What is Meditation? How to do it? (4)
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (5)
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (3)

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (4)

~~~~~~~~

உரையாடல் 326.

மிகுந்த காலமாக வசித்து வரும் ஒரு உதவியாளரின் கேள்விக்கு மகரிஷி இவ்வாறு பதிலளித்தார். “எல்லோரும் மனதின் அமைதியற்ற அலைச்சலைப் பற்றி குறை சொல்கின்றனர். மனம் கண்டுபிடிக்கப் படட்டும். பிறகு அவர்கள் தெரிந்துக் கொள்வார்கள். ஒரு மனிதர் தியானம் செய்ய உட்கார்ந்தவுடன், அதிகமான அளவில் எண்ணங்கள் விரைந்து பாய்ந்து வருகின்றன என்பது உண்மை தான். மனம் என்பது எண்ணங்களால் அமைந்த ஒரு மூட்டை தான். எண்ணங்களாலான அணைக்கட்டின் நடுவில் தள்ளிக் கொண்டு தியானம் செய்ய முயல்வது வெற்றிகரமாக இருப்பதில்லை. 

ஏதாவது ஒரு விதத்தில் ஒருவர் ஆன்மாவில் உறைந்திருக்க முடிந்தால் நல்லது தான். அப்படி செய்ய முடியாதவர்களுக்கு, மந்திரம் ஓதுவது, ஜபம் அல்லது தியானம் செய்வது, இவை விதிக்கப்பட்டுள்ளன. இது, ஒரு யானையின் தும்பிக்கையில் பிடித்துக் கொள்ள ஒரு சங்கிலித் துண்டைக் கொடுப்பது போலாகும். யானையின் தும்பிக்கை சாதாரணமாக அமைதியற்று அலைந்துக் கொண்டிருக்கும். நகரத்தின் தெருக்களில் செல்லும்போது, அது தும்பிக்கையை எல்லா திசைகளிலும் வீசிக் கொண்டிருக்கும். அதில் ஒரு சங்கிலியைக் கொடுத்தால், அதன் அலைச்சல் கட்டுப்படுத்தப் படுகிறது. அதே போல் தான் அலைபாயும் மனமும். அதை ஜபம் அல்லது தியானத்தில் ஈடுபட வைத்தால், மற்ற எண்ணங்கள் அகற்றப்படுகின்றன. மனம் பிறகு ஒரே ஒரு எண்ணத்தின் மேல் ஆழ்கிறது. இவ்வாறு அது அமைதியடைகிறது. இதனால், ஒரு நீண்ட போராட்டம் இல்லாமல் அமைதி பெறப்படுகிறது என்று பொருளில்லை. மற்ற எண்ணங்களுடன் போராடித்தான் ஆக வேண்டும். 

~~~~~~~~

உரையாடல் 338.

திருமதி ஜென்னிங்க்ஸ் என்னும் அமெரிக்க பெண்மணி சில கேள்விகள் கேட்டார்கள்.

பக்தர்.: “நான் யார்?” என்று கேட்பதை விட “நான் உயர்வான சொரூபம்” என்று சொல்வது மேலானதில்லையா?  

மகரிஷி.: வலுயுறுத்துவது யார்? அதைச் செய்ய ஒருவர் இருக்க வேண்டும். அது யார் என்று கண்டுபிடியுங்கள்.

பக்தர்.: சுய விசாரணையை விட தியானம் மேலானதில்லையா? 

மகரிஷி.: தியானத்திற்கு மனக் கற்பனை தேவை. ஆனால், விசாரணை மெய்மைக்காக செய்யப்படுகிறது. முதலாவது புறநிலையில் உள்ளது. ஆனால், இரண்டாவது அகம் சார்ந்தது. 

பக்தர்.: இந்த விஷயத்திற்கு ஒரு அறிவியல் சார்ந்த அணுகு முறை இருக்க வேண்டும். 

மகரிஷி.: பொய்மையை நிராகரித்து, மெய்மையை நாடி தேடுவது அறிவியல் சார்ந்தது தான். 

பக்தர்.: அதாவது, ஒரு படிப்படியான நீக்கம் இருக்க வேண்டும். முதலில் மனம், பிறகு புத்தி, பிறகு தான்மை. 

மகரிஷி.: ஆன்ம சொரூபம் மட்டுமே மெய்மை. மற்ற எல்லாம் பொய்மை. மனமும் புத்தியும் உங்ளை விட்டு அகன்று இல்லை. 

“பைபிள்” (Bible) சொல்கிறது : “மன அசைவில்லாமல் அமைதியாக இருந்து, நான் கடவுள் என்று அறிந்துக் கொள்”. ஆன்மாவைக் கடவுள் என்று உணர, மன அசைவில்லாமல் இருப்பது ஒன்று தான் தேவைப் பொருள். 

பக்தர்.: மேற்கு திசை நாடுகள் இந்த போதனையை எப்போதாவது புரிந்துக் கொள்ளுமா? 

