விசார சங்கிரகம் - சுய விசாரணை
விசார சங்கிரகம் - சுய விசாரணை (12)
விசார சங்கிரகம் - சுய விசாரணை (10)

விசார சங்கிரகம் – சுய விசாரணை (11)

(11)

பக்தர்:  

எப்போதும் நிலையில்லாமல் மாறிக் கொண்டேயிருக்கும் தன்மையுள்ள மனதுக்கு, ஆன்ம ஞானம் கிடைக்க முடியுமா?

மகரிஷி:

தூய்மை, அறிவு போன்ற பிரகிருதியின் அம்சமான சத்வ குணம் மனதின் இயல்பான தன்மையாதலாலும், மனம் தூய்மையாக மாசில்லாமல் ஆகாயம் போல இருப்பதாலும், மனம் என்று அழைக்கப்படுவது, உண்மையில், ஞானத்தின் இயல்பான தன்மையே ஆகும்.

அது தனது இயல்பான, அதாவது தூய்மையான நிலையில் தங்கி இருக்கும் போது, அதற்கு ‘மனம்’ என்ற பெயர் கூட கிடையாது. ஒன்றை மற்றொன்றாக தவறாக நினைத்துக் கொள்ளும் பிழையான அறிவு தான் மனம் என்று அழைக்கப் படுகிறது.

முதன் முதலில் இருந்த, தூய ஞானத்தின் தன்மையான தூய சத்வ மனம், அறியாமையினால் தனது ஞான இயல்பை மறந்து விடுகிறது; மந்தம், ஜடத் தன்மை போன்ற பிரகிருதியின் அம்சமான தமோ குணத்தின் வசத்திற்கு உட்பட்டு, அது உலகமாக மாறி விடுகிறது.  
செயல்பாடுகள், கட்டுக்கடங்காத உணர்ச்சிகள் போன்ற பிரகிருதியின் அம்சமான ரஜோ குணத்திற்கு வசப்பட்டு, அது “நான் உடல் தான்” என்றெல்லாம் கற்பனை செய்துக் கொள்கிறது; “உலகம் உண்மையானது” என்றும் கற்பனை செய்துக் கொள்கிறது; பற்றுதல், வெறுப்பு போன்றவற்றின் மூலமாக அவற்றால் விளையும் புண்ணியம், பாவம் இவற்றைப் பெறுகிறது; இதனால் உண்டாகும் மிஞ்சியிருக்கும் மனப்போக்குகளால், அது பிறப்பையும் இறப்பையும் பெறுகிறது.

ஆனால், முந்தைய பல பிறவிகளில்,  பற்றுதல் இல்லாமல் செய்யப்பட்ட பணிகளால் தனது மாசை அகற்றி விட்ட “மனம்”, மறை நூல்களின் அறிவுரைகளை ஒரு உண்மையான குருவிடமிருந்து கேட்டு, அதன் பொருளைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்து, பிரம்மனைப் பற்றி இடைவிடாமல் தியானம் செய்வதால் விளையும் “நான் பிரம்மன்” என்ற விதத்தில் உள்ள ஆன்ம சுய சொரூபமாக விளங்கும் இயல்பான மனத் தன்மையைப் பெறுவதற்காக, ஆழ்நிலை தியானம் செய்கிறது.

இவ்வாறு, மனம் தமோ குண அம்சமான உலகமாக மாறுவது விலக்கப் படுகிறது. அதோடு அது ரஜோ குண அம்சத்தில் அலைவதும் விலக்கப் படுகிறது. இந்த விலக்குதல் நிகழும் போது, மனம் மிகவும் நுண்மையாகவும், அசையாமலும் ஆகிவிடுகிறது.

ஒரு அருமையான பட்டுத் துணியை எப்படி ஒரு கனமான கடப்பாரையால் தைக்க முடியாதோ, அல்லது நுண்மையான பொருட்களின் விவரங்களை எப்படி  காற்றினால் அலைபாய்ந்து ஊசலாடும் ஒரு விளக்கின் சுடரினால் வேறுபடுத்தி அறிய முடியாதோ, அதே போல், மாசுள்ளதாகவும், தமோ குணத்திலும் ரஜோ குணத்திலும் வசப்பட்டுள்ள மனதால், நுண்மையாகவும் அசையாமலும் விளங்கும் “மெய்மை” அல்லது சுய சொருப ஆன்மாவை அனுபவிக்க முடியாது. 

ஆனால் முன்பு விவரிக்கப்பட்ட ஆழ்நிலை தியானத்தால் நுண்மையாகவும் அசையாமலும் ஆக்கப்பட்ட ஒரு தூய்மையான மனதில், பிரம்மன் என்னும் ஆன்ம சுய சொரூப பேரானந்தம் வெளிப்படும். மனமில்லாமல் அனுபவம் இருக்க முடியாது என்பதால், மிகவும் நுண்ணிய அம்சத்தைக் கொண்ட தூய்மையாக்கப் பட்ட மனதில், பிரம்மனாக விளங்கி ஆன்ம சுய சொரூப பேரானந்தத்தை அனுபவிக்க முடியும். பிறகு, ஒருவரது ஆன்மா பிரம்மனின் தன்மையே தான் என்ற உண்மை தெளிவாக அனுபவிக்கப் படுகிறது. 

~~~~~~~~

ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா
Translated from English into Tamil : Vasundhara

~~~~~~~~

குறிப்பு : 

“விசார சங்கிரகம்” என்பது ரமண மகரிஷி முதன் முதலாக வழங்கி அருளிய உபதேசங்களாகும். அவர் சுமார் 22 வயதான இளம் வாலிபராக இருந்த சமயத்தில் அவை வழங்கப்பட்டன. அவர் ஏற்கனவே தம் சுய சொரூப ஆன்ம ஞானத்தை முற்றிலும் உணர்ந்த, தெய்வீக அறிவின் பிரகாசமான பேரானந்தத்தில் உறைந்த பெரும் ஞானியாக விளங்கினார். அந்த சமயத்தில் அவர் அருணசல மலையின் மீது விரூபாக்ஷ குகையில் வாசம் செய்து வந்தார்.

அவரைச் சுற்றி ஏற்கனவே பக்தர்கள் சூழ்ந்துக் கொண்டு இருந்தனர். அவர் மௌன விரதம் எதுவும் எடுத்துக் கொள்ளாவிட்டாலும், மிகவும் சிறிதளவே பேசினார். எனவே, அவரது முதன்முதலான பக்தர்களில் ஒருவரான திரு கம்பீரம் சேஷய்யா அவரிடம் சில கேள்விகள் கேட்டபோது, மகரிஷி அவருக்கு காகிதத்தில் எழுதி பதில் அளித்தார். திரு சேஷய்யா அவற்றை தனது தினக்குறிப்புப் புத்தகத்தில் எழுதிக்கொண்டார்.  திரு சேஷய்யா காலமான பிறகு, இந்தப் புத்தகம் அவரது சகோதரரிடமிருந்து ஏற்றுக் கொள்ளப் பட்டது. பிறகு திரு நடனானந்தா அந்த கேள்வி-பதில்களைத் தொகுத்து அமைத்தார். அந்த பிரசுரம் ரமண மகரிஷியின் அங்கீகாரத்துடன், “விசார சங்கிரகம்” (சுய விசாரணை) என்ற பெயரில் வெளியிடப்பட்டது.  பிறகு அது ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.

விசார சங்கிரகம் - சுய விசாரணை (12)
விசார சங்கிரகம் - சுய விசாரணை (10)
விசார சங்கிரகம் – சுய விசாரணை (11)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!