
சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (5)
~~~~~~~~
உரையாடல் 244.
ஒரு மகாராணியுடன் உரையாடல்.
மகரிஷி: உடல் உணர்வு ஒரு எண்ணம் தான்; எண்ணம் மனதினுடையது; மனம் “நான் எண்ணம்” வந்த பிறகு தான் எழுகிறது, “நான் எண்ணம்” தான் மூலாதார எண்ணம். அதைப் பிடித்துக் கொண்டால், மற்ற எண்ணங்கள் மறைந்து விடும். பிறகு, உடல், மனம், தான்மை – எதுவுமே இருக்காது.
பக்தர்: பிறகு என்ன மிஞ்சி இருக்கும்?
மகரிஷி: ஆன்மா அதன் முழு தூய்மையில் விளங்கும்.
பக்தர்: மனதை மறையச் செய்வது எப்படி?
மகரிஷி: நினைப்பவரைத் தேடினால், எண்ணங்கள் மறைந்து விடும்.
பக்தர்: வெளியுலகில் கடவுளைப் பற்றி நினைப்பது சுலபமாகத் தோன்றுகிறது. ஆனால், எண்ணங்கள் இல்லாமல் இருப்பது கஷ்டமாகத் தோன்றுகிறது.
மகரிஷி: அது அபத்தமானது; மற்ற பொருள்களைப் பார்ப்பது சுலபம்; உட்புறம் மனதுள் பார்ப்பது கஷ்டம்; இது அர்த்தமற்றது. உண்மை இதற்கு மாறாக இருக்க வேண்டும்.
பக்தர்: ஆனால் எனக்குப் புரியவில்லை. கஷ்டமாகத் தான் இருக்கிறது.
மகரிஷி: இந்த கஷ்டமாக இருக்கும் எண்ணம் தான் முக்கியமான தடங்கல். சிறிதளவு பயிற்சி உங்களை வேறு விதமாக நினைக்க வைக்கும்.
பக்தர்: அந்த பயிற்சி என்ன?
மகரிஷி: “நான்” என்பதன் மூலாதாரத்தைத் தேடி கண்டுபிடிப்பது.
~~~~~~~~
உரையாடல் 557.
ஆன்ம ஞானத்திற்கு சிறந்த வழிமுறை “நான் யார்?” என்ற விசாரணை தான். இப்போது இருக்கும் இன்னல் மனதுக்கு தான் உள்ளது. அது மனதால் தான் நீக்கப் பட வேண்டும்.
பக்தர்: உணவு கட்டுப்பாடுகள் ஏதாவது அனுசரிக்க வேண்டுமா?
மகரிஷி: மிதமான அளவு, சாத்வீக உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பக்தர்: பலவித ஆசனங்கள், உடல் பாங்குகள் குறிப்பிடப்படுகின்றன. அவற்றில் சிறந்தது எது?
மகரிஷி: நிதித்தியாசனம், ஒருமுக நோக்கமுள்ள, ஒருமுனை மனம் தான் சிறந்தது.
~~~~~~~~
உரையாடல் 596.
மகரிஷி: விஷயம் அறிவு சார்ந்து புரிந்துக் கொள்ளப்பட்டதும், தீவிரமான சாதகர் அதை நடைமுறையில் உபயோகப்படுத்த ஆரம்பிக்கிறார். அவர் ஒவ்வொரு கணமும், “யாருக்கு இந்த எண்ணங்கள்? நான் யார்?” என்றவாறு வாதிடுகிறார். ஒரு உயர்வான சக்தி நமக்கு வழிகாட்டுகிறது என்ற உறுதியான நம்பிக்கையில் உறையும் வரை அவர் இவ்வாறு செய்கிறார். இது தான் திட நம்பிக்கை. பிறகு அவரது சந்தேகங்கள் எல்லாம் தீர்ந்து விடுகின்றன. அவருக்கு மேலும் அறிவுறுத்தல்கள் தேவையில்லை.
பக்தர்: ஆன்ம சுய விசாரணை என்பதும் மேற்சொன்ன திட நம்பிக்கையும் ஒன்று தானா?
மகரிஷி: ஆன்ம சுய விசாரணையில், திட நம்பிக்கை, பக்தி, ஞானம், யோகம் எல்லாம் அடங்கியுள்ளது.
~~~~~~~~
உரையாடல் 251.
பக்தர்: ஆன்மாவை அடைவது எப்படி?
மகரிஷி: ஆன்மாவை அடைவதென்பது ஒன்றும் கிடையாது. உடல், மனம், இவற்றுடனெல்லாம் பொய்யான விதத்தில் ஆன்மாவை இணத்து வைத்துக் கொண்டிருப்பது தான் தவறான அறிவு. இந்த பொய்யான இணைப்பு போக வேண்டும். அது போனால், ஆன்ம சொரூபம் மிஞ்சி விளங்கும்.
