தில் ஒன்று சேருவதாகும். பிறகு, மரணம், மயக்கம் போன்றவற்றைப் பற்றி ஏற்படும் பயம் மறைந்து விடும். ஏனெனில், நீங்கள் மூலாதாரத்தில் உணர்வுடன் ஆழ்ந்து ஒன்று படுகிறீர்கள்.
~~~~~~~
உரையாடல் 367.
அவ்வப்போது வந்து செல்லும் ஒரு பெண்மணி, விடை பெறுவதற்கு முன்பு, மனமுடைந்துக் கண்ணீரைப் பொழிய தயாராக இருந்தாள். அவள் கேட்டாள்:
முக்தி கிடைப்பது ஒரு வாழ்நாளிலேயே முடியாது என்பதை நான் அறிவேன். இருந்தாலும், எனது இந்த வாழ்க்கையில், எனக்கு மன நிம்மதியே கிடைக்காதா?
மகரிஷி அவளை மிகவும் கருணையுடன் நோக்கினார். பிறகு மென்மையாக புன்சிரித்தவாறு சொன்னார்: வாழ்க்கை, இன்னும் மற்ற எல்லாம் பிரம்மனே தான். பிரம்மன் இங்கு இப்போது உள்ளது. விசாரணை செய்யுங்கள்.
பக்தர்: நான் பல வருஷங்களாக தியானம் செய்துக் கொண்டிருக்கிறேன். இருந்தாலும் என் மனம் நிலையாக இல்லை. அதை என்னால் தியானத்தில் ஆழ்த்த முடியவில்லை.
மகரிஷி அவளை நிலையாக பார்த்தார். பிறகு சொன்னார் : “இப்போது செய்யுங்கள். எல்லாம் சரியாகி விடும்.”