மிக உயர்ந்த சக்தியிடம் சரணடையுங்கள்; அது உங்கள் செயல்களையும் விளைவுகளையும் பொறுப்பேற்றுக் கொண்டு விடும்
Will-Power அல்லது மன உறுதி என்ன? அதை எப்படி பெறுவது?
சரணாகதி என்றால் என்ன? எப்படி செய்வது?

மிக உயர்ந்த சக்தியிடம் சரணடையுங்கள்; அது உங்கள் செயல்களையும் விளைவுகளையும் பொறுப்பேற்றுக் கொண்டு விடும்

 

ஒரு பண்புள்ள அமெரிக்கர், திரு ஜே. எம். லோரி என்பவர்,  ஆஸ்ரமத்தில் இரண்டு மாதமாக தங்கிக்கொண்டிருக்கிறார். அவர் கேட்டார்:

நான் இன்று இரவு இங்கிருந்து செல்கிறேன். இந்த இடத்தை விட்டு மனமில்லாமல் அகலுவதற்கு என் மனம் மிகவும் துன்புறுகிறது. ஆனால் நான் அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டும். நான் மகரிஷியிடம் ஒரு அறிவுரை கேட்கிறேன். என்னைப் பற்றி என்னை விடக் கூட மகரிஷி நன்றாகப் புரிந்துக் கொண்டிருக்கிறார்.  எனவே நான் மகரிஷியை விட்டு அகன்று இருக்கும் போது எனக்கு உதவ ஒரு அறிவுரை அளிக்க வேண்டும் என்று மகரிஷியை வேண்டுகிறேன்.  

மகரிஷி: நீங்கள் கற்பனைச் செய்துக் கொண்டிருப்பது போல், ஆசான் உங்களுக்கு வெளியில் இல்லை.  அவர் உள்ளுக்குள் இருக்கிறார்; உண்மையில், அவர் ஆன்மா தான். இந்த உண்மையை உணர்ந்துக் கொள்ளுங்கள். உங்களுக்குள் அவரைத் தேடுங்கள்; அவரை நீங்கள் காண்பீர்கள். பிறகு அவருடன் நீங்கள் நிரந்தரமான ஆன்மீகத் தொடர்பு வைத்துக் கொள்வீர்கள். அறிவுரை எப்போதும் இருக்கிறது. அது பேசாமல் இருப்பதே இல்லை. ஆசானை விட்டு நீங்கள் அகன்றுச் சென்றாலும், அது எப்போதும் உங்களை கைவிடாது. அதோடு, நீங்கள் எப்போதுமே ஆசானை விட்டு விலக முடியாது. நீங்கள் ஆசானில்லாமல் இருக்கவே மாட்டீர்கள்.   

திரு லோரி, மகரிஷியின் போக்குகளை ஏற்கனவே அறிந்திருந்தும் கூட, இந்த பதிலினால் மிகவும் பாதிக்கப்பட்டதாகத் தோன்றினார். அவர் மனமுருகி போனது வெளிப்புறத் தோற்றத்தில் கூட தெரிந்தது. மகரிஷியின் அருள் எப்போதும் தன்னிடம் உறைய வேண்டும் என்று அவர் வேண்டிக் கேட்டுக் கொண்டார்.   

மகரிஷி: குரு ஆன்மாவே தான் என்பதால், அருள் ஆன்மாவை விட்டு பிரியாமல் உள்ளது.  

பக்தர்: நான் ஒரு பொறியியல் நிறுவனத்தில் ஒரு பங்குதாரர். ஆனால் அது எனக்கு மிகுந்த கவலையில்லை. நான் நிறுவனத்தின் தினசரி நடவடிக்கைகளில் ஆன்மீக பண்புகளைக் கொண்டு வர முயல்கிறேன்.

மகரிஷி: அது மிகவும் நல்லது. நீங்கள் மிக உயர்ந்த சக்தியிடம் சரணடைந்து விட்டால், எல்லாம் நல்லதாக அமையும். அந்த சக்தி உங்களது விவகாரங்களை கவனித்துக் கொள்ளும்.  நீங்கள் தான் வினையாற்றுபவர் என்று நினைக்கும் வரையில், உங்களது செயல்களின் விளைவுகளை நீங்கள் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். அதற்கு பதிலாக, நீங்கள் அந்த உயர்ந்த சக்தியிடம் சரணடைந்துக் கொண்டு, நீ அந்த சக்தியின் ஒரு கருவி தான் என்று உணர்ந்துக் கொண்டால், அந்த சக்தி உங்களது விவகாரங்களையும் அவற்றின் விளைவுகளையும் பொறுபேற்றுக் கொண்டு விடும். அதன் பிறகு நீங்கள் அவற்றால் பாதிக்கப் பட மாட்டீர்கள்; மேலும் உங்கள் பணிகளும் இடையூறுகள் இல்லாமல் நிறைவேறும்.

நீங்கள் அந்த உயர்ந்த சக்தியை உணர்ந்தாலும் உணராவிட்டாலும், விஷயங்களின் திட்டம் மாறுவதில்லை; உளப்பாங்கில், மன நோக்கத்தில் ஒரு மாறுதல் உண்டாகிறது, அவ்வளவு தான். 

ஒரு ரயிலில் பிரயாணம் செய்யும் போது, பயணச் சுமையை உங்களது தலையின் மீது ஏன் சுமந்துக் கொள்ள வேண்டும்? அந்தச் சுமை உங்களது தலையின் மீது இருந்தாலும், தரையின் மீது இருந்தாலும், ரயில் அந்த பாரத்தைச் சுமந்துக் கொண்டு செல்கிறது. சுமையை உங்களது தலையின் மீது வைத்துக் கொள்வதால், நீங்கள் ரயிலின் பாரத்தைக் குறைப்பதில்லை; அதற்கு மாறாக உங்களை அநாவசியமாக சிரமப் படுத்திக் கொள்கிறீர்கள். மனிதர்கள் தாங்களே எல்லாவற்றையும் செய்துக் கொள்வதாக நினைத்துக் கொள்வதும் அதே போல் தான்.

தமிழாக்கம் : வசுந்தரா

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
ஆகஸ்ட் 17, 1938
உரையாடல் 503

 

 

Will-Power அல்லது மன உறுதி என்ன? அதை எப்படி பெறுவது?
சரணாகதி என்றால் என்ன? எப்படி செய்வது?

மிக உயர்ந்த சக்தியிடம் சரணடையுங்கள்; அது உங்கள் செயல்களையும் விளைவுகளையும் பொறுப்பேற்றுக் கொண்டு விடும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!