பக்தர்: அது எப்படி நடைபெறும்.
மகரிஷி: ஆன்மாவைப் பற்றி விசாரணை செய்வதால்.
~~~~~~~~
உரையாடல் 612.
மகரிஷி: நிச்சயமின்மை, சந்தேகங்கள், பயங்கள், இவையெல்லாம் இருப்பது, ஆன்ம ஞானம் பெறும் வரை ஒருவருக்கு இயல்பானது தான். அவை தான்மை உணர்வை விட்டு அகலாமல் உள்ளன. உண்மையில், அவை தான்மையே தான்.
பக்தர்: அவை எப்படி மறையும்?
மகரிஷி: அவை தான்மையே தான். தான்மை போனால், அவை அதனுடன் போய் விடும். தான்மையே பொய்யானது தான். தான்மை, ego, என்றால் என்ன? விசாரியுங்கள். உடல் உணர்வற்றது, அதால் “நான்” என்று சொல்ல முடியாது. ஆன்மா தூய பிரக்ஞை உணர்வு, இரண்டாக இல்லாதது. அதனால் “நான்” என்று சொல்ல முடியாது. யாரும் தூக்கத்தில் “நான்” என்று சொல்வதில்லை. பிறகு தான்மை என்பது என்ன? அது உணர்வற்ற உடலுக்கும் ஆன்மாவிற்கும் மத்தியிலுள்ள ஒன்று. தன்னுடைய உள்ளமையை ஆதாரத்துடன் நிரூபிக்க அதனிடம் ஒன்றும் இல்லை. அதைத் தேடினால், அது மறைந்து போய் விடுகிறது.
இதோ பாருங்கள்! ஒரு மனிதர் தனக்கு அருகில் இருட்டில் ஏதோ இருப்பதாக கற்பனை செய்துக் கொள்கிறார். அது ஒரு இருண்ட பொருளாக இருக்கலாம். நெருங்கிப் பார்த்தால், பூதம் ஒன்றும் தெரிவதில்லை; ஆனால், ஒரு மரம், கம்பம் போல் ஒரு இருண்ட பொருள் என்று அவரால் புரிந்துக் கொள்ள முடிகிறது. நெருங்கிப் பார்க்காவிட்டால், பூதம் அந்த மனிதருள் பயங்கர கிலி ஏற்படுத்துகிறது. செய்யத் தேவையானதெல்லாம் கிட்டே நெருங்கி பார்க்க வேண்டியது தான்; பிறகு பூதம் மறைந்து விடுகிறது. பூதம் எப்போதுமே இருக்கவில்லை. தான்மையும் அதே போல் தான். அது உடலுக்கும் தூய ஆன்ம சொரூபத்திற்கும் இடையே உள்ள ஒரு தொட்டறிய முடியாத இணைப்பு. அது மெய்யில்லை. அதை மிக அருகில் நெருங்கிப் பாரக்காத வரையில், அது நமக்கு தொல்லைக் கொடுக்கிறது. ஆனால், ஒருவர் அதைத் தேடினால், அது இல்லவே இல்லை என்று கண்டுபிடிக்கப்படுகிறது.
அதே போல், ஒரு இந்து மத திருமண விழாவில், கொண்டாட்டங்கள் 5, 6 நாட்கள் தொடரும். ஒரு முறை, ஒரு அந்நியனை மணமகனின் சிறந்த நண்பன் என்று மணமகளின் குழுவினர் நினைத்தனர். எனவே அவனை அவர்கள் மிகவும் மரியாதையுடன் நடத்தினர். இவ்வாறு மணமகளின் குழுவினர் அந்நியனுக்கு மரியாதை தருவதைக் கண்டு, மணமகனின் குழுவினரும் அவனை மிகச் சிறந்த முறையில் நடத்தினர். இந்த பிரமாதமான உபசாரங்களை அந்நியன் மிகவும் சுகமாக அனுபவித்துக் கொண்டிருந்தான். அதே சமயத்தில், உண்மையான நிலவரம் என்ன என்றும் அவன் புரிந்துக் கொண்டிருந்தான். ஒரு சமயம், மணமகனின் குழு அவனிடம் ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி கேட்க விரும்பினர். அவனைப் பற்றி கேட்டனர். அந்நியன் உடனே தொல்லை வரப்போவதை உணர்ந்தான், அங்கிருந்து ஓடி அகன்றான். தான்மையும் அதே போலத்தான். அதைத் தேடினால், அது மறைந்து விடும். இல்லையென்றால், தொடர்ந்து தொல்லைகள் தரும்.
எப்படி தான்மையைத் தேடுவது என்பது ஏற்கனவே இவ்வாறு அறிந்தவர்களிடமிருந்து கற்கப் படுகிறது. இந்த காரணத்திற்காகத்தான் ஒரு குரு அல்லது ஆசான் நாடப்படுகிறார்.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா