What is Meditation? How to do it? (1)
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (2) (கட்டுரை)

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (1)

ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள்

~~~~~~~~

உரையாடல்  68.

ஒரு பெண்மணியுடன் உரையாடல்

பக்தர்: தியானத்திற்கும் கவனச்சிதறலுக்கும் வித்தியாசம் என்ன? 
மகரிஷி.: வித்தியாசம் ஒன்றும் இல்லை. எண்ணங்கள் இருக்கும் போது அது கவனச் சிதறல். எண்ணங்கள் இல்லாத போது, அது தியானம். ஆனால், தியானம் ஒரு பயிற்சி தான். உண்மையான அமைதி நிலை இல்லை.

பக்தர்: தியானம் செய்வது எப்படி? 
மகரிஷி.: எண்ணங்களிடமிருந்து அகன்று இருங்கள். 

~~~~~~~~
உரையாடல் 453.

பக்தர்.: தியானம் செய்யும்போது ஒருவர் என்ன நினைக்க வேண்டும்? 
மகரிஷி.: தியானம் என்றால் என்ன? அது எண்ணங்களின் வெளியேற்றம் தான். ஒவ்வொன்றாக விரைந்து வரும் எண்ணங்களால் நீங்கள்  தொல்லைப்படுகிறீர்கள்.  மற்ற எண்ணங்களை வெளியேற்றுவதற்காக ஒரே ஒரு எண்ணத்தை மட்டும் பிடித்துக் கொள்ளுங்கள். இடைவிடாத பயிற்சி தியானத்தில் ஆழ்வதற்குத் தேவையான மன வலிமையை அளிக்கிறது.

~~~~~~~~
உரையாடல் 452.

மகரிஷி.: தியானம் என்றால் என்ன? அது எண்ணங்களை வெளியேற்றுவதைக் கொண்டுள்ளது. இப்போதுள்ள எல்லா இன்னல்களும் எண்ணங்களால் தான் உள்ளன, அவை எண்ணங்களே தான். எண்ணங்களை விட்டு விடுங்கள். அது தான் சந்தோஷம், அது தான் தியானமும் கூட.  
பக்தர்.: எண்ணங்களை விட்டு விடுவது எப்படி?
மகரிஷி.: எண்ணங்கள் யோசனை செய்பவருக்கு உள்ளன. யோசனை செய்பவரின் சுய சொரூபமாக இருங்கள்; பிறகு எண்ணங்களுக்கு ஒரு முடிவு வரும். 

~~~~~~~~
உரையாடல் 61.

பக்தர்.: தியானம் எப்படி செய்யப்படவேண்டும்? கண்களை திறந்துக்கொண்டா, அல்லது கண்களை மூடிக்கொண்டா?
மகரிஷி.: இரண்டு விதங்களும் சரி தான். முக்கியமான அம்சம் என்னவென்றால், மனம் உட்புறம் திருப்பப்பட வேண்டும்; மனதைத் தனது செயல் நாட்டத்தில் தீவிரமாக ஈடுபட வைக்க வேண்டும். கண்களை மூடிகொண்டால் சில சமயம் உள்ளுக்குள் மறைந்திருக்கும் எண்ணங்கள் வீரியத்துடன் பாய்ந்து வரும். கண்கள் திறந்திருந்தாலும், மனதை உள்நோக்கி வைக்க கஷ்டமாக இருக்கலாம். அதற்கு மிகுந்த மன வலிமை தேவைப்படுகிறது. பொருட்களை ஏற்கும்போது, மனம் மாசுபடுகிறது. இல்லையென்றால் அது தூய்மையாக இருக்கிறது. தியானத்தில் முக்கியான அம்சம் என்னவென்றால், வெளிப்புற கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாமலும், மற்ற விஷயங்களைப் பற்றி யோசித்துக் கொண்டு இருக்காமலும், மனதை அதன் செயல் நாட்டத்திலேயே தீவிரமாக ஈடுபடுத்துவது தான்.  

~~~~~~~~
உரையாடல் 13.

மகரிஷி.: நீங்கள் உங்களது எண்ணங்களின் வழியாகவே சென்றால், அவற்றால் தூக்கிச் செல்லப்படுவீர்கள். உங்களை ஒரு முடிவில்லாத புதிர்பாதையில் காண்பீர்கள். 

பக்தர்.: அப்படியென்றால், நான் எண்ணங்களின் மூலத்தை தடம்பின்பற்றி செல்ல வேண்டும்.  
மகரிஷி.: ஆமாம்; இந்த விதத்தில், எண்ணங்கள் மறைந்து விடும், சுய சொரூபம் மட்டுமே மிஞ்சி விளங்கும். உண்மையில், ஆன்ம சொருபத்திற்கு உட்புறமும் இல்லை, வெளிப்புறமும் இல்லை. இவையெல்லாமும் தான்மை உணர்வின் வெளிப்பாடுகள் தான். ஆன்ம சொரூபம் பரிசுத்தமானது, தற்சார்பானது, வரையற்றது.

