
55 – 56. நான் யார்? நான் ஏன் பிறந்தேன்? ஆன்மாவை அறிவது எப்படி?
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா
ஜூன் 18, 1935
உரையாடல் 55.
பக்தர்: ராமா, கிருஷ்ணா என்பது போன்ற புனித நாமங்களை ஜபிப்பதால், அத்வைதம், அதாவது இரண்டில்லாத ஒருமை என்பதை அறிய முடியுமா?
மகரிஷி: ஆமாம்.
பக்தர்: அது ஆன்மீக வழிகளில் தாழ்ந்தது இல்லையா?
மகரிஷி: நீங்கள் ஜபம் செய்ய வேண்டும் என்று உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறதா, அல்லது வழி முறைகளில் ஜபம் செய்வதின் நிலைப்படியைப் பற்றி விவாதிக்கச் சொல்லப்பட்டிருக்கிறதா?
பக்தர் மௌனமாக இருந்தார்.
ஜூன் 22, 1935
உரையாடல் 56.
ஒரு இருபது வயதுள்ள வாலிபர் மகரிஷியை ஆன்ம ஞானத்தைப் பற்றி கேட்டார். அவர் முதலில் ஒரு மணி நேரத்திற்கு மேல் மௌனமாக அமர்ந்திருந்தார். பிறகு அங்கிருந்து அகன்று செல்வதற்கு முன்னால், மகரிஷியைக் கேட்டார்.
பக்தர்: சுய சொரூப ஆன்மாவை அறிந்து உணர்வது எப்படி?
மகரிஷி: யாருடைய ஆன்மா? கண்டுபிடியுங்கள்.
பக்தர்: நான் யார்?
மகரிஷி: நீங்களே கண்டுபிடியுங்கள்.
பக்தர்: எனக்குத் தெரியவில்லை.
மகரிஷி: சிந்தித்துப் பாருங்கள். “எனக்குத் தெரியவில்லை” என்று சொல்பவர் யார்? தெரியாதது என்ன? நான் யார் என்ற உங்கள் வாக்கியத்தில், “நான்” என்பது யார்?
பக்தர்: என்னுள் உள்ள யாரோ.
மகரிஷி: யார் அந்த யாரோ? யாருக்குள்?
பக்தர்: ஒருவேளை ஒரு சக்தி.
மகரிஷி: அதைக் கண்டுபிடியுங்கள்.
பக்தர்: பரப்பிரம்மத்தை அறிவது எப்படி?
மகரிஷி: ஆன்ம சுய சொரூபத்தை அறியாமல் இருக்கும் போது, பரப்பிரம்மத்தை ஏன் அறிய வேண்டுகிறீர்கள்?
பக்தர்: பரப்பிரம்மம் எல்லாவற்றையும் வியாபிக்கிறது என்றும் அது என்னுள்ளும் இருப்பதாகவும் மறை நூல்களும், சாஸ்திரங்களும் சொல்கின்றன.
மகரிஷி: “என்னுள்” என்பதில் உள்ள “நான்” என்பதைக் கண்டுபிடியுங்கள். பிறகு பரப்பிரம்மத்தைப் பற்றி யோசிக்க நேரம் இருக்கும்.
பக்தர்: நான் ஏன் பிறந்தேன்?
மகரிஷி: யார் பிறந்தது? உங்களுடைய எல்லா கேள்விகளுக்கும் இதே தான் பதில்.
பக்தர்: பின் நான் யார்?
மகரிஷி புன்சிரித்தார். நீங்கள் என்ன என்னை சோதிக்கவும் என்னைக் கேள்வி கேட்கவும் வந்திருக்கிறீர்களா? நீங்கள் யார் என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
பக்தர்: ஆழ்ந்த தூக்கத்தில், ஆன்மா உடலை விட்டு நீங்கிச் செல்கிறது, பிறகு எங்கேயோ தங்கி நிலவுகிறது. நான் விழித்ததும், அது மீண்டும் நழைகிறது. இப்படித்தானே நிகழ்கிறது?
மகரிஷி: உடலை விட்டு அகன்று செல்வது எது?
பக்தர்: ஒருவேளை ஒரு சக்தி.
மகரிஷி: அந்த சக்தியைக் கண்டுபிடியுங்கள்.
பக்தர்: உடல் ஐந்து தன்மங்களால் ஏற்படுத்தப் பட்டுள்ளது. அந்த தனிமங்கள் என்ன?
மகரிஷி: சொரூபத்தை அறியாமல், தனிமங்களை அறிய ஏன் நாடுகிறீர்கள்?
இள வாலிபர் சிறிது நேரம் அமர்ந்திருந்தார். பிறகு விடை பெற்று சென்றார்.
மகரிஷி சொன்னார் : “சரி. இந்த அறிவுரைகள் வேலை செய்யும்”.

