Surrender and you no longer have any cares
சரணாகதி என்பது தனது சொந்த மூலமுதலான சொரூபத்திற்கு செய்வதாகும்
சரணைடையுங்கள் எல்லாம் சரியாகி விடும்

சரணடையுங்கள், பிறகு உங்களுக்கு கவலைகள் எதுவுமே கிடையாது

~~~~~~~~

உரையாடல் 43.

திரு டி. ராகவையா, புதுக்கோட்டை மாநிலத்தின் திவான் மகரிஷியிடம் கேட்டார்.

இந்த உலகத்தின் மீது  மனிதர்களான எங்களுக்கு ஏதாவது ஒரு துயரம் அல்லது கவலை இருந்துக்கொண்டே உள்ளது. அதிலிருந்து மீள்வது எப்படி என்று தெரிவதில்லை. கடவுளைப் பிரார்த்திக்கிறோம். ஆனாலும் திருப்தி அடைவதில்லை. நாங்கள் என்ன செய்வது?

மகரிஷி.: கடவுளை நம்புங்கள்.

பக்தர்.: நாங்கள் சரணடைகிறோம்; ஆனால் உதவி கிடைப்பதில்லை. 

மகரிஷி.: ஆமாம். நீங்கள் சரணடைந்திருந்தால், கடவுளின் சித்தப்படி உங்களால் நடந்துக் கொள்ள முடிய வேண்டும். அதோடு, நீங்கள் விரும்பாதது நிகழ்ந்தால், அதைப் பற்றி குறை சொல்லக்கூடாது. விஷயங்கள் தற்போது தெரியும் விதத்திலிருந்து வேறு விதமாக மாறக்கூடும். துயரம் பல சமயங்களில் மனிதர்களை கடவுள் மீது நம்பிக்கை கொள்ள வழிகாட்டும்.  

பக்தர்.: ஆனால் நாங்கள் உலகப் பற்றுள்ளவர்கள். மனைவி, குழந்தைகள், நண்பர்கள், உறவினர்கள், இவர்கள் எல்லோரும் உள்ளனர்.  இவர்கள் இருப்பதையெல்லாம் பொருட்படுத்தாமல், சிறிதளவு எங்களது தனித்தன்மையை வைத்துக் கொள்ளாமல்,  நாங்கள் கடவுளின் சித்தத்திற்கு உட்பட முடியாது.  

மகரிஷி.: அப்படியானால் நீங்கள் அறிவிப்பது போல் நீங்கள் சரணடையவில்லை. நீங்கள் கடவுளைத் தான் நம்ப வேண்டும்.  

~~~~~~~~

உரையாடல் 363.

விவாதங்கள், உரையாடல்கள் எல்லாம் அறியாமையை அகற்றுவதற்காகத் தான். அது அடையப் பட்டால், எல்லாம் தெளிவாகி விடும். அது  ஒருவரின் ஆற்றல், தகுதி, திறமை, முதிர்ச்சியைப் பொருத்திருக்கிறது.  

பக்தர்.: ஒரு பக்தரின் இத்தகைய தகுதியை, அருள் சீக்கிரமாக முன்னேறச் செய்யாதா? 

மகரிஷி.: கடவுளிடம் விட்டு விடுங்கள். சந்தேகமில்லாமல் முற்றிலும் சரணடைந்து விடுங்கள்.  இரண்டு விதங்களில் ஒன்று செய்தாக வேண்டும். ஒன்று, உங்களது இயலாமையை ஒப்புக்கொள்வதாலும் உங்களுக்கு உதவ ஒரு உயர்ந்த சக்தி தேவைப்படுவதாலும், சரணடைந்து விடுங்கள். அல்லது துயரத்தின் காரணத்தை விசாரணை செய்யுங்கள்; மூலாதாரத்தை அடைந்து சுய சொரூபத்தில் ஒன்று சேர்ந்து விடுங்கள். இந்த இரண்டு விதங்களில் எதைச் செய்தாலும், அதனால் நீங்கள் துன்பமில்லாமல் இருப்பீர்கள். சரணடைந்தவரை கடவுள் எப்போதும் கைவிட மாட்டார். 

பக்தர்.: சரணடைந்த பிறகு இருக்கும் மனப்போக்கு என்ன?
மகரிஷி.: சரணடைந்த மனமா இந்த கேள்வியை எழுப்புகிறது?

~~~~~~~~

உரையாடல் 450.

போலந்து நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணி இந்து மதத்தை பின்பற்ற ஆரம்பித்தாள். பிறகு அவளுக்கு சிவபெருமானின் தெய்வீக தரிசனம் ஓரிரு முறைகள் தோன்றியது. அது அவளுக்கு பேரானந்தம் அளித்தது.  அந்த தரிசனம் நிலயாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாக அவள் மகரிஷியிடம் சொன்னாள்.  

மகரிஷி பின்வருமாறு சொன்னார்.  

“உள்ளமை” என்பது தான் ஞானம்.  அதனால் தான் “நான் அந்த நானாக உள்ள நான்” என்ற வாக்கியம்.   “நான் உள்ளேன்” என்பது தான் சிவம். அவரில்லாமல் வேறு எதுவுமே இருக்க முடியாது. எல்லாமே சிவத்தில் தான் உள்ளது, சிவத்தால் தான் உள்ளது. 

எனவே “நான் யார்?” என்று விசாரியுங்கள். உள்ளுக்குள் ஆழ்ந்து மூழ்கி ஆன்ம சுய சொரூபமாக உறையுங்கள். அது தான் உண்மையாக உள்ள சிவம்.  அவரது தரிசனம் மீண்டும் மீண்டும் கிடைக்க எதிர்பார்க்காதீர்கள்.  நீங்கள் பார்க்கும் பொருட்களுக்கும் சிவத்திற்கும் என்ன வித்தியாசம்? அவரே தான் நபரும் பொருளும்.  சிவமில்லாமல் நீங்கள் இருக்க முடியாது. சிவம் இப்போதும் ஞானம் அடைந்துள்ளது. அவரை நீங்கள் அறியவில்லலி, உணரவில்லை என்று நினைத்தால், அது தவறு. அதுவே தான் சிவனை அறிவதற்குத் தடங்கலாகும்.  அந்த எண்ணத்தையும் விட்டு விடுங்கள், உடனே அங்கு ஞானம் உள்ளது.  

பக்தர்.: சரி. ஆனால், அதைச் சீக்கிரத்தில் விளைவிப்பது எப்படி? 

மகரிஷி.: இது தான் ஞானத்திற்குத் தடங்கல். சிவம் இல்லாமல் ஒரு மனிதர் இருக்க முடியுமா? இப்போதும் கூட அவர் நீங்கள் தான். நேரத்தைப் பற்றி கேள்வியே இல்லை.  ஞானம் இல்லாத ஒரு நொடி இருந்தால், ஞானத்தைப் பற்றிய கேள்வி எழலாம். ஆனால் உள்ளபடியே அவரில்லாமல் நீங்கள் இருக்க முடியாது. அவர் ஏற்கனவே ஞானம் உள்ளவர், எப்போதும் ஞானம் உள்ளவர், அவர் எப்போதும் ஞானமில்லாமல் இருப்பதே இல்லை. 

அவரிடம் சரணடைந்து விடுங்கள். பிறகு அவர் தோன்றினாலும் மறைந்தாலும், அவரது சித்தம் எதுவோ அதன்படி இணங்கி நடந்துக் கொள்ளுங்கள். அவரது விருப்பத்தை நாடி காத்திருங்கள். நீங்கள் விரும்புவதைச் செய்யும்படி கேட்டால், பிறகு அது சரணகதி இல்லை; அதற்கு பதிலாக அது அவருக்கு அளிக்கும் கட்டளையாகும். அவரை உங்களுக்குக் கீழ்படிய வைத்து விட்டு, நீங்கள் சரணடைந்து விட்டதாக நினைத்துக் கொள்ள முடியாது. எது மிகச் சிறந்தது, அதை எப்போது எப்படி செய்வது என்று அவருக்குத் தெரியும். எல்லாவற்றையும் முற்றிலும், முழுமையாக அவரிடம் விட்டு விடுங்கள். சுமை அவருடையது. உங்களுக்கு இனிமேல் கவலைகள் எதுவுமே கிடையாது. உங்கள் கவலைகள் எல்லாம் அவருடைய கவலைகள். இதுவே சரணாகதி. இது தான் பக்தி.

அல்லது, யாருக்கு இந்த கேள்விகள் எழுகின்றன என்று விசாரணை செய்யுங்கள். ஆழ்ந்து உள்ளத்தினுள் மூழ்கி உண்மை சுய சொரூபமாக  தங்கி உறையுங்கள். இந்த இரண்டு வழிமுறைகளில் ஒன்றை பக்தர் பின்பற்றலாம். 

மேலும் பகவான் தொடர்ந்து சொன்னார்.  பிரக்ஞை உணர்வில்லாத மனிதரே கிடையாது. எனவே சிவமில்லாத யாருமே கிடையாது. அவர் சிவம் மட்டுமில்லை, அவர் அறிந்ததும் அறியாததுமான எல்லாமே சிவம் தான். எனினும் அவர் வெறும் அறிமையாமையால், பலப் பல வடிவங்கள் கொண்ட பிரபஞ்சத்தைக் காண்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அவர் தன்னுடைய உண்மை ஆன்ம சுய சொருபத்தை கண்டு கொண்டு விட்டால், அதன் பிறகு தான் பிரபஞ்சத்தை விட்டுப் பிரிந்து, தனியாக இருப்பதாக உணர மாட்டார்.  உண்மையில், அவரது தனிப்பட்ட தான்மையும், மற்ற உருப் பொருட்களின் தனிப்பட்ட தன்மைகளும் மறைந்து போய் விடும். எல்லா உருப் பொருட்களும் தொடர்ந்து காணப்பட்டாலும், அவற்றின் தனித்துவங்கள் மறைந்து விடும்.  

 

சரணாகதி என்பது தனது சொந்த மூலமுதலான சொரூபத்திற்கு செய்வதாகும்
சரணைடையுங்கள் எல்லாம் சரியாகி விடும்
சரணடையுங்கள், பிறகு உங்களுக்கு கவலைகள் எதுவுமே கிடையாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!