மகரிஷி.: நேரம், காலம் பற்றிய கேள்வி எழ வேண்டியதில்லை. புரிந்துக் கொள்வது மன முதிர்ச்சியைப் பொருத்து இருக்கிறது. ஒருவர் கிழக்கில் வாழ்ந்தால் என்ன, மேற்கில் வாழ்ந்தாலென்ன? 

~~~~~~~~

உரையாடல் 287.

மருத்துவராக தொழில் செய்யும் ஒரு பண்பட்ட பக்தர், தமது மனைவியுடன் மகரிஷியைச் சந்திக்க வந்தார். மகரிஷிபகலுணவுக்கு பின் கூடத்திற்கு திரும்பிய போது அவர் கூடத்தில் இருந்தார். பிறகு அவர் கேட்டார் : “நான் எப்படி தியானம் செய்ய வேண்டும்? எனக்கு மன அமைதி இல்லை.”

மகரிஷி.: சாந்தி தான் நமது உண்மைத் தன்மை. அதைப் பெற வேண்டிய அவசியமில்லை. நமது எண்ணங்கள் அழிக்கப்பட வேண்டும். 

பக்தர்.: நான் அவற்றை அழிப்பதற்கு முயற்சி செய்துக் கொண்டிருக்கிறேன், ஆனால் வெற்றி அடைவதில்லை.

மகரிஷி.: கீதையில் உள்ள முறைப்பாடு தான் இதற்கு ஒரே வழியாகும். எப்போதெல்லாம் மனம் அலைகிறதோ, அதை மீண்டும் திருப்பி தியானத்தில் செலுத்த வேண்டும். 

பக்தர்.: என்னால் என் மனதை தியானத்தில் ஆழ்த்த முடியவில்லை. 

மற்றொரு பக்தர் சொன்னார்: ஒரு யானையின் தும்பிக்கை காலியாக இருக்கும் போது அது அலைகிறது. அதில் ஒரு சங்கிலித் துண்டு கொடுத்தால், அதுற்குப் பிறகு அலைவதில்லை. அதே போல், குறிக்கோள் இல்லாத மனம் அலைபாய்கிறது. ஒரு குறிக்கோளுடன் அது அமைதியாக இருக்கிறது. 

பக்தர்.: இல்லை, இல்லை! இதெல்லாம் வெறும் தத்துவம். நான் பல நூல்களைப் படித்திருக்கிறேன். ஆனால் ஒரு பயனுமில்லை. மனதை ஒரு முக சிந்தனையில் ஆழ்த்துவதென்பது முற்றிலும் சாத்தியமற்றது.  

மகரிஷி.: பூர்வ மனப் போக்குகள் இருக்கும் வரையில், ஒரு முக சிந்தனை இயலாதது தான். அது பக்தியைக் கூட தடை செய்கிறது.  

மொழிபெயர்ப்பாளர், பக்தரை “நான் யார்?” என்னும் நூலைப் படிக்கும்படி ஆலோசனை அளித்தார். ஆனால், மருத்துவர் தன்னுடைய ஆட்சேபணைகளுடன் தயாராக இருந்தார்.  அவர் சொன்னார் :  “நான் அதையும் படித்திருக்கிறேன். பிறகும் என்னால் என் மனதை ஒருமுனைப்படுத்த முடிவதில்லை. ”

மகரிஷி.: பயிற்சியினாலும், வைராக்கியத்தினாலும் — அப்யாச வைராக்கப்யஹம். 

பக்தர்.: வைராக்கியம் தேவை தான்…

மகரிஷி.: பயிற்சி, வைராக்கியம், இரண்டும் தேவை. பயிற்சி என்பது ஒரே எண்ணத்தின் மேல் மட்டும் ஒரு முகமாக சிந்திப்பது. வைராக்கியம் என்பது பரவலாக உள்ள எண்ணங்கள் இல்லாமல் இருப்பது. ஒன்று தியானத்தின் நேர்மறையான அம்சமாகும், மற்றது எதிர்மறையான அம்சமாகும். 

பக்தர்.: என்னுடைய முயற்சியுடன் மட்டும் என்னால் தியானம் செய்ய முடியவில்லை. எனக்கு உதவி செய்ய ஒரு சக்தியின் உதவியைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.  

மகரிஷி.: ஆமாம். இதற்கு தான் அருள் என்று பெயர். மனம் பலவீனமாக இருப்பதால், தனித்துவமாக நம்மால் தியானம் செய்ய இயலவில்லை. அருள் தேவை. சாது சேவை என்பது இதற்காகத் தான் குறிப்பிடப் படுகிறது. ஆனால், புதிதாகப் பெற ஒன்றும் இல்லை. பலமுள்ள ஒரு மனிதரால் பலவீனமான ஒரு மனிதர் கட்டுப்படுத்தப்படுவது போல், ஒருவரின் பலவீனமான மனம், வலிமையான மனமுள்ள சாதுக்களின் முன்னிலையில், எளிதாக கட்டுப்பாட்டுக்குள் அடங்குகிறது. இருப்பதெல்லாம் அருள் தான். வேறு ஒன்றுமே இல்லை. 

கேள்வியாளர் சொன்னார்: “உங்களது ஆசீர்வாதங்களை நான் வேண்டுகிறேன்”.

மகரிஷி சொன்னார் : “சரி, சரி”.

 

தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (5)
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (3)
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (4)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!