சரணாகதி என்பது தனது சொந்த மூலமுதலான சொரூபத்திற்கு செய்வதாகும்
ரமண மகரிஷியுடன் உரையாடல்
உரையாடல் 208
ஒருவர் தன்னைச் சரணடைந்துக் கொண்டால் அதுவே போதும். சரணாகதி என்பது தனது சொந்த மூலமுதலான அசலான சொரூபத்திற்கு தன்னை ஒப்படைத்து விடுவதாகும். இத்தகைய மூலாதாரத்தை உங்களுக்கு வெளியே எங்கோ உள்ள ஒரு கடவுள் என்று கற்பனை செய்துக் கொண்டு உங்களையே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். உங்களது மூலாதாரம் உங்களுக்குள்ளேயே இருக்கிறது. அதனிடம் உங்களை விட்டுக் கொடுத்து விடுங்கள். அதன் பொருள் என்னவென்றால், நீங்கள் அந்த மூலத்தை நாடிச் சென்று அதில் ஒன்று சேர வேண்டும். நீங்கள் அதற்கு வெளியில் இருப்பதாகக் கற்பனை செய்துக் கொண்டிருப்பதால், “மூலாதாரம் எங்கே இருக்கிறது?” என்ற கேள்வியை நீங்கள் எழுப்புகிறீர்கள்.
அந்த அசலான ஆன்மாவில் நீங்கள் ஒன்று சேர்ந்து விட்டால், பிறகு தனித்துவம் எதுவும் மிஞ்சாது. நீங்கள் மூலாதாரமாகவே ஆகி விடுவீர்கள். பிறகு, என்ன சரணாகதி? யார் யாருக்கு சரணடைவது? இதுவே பக்தி, ஞானம், விசாரணை எல்லாமும் ஆகும்.
வைஷ்ணவர்களில் கூட, நம்மாழ்வார் என்ற முனிவர் சொல்கிறார் : “நான்”, “என்னுடையது” என்பவற்றோடு ஒட்டிக் கொண்டு, என்னுடைய அசலான சொரூபத்தை அறியாமல், நான் ஒரு புதிர்பாதையில் அலைந்துக் கொண்டிருந்தேன். என்னுடைய சுய சொரூபத்தை உணர்ந்துக் கொண்ட பிறகு, ‘நானே தான் நீங்கள், என்னுடையவை என்பதும் நீங்கள் தான்’ என்று புரிந்துக் கொண்டேன்.” இவ்வாறு நம்மாழ்வார் சொல்கிறார்.
எனவே, பாருங்கள், பக்தி என்பது, தன்னை அறிந்துக் கொள்வதைத் தவிர வேறொன்றுமில்லை.
உரையாடல் 271.
டாக்டர் சையத் என்ற தத்துவ அறிஞர், மகரிஷியின் ஒரு பக்தர், கேட்டார் :
பக்தர்: அருள் பெறுவது எப்படி?
மகரிஷி: ஆன்மாவைப் பெறுவது போல.
பக்தர்: நடைமுறையில் அது எங்களுக்கு எப்படி இருக்க வேண்டும்?
மகரிஷி: சுய சொரூபத்திடம் சரணடைவதன் மூலமாக.
பக்தர்: அருள் என்பது ஆன்மா என்று சொல்லப்படுகிறது. அப்படியானால் நான் என்னுடைய சொந்த ஆன்மாவுக்கே சரணடைய வேண்டுமா?
மகரிஷி: ஆமாம். யாரிடமிருந்து அருள் நாடப்படுகிறதோ அதனிடம் சரணடைய வேண்டும். கடவுள், குரு, ஆன்மா, இவை எல்லாம் ஒரே ஒன்றின் வெவ்வேறு உருவங்கள்.
பக்தர்: நான் புரிந்துக் கொள்வதற்காக தயவு செய்து விளக்கம் தர வேண்டும்.
மகரிஷி: நீங்கள் ஒரு தனிப்பட்ட நபர் என்று நினைத்துக் கொண்டிருக்கும் வரை, நீங்கள் கடவுள் மீது நம்பிக்கை கொள்கிறீர்கள். கடவுளை வழிபடும்போது, கடவுள் உங்களுக்கு ஒரு குருவாகத் தோன்றுகிறார். அந்த குருவுக்கு சேவை செய்வதால், அவர் சுய சொரூப ஆன்மாவாக வெளிப்படுகிறார். இது தான் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட விளக்கம்.
உரையாடல் 251.
பக்தர்: மன அமைதி பெறுவது எப்படி என்று அறிந்துக் கொள்ள விரும்புகிறேன். தயவு செய்து எனக்கு அறிவுரை அளிக்க வேண்டும்.
மகரிஷி: சரி. அது பக்தியினாலும் சரணாகதியினாலும் பெற முடியும்.
பக்தர்: ஒரு பக்தையாக இருக்க எனக்கு தகுதி இருக்கிறதா?
மகரிஷி: எல்லோரும் பக்தராக இருக்க முடியும். ஒருவர் வயதானவரானாலும், இளமையானவரானாலும், ஆணானாலும், பெண்ணானாலும், ஆன்மீகம் எல்லோருக்கும் பொதுவானது தான். அது யாருக்கும் மறுக்கப் படுவதில்லை.
உரையாடல் 354.
பக்தர்: அறியாமையை அகற்றுவதற்கு அருள் தேவை.
மகரிஷி: நிச்சயமாக! ஆனால், அருள் எப்போதும் இருந்துக் கொண்டே தான் இருக்கிறது. அருள் ஆன்மாவே தான். அது பெறப்படும் பொருளில்லை. அது உள்ளது என்பதை அறிவது மட்டுமே தேவை. உதாரணமாக, கதிரவன் பிரகாசமே தான். அவர் இருட்டைக் காண்பதில்லை. ஆனால், கதிரவன் வந்தவுடன் இருட்டு விலகுவதாக மற்றவர்கள் தான் சொல்கிறார்கள். அதே போல், அறியாமையும் ஒரு பூதம் தான். அது மெய்யானது இல்லை. அது பொய்யானதால், அதன் பொய்யான தன்மை கண்டுபிடித்துக் கொள்ளப்படும் போது, அது விலகி விட்டதாகச் சொல்லப்படுகிறது.
மேலும், கதிரவன் உள்ளது, பிரகாசமாகவும் உள்ளது. நீங்கள் கதிரொளியினால் சூழ்ந்துக் கொள்ளப் பட்டிருக்கிறீர்கள். ஆனாலும், கதிரவனைப் பார்க்க வேண்டுமென்றால், நீங்கள் உங்கள் கண்களை அவரது திசையில் திருப்பி அவரைப் பார்க்க வேண்டும். அதே போல், அருளும், இங்கு இப்போது இருந்தாலும், எத்தனத்தின் மூலமாக மட்டுமே அடையப் படுகிறது.
பக்தர்: சரணடைய வேண்டுமென்று இடைவிடாமல் விரும்புவதால், அதிகமான அருள் பெற முடியும் என்று எதிர்பார்க்கிறேன்.
மகரிஷி: ஒரே வழியாக சரணைடைந்து விடுங்கள்; அந்த விருப்பத்தை நிறைவேற்றி விடுங்கள். “நான் செய்கிறேன்” என்ற தன்மை இருக்கும் வரை விருப்பம் இருக்கிறது; அதுவே தான் தனிப்பட்ட தன்மையும். அது போனால், சுய சொரூபம் தானாக தூய்மையாகப் பிரகாசிப்பது தெரிய வரும்.
“நான் செய்கிறேன்” என்ற தன்மை தான் பிணைப்பே தவிர, செயல்கள் பிணப்பில்லை.
