Sri Ramana Maharshi
அருணாசல நவமணி மாலை
அருணாசல மாகாத்மியம்

அருணாசல அக்ஷர மணமாலை

 

Arunachala Akshara Manamalai – Absorption (Vasundhara and Thyagarajan)

OM Shanti Shanti Shanti Hi

Lamp of Self Knowledge
Lamp of Self Knowledge
  BLISSFUL BEING
Splendor of the Self
Splendor of the Self

Arunachala Akshara Manamalai (Sri Ramana Maharshi)

பாடலில் முதல் 32 வரிசைகள் இசைத்த பின் 107வது வரிசைக்குச் சென்று முடிவு வரைச் செல்கிறது. ஆயினும் எல்லா 108 வரிசைகளும் படிப்பதற்கு இங்கு உள்ளன.

 

Akshara Mana Maalai – Verses in Tamil – Meaning in Tamil and English

தமிழ் வரிசைகள் : திரு ரமணாஸ்ரமத்திலிருந்து

தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள்: வசுந்தரா

அருணாசல அக்ஷரமணமாலை


பாயிரம்
(விருத்தம்)

தருணா ருணமணி கிரணா வலிநிகர்
தரும க்ஷரமண மகிழ்மாலை
தெருணா டியதிரு வடியார் தெருமரல்
தெளியப் பரவுதல் பொருளாகக்
கருணா கரமுனி ரமணா ரியனுவ
கையினாற் சொலியது கதியாக
வருணா சலமென வகமே யறிவொடு
மாழ்வார் சிவனுல காள்வாரே.

–முருகனார்


பொருள்:
மெய்யுணர்வை நாடி நின்ற மெய்யடியார் (அதற்குத் தடையான) தம் மனக்கலக்கந் தெளியும்படி அருணாசலனைத் துதித்து வழிபடற் பொருட்டாக, ஆசாரிய ரமணன் தன் மகிழ்ச்சியாற் கூறியதான அக்ஷரமணமாலையே தமக்குற்ற கதியாக நம்பி, அருணாசலமே அகம் என (மனத்தாலெண்ணி), அறிவோ டகத்தே யடங்குவோர் திருவருளாற் சிவனுல காளப் பெறுவர்.

Introductory Verse

This joyful Marital Garland of Letters, which resembles a beam of the light of the rising sun, was sung by the noble Sage Ramana, the ocean of compassion, with the object of removing the delusion of the devotees who sought his grace. Those who look upon it as their sole refuge will realize within themselves that they are Arunachala and will reign in the world of Siva.

Muruganar


காப்பு

அருணாசல வரற்கேற்ற வக்ஷரமண மாலைசாற்றக்

கருணாகர கணபதியே கரமருளிக் காப்பாயே.

பொருள்:
அருணாசல வரனுக்கு (நாயகனுக்கு) ஏற்ற அக்ஷர மணமாலையை சாற்றுவதற்கு, கருணைக் கடலான கணபதியே, நீ எனக்குக் கைகொடுத்து அருளி உதவுவாயே

Invocation by Sri Bhagavan

Kind and Merciful Lord Ganapati! In order to offer the Garland of Letters that is worthy of the bridegroom, Arunachala, please give me a hand, and bless me !


நூல்

அருணாசல சிவ அருணாசல சிவ
அருணாசல சிவ அருணாசலா!
அருணாசல சிவ அருணாசல சிவ
அருணாசல சிவ அருணாசலா!

1.
அருணா சலமென வகமே நினைப்பவ
ரகத்தைவே ரறுப்பா யருணாசலா (அ)

பொருள்:
அருணாசலம் என்று உள்ளத்தில் கருதும் அன்பரின் அகங்காரத்தை வேரோடு அறுப்பாய், அருணாசலா!

Meaning:
You root out the ego of those who meditate on you in their Heart, Arunachala!

2.
அழகுசுந் தரம்போ லகமும் நீயுமுற்
றபின்னமா யிருப்போ மருணாசலா (அ)

பொருள்:
அழகும் சுந்தரமும் போல் நானும் நீயும் பேதமின்றி ஒன்றாயிருப்போம், அருணாசலா!

Meaning:
May you and I be one and inseparable like Alagu and Sundara, Arunachala!

3.
அகம்புகுந் தீர்த்துன் னககுகை சிறையா
யமர்வித்த தென்கொ லருணாசலா(அ)

பொருள்:
என் அகத்தில் புகுந்து ஈர்த்து, உன் அகக் குகையில் சிறையாய் அமர்வித்தது என்ன, அருணாசலா!

Meaning:
Entering my Heart and luring me, why did you imprison me in your heart’s cavern, Arunachala!

4.
ஆருக் காவெனை யாண்டனை யகற்றிடி
லகிலம் பழித்திடு மருணாசலா (அ)

பொருள்:
யாருக்காக என்னை நீ ஆண்டாய்? என்னை அகற்றினால் உலகம் பழித்திடும், அருணாசலா!

Meaning:
For whose sake did you rule over me? If you reject me the world will blame you, Arunachala!

5.
இப்பழி தப்புனை யேனினைப் பித்தா
யினியார் விடுவா ரருணாசலா (அ)

பொருள்:
இந்தப் பழியிலிருந்து உன்னை விடுவித்துக்கொள். ஏன் உன்னைப் பித்தாக நினைக்கும்படி செய்தாய்? இனி யார் உன்னை நழுவ விடுவார், அருணாசலா!

Meaning:
Free yourself from this blame. Why did you make me go crazy over you? Who will now let you slip away, Arunachala!

6.
ஈன்றிடு மன்னையிற் பெரிதருள் புரிவோ
யிதுவோ வுனதரு ளருணாசலா (அ)

பொருள்:
பெற்று வளர்த்த தாயையும் மிஞ்சி பெரும் அருள் புரிபவரே! எனக்கு இதுவா உன் அருள், அருணாசலா!

Meaning:
Oh One who offers more Grace and Kindness than one’s own Mother! Is this you Grace, Arunachala!

7.
உனையே மாற்றி யோடா துளத்தின்மே
லுறுதியா யிருப்பா யருணாசலா (அ)

பொருள்:
என் மனம் உன்னை ஏமாற்றிவிட்டு ஓடி உழலாதபடி என் உளத்தின் மேல் உறுதியாக வீற்றிரு, அருணாசலா!

Meaning:
Without letting my mind deceive you and run around, sit firmly in my Heart, Arunachala!

8.
ஊர்சுற் றுளம்விடா துனைக்கண் டடங்கிட
வுன்னழ கைக்காட் டருணாசலா (அ)

பொருள்:
ஊர் சுற்றும் மனம், இடைவிடாது உன்னைக் கண்டு அடங்கிட உன் பூரண அழகு ரூபத்தைக் காட்டு, அருணாசலா!

Meaning:
To make my mind that runs around everywhere, to continuously see you and subside, show your perfect beauty, Arunachala!

9.
எனையழித் திப்போ தெனைக்கல வாவிடி
லிதுவோ வாண்மை யருணாசலா (அ)

பொருள்:
என்னை (என் அகங்காரத் தன்மையை) அழித்து இப்போது என்னுடன் இணையாவிட்டால், இது தான் ஆண்மையா, அருணாசலா!

Meaning:
Destroying my ego, if you don’t join me now, is this manliness, Arunachala!

10.
ஏனிந்த வுறக்க மெனைப்பிற ரிழுக்க
விதுவுனக் கழகோ வருணாசலா (அ)

பொருள்:
மற்றவர் என்னை இழுக்கும்போது, ஏன் இந்த உறக்கம்? இது தான் உனக்கு அழகோ, அருணாசலா!

Meaning:
When others are dragging me, why this slumber? Is this very nice of you, Arunachala!

11.
ஐம்புலக் கள்வ ரகத்தினிற் புகும்போ
தகத்தினீ யிலையோ வருணாசலா (அ)

பொருள்:
ஐம்புலன்கள் என்னும் கள்வர் என் வீட்டில் (உள்ளத்தில்) புகுந்த போது, நீ வீட்டில் இல்லையோ, அருணாசலா!

Meaning:
When the thieves called the Five Senses entered my Heart, were you not at home, Arunachala!

12.
ஒருவனா முன்னை யொளித்தெவர் வருவா
ருன்சூ தேயிது வருணாசலா (அ)

பொருள்:
‘ஒருவனான’ (பரமாத்மாவான) உன்னிடமிருந்து ஒளிந்துக் கொண்டு யார் வர முடியும்? இது உன் சூது தான், அருணாசலா!

Meaning:
How can anyone come here, hiding from you who is the ‘One’ (All-Pervading Self)? This is only your scheme, Arunachala!

13.
ஓங்கா ரப்பொரு ளொப்புயர் வில்லோ
யுனையா ரறிவா ரருணாசலா (அ)

பொருள்:
“ஓம்” என்ற சொல்லின் பொருளாக ஒப்பற்று விளங்குபவரே! உன்னை யார் தான் உண்மையில் அறிய முடியும், அருணாசலா!

Meaning:
Oh One who prevails without comparison as the meaning of the Word “Om” (AUM)! Who can truly understand you, Arunachala!

14.
ஒளவைபோ லெனக்குன் னருளைத் தந்தெனை
யாளுவ துன்கட னருணாசலா (அ)

பொருள்:
தன் மக்களுக்கு அன்பளிக்கும் தாயைப் போல் எனக்கு அருள் தந்தாய். என்னை ஆளுவது உன் கடன், அருணாசலா!

Meaning:
Like a Mother, you gave me grace and kindness. It is your debt to rule over me, Arunachala!

15.
கண்ணுக்குக் கண்ணாய்க் கண்ணின்றிக் காணுனைக்
காணுவ தெவர்பா ரருணாசலா (அ)

பொருள்:
கண்ணையே பார்க்கும் கண்ணாக இருந்து, கண்ணின்றி எல்லாவற்றையும் காண்கின்ற உன்னை யாரால் காண முடியும்? என்னைப் பார், அருணாசலா!

Meaning:
Being the Eye that sees the eyes, still without eyes you see everything. Who can see you? See me, Arunachala!

16.
காந்த மிரும்புபோற் கவர்ந்தெனை விடாமற்
கலந்தெனோ டிருப்பா யருணாசலா (அ)

பொருள்:
காந்தம் இரும்பைக் கவர்வது போல், நீயும் என்னை கவர்ந்து, என்னை விடாமல் என்னடன் இணைந்து இருப்பாய், அருணாசலா!

Meaning:
Like a magnet that attracts iron, you too draw me to yourself and be without leaving me, Arunachala!

17.
கிரியுரு வாகிய கிருபைக் கடலே
கிருபைகூர்ந் தருளுவா யருணாசலா (அ)

பொருள்:
மலை உருவாகிய அருட்கடலே, கருணைக் கடலே! கருணையுடன் விரைவில் எனக்கு அருள்செய்வாய், அருணாசலா!

Meaning:
Oh Ocean of Mercy in the form of a Mountain! Be king and offer me your grace quickly, Arunachala!

18.
கீழ்மே லெங்குங் கிளரொளி மணியென்
கீழ்மையைப் பாழ்செய் யருணாசலா (அ)

பொருள்:
கீழ் மேல் எங்கும், எல்லா திசையிலும் பிரகாசித்து ஒளிர்கின்ற மணியே! என் இதயத்தில் உள்ள கீழ்மையை அழித்திடுவாய், அருணாசலா!

Meaning:
The brilliant gem that shines up, down and in all directions! Destroy the lower nature in me, Arunachala!

19.
குற்றமுற் றறுத்தெனைக் குணமாய்ப் பணித்தாள்
குருவுரு வாயொளி ரருணாசலா (அ)

பொருள்:
குற்றங்களை அறவே அறுத்து என்னை குணசாலியாக மாற்றி அருள்வாய், குரு உருவாக ஒளிர், அருணாசலா!

Meaning:
Removing all the faults in me, and making me a good being, shine as the form of my Guru, Arunachala!

20.
கூர்வாட் கண்ணியர் கொடுமையிற் படாதருள்
கூர்ந்தெனைச் சேர்ந்தரு ளருணாசலா (அ)

பொருள்:
நல்லவர்கள்போல் தோன்றினாலும், உண்மையில் கொடியவராக இருப்பவரிடமிருந்து என்னைக் காத்தருள். விரைவில் என்னை சேர்ந்தருள், அருணாசலா!

Meaning:
Save me from those who seem like good people, but actually are bad. Join me quickly, Arunachala!

21.
கெஞ்சியும் வஞ்சியாய்க் கொஞ்சமு மிரங்கிலை
யஞ்சலென் றேயரு ளருணாசலா (அ)

பொருள்:
நான் மிகவும் கெஞ்சியும் நீ ஒரு வஞ்சகன்போல் கொஞ்சமும் இரங்கவில்லை. அஞ்சாதே எனக் கூறி எனக்கு அருள் செய், அருணாசலா!

Meaning:
Even though I beg you much, like a mean person you don’t melt even a little. Say “Don’t fear!” to me, and give me your grace, Arunachala!

