How to practice mind control methods
28 A. உண்மை நிலையை உணர்வது தான் குறிக்கோள்
26. மனதின் தன்மையை கண்டுபிடிப்பது எப்படி

மனக்கட்டுப்பாடு முறைகளை பின்பற்றுவது எப்படி

பக்தர்.: மனதைக் கட்டுப்படுத்துவதன் பயிற்சிகள் எப்படி செய்யப்படுகின்றன?
மகரிஷி.: வெளிப்புற தோற்றப்பாடுகளின் மாறிக்கொண்டே இருக்கின்ற, நிலையற்ற தன்மையை ஆராய்ந்து பார்ப்பது, வைராக்கியத்திற்கு வழிவகுக்கிறது. எனவே விசாரணை தான் முதலாவதும் மிக முக்கியமானதுமான நிலைப்படியாகும். விசாரணை தானாவே தொடரும்போது, அதனால் செல்வம், புகழ், சுகம், இன்பம் போன்றவற்றின் மேல் வெறுப்பு உண்டாகிறது. “நான்” என்னும் எண்ணம் ஆராய்வதற்கு மேலும் தெளிவாகிறது.

“நான்” என்பதன் மூலாதாரம், இறுதியான குறிக்கோள், இதயம் ஆகும். ஆனால், அதை நாடும் பக்தர், தமது உளற்பாங்கின்படி, உள்முக பகுப்பாய்வு சார்ந்த விசார மார்க்கத்திற்குப் பொருந்தாமல் இருந்தால், அவர் கடவுள், குரு, பொதுவான மனிதகுலம், நெறிமுறை சட்டங்கள்,  அழகு என்னும் கருத்து கூட, இவை போன்ற ஒரு முழு நிறைவான சிறந்த கொள்கையின் மீது பக்தியை வளரச் செய்ய வேண்டும்.

இவற்றில் ஒன்று மனிதரை பிடித்துக் கொண்டு சொந்தமாக்கிக் கொள்ளும்போது, மற்ற பற்றுதல்கள் பலவீனமாகின்றன; அதாவது வைராக்கியம் வளர்கிறது. அதே சமயத்தில் ஒரு சிறந்த கொள்கையின் மீது பற்றுதல் வளர்ந்து, திடமாக இடத்தைப் பிடித்துக் கொள்கிறது.   அதே சமயத்தில், புலப்படாமல், தரிசனங்களும் நேரடியான சகாயங்களும் கூடவே இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஒருமுகச் சிந்தனை வளர்கிறது. 

விசாரணையும் பக்தியும் இல்லாவிட்டால், இயல்பான அமைதியூட்டும் மருந்தான பிராணாயாமம் என்னும் மூச்சுக் கட்டுப்பாடு முயற்சி செய்யப்படலாம்.  இது யோக மார்க்கம் என்று அழைக்கப்படுகிறது. உயிருக்கு பயம் நேர்ந்தால், முழு ஆர்வமும் உயிரைக் காப்பாற்றும் ஒரே நோக்கத்தை மையமாகக் கொள்கிறது.  மூச்சுப் பிடித்துக் கொள்ளப்பட்டால், மனம் தனக்குச் செல்லமான வெளிப்புறப் பொருள்கள் மீது குதிக்க இயலும் நிலையில் இருக்காது, குதிக்கவும் செய்யாது.  இப்படியே, மூச்சுப் பிடித்துக் கொள்ளப்படும்போது, மனதுக்கு அமைதி கிடைக்கிறது. எல்லா கவனமும் மூச்சின் மீதோ அல்லது அதன் கட்டுப்பாட்டின் மீதோ திரும்புவதால், மற்ற நாட்டங்கள் தொலைந்து போகின்றன.

மேலும், அதிக உணர்ச்சிவசமான விருப்புகள், ஒழுங்கில்லாமல் மூச்சு விடுவதுடன் சேர்ந்து உள்ளன. சாந்தமும் சந்தோஷமும், மெதுவாக, ஒழுங்காக மூச்சு விடுவதுடன் சேர்ந்து உள்ளன. திடிரென்று எழும் களிப்பு, நோவைப் போல் நோவது தான்; ஏனெனில் இரண்டும் அமைதி குலைந்த மூச்சுகளுடன் சேர்ந்து உள்ளன. உண்மையான மன அமைதி தான் சந்தோஷம்.  களிப்புகள் சந்தோஷமாகாது. பயிற்சி செய்வதால் மனம் மேம்படுகிறது; கூர்மையான கத்தியின் விளிம்பு கூராக்கப்படுவது போல், மேலும் நேர்த்தியாகிறது.  அதன் பிறகு மனத்தால், உட்புற பிரச்சனைகளையும், வெளிப்புறப் பிரச்சனைகளையும் முன்பை விட சிறந்த விதத்தில் கையாள முடிகிறது. 

பக்தர் அல்லது சாதகர், முதலில் சொன்ன இரண்டு வழிமுறைகளுக்கும் உளற்பாங்காக பொருந்தாவிட்டால், அல்லது சூழ்நிலையால் வயதின் காரணத்தால் மூன்றாவது வழிமுறைக்கு பொருந்தாவிட்டால், அவர் கர்ம மார்க்கத்தைப் பின்பற்ற முயற்சி செய்யலாம். (அதாவது, நல்ல காரியங்களில் ஈடுபடுவது; உதாரணமாக சமூக சேவை செய்வது.) இதனால் அவரது மேன்மையான பெருந்தகையான உள்ளுணர்வுகள் வெளிப்படுகின்றன; அவர் தன்னைச்சாராத சுகம் அடைகிறார். அவரது சிறிய தான்மை தன்னை வலியுறுத்துவது குறைகிறது; அதன் நல்ல பக்கத்தை விரிவாக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.  பிறகு அந்த மனிதர் முன்பு சொன்ன மூன்று பாதைகள் ஒன்றில் முறையாக ஆயத்தப்படுத்தபடுகிறார். அவரது இயலுணர்வும் நேரடியாக இந்த ஒரே வழிமுறையால் வளரலாம்.  

பக்தர்.: ஒரே விதமான வரிசையான எண்ணங்கள், அல்லது ஒரு கேள்வித் தொடர் – இவை சுயவசியம் (self-hypnotism) என்பதைத் தூண்ட முடியுமா? ஆராய்ந்து செய்து பார்க்க முடியாததும், தொடக்க நிலையானதும், தெளிவில்லாமல் காணப்படுவதும், பிடிபடாமல் நழுவிக் கொண்டிருப்பதுமான “நான்” என்பதை ஆராய்வது என்பது, ஒரே ஒரு ஒற்றை மையத்திற்கு கொண்டு வந்து,  ஆராய வேண்டும், இல்லையா? 
மகரிஷி.: ஆமாம். அது உண்மையில் ஒரு காலியிடத்தை கூர்ந்து பார்த்தல், அல்லது பளீரென ஒளித்திடும் படிகம் அல்லது விளக்கை ஊன்றி நோக்கிதல் போன்றதாகும்.  

பக்தர்.: மனதை ஒரு மையத்தில் பொருத்த முடியுமா? எப்படி?  
மகரிஷி.: மனம் சஞ்சலப்பட்டால், உடனே, “யாருக்கு இந்த கவனத்தைச் சிதறும் எண்ணங்கள் எழுகின்றன?” என்ற கேள்வியை கேளுங்கள். அது உடனடியாக “நான்” என்னும் மையத்திற்கு திரும்பி எடுத்துச் செல்லும்.

பக்தர்.: எவ்வளவு காலம் மனம் இதயத்தில் தங்கும், அல்லது வைக்கப்படலாம்?
மகரிஷி.: இந்த காலம் பயிற்சி செய்யச் செய்ய நீட்டிக்கப்படும். 