~~~~~~~~
உரையாடல் 524.

ஒரு யாத்ரீகர் கேட்டார்:

பக்தர்.: நான் குடும்பஸ்தன்.  குடும்பத்துடன் உள்ள ஒருவருக்கு பந்தத்திலிருந்து விடுவிப்பு, முக்தி, கிடைக்குமா? கிடைக்கும் என்றால், அது எப்படி? 

மகரிஷி.: நீங்கள் யார்? உங்களிடம் வாழ்வின் மூன்று அம்சங்கள் உள்ளன. அதாவது, விழிப்பு, கனவு, தூக்கம், இந்த நிலைகள்.  உங்கள் தூக்கத்தில், உங்கள் குடும்பத்தைப் பற்றியும், அவர்களின் பந்தங்களைப் பற்றியும் உணர்வு இல்லை. எனவே அப்போது உங்களுக்கு இந்தக் கேள்விகள் எழவில்லை. ஆனால், இப்போது அவர்களையும் அவர்களுடன் உள்ள பந்தங்களையும் உணர்கிறீர்கள். எனவே விடுவிப்பை நாடுகிறீர்கள். ஆனால், இந்த எல்லா நிலைகளிலும் நீங்கள் அதே மனிதர் தான். 

பக்தர்.: நான் இப்போது குடும்பத்தில் இருப்பதால், பந்தங்களிலிருந்து விடுவிப்பை நாடுவது சரி தான். 
மகரிஷி.: பலானவர் உங்கள் மனைவி என்றும், பலானவர்கள் உங்கள் குழந்தைகள் என்றும் நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதால், அவர்களுடன் பந்தம் இருப்பதாகவும் நீங்கள் நினைக்கிறீர்கள். இந்த எண்ணங்கள் எல்லாம் உங்களுடயவை. அவை தங்கள் உள்ளமைக்கே உங்களைத் தான் ஆதாரமாகக் கொண்டுள்ளன.  இந்த எண்ணங்களை நீங்கள் உபசரிக்கலாம், அல்லது விட்டு விடலாம். உபசரித்தால் அது பந்தம். விட்டு விட்டால் அது விடுவிப்பு. 

பக்தர்.: எனக்கு இன்னும் புரியவில்லை.
மகரிஷி.: நினைப்பதற்காக நீங்கள் இருக்க வேண்டும். நீங்கள் இந்த எண்ணங்களை நினைக்கலாம், அல்லது வேறு எண்ணங்களை நினைக்கலாம். எண்ணங்கள் மாறுகின்றன. ஆனால் நீங்கள் மாறுவதில்லை. கடந்துச் செல்லும் எண்ணங்களைப் போக விடுங்கள்; மாறாமல் நிலையாக உள்ள சுய நிலையைப் பிடித்துக் கொள்ளுங்கள்.  எண்ணங்கள் தான் உங்கள் பந்தத்தை ஏற்படுத்துகின்றன. அவற்றை விட்டு விட்டால், விடுவிப்பு ஏற்படுகிறது. யோசித்தவாறு பந்தத்தில் ஈடுபடுவதும், யோசிப்பதை நிறுத்தி விட்டு சுதந்திரமாக இருப்பதும், உங்கள் ஆற்றலில் தான் உள்ளது. 

பக்தர்.: ஆனால் யோசிக்காமல் இருப்பது சுலபமில்லையே.
மகரிஷி.: நீங்கள் யோசிப்பதை நிறுத்த வேண்டிய அவசியமில்லை. எண்ணங்களின் மூலத்தைப் பற்றி மட்டும் யோசனை செய்யுங்கள். அதைத் தேடி கண்டுபிடியுங்கள். சுய சோரூபம் தானாகவே பிரகாசித்து விளங்கும். அது கண்டுபிடிக்கப்பட்டபின், எண்ணங்கள் தானாகவே நின்று விடும். அது தான் பந்தத்திலிருந்து விடுவிப்பு. 

~~~~~~~~

தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா

 

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (2) (கட்டுரை)
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (1)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!