22.
கேளா தளிக்குமுன் கேடில் புகழைக்
கேடுசெய் யாதரு ளருணாசலா (அ)

பொருள்:
கேட்பதற்கு முன்பே அளிக்கும், கேடில்லாத புகழ் கொண்ட உனது புகழை கேடு செய்யாமல், எனக்கு அருள் செய்வாய், அருணாசலா!

Meaning:
You are reputed as one who gives even before asking. Without ruining such a faultless reputation, offer me your grace, Arunachala!

23.
கையினிற் கனியுன் மெய்ரசங் கொண்டுவ
கைவெறி கொளவரு ளருணாசலா (அ)

பொருள்:
என் கரத்தில் உன் உண்மை ஸ்வரூபத்தின் மதுவை ஏந்தி அதனால் வெறி கொண்டு இருக்க அருள் செய், அருணாசலா!

Meaning:
Holding the nectar of your Real nature in my hands, let me get intoxicated, Arunachala!

24.
கொடியிட் டடியரைக் கொல்லுனைக் கட்டிக்
கொண்டெஙன் வாழ்வே னருணாசலா (அ)

பொருள்:
கொடியிட்டு அடியாரைக் கொல்லாது கொல்கின்ற உன்னுடன் இணைந்து எப்படி தான் வாழ்வேனோ, அருணாசலா!

Meaning:
Fixing your attention, you kill your devotees without killing. How am I going to live with you, Arunachala!

25.
கோபமில் குணத்தோய் குறியா யெனைக்கொளக்
குறையென் செய்தே னருணாசலா (அ)

பொருள்:
கோபமற்ற சாந்தகுணமுள்ளவரே! என்னை உனது குறியாகக் கொள்ள நான் என்ன குறை செய்தேன், அருணாசலா!

Meaning:
Oh One who is calm without anger! What error did I commit that you should make me your target, Arunachala!

26.
கௌதமர் போற்றுங் கருணைமா மலையே
கடைக்கணித் தாள்வா யருணாசலா (அ)

பொருள்:
கௌதமர் போற்றும் கருணை மாமலையே! எனக்கு உன் கடைக்கண்ணால் அருள் செய்து ஆள்வாய், அருணாசலா!

Meaning:
Oh Mountain that is praised by Gautama Muni! Glance at me, give me your grace and rule over me, Arunachala!

27.
சகலமும் விழுங்குங் கதிரொளி யினமன
சலச மலர்த்தியி டருணாசலா (அ)

பொருள்:
எல்லாவற்றையும் விழுங்கும் கதிரொளியே, என் மனத் தாமரையை மலரச் செய்துவிடு, அருணாசலா!

Meaning:
Oh The Sunlight that swallows up everything! Make the Lotus of my Heart bloom, Arunachala!

28.
சாப்பா டுன்னைச் சார்ந்துண வாயான்
சாந்தமாய்ப் போவ னருணாசலா (அ)

பொருள்:
எனக்கு உணவாக உன்னைக் கருதி, நானே உனக்கு உணவாகி, சாந்தமாக போய் விடுவேன், அருணாசலா!

Meaning:
Taking you to be my food, becoming myself your food, I will become calm, Arunachala!

29.
சித்தங் குளிரக்கதி ரத்தம்வைத் தமுதவா
யைத்திற வருண்மதி யருணாசலா (அ)

பொருள்:
மனம் குளிர உன் அமுத கதிர்களால் அமுத நிலையை திறப்பாய், அருள் மிகுந்த நிலவே, அருணாசலா!

Meaning:
Making my mind cool with your nectar-like rays, open the nectar-like state, Oh gracious Moon, Arunachala!

30.
சீரை யழித்துநிர் வாணமாச் செய்தருட்
சீரை யளித்தரு ளருணாசலா (அ)

பொருள்:
உருவத்தை அழித்து, “நிர்வாண” (நிர்குண பரிபூரண) நிலையில் வைத்து, உன் அருள் உருவை எனக்கு அளித்தருள், அருணாசலா!

Meaning:
Destroying form, placing in the naked (Attributeless Real) state, offer me your gracious form, Arunachala!

31.
சுகக்கடல் பொங்கச் சொல்லுணர் வடங்கச்
சும்மா பொருந்திடங் கருணாசலா (அ)

பொருள்:
இன்பக்கடல் பொங்க, சொற்களும், உணர்வும் அடங்க, சும்மா வீற்றிரு, அருணாசலா!

Meaning:
Letting the sea of happiness boil over, the words and feeling subside, just stay, Arunachala!

32.
சூதுசெய் தென்னைச் சோதியா தினியுன்
சோதி யுருக்காட் டருணாசலா (அ)

பொருள்:
சூது செய்து என்னை இனிமேல் சோதிக்காதே, உனது சோதி நிறைந்த உருவை காட்டு, அருணாசலா!

Meaning:
Don’t scheme and test me hereafter. Show me your form filled with Light, Arunachala!

33.
செப்படி வித்தைகற் றிப்படி மயக்குவிட்
டுருப்படு வித்தைகாட் டருணாசலா (அ)

பொருள்:
மாய வித்தையை உண்மையென்றே கருதி மயங்கும் இவ்வுலக மயக்கத்தை நீக்கி, நிலையான வித்தையைக் காட்டி அருள், அருணாசலா!

Meaning:
Removing the worldly illusion that considers a stunt as real, show me the real stunt, Arunachala!

34.
சேரா யெனின்மெய் நீரா யுருகிக்கண்
ணீராற் றழிவே னருணாசலா (அ)

பொருள்:
என்னுடன் நீ சேராவிட்டால் என் உடல் நீர் போல் உருகி, என் கண்ணீரால் நான் அழிவேன், அருணாசலா!

Meaning:
If you don’t join me, my body will melt like water and I will die by my tears, Arunachala!

35.
சையெனத் தள்ளிற் செய்வினை சுடுமலா
லுய்வகை யேதுரை யருணாசலா (அ)

பொருள்:
நீ என்னை இகழ்ந்து தள்ளினால், முன்பு செய்த தீவினை என்னைச் சுடுவதன்றி, எனக்கு வேறு கதியேது, சொல், அருணாசலா!

Meaning:
If you condemn me and push me away, other than my previous bad deeds burning me, what other fate do I have, tell me, Arunachala!

36.
சொல்லாது சொலிநீ சொல்லற நில்லென்று
சும்மா விருந்தா யருணாசலா (அ)

பொருள்:
பேசாமல் சும்மா இரு என்று சொல்லால் சொல்லாமல் மௌனத்தால் சொல்லி நீயும் சும்மா இருந்தாய், அருணாசலா!

