Arunachala
அருணாசல அக்ஷர மணமாலை
அருணாசல தீபதர்சன தத்துவம்

அருணாசல மாகாத்மியம்

நந்திவாக்கு :
(விருத்தம்)

1.
அதுவேதல மருணாசலந் தலம்யாவிலு மதிக
மதுபூமியி னிதயம்மறி யதுவேசிவ னிதயப்
பதியாமொரு மருமத்தலம் பதியாமவ னதிலே
வதிவானொளி மலையாநித மருணாசல மெனவே.

பொருள்:
புண்ணிய ஸ்தலங்களில் தலையாயது அருணாசலமே. மற்றெல்லா ஸ்தலங்களைக் காட்டிலும் மகிமை மிகுந்ததுவும் அதுவே. அது பூமியின் இதயமும் ஈச்வரனின் இதய ஸ்தலமுமாகும். அது ரகசியம் நிறைந்த ஸ்தலம். அந்த ஸ்தலத்திலே தேஜோமய அருணாசல மலையாக அது விளங்குகிறது.

(வெண்பா)

2.
ஆதியரு ணாசலப்பே ரற்புதலிங் கத்துருக்கொ
ளாதிநாண் மார்கழியி லாதிரையச் சோதியெழு
மீசனைமான் முன்னமர ரேத்திவழி பட்டநாண்
மாசிசிவ ராத்திரியா மற்று.

பொருள்:
தொன்மை வாய்ந்த இந்த அருணாசலம் அற்புத தேஜோ லிங்கமாகத் தோன்றிய புனிதத் திருநாள் மார்கழி மாதத் திருவாதிரை நன்னாளாகும். அப்படி ஜோதி சொரூபமாக எழுந்தருளிய இறைவனை விஷ்ணு, பிரம்மா முதலான தேவர்கள் யாவரும் வழிபட்டு வணங்கிய நாள், மாசி மாதம் சிவராத்திரி நள்ளிரவாகும்.

சிவவசனம்:- (விருத்தம்)

3.
அங்கியுரு வாயுமொளி மங்குகிரி யாகத்
தங்கலரு ளாலுலகந் தாங்குவதற் கன்றி
யிங்குறைவன் சித்தனென வென்றுமென துள்ளே
பொங்கியொளி ருங்குகைபல் போகமொடென் றுள்ளே.

பொருள்:
அருணாசல க்ஷேத்திரத்தில் யாம் அக்னி மூர்த்தமாக எழுந்தருளி இருப்பினும், அதை மறைத்து சாந்தமலையாக நிலைபெற்று ஒளிர்வது, எமது அருளால் உலகனைத்தையும் ரக்ஷிக்கும் பொருட்டேயாகும். மேலும் அருணகிரியோகியென சித்தவடிவத்தில் நான் என்றென்றும் இந்த மலையின்கண் வீற்றிருப்பேன். எமது இம்மலைவடிவின் உள்ளே சகல ஐசுவரியங்களும் ஒளிரும் மிக அதிசயமான குகை என்றும் உள்ளது.

(வேறு)

4.
எல்லா வுலகுந் தகையவ் வியலாற்
பொல்லா வினைகள் ருணமாம் புகலீ
தில்லா ததுவா மெதுகண் ணுறலா
லெல்லா ரருணா சலமா மிதுவே.

பொருள்:
எத்தனை உலகங்கள் உள்ளனவோ அத்தனையும் பந்தமே யாகும். ஜனன மரண துக்கத்தைத் தரக்கூடிய கொடிய கர்மங்களே பந்தத்திற்குக் காரணமாகும். பந்தத்திற்கு இருப்பிடமாகிய இந்தப் பொல்லா வினைகள் யாவும் எதனுடைய தரிசன மாத்திரத்தால், இல்லாது அழிந்து நாசமடையுமோ அதுதான் ஒளிமயமாக விளங்கும் இந்த அருணாசலமாகும்.

(வேறு)

5.
உருத்தெரி யெல்லை யுற்றுகண் ணுற்றாற்
கருத்தினாற் றூரக் கருதினா லும்மே
வருத்த முறாது வராதவே தாந்த
வருத்தவிஞ் ஞான மார்க்குமுண் டாமே.

பொருள்:
அருணாசலத்தைக் காணக்கூடிய எல்லையிலிருந்து, ஊனக் கண்ணால் தரிசித்தாலும் அல்லது வெகு தூரத்திற்கு அப்பாலிருந்து மனத்தினால் ஸ்மரித்தாலும்கூட, சாதன சதுஷ்டயங்கள் அப்யசித்து சிரமப்பட்டு முயற்சித்தாலன்றி உணர முடியாத அரிய மெய்யறிவினை (சொரூப ஞானத்தை) யாவரும் அடையலாம்.

6.
யோசனை மூன்றா மித்தல வாசர்க்
காசறு தீக்கை யாதியின் றியுமென்
பாசமில் சாயுச் சியம்பயக் கும்மே
யீசனா மென்ற னாணையி னானே.

பொருள்:
அருணாசல க்ஷேத்திரத்தைச் சுற்றியுள்ள இருபத்து நான்கு மைல் பரப்பளவிற்குள் இருக்கும் பிரதேசத்தில் வசிப்பவர்கள் அகந்தையை ஒழிப்பதற்கு, எந்தவித சம்பிரதாய தீக்ஷைகள் பெற்றுக் கொள்ளாவிடினும், பாசமற்றதான என்னுடைய சிவ சாயுச்சியப் பதவியை அடைவர். இது சர்வேஸ்வரனாகிய எனது கட்டளையாகும்.

தேவியுரை:- (வேறு)

7.
என்றுமே யறவோ ரன்பர்க்
கிருப்பிட மித்த லந்தான்
பொன்றுவார் பிறர்க்கின் னாவுன்
புன்மையர் பன்னோய் துன்னி
யொன்றுறா தொழியுந் தீயோ
ருரனொரு கணத்திங் கங்கிக்
குன்றுரு வருணை யீசன்
கோபவெந் தழல்வி ழாதே.

பொருள்:
அறநெறி வழுவாதவர்களுக்கும் பக்திமான்களுக்கும் புகலிடமாக விளங்குவது இந்த அருணாசல க்ஷேத்திரம். இங்குப் பிறருக்குத் தீங்கு செய்ய நினைக்கும் துஷ்டர்கள், பல கொடிய நோய்களால் பீடிக்கப்பட்டு கெட்டழிவர். இத்தலத்தில் அசுரபலமெல்லாம் வீரியமிழந்துவிடும். ஆகையால் அழலுருவான அருணாசலேசனின் கோபாக்னியில் விழுந்து அழியாதே.

அருணாசல அக்ஷர மணமாலை
அருணாசல தீபதர்சன தத்துவம்
அருணாசல மாகாத்மியம்

2 thoughts on “அருணாசல மாகாத்மியம்

  • July 26, 2019 at 11:45 pm
    Permalink

    Want this lyrics could you please send?

    Reply
    • August 7, 2019 at 11:09 am
      Permalink

      You can get it from the Ramanasramam website. ~ Vasundhara

      Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!