பக்தர்.: அந்த காலத்தின் முடிவில் என்ன நடக்கிறது?
மகரிஷி.: மனம் தனது தற்போதைய இயல்பான நிலைக்கு திரும்புகிறது. இதயத்தில் உள்ள ஒருமைப்பாடு அல்லது ஐக்கியத்திற்கு பதிலாக, அங்கே பலவகையான தோற்றப்பாடுகள் காணப்படுகின்றன. இதற்கு பெயர், வெளிச்செல்லும் மனம். இதயத்திற்கு செல்லும் மனம் அசையா நிலையில் உறையும் மனம் என்று அழைக்கப்படுகிறது.  

பக்தர்.: இந்த செயல்முறையெல்லாம் வெறும் புத்தி சார்ந்ததா, அல்லது அது உணர்ச்சியை முதன்மையாக வெளிக்காட்டுகிறதா? 
மகரிஷி.: பிந்தியது. 

பக்தர்.: மனம் இதயத்தில் உள்ள போது எல்லா எண்ணங்களும் நின்றுவிடுவது எப்படி? 
மகரிஷி.: ஆசானது அறிவுரைகளின் உண்மையில் உள்ள வலிவான நம்பிக்கையால் விளையும் மன உறுதியின் வலிமையால்.

பக்தர்.: இந்த செயல்முறையால் நன்மை என்ன?
மகரிஷி..:
(1) மனத்திண்மையை வெல்லுதல் – ஒருமுகச் சிந்தனையை வளரச் செய்தல்.
(2) உணர்ச்சிகளை வெல்லுதல் – வைராக்கியத்தை வளரச் செய்தல்.
(3) ஒழுக்கமான செயல்களின் அதிகரிப்பு – எல்லோரையும் சமமாக நடத்துதல். 

பக்தர்.: நினைக்க முடியாத ஒரு மையத்தின் மீது ஒருவர் ஏன் இந்த சுயவசியம் (self-hypnotism) என்பதை பின்பற்ற வேண்டும்? பளிச்சிடும் ஒளியை கூர்ந்து பார்ப்பது, மூச்சை அடக்கிக் கொள்வது, இசையை கேட்பது, உள்முக சத்தங்களைக் கேட்பது, ஓம் என்னும் பிரணவ மந்திரத்தையோ அல்லது மற்ற மந்திரங்களையோ ஜபிப்பது – இது போன்ற முறைகளை ஏன் பின்பற்றக் கூடாது? 
மகரிஷி.: பளப்பளப்பான ஒளியை கூர்ந்து பார்த்தல் மனதை மதிமயக்கி பிரமிக்கச் செய்கிறது; அது மனத்திண்மையை அப்போதைக்கு உணர்ச்சியற்று விறைத்துப் போகச் செய்கிறது; ஆனாலும் அது நிரந்தரமான அனுகூலத்தை உறுதிபடுத்துவதில்லை. மூச்சை அடக்குவது மனத்திண்மையை அப்போதைக்கு மட்டுமே மரத்துப் போகச் செய்கிறது. எண்ணங்களை தூயதாக ஆக்கி உயர்விப்பதற்காக, உயர்வான சக்தியின் உதவியைப் பெற உபயோகிக்கப்படும் புனிதமான மந்திரத்தைத் தவிர, மற்ற ஒசைகளைக் கேட்பது, அதே போன்ற விளைவுகள் தான் உண்டாக்குகிறது. 

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1
பிப்ரவரி 4, 1935
உரையாடல் 27.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா

28 A. உண்மை நிலையை உணர்வது தான் குறிக்கோள்
26. மனதின் தன்மையை கண்டுபிடிப்பது எப்படி
27. மனக்கட்டுப்பாடு முறைகளை பின்பற்றுவது எப்படி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!