“மன அசைவில்லாமல் இருந்து நான் கடவுள் என்று அறிந்துக் கொள்.” இந்த வாக்கியத்தில், மன அசைவில்லாமல் நிலையாக இருப்பதன் பொருள், சிறிதளவும் தனித்துவம் இல்லாமல், முற்றிலும் முழுமையாக சரணடைவதாகும். பிறகு பூரண அமைதி நிலவும். மனக் கிளர்ச்சி, சஞ்சலம் இருக்காது. ஆசைகள், “நான் செய்கிறேன்” என்ற தன்மை, தனித்துவம், இவற்றிற்கெல்லாம் மனக்கிளர்ச்சி, மன அலைவு தான் காரணம். அது நிறுத்தப்பட்டால், அமைதி இருக்கிறது. “மன அசைவில்லாமல் இருந்து நான் கடவுள் என்று அறிந்துக் கொள்” என்ற வாக்கியத்தில், அறிந்துக் கொள் என்பதன் பொருள் “இருந்துக் கொள்” என்பதாகும்.
உரையாடல் 321.
பக்தர்: விழிப்பு நிலையில் துன்பங்கள் தோன்றுகின்றன. அவை ஏன் தோன்ற வேண்டும்?
மகரிஷி: நீங்கள் சுய சொருபத்தைக் கண்டால் அவை தோன்றாது.
பக்தர்: நான் யார் என்று பார்ப்பதற்கு முயன்றால், நான் எதையும் காண்பதில்லை.
மகரிஷி: நீங்கள் தூக்கத்தில் எப்படி இருந்தீர்கள்? அங்கு உங்களுக்கு ‘நான் – எண்ணம்’ இல்லை. நீங்கள் சந்தோஷமாக இருந்தீர்கள். ஆனால் விழிப்பு நிலையில், ‘நான் – எண்ணம்’ எழுந்தவுடன் மற்ற எண்ணங்களும் இருக்கின்றன. இவை உங்களுடைய இயல்பான உள்ளார்ந்த சந்தோஷத்தை மறைக்கின்றன. உங்கள் சந்தோஷத்திற்குத் தடங்கல்களாக இருக்கும் இந்த எண்ணங்களை நீக்கி விடுங்கள். உங்கள் தூக்கத்தில் விளங்கியது போல், உங்களுடைய இயல்பான தன்மை சந்தோஷம் நிறைந்தது.
இவ்வாறே தான், ‘தத்வமஸி’, அதாவது “நீ அது தான்” என்ற மகா வாக்கியத்திலும் குறிப்பிடப் படுகிறது. உங்கள் சுய சொரூபத்தை கண்டுபிடியுங்கள். பிறகு “அது” என்பது என்ன என்று தெரிய வரும்.
பக்தர்: ஆனால் என்னால் அதைச் செய்ய முடியவில்லை. சுய சொரூபத்தை உணருவதற்கு நான் மிகவும் பலவீனமாக இருக்கிறேன்.
மகரிஷி: அப்படியானால், சந்தேகமில்லாமல், நிபந்தனைகள் இல்லாமல், சரணடைந்து விடுங்கள். பிறகு உயர்ந்த சக்தி தன்னை வெளிப்படுத்தும்.
பக்தர்: அந்த நிபந்தனைகள் இல்லாத சரணாகதி என்பது என்ன?
மகரிஷி: ஒருவர் சரணாகதி செய்து விட்டால், அதற்குப் பிறகு கேள்விகள் கேட்கவோ நினைக்கப்படவோ யாரும் இருக்க மாட்டார். ஒன்று, ‘நான்’ என்ற மூல எண்ணத்தைப் பற்றிக் கொண்டவாறு எண்ணங்கள் எல்லாம் நீக்கப்பட வேண்டும். அல்லது, ஒருவர் நிபந்தனைகள் எதுவுமில்லாமல் உயர்ந்த சக்தியிடம் சரணடைந்து விட வேண்டும். ஆன்ம ஞானத்திற்கு இந்த இரண்டு வழிகள் மட்டும் தான் உள்ளன.