Meaning:
Without saying in words “Keep quiet!”, saying that with your Silence, your were also Silent, Arunachala!

37.
சோம்பியாய்ச் சும்மா சுகமுண் டுறங்கிடிற்
சொல்வே றென்கதி யருணாசலா (அ)

பொருள்:
ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்து, ஆன்ம சுகம் அனுபவித்து உறங்காவிடில் எனக்கு வேறு கதியென்ன சொல், அருணாசலா!

Meaning:
Without doing anything and being quiet, if I don’t enjoy the Self-Bliss, what other fate is there, tell me, Arunachala!

38.
சௌரியங் காட்டினை சழக்கற்ற தென்றே
சலியா திருந்தா யருணாசலா (அ)

பொருள்:
உனது பராக்கிரமத்தை காட்டினாய், என் மன இருள் ஒழிந்ததென்று நீ கலக்கமின்றி இருந்தாய், அருணாசலா!

Meaning:
You showed me your Grand Prowess. You were calm that the darkness of my mind is destroyed, Arunachala!

39.
ஞமலியிற் கேடா நானென் னுறுதியா
னாடிநின் னுறுவே னருணாசலா (அ)

பொருள்:
நாயை விட கேடா நான்? என் சொந்த உறுதியால் உன்னை நாடி அடைவேன், அருணாசலா!

Meaning:
Am I worse than a dog? With my own will power, I will reach you and get you, Arunachala!

40.
ஞானமில் லாதுன் னாசையாற் றளர்வற
ஞானந் தெரித்தரு ளருணாசலா (அ)

பொருள்:
ஞானம் இல்லாமல் உன்னை அடையவேண்டுமென்ற ஆசை கொண்ட தளர்ச்சி நீங்க, ஞானம் எனக்கு தெரிவித்து அருள், அருணாசலா!

Meaning:
To remove the fatigue due to the desire that I should get you without Knowledge, explain the Knowledge to me, Arunachala!

41.
ஞிமிறுபோ னீயு மலர்ந்திலை யென்றே
நேர்நின் றனையென் னருணாசலா (அ)

பொருள்:
நீயும் ஒரு வண்டுபோல நீ இன்னும் மலரவில்லை என்று எண்ணி என்னெதிர் நின்றாய், இதென்ன அருணாசலா!

Meaning:
Like a bumble bee, thinking that I haven’t bloomed, you just stood there, Arunachala!

42.
தத்துவந் தெரியா தத்தனை யுற்றாய்
தத்துவ மிதுவென் னருணாசலா (அ)

பொருள்:
உண்மைத் தத்துவம் அறியாத என்னை ஆன்ம சொரூபத்தை அடையச் செய்தாய். இந்த தத்துவம் தான் என்ன, அருணாசலா!

Meaning:
I didn’t know the Real Truth, and you made me achieve the Real Self. What truth this is, Arunachala!

43.
தானே தானே தத்துவ மிதனைத்
தானே காட்டுவா யருணாசலா (அ)

பொருள்:
தானே தான் தான் என்ற தத்துவத்தை அந்தத் தானாகிய நீயே எனக்குக் காட்டுவாய், அருணாசலா!

Meaning:
The Ego is the Self. You yourself, one who is the Self, show me this Truth, Arunachala!

44.
திரும்பி யகந்தனைத் தினமகக் கண்காண்
டெரியுமென் றனையென் னருணாசலா (அ)

பொருள்:
உள்ளத்தில் உட்புறம் திரும்பி, தினமும் அகக்கண்ணால் காண், உண்மை தெரியும் என்றாய், அருணாசலா!

Meaning:
You said, “Turning inward within the Heart, always see with the eyes of your Inner Self, then you will see the Truth”, Arunachala!

45.
தீரமி லகத்திற் றேடியுந் தனையான்
றிரும்பவுற் றேனரு ளருணாசலா (அ)

பொருள்:
எல்லையற்ற அகத்தில் உன்னைத் தேடி நான் திரும்பவும் உன் அருளை அடைந்தேன், அருணாசலா!

Meaning:
Searching for you in the Limitless Heart, I regained your Grace, Arunachala!

46.
துப்பறி வில்லா விப்பிறப் பென்பய
னொப்பிட வாயே னருணாசலா (அ)

பொருள்:
விசாரணை செய்யும் அறிவு இல்லாமல் இப்பிறப்பால் என்ன பயன்? எதோடும் இதை ஒப்பிட என்னால் முடியவில்லை, அருணாசலா!

Meaning:
Without Self-Enquiry, what is the use of this birth? I cannot compare this with anything, Arunachala!

47.
தூய்மன மொழியர் தோயுமுன் மெய்யகந்
தோயவே யருளென் னருணாசலா (அ)

பொருள்:
தூய மன மொழி கொண்டவரே உறையும் உன் உண்மையான நிலையில் நானும் உறைய அருள் செய், அருணாசலா!

Meaning:
In your Real state where only those who have pure mind and speech reside, make me reside there too, Arunachala!

48.
தெய்வமென் றுன்னைச் சாரவே யென்னைச்
சேர வொழித்தா யருணாசலா (அ)

பொருள்:
நான் உன்னைக் கடவுளாகக் கருதி சரணாகதி அடையவே, என்னை சேர என்னை (என் அகங்காரத்தை) ஒழித்தாய், அருணாசலா!

Meaning:
Because I considered you as God and surrendered, to join me you destroyed me (my ego), Arunachala!

49.
தேடா துற்றநற் றிருவரு ணிதியகத்
தியக்கந் தீர்த்தரு ளருணாசலா (அ)

பொருள்:
தேடாமலே கிடைத்த நல்ல திருவருளே! என் மனத்தின் அறியாமையை தீர்த்து அருள், அருணாசலா!

Meaning:
Oh sacred Grace that I got without searching for it! Remove my ignorance and bless me, Arunachala!

50.
தைரிய மோடுமுன் மெய்யக நாடயான்
றட்டழிந் தேனரு ளருணாசலா (அ)

பொருள்:
தைரியத்தோடு உன் உண்மையான நிலையை நாடி அழிந்தேன், அருள் செய் அருணாசலா!

Meaning:
With courage I sought your Real state and got destroyed, bless me, Arunachala!

51.
தொட்டருட் கைமெய் கட்டிடா யெனிலியா
னட்டமா வேனரு ளருணாசலா (அ)

பொருள்:
உன் அருள் மிகுந்த கையால் தொட்டு என்னை அணைக்காவிடில் நான் ஒழிந்திடுவேன், அருள் அருணாசலா!

Meaning:
If you don’t touch and embrace me with your hands of Grace, I will get destroyed, bless me, Arunachala!

52.
தோடமி னீயகத் தோடொன்றி யென்றுஞ்சந்
தோடமொன் றிடவரு ளருணாசலா (அ)

பொருள்:
குற்றமில்லாமல் நீ என்னோடு ஒன்றாகக் கலந்து, இன்பம் கண்டிட அருள், அருணாசலா!

Meaning:
Without fault with you joining me without separation, bless me to find happiness, Arunachala!

53.
நகைக்கிட மிலைநின் னாடிய வெனையரு
ணகையிட்டுப் பார்நீ யருணாசலா (அ)

பொருள்:
சிரித்திட இடமில்லை, உன்னை நாடிய எனக்கு புன்னகைப் புரிந்து பார், அருணாசலா!

Meaning:
This is no place for laughing. Smile and look at me who sought you, Arunachala!

54.
நாணிலை நாடிட நானா யொன்றிநீ
தாணுவா நின்றனை யருணாசலா (அ)

பொருள்:
நான் உன்னை நாடிட, நானாக ஒன்றி நீ ஸ்திரமாக நின்றாய், அருணாசலா!

Meaning:
When I sought your true state, becoming as the One you stood firmly, Arunachala!

55.
நின்னெரி யெரித்தெனை நீறாக் கிடுமுன்
னின்னருண் மழைபொழி யருணாசலா (அ)

பொருள்:
என்னை உன் ஞான நெருப்பால் எரித்துச் சாம்பலாக்கிவிடுவதற்கு முன்பு, உன் அருள் மழை பொழி, அருணாசலா!

Meaning:
Before you burn me with the fire of Self-Knowledge, shower your Grace, Arunachala!

56.
நீநா னறப்புலி நிதங்களி மயமா
நின்றிடு நிலையரு ளருணாசலா (அ)

பொருள்:
நீ, நான் என்ற வேறுபாடு விலக, பேரின்பான நிலையை அருள், அருணாசலா!

Meaning:
Removing the separateness of You and I, bless me with the state of great happiness, Arunachala!

57.
நுண்ணுரு வுனையான் விண்ணுரு நண்ணிட
வெண்ணலை யிறுமென் றருணாசலா (அ)

பொருள்:
நுட்பமான சிறந்த உருவுடைய உன்னை நான் என் இதயத்தில் சேர்த்துக்கொள்ள என் எண்ண அலைகள் எப்போது அழியும், அருணாசலா!

Meaning:
One who has the fine, delicate form, in order to attain you in my Heart, when will my thought waves get destroyed, Arunachala!

58.
நூலறி வறியாப் பேதைய னென்றன்
மாலறி வறுத்தரு ளருணாசலா (அ)

பொருள்:
கல்வியறிவு அற்ற பேதையான எனது கெட்ட அறிவைக் அழித்து அருள், அருணாசலா!

Meaning:
Destroy the bad mind of me who is useless and uneducated, Arunachala!

59.
நெக்குநெக் குருகியான் புக்கிட வுனைப்புக
னக்கனா நின்றனை யருணாசலா (அ)

பொருள்:
மிகவும் உருகி நான் சரணடைந்து உன்னை அடைந்ததும், எல்லையற்ற பரம்பொருளாக நீ நின்றாய், அருணாசலா!

Meaning:
When I surrendered to you with great longing and reached you, you stood as the boundless, all-pervading Self, Arunachala!

60.
நேசமி லெனக்குன் னாசையைக் காட்டிநீ
மோசஞ் செயாதரு ளருணாசலா (அ)

பொருள்:
நேசமின்றி இருந்த எனக்கு உனது ஆசையைக் காட்டி நீ மோசம் செய்யாமல் அருள், அருணாசலா!

Meaning:
I was without Love. Tempting me with your Love, don’t betray me, Arunachala!

61.
நைந்தழி கனியா னலனிலை பதத்தி
னாடியுட் கொள்நல மருணாசலா (அ)

பொருள்:
நைந்து அழிந்த கனியால் பயனில்லை, நல்ல நிலையில் நான் உள்ளபோதே என்னை நீ நாடி ஏற்றுக்கொண்டு நலம் அருள், அருணாசலா!

Meaning:
There is no use from a squished and destroyed fruit. When I am still in a good condition, seek me and accept me, Arunachala!

62.
நொந்திடா துன்றனைத் தந்தெனைக் கொண்டிலை
யந்தக னீயெனக் கருணாசலா (அ)

பொருள்:
நான் வருந்தாமல் உன்னை எனக்குத் தந்து என்னை நீ ஆட்கொள்ளவில்லை, எனக்கு நீ எமன் தான், அருணாசலா!

Meaning:
You did not rule over me so that I won’t be sad. You are my Lord of Death, Arunachala!

63.
நோக்கியே கருதிமெய் தாக்கியே பக்குவ
மாக்கிநீ யாண்டரு ளருணாசலா (அ)

பொருள்:
நோக்கியே, எண்ணியே, ஸ்பரிசம் செய்தே என்னைப் பக்குவப்படுத்தி நீ ஆண்டருள், அருணாசலா!

Meaning:
By looking, thinking and touching me, make me ready (for Realization) and rule over me, Arunachala!

64.
பற்றிமால் விடந்தலை யுற்றிறு முனமருள்
பற்றிட வருள்புரி யருணாசலா (அ)

பொருள்:
மாயை என்னும் விஷம் பற்றிக் கொண்டு தலைக்கேறி உறைவதற்கு முன்னால், உன்னைப் பற்றிக் கொள்ள அருள் புரி, அருணாசலா!

Meaning:
Before the poison of illusion rises to my head, make me cling to you, Arunachala!

65.
பார்த்தருண் மாலறப் பார்த்திலை யெனினருள்
பாருனக் கார்சொல்வ ரருணாசலா (அ)

பொருள்:
என்னைப் பார்த்து, அதன் அருளால் என் மன இருள் அழிய நீ பார்க்கவில்லை எனில், வேறு யார் என்னைப் பார்க்க உனக்கு சொல்வார், அருணாசலா!

Meaning:
If you don’t see me to destroy the ignorance of my mind, who else is going to tell you to see me, Arunachala!

66.
பித்துவிட் டுனைநேர் பித்தனாக் கினையருள்
பித்தந் தெளிமருந் தருணாசலா (அ)

பொருள்:
பித்தை விட்டு, என்னை உனது உண்மையான பித்தனாக்கி அருள், பித்தம் தெளியும் மருந்தான நீ, அருணாசலா!

Meaning:
Stop the madness, make me one who is crazy for you, Oh medicine that cures mental illness, Arunachala!

67.
பீதியி லுனைச்சார் பீதியி லெனைச்சேர்
பீதியுன் றனக்கே னருணாசலா (அ)

பொருள்:
பயமற்ற உன்னை சார்ந்த பயமில்லாத என்னைச் சேர உனக்கென்ன பயம், அருணாசலா!

Meaning:
You are fearless. I came to you without fear. Why do you fear to join me, Arunachala!

68.
புல்லறி வேதுரை நல்லறி வேதுரை
புல்லிட வேயரு ளருணாசலா (அ)

பொருள்:
கீழ்மையான பொய்யறிவு எது, நன்மையான மெய்யறிவு எது என்று சொல். அந்த மெய்யறிவை நான் அடைய அருள், அருணாசலா!

Meaning:
Tell me what is lowly knowledge and what is good knowledge. Then make me attain the good knowledge, Arunachala!

69.
பூமண மாமனம் பூரண மணங்கொளப்
பூரண மணமரு ளருணாசலா (அ)

பொருள்:
பூமியின் (பற்றுதல்) வாசனையுற்ற என்னுள்ளம் பூரண வாசனை கொள்ள, பூரண மணம் கொண்ட குணம் அருள், அருணாசலா!

Meaning:
To make my mind that is attached to inherent tendencies have perfect tendencies, bless me with perfect nature, Arunachala!

70.
பெயர்நினைத் திடவே பிடித்திழுத் தனையுன்
பெருமையா ரறிவா ரருணாசலா (அ)

பொருள்:
உன் பெயரை நினைத்தவுடன் என்னைப் பிடுத்து இழுத்தாய். உன் பெருமையை யார் தான் அறிவார், அருணாசலா!

Meaning:
As soon as I thought of you, you dragged me to you. Who can understand your greatness, Arunachala!

71.
பேய்த்தனம் விடவிடாப் பேயாப் பிடித்தெனைப்
பேயனாக் கினையென் னருணாசலா (அ)

பொருள்:
எந்தன் பேய்த்தனம் ஒழிவதற்காக என்னைப் பேயாகப் பிடித்து என்னைப் பேயனாக்கி விட்டாய், அருணாசலா!

Meaning:
In order to destroy my madness, you caught me like a demon made me mad for you, Arunachala!

72.
பைங்கொடி யாநான் பற்றின்றி வாடாமற்
பற்றுக்கோ டாய்க்கா வருணாசலா (அ)

பொருள்:
இளங்கொடியான நான் பற்றிக் கொள்ள ஒன்றுமில்லாது வாடாமல் ஆதரவு தந்து என்னைக் காத்திடு, அருணாசலா!

Meaning:
I am a young vine. Without making me dry up and die because I have no support, give me support and protect me, Arunachala!

73.
பொடியான் மயக்கியென் போதத்தைப் பறித்துன்
போதத்தைக் காட்டினை யருணாசலா (அ)

பொருள்:
பொடிபோட்டு என்னை மயக்கி, எனது போதத்தைப் பறித்து, உனது போதத்தை காட்டினாய், அருணாசலா!

Meaning:
You charmed me, removed my knowledge and showed your knowledge, Arunachala!

74.
போக்கும் வரவுமில் பொதுவெளி யினிலருட்
போராட் டங்காட் டருணாசலா (அ)

பொருள்:
போக்குவரவு இல்லாத பொது வெளியினில் அருள் போராட்டம் காட்டு, அருணாசலா!

Meaning:
Where there is no traffic in the open arena, show the combat of Grace, Arunachala!

75.
பௌதிக மாமுடற் பற்றற்று நாளுமுன்
பவிசுகண் டுறவரு ளருணாசலா (அ)

பொருள்:
பௌதிகமான உடற்பற்று ஒழிந்து, எப்போதும் உன் அழகைக் கண்டவாறு இருக்க அருள், அருணாசலா!

Meaning:
Destroying the attachment to the chemical body, make me always live looking at your beauty, Arunachala!

76.
மலைமருந் திடநீ மலைத்திட வோவருண்
மலைமருந் தாயொளி ரருணாசலா (அ)

பொருள்:
மலை மருந்தை நீ எனக்குப் அளித்ததால் நான் மலைக்க வேண்டுமா? அருள் மலை வடிவான மருந்தாய் ஒளிர், அருணாசலா!

Meaning:
Should I be shocked if you give me the medicine of the Sacred Mountain? Shine as the Medicine in the form of the Sacred Mountain, Arunachala!

77.
மானங்கொண் டுறுபவர் மானத்தை யழித்தபி
மானமில் லாதொளி ரருணாசலா (அ)

பொருள்:
அகங்காரம் கொண்டு உறைபவரின் மானத்தை அழித்து, அபிமானமில்லாது ஒளிர், அருணாசலா!

Meaning:
Destroying the ego of those who are arrogant, shine without egotism, Arunachala!

78.
மிஞ்சிடிற் கெஞ்சிடுங் கொஞ்ச வறிவனியான்
வஞ்சியா தருளெனை யருணாசலா (அ)

பொருள்:
மிஞ்சினால் கெஞ்சிடும் அறியேன் நான், என்னை வஞ்சிக்காமல் அருள், அருணாசலா!

Meaning:
I am one who begs when one is mean to me. Bless me without betraying me, Arunachala!

79.
மீகாம னில்லாமன் மாகாற் றலைகல
மாகாமற் காத்தரு ளருணாசலா (அ)

பொருள்:
மாலுமி இல்லாத கப்பல் அலை கடலில் தவிப்பது போல் ஆகாமல் என்னைக் காத்தருள், அருணாசலா!

Meaning:
Don’t put me in the condition of a ship that struggles in the sea without its captain. Protect me, Arunachala!

80.
முடியடி காணா முடிவிடுத் தனைநேர்
முடிவிடக் கடனிலை யருணாசலா (அ)

பொருள்:
முடிவும் அடியும் காணாத சிக்கலை நீக்கினாய், எல்லாம் கடந்த நேர் நிலையில் வைத்தாய், அருணாசலா!

Meaning:
You solved the problem that has no top or bottom. You placed me in the state beyond everything, Arunachala!

81.
மூக்கிலன் முன்காட்டு முகுரமா காதெனைத்
தூக்கி யணைந்தரு ளருணாசலா (அ)

பொருள்:
முகமில்லாத ஓர் மனிதன் முன் காட்டப்படும் முகக் கண்ணாடியாக ஆக்காமல் என்னைத் தூக்கி அணைத்து அருள், அருணாசலா!

Meaning:
Don’t make me like a mirror that is shown in front of a faceless person. Embrace me and bless me, Arunachala!

