போரும் கடுங்குற்றமும்
திரு எவன்ஸ் வென்ட்ஸ் உயிர் இழப்பு பற்றி கேட்டார்.
பக்தர்.: கடவுள் எல்லாவற்றிலும் உறைந்து இருப்பதால், யாரும் எவ்வித உயிரையும் அழிக்கக்கூடாது. சமூகம் ஒரு கொலைகாரனின் உயிரை எடுப்பது சரியா? அரசாங்கம் கூட அப்படி செய்யலாமா? கிறிஸ்துவ நாடுகள் கூட அது தவறு என்று நினைக்க ஆரம்பித்துள்ளன.
மகரிஷி.: கொலைகாரனை கொலை செய்யும்படி தூண்டி விட்டது எது? அதே சக்தி தான் அவனுக்கு தண்டனையும் அளிக்கிறது. சமூகம் அல்லது அரசாங்கம் அந்த சக்தியின் கையில் உள்ள ஒரு கருவி தான். ஒரு உயிர் எடுக்கப்படுவதைப் பற்றி பேசுகிறீர்கள். ஆனால் போர்களில் இழக்கப்படும் கணக்கில்லாத உயிர்களைப் பற்றி என்ன?
பக்தர்.: உண்மை தான். உயிர்களின் இழப்பு தவறு தான். போர்கள் நியாயமா?
மகரிஷி.: ஆன்ம ஞானம் பெற்றவருக்கு, ஆன்மாவில் எப்போதும் உறைந்து இருப்பவருக்கு, ஒரு உயிர், அல்லது பல உயிர்கள், அல்லது எல்லா உயிர்களின் இழப்பினால், இந்த உலகிலும் அல்லது எல்லா மூன்று உலகங்களிலும் கூட, எந்த வித்தியாசமும் இல்லை. அவர் எல்லோரையும் அழிக்க நேர்ந்தால் கூட, எந்த விதமான பாவமும் இத்தகைய தூய ஞானியை தொட முடியாது 1.
மகரிஷி பகவத் கீதையின், 18 வது அத்தியாயத்தின், 17 வது வரிசையை மேற்கோள் காட்டினார் –
“தான்மை என்னும் கருத்து இல்லாமல், புத்தியுடன் இணையாமல் இருக்கும் ஒருவர், எல்லா உலகங்களையும் அடியோடு அழித்தாலும் கூட, அழிப்பதில்லை; அது மட்டுமில்லாமல், அவர் தனது செயல்களின் விளைவுகளால் பிணைக்கப் படுவதுமில்லை.”
பக்தர்.: ஒருவருடைய செயல்கள் அவரை அவரது அடுத்த பிறவிகளில் பாதிக்காதா?
மகரிஷி.: நீங்கள் இப்போது கூட பிறந்துள்ளீர்களா? ஏன் மறு பிறவிகளைப் பற்றி நினைக்கிறீர்கள்? உண்மை என்னவெனில், பிறப்பும் கிடையாது, இறப்பும் கிடையாது. பிறந்திருக்கிறவர் (தான்மை) இறப்பைப் பற்றியும் அதன் பரிகாரத்தைப் பற்றியும் கேட்கட்டும்.
1 குறிப்பு: ஆன்மாவில் உறையும் ஒரு தூய ஞானிக்கு தான்மை உணர்வு கிடையாது, எதிலும் பந்தமின்றி உறைகிறார். செயல்கள் அவருக்கு முன்னால் நிகழ்கின்றன. அவை அவரை பாதிப்பதில்லை.
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1
ஜனவரி 24, 1935
உரையாடல் 17.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா