
நான் யார் ? (20 – 21)
ஸ்ரீ ரமண பகவான் அருண்மொழி
(வினா-விடை வடிவம்)
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய
நான் யார்? (தொடர்ச்சி)
20. கடவுளாலும் குருவாலும் ஒரு ஜீவனை முக்தனாக்க முடியாதா?
கடவுளும் குருவும் முக்தியை யடைவதற்கு வழியைக் காட்டுவார்களே யல்லாமல், தாமாகவே ஜீவர்களை முக்தியிற் சேர்க்கார்.
கடவுளும் குருவும் உண்மையில் வேறல்லர். புலி வாயிற்பட்டது எவ்வாறு திரும்பாதோ, அவ்வாறே குருவின் அருட் பார்வையிற் பட்டவர்கள் அவரால் ரக்ஷிக்கப்படுவரே யன்றி ஒருக்காலும் கைவிடப்படார்; எனினும், ஒவ்வொருவரும் தம்முடைய முயற்சியினாலேயே கடவுள் அல்லது குரு காட்டிய வழிப்படி தவறாது நடந்து முத்தி யடைய வேண்டும். தன்னைத் தன்னுடைய ஞானக் கண்ணால், தானே யறியவேண்டுமே யல்லாமல், பிறராலெப்படி யறியலாம்? ராமனென்பவன் தன்னை ராமனென்றறிவதற்குக் கண்ணாடி வேண்டுமோ?
21. முக்தியில் விருப்ப முள்ளவனுக்குத் தத்துவங்களின் விசாரணை அவசியமா?
குப்பையைக் கூட்டித் தள்ள வேண்டிய ஒருவன் அதை யாராய்வதா லெப்படிப் பயனில்லையோ, அப்படியே தன்னை யறிய வேண்டிய ஒருவன், தன்னை மறைத்துக் கொண்டிருக்கும் தத்துவங்க ளனைத்தையும் சேர்த்துத் தள்ளிவிடாமல் அவை இத்தனை யென்று கணக்கிடுவதாலும், அவற்றின் குணங்களை யாராய்வதாலும் பயனில்லை. பிரபஞ்சத்தை ஒரு சொப்பனத்தைப்போ லெண்ணிக் கொள்ள வேண்டும்.