82.
மெய்யகத் தின்மன மென்மல ரணையினா
மெய்கலந் திடவரு ளருணாசலா (அ)

பொருள்:
உடலென்னும் அகத்தில், மென்மையான உள்ளமென்னும் மலரணையில் நாம் உண்மையில் கலந்திட அருள், அருணாசலா!

Meaning:
In the home called body, in the soft bed called Heart, bless that we join together, Arunachala!

83.
மேன்மேற் றாழ்ந்திடு மெல்லியர்ச் சேர்ந்துநீ
மேன்மையுற் றனையென் னருணாசலா (அ)

பொருள்:
மேலும் மேலும் தாழ்ந்திடும் எளியவருடன் சேர்ந்து நீ மேன்மை அடைந்தாய் இதென்ன, அருணாசலா!

Meaning:
What greatness is this that you achieved by joining those who are more and more humble, Arunachala!

84.
மைமய னீத்தருண் மையினா லுனதுண்
மைவச மாக்கினை யருணாசலா (அ)

பொருள்:
மையைப் போன்ற இருளை நீக்கி உன் அருள் மயத்தால் உண்மை நிலையின் வசமாக்கினாய், அருணாசலா!

Meaning:
Removing the dark illusion, you have established me in the True State by your Grace, Arunachala!

85.
மொட்டை யடித்தெனை வெட்ட வெளியினீ
நட்டமா டினையென் னருணாசலா (அ)

பொருள்:
எனது சிகையை நீக்கி, வெட்ட வெளியில் என்னை வைத்து ஆட்டம் காட்டினாய் என்ன, அருணாசலா!

Meaning:
Removing all my hair, making me stand in homeless open space, you have played with me, Arunachala!

86.
மோகந் தவிர்த்துன் மோகமா வைத்துமென்
மோகந்தீ ராயென் னருணாசலா (அ)

பொருள்:
எனக்குள்ள மோகத்தை அழித்து உன்னிடம் மோகமாய் வைத்தும், என் மோகத்தை தீர்க்க மாட்டாய், இதென்ன அருணாசலா!

Meaning:
Destroying my passions, making me desirous of you, still you won’t fulfill my desire. What is this, Arunachala!

87.
மௌனியாய்க் கற்போன் மலரா திருந்தான்
மௌனமி தாமோ வருணாசலா (அ)

பொருள்:
மௌனியாக கல் போல இருந்தால், இது தான் மௌனமா, அருணாசலா!

Meaning:
To be quiet like a stone, is this what is Silence, Arunachala!

88.
யவனென் வாயின் மண்ணினை யட்டி
யென்பிழைப் பொழித்த தருணாசலா (அ)

பொருள்:
என் வாயில் மண்ணை போட்டு, என் பிழைப்பை ஒழித்தது யார், அருணாசலா!

Meaning:
Putting dirt in my mouth, destroying my livelihood, who did all this, Arunachala!

89.
யாருமறி யாதென் மதியினை மருட்டி
யெவர்கொளை கொண்ட தருணாசலா (அ)

பொருள்:
யாரும் அறியாமல் என் மதியை மருட்டி, என்னைக் கொள்ளை கொண்டது யார், அருணாசலா!

Meaning:
Without the knowledge of others, making my mind confused, who is it that stole me, Arunachala!

90.
ரமணனென் றுரைத்தேன் ரோசங் கொளாதெனை
ரமித்திடச் செயவா வருணாசலா (அ)

பொருள்:
நீ என் இதயத்தில் ரமிப்பவன் என்பதால் இதைச் சொன்னேன். கோபம் கொள்ளாமல் என்னை இன்புறச் செய்வாய், அருணாசலா!

Meaning:
Because you revel in my Heart, I said all this. Without getting angry, make me happy, Arunachala!

91.
ராப்பக லில்லா வெறுவெளி வீட்டில்
ரமித்திடு வோம்வா வருணாசலா (அ)

பொருள்:
இரவு பகல் இல்லாத வெறுவெளி வீட்டில் இன்புற்றிருப்போம், வா அருணாசலா!

Meaning:
In the open space that knows no day or night, let us be happy, Arunachala!

92.
லட்சியம் வைத்தரு ளஸ்திரம் விட்டெனைப்
பட்சித்தாய் பிராணனோ டருணாசலா (அ)

பொருள்:
உனது அருள் அஸ்திரத்தை என் மேல் குறி வைத்து எய்து விட்டு, என்னை உயிரோடு உண்டாய், அருணாசலா!

Meaning:
Making me your target using your missile called Grace, you devoured me alive, Arunachala!

93.
லாபநீ யிகபர லாபமி லெனையுற்று
லாபமென் னுற்றனை யருணாசலா (அ)

பொருள்:
லாபமானவான் நீ, இக பர லாபமில்லாத என்னை அடைந்து, என்ன லாபம் உற்றாய், அருணாசலா!

Meaning:
You are the profitable One! What profit did you get from one like me who has no profit either in this world or beyond, Arunachala!

94.
வரும்படி சொலிலை வந்தென் படியள
வருந்திடுன் றலைவிதி யருணாசலா (அ)

பொருள்:
வரும்படி சொன்னாய் அல்லவா? நீ வந்து என்னைப் பராமரி. அதனால் நீ வருந்தினால், அது உன் தலைவிதி, அருணாசலா!

Meaning:
You asked me come, didn’t you? Now you come and take care of me. If it bothers you, it is your fate, Arunachala!

95.
வாவென் றகம்புக்குன் வாழ்வரு ளன்றேயென்
வாழ்விழந் தேனரு ளருணாசலா (அ)

பொருள்:
வா என்று அழைத்து, இதய அகத்தில் புகுந்திடச் செய்து வாழ அருளிய அன்றே, என் வாழ்வை இழந்தேன், அருள் அருணாசலா!

Meaning:
The day you called me to come, then entering my Heart you blessed me to Live, I lost my life, Arunachala!

96.
விட்டிடிற் கட்டமாம் விட்டிடா துனையுயிர்
விட்டிட வருள்புரி யருணாசலா (அ)

பொருள்:
நீ என்னை விட்டு விட்டால் கஷ்டமாகும். உன்னை விட்டிடாமல் உயிர் விட்டிட அருள் புரி, அருணாசலா!

Meaning:
If you leave me, it will be difficult. Bless me so that I let go my life without leaving you, Arunachala!

97.
வீடுவிட் டீர்த்துள வீடுபுக்குப் பையவுன்
வீடுகாட் டினையரு ளருணாசலா (அ)

பொருள்:
வீட்டினின்று என்னை வெளியே இழுத்து இதய வீட்டில் மெதுவாகப் புகுந்து, உனது உண்மை வீட்டைக் காட்டினாய், அருள் அருணாசலா!

Meaning:
Making me get out of the house, slowly entering my Heart Home, you showed me your Real Home, Arunachala!

98.
வெளிவிட்டே னுன்செயல் வெறுத்திடா துன்னருள்
வெளிவிட் டெனைக்கா வருணாசலா (அ)

பொருள்:
உன் செயலை வெளிப்படுத்தி விட்டேன். என்னை வெறுக்காமல், உன் உணமை நிலையை வெளிப்படுத்தி என்னை காத்திடு, அருணாசலா!

Meaning:
I have revealed your actions. Without hating me, show my your True State and protect me, Arunachala!

99.
வேதாந் தத்தே வேறற விளங்கும்
வேதப் பொருளரு ளருணாசலா (அ)

பொருள்:
வேதாந்தத்திலிருந்து வேறுபடாமல் விளங்கும் வேதப் பொருள் நீ, அருள் அருணாசலா!

Meaning:
You are not different from Vedanta, the Essence of Scriptures. Bless me, Arunachala!

100.
வைதலை வாழ்த்தா வைத்தருட் குடியா
வைத்தெனை விடாதரு ளருணாசலா (அ)

பொருள்:
நான் உன்னை இகழ்வதைப் வாழ்த்துவதாக வைத்து, நின்னருள் குடியாக வைத்து, என்னை விடாமல் அருள், அருணாசலா!

Meaning:
Taking my blame of you as my praise of you, make me reside in your Grace, bless me without leaving me, Arunachala!

101.
அம்புவி லாலிபோ லன்புரு வுனிலெனை
யன்பாக் கரைத்தரு ளருணாசலா (அ)

பொருள்:
தண்ணீரில் ஆலி கரைவது போல் உன் உருவில் என்னை அன்பால் கரைத்து அருள், அருணாசலா!

Meaning:
Like salt that melts in the water, make me melt in love in your form, Arunachala!

102.
அருணையென் றெண்ணயா னருட்கண்ணி பட்டேனுன்
னருள்வலை தப்புமோ வருணாசலா (அ)

பொருள்:
அருணா என்று நினைத்த நான் உன் அருள் பார்வையில் மாட்டிக் கொண்டேன். உன் அருள் வலை தப்புமோ, அருணாசலா!

Meaning:
As soon as I thought of “Aruna”, I got caught in your vision. Will your net of Grace miss me, Arunachala!

103.
சிந்தித் தருட்படச் சிலந்திபோற் கட்டிச்
சிறையிட் டுண்டனை யருணாசலா (அ)

பொருள்:
சிந்தித்து உன் அருளில் உறைய சிலந்தி போல் என்னைக் கட்டி சிறையிட்டு உண்டாய், அருணாசலா!

Meaning:
To contemplate and to abide in your grace, you imprisoned me like a spider in its web and ate me up, Arunachala!

104.
அன்பொடுன் னாமங்கே ளன்பர்த மன்பருக்
கன்பனா யிடவரு ளருணாசலா (அ)

பொருள்:
அன்போடு உன் பெயரைக் கேட்கும் அன்பரின் அன்பருக்கு நான் அன்பனாகிட அருள், அருணாசலா!

Meaning:
Bless me and make me the devotee of those devotees who are the devotees of those devotees who lovingly listen to your Name, Arunachala!

105.
என்போலுந் தீனரை யின்புறக் காத்துநீ
யெந்நாளும் வாழ்ந்தரு ளருணாசலா (அ)

பொருள்:
என்போன்ற உனது தீனரை இன்புறக் காத்து நீ எந்நாளும் வாழ்ந்தருள், அருணாசலா!

Meaning:
Happily protecting those who are ordinary and lowly like me, you live always, Arunachala!

106.
என்புரு கன்பர்த மின்சொற்கொள் செவியுமென்
புன்மொழி கொளவரு ளருணாசலா (அ)

பொருள்:
அன்பினால் உருகும் அன்பரின் இன்சொற்களை கேட்கும் உன் செவி, என் புன்சொல்லைக் கேட்க அருள், அருணாசலா!

Meaning:
You ears that listens to the sweet words of those who melt in love for you, let them listen to my ill words too, Arunachala!

107.
பொறுமையாம் பூதர புன்சொலை நன்சொலாப்
பொறுத்தரு ளிஷ்டம்பின் னருணாசலா (அ)

பொருள்:
பொறுமை வடிவான மலையே! எனது புன் சொல்லை நன் சொல்லாகப் பொறுத்து அருள், உனது இஷ்டப்படி, அருணாசலா!

Meaning:
Oh Mountain that is the form of Patience! Considering my ill words as good words, tolerate me and bless me as you wish, Arunachala!

108.
மாலை யளித்தரு ணாசல ரமணவென்
மாலை யணிந்தரு ளருணாசலா (அ)

பொருள்:
உன் மாலையை அளித்து, அருணாசல ரமணா, என் மாலையை அணிந்தருள், அருணாசலா!

Meaning:
Offer me your garland, Oh Arunachala Ramana, then wear my garland and bless me, Arunachala!

அருணாசல சிவ அருணாசல சிவ
அருணாசல சிவ அருணாசலா!
அருணாசல சிவ அருணாசல சிவ
அருணாசல சிவ அருணாசலா!

பொருள்:
அருணாசல சிவ அருணாசல சிவ அருணாசல சிவ அருணாசலா! அருணாசல சிவ அருணாசல சிவ அருணாசல சிவ அருணாசலா!

Meaning:
Arunachala Siva, Arunachala Siva, Arunachala Siva, Arunachala Siva, Arunachala Siva, Arunachala Siva, Arunachala Siva, Arunachala!

அருணா சலம்வாழி யன்பர் களும்வாழி
அக்ஷர மணமாலை வாழி.

பொருள்:
அருணாசலம் வாழ்க, அன்பர்களும் வாழ்க, அக்ஷர மணமாலை வாழ்க.

Meaning:
Long live Arunachala! Long live the Devotees! Long live the Marital Garland of Words!

அருணாசல நவமணி மாலை
அருணாசல மாகாத்மியம்
அருணாசல அக்ஷர மணமாலை

2 thoughts on “அருணாசல அக்ஷர மணமாலை

 • June 23, 2021 at 6:46 am
  Permalink

  Jaya Jaya swamin Jaya Jaya. Thanks madam

  Reply
 • July 8, 2022 at 12:42 am
  Permalink

  61 line in English needs correction
  It should read There is NO use for a destroyed fruit
  its currently mentioned as There is use…
  If you can, please correct the same

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!