வேலை, பயிற்சி, பிரம்மச்சரியம்
திரு எவன்ஸ் வென்ட்ஸ், பெரும்பாலும் யோகப் பயிற்சியின் முன்னோட்டமான அடிப்படைகளைப் பற்றிய கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். அவற்றிற்கெல்லாம் மகரிஷி, எல்லொருக்கும் குறிக்கோள் ஆன்ம சுயநிலை அறிவது; அதற்கு யோகப்பயிற்சி துணைப்பொருள்; அடிப்படைகள் எல்லாம் யோகப்பயிற்சிக்குத் துணைப் பொருட்கள், என்று பதிலளித்தார்.
பக்தர்.: ஆன்ம ஞானத்திற்கு வேலை அல்லது தொழில் ஒரு தடங்கலா?
மகரிஷி.: இல்லை. ஒரு ஞானிக்கு ஆன்மா மட்டுமே உண்மை சுயநிலை. பணிகள் நிகழ்வுசார்ந்தவை, ஆன்மாவை பாதிக்காதவை. ஞானி செயல்புரியும் போது கூட, செயலாற்றுபவர் என்னும் உணர்வில்லாமல் உள்ளார். அவரது செயல்கள் தானாக நிகழ்கின்றன. அவற்றிற்கு ஒரு சாட்சி போல், அவர் பற்றுதல் இல்லாமல் உறைகிறார்.
இந்த செயல்களுக்கு குறிக்கோள் ஏதும் கிடையாது. ஞான அறிவு பாதையை இன்னும் பயிற்சி செய்துக் கொண்டிருப்பவர் கூட, செயல்களில் ஈடுபட்டுக் கொண்டே பயிற்சியிலும் ஈடுபடலாம். புதிதாகத் தொடங்குபவரின் முதல் நிலைப்படிகளில், இது சிறிது கடினமாக இருக்கலாம். ஆனால், சிறிது பயிற்சிக்குப் பின், விரைவில் திறம்பட்ட பயன் ஏற்படும்; வேலையும், ஆழ்ந்த தியானத்திற்கு இடையூறாக இல்லாமல் இருப்பது தெரியும்.
பக்தர்.: பயிற்சி என்ன?
மகரிஷி.: தான்மை உணர்வின் மூலமான ‘நான்’ என்பதை எப்போதும் விடாமல் தேடுவது. ‘நான் யார்?’ என்று கண்டுபிடியுங்கள். தூய ‘நான்’ தான் உண்மை சுய நிலை, பூர்த்தியான உள்ளமை-சுய உணர்வு-ஆனந்தம். ‘அது’ மறக்கப்படும் போது, எல்லா துயரங்களும் முளைக்கின்றன. ‘அது’ கெட்டியாக பிடித்துக்கொள்ளப்படும் போது, துயரங்கள் ஒருவரை பாதிப்பதில்லை.
பக்தர்.: ஆன்ம ஞானத்திற்கு பிரம்மச்சரியம் தேவையா?
மகரிஷி.: பிரம்மச்சரியம் என்பது ‘பிரம்மனில் (ஆன்மாவில்) வாழ்வது’. சாதாரணமாக புரிந்துக்கொள்வது போல மணமாகாநிலைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. உண்மையான பிரம்மச்சாரி, அதாவது பிரம்மனில் உறையும் ஒருவர், ஆன்ம தன்னிலையேயான பிரம்மனில் பேரின்பம் காண்பார். பின்பு பேரின்பத்திற்காக வேறு மூலங்களை ஏன் தேட வேண்டும்? உண்மையில், ஆன்மாவை விட்டு வெளியேறிச் செல்வது தான் எல்லா துன்பங்களுக்கும் காரணமாக இருந்து வருகிறது.
பக்தர்.: யோகப் பயிற்சிக்கு பிரம்மச்சரியம் ஒரு மிகவும் அவசியமான விதியா?
மகரிஷி.: ஆமாம். ஆன்ம ஞானத்தின் பல துணைப்பொருட்களைப் போல, பிரம்மச்சரியமும் நிச்சயமாக ஒரு துணைப் பொருளாகும்.
பக்தர்.: பின் அது இன்றியமையாதது இல்லையா? மணமான ஒருவர் ஆன்ம சுய நிலையை அறிய முடியுமா?
மகரிஷி.: நிச்சயமாக! அது மனதின் பக்குவத்தைப் பொருத்தது. மணமானவரோ, மணமாகாதவரோ, ஒரு மனிதர் ஆன்மாவை அறிய முடியும்; ஏனெனில் அது இங்கே, இப்போது உள்ளது. அப்படி இல்லை என்றால், அது வேறு எப்போதோ செய்யும் முயற்சிகளால் அடையக்கூடியது என்றால், அது புதிதானது, இனிமேல் தான் பெற வேண்டியது என்றால், அதை நாடித் தொடர்வதில் தகுதி ஒன்றும் இல்லை. ஏனெனில், இயல்பாக இல்லாதது, நிரந்தமாகவும் இருக்க முடியாது. ஆனால் நான் என்ன சொல்கிறேன் என்றால், ஆன்மா இங்கே, இப்போது, தனியாக உள்ளது.
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1
ஜனவரி 24, 1935
உரையாடல் 17.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா