அருணாசல அஷ்டகம் – 7
திரு ரமண மகரிஷி
அருணாசல அஷ்டகம்
(எண்சீர் விருத்தம்)
7.
இன்றக மெனுநினை வெனிற்பிற வொன்று
மின்றது வரைபிற நினைவெழி லார்க்கெற்
கொன்றக முதிதல மெதுவென வுள்ளாழ்ந்
துளத்தவி சுறினொரு குடைநிழற் கோவே
யின்றகம் புறமிரு வினையிறல் சன்ம
மின்புதுன் பிருளொளி யெனுங்கன விதய
மன்றக மசலமா நடமிடு மருண
மலையெனு மெலையறு மருளொளிக் கடலே.
பொருள்:
நான் என்று தோன்றும் அகங்காரவடிவ முதல் எண்ணம் எழவில்லையானால் வேறு எதுவுமே இல்லை. அந்த எண்ணம் அற்றுப்போகும் வரையிலும், மற்ற எண்ணங்கள் தோன்றினால் அது யாருக்கு என்று விசாரித்தால், “எனக்கு” என்று தோன்றும். இந்த “நான்” என்பது எங்கிருந்து உதிக்கிறது? என்று விசாரித்து, அந்த இடத்தில் மூழ்கி இதய சிம்மாசனத்தை அடையப்பெற்றால், ஈடு இணையற்ற அருட்கொடையின் ஆணையைச் செலுத்தி, உலகனைத்தையும் அருளாட்சி புரியும் இறைவனாக நீயே திகழ்வாய். பிறகு உள்-வெளி, பிறப்பு-இறப்பு, சுகம்-துக்கம், இருட்டு-வெளிச்சம் என்று இரட்டைகளாகத் தோன்றும் யாவும் மறைந்துவிடும். இதய மன்றத்தில் அசல தாண்டவமிடும் அருணாசலமென்னும் எல்லையற்ற அருள் ஒளிக்கடலே!
Meaning:
When there is no I-thought, then there will be no other thought. Until that time, when other thoughts arise, asking ‘To whom?’ will call forth the reply, ‘To me.’ He who pursues this closely, questioning ‘What is the origin of the I?’ and diving inwards reaches the seat of the mind within the Heart, he becomes the sovereign Lord of the Universe. There is no longer any dream of such dualities as in and out, right and wrong, birth and death, pleasure and pain, or light and darkness. Oh boundless ocean of Grace and Effulgence called Arunachala, dancing motionless within the court of the Heart!