ஆங்கிலேய அறிஞர் மேலும் கேள்விகள் கேட்கிறார்
பக்தர்.: ஆழ்நிலை தியானம் செய்ய தகுந்த நேரம் எது?
மகரிஷி: நேரம் என்றால் என்ன?
பகதர்.: அது என்னவென்று எனக்குச் சொல்லுங்கள்!
மகரிஷி.: நேரம் ஒரு கருத்து தான். உண்மை சுயநிலை ஒன்று தான் உள்ளது. அது என்னவென்றெல்லாம் நீங்கள் நினைக்கிறீர்களோ, அது போலவே அது காணப்படுகிறது. அதை நீங்கள் நேரம் என்று அழைத்தால், அது நேரமாகிறது. அதை உள்ளமை என்று அழைத்தால், அது உள்ளமையாகிறது, அதே போல மேலும் எல்லாம். அதை நேரம் என்று குறுப்பிட்டபின், அதை மேலும் நாட்கள், இரவுகள், மாதங்கள், வருடங்கள், மணிகள், நிமிடங்கள், இத்தியாதி விதங்களில் வகுக்கிறீர்கள். ஞான மார்க்கத்திற்கு, ஆன்ம அறிவு பாதைக்கு, நேரம் முக்கியமில்லாதது, பொருளற்றது. ஆனால் அனுபவமில்லாமல் புதிதாக ஆரம்பிப்பவர்களுக்கு சில விதிகளும், கட்டுப்பாடு முறைகளும் நல்லது.
பக்தர்.: ஞான மார்க்கம் என்றால் என்ன?
மகரிஷி.: மனதின் கூர்ந்த கவனிப்புடன் கூடிய ஒருமுக சிந்தனை, ஒரு விதத்தில், ஞானம், யோகம், இரண்டிற்கும் பொதுவானது. யோகத்தின் குறிக்கோள், ஒரு தனிப்பட்ட மனிதர் உண்மை சுய நிலையுடன் இணைவதாகும். இந்த உண்மை சுய நிலை புதிதாக இருக்க முடியாது. அது இப்போதும் இருக்க வேண்டும், இருக்கவும் செய்கிறது. எனவே, ஞான மார்க்கம், இந்த பிரிவினை (வியோகம்) எப்படி ஏற்பட்டது என்று கண்டுபிடிக்க முயல்கிறது. பிரிவினை உண்மை சுயநிலையிலிருந்து தான் உள்ளது.
பக்தர்.: அறியாமை என்றால் என்ன?
மகரிஷி.: யாருக்கு அறியாமை? அதைக் கண்டுபிடியுங்கள். பிறகு அறியாமை மறைந்து விடும். பொதுவாக மக்கள் அறியாமையைப் பற்றித் தெரிந்துக் கொள்ள விரும்புகிறார்களே தவிர, அது யாருக்கு உள்ளது என்று விசாரணை செய்வதில்லை. அது முட்டாள்தனம். அறியாமை தெரியாதது; வெளிப்புறத்தில் உள்ளது. ஆனால் உண்மையை நாடி தேடுபவர், தெரிந்தவராகக் கருதப்படுகிறார்; உட்புறம் உள்ளார். தொலைவில், நாம் அறியாமல் இருப்பது என்னவென்று கண்டுபிடிப்பதற்கு பதிலாக, நேரடியாக மிக நெருங்கி உள்ளதைக் கண்டு பிடியுங்கள்.
பக்தர்.: உடல் தோற்றப்பாங்கு பற்றி ஐரோப்பியர்களுக்கு மகரிஷி ஏதாவது அறிவுரைக் கூறுவாரா?
மகரிஷி.: அது உசிதமாக இருக்கலாம். ஆனாலும், உடல் தோற்றப்பாங்குகள், அல்லது குறிப்பிட்ட நேரங்கள், அல்லது வேறு விதமான துணைப்பொருட்கள், இவற்றின் இல்லாமையால் ஆழ்நிலை தியானம் தடை செய்யப்படுவதில்லை என்று தெளிவாகப் புரிந்துக்கொள்ளப் பட வேண்டும்.
பக்தர்.: ஐரோப்பியர்களுக்கு என்று குறிப்பாக தெரிவிக்க ஏதாவது ஒரு வழிமுறை மகரிஷியிடம் உள்ளதா?
மகரிஷி.: அது ஒரு தனிப்பட்ட மனிதரின் மன உபகரணங்களுக்கு, சாதனங்களுக்குத் தகுந்தது. ஒரு வரையறுத்த, தீர்மானமான விதி ஒன்றுமே கிடையாது.
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1
ஜனவரி 24, 1935
உரையாடல் 17.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா