ரமணாஸ்ரமம் ஏற்பட்டது
ரமணர் திருவண்ணாமலையில் வாழ்ந்த சமயத்தில் ஒரு ஆஸ்ரமம் உடனே தானாக ஏற்படவில்லை. முதலில் மூங்கில் கம்பங்களாலும், பனையோலைகளால் அமைக்கப்பட்ட கூரையாலும் எழுப்பப்பட்ட ஒரு கொட்டகை தான் இருந்தது. அடுத்து வந்த வருடங்களில் ஜனங்களின் எண்ணிக்கை அதிகரித்தது, நன்கொடைகள் வந்தன, பிறகு சரியான ஆஸ்ரம கட்டிடங்கள் எழுப்பப் பட்டன. ரமணர் அமர்ந்து வந்த கூடம், அலுவலகம், புத்தகக் கடை, மருந்தகம், ஆண் விருந்தினர்களுக்கு ஓர் அறை, மற்றும் நீண்ட காலம் தங்கும் விருந்தாளிகளுக்கு ஓரிறு சிறிய பங்களா – இவைகள் கட்டப்பட்டன. ஆஸ்ரமத்திற்கு மேற்குப் பக்கத்தில், சில சாதுக்கள் ஒரு குடியிருப்பு தொகுப்பு ஒன்றை அமைத்தனர்.
லக்ஷ்மி என்னும் தெய்வீகப் பசு வந்தடைந்த பிறகு, ஒரு மாட்டுக் கொட்டிலும் எழுப்பப் பட்டது. தினம் தினம் அதிகரித்து வந்த விருந்தாளிகளுக்கு உணவளிக்க ஒரு மாபெரும் சமையல் அறையும் கட்டப் பட்டது. பசுக்களை பராமரிப்பதும் மக்களுக்கு உணவளிப்பதும் ரமணருக்கு மிகவும் பிரியமானதாக இருந்தது. முக்கியமாக ஏழை எளியவர்களுக்கும், துறவிகளுக்கும் உணவளித்து கவனித்துக் கொள்வதை அவர் மிகவும் விரும்பினார். சில காலம் கழித்து, புனித அன்னையார் அழகம்மாளுக்காக, அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு மேல், மாத்ருபூதேஸ்வரர் கோயில் என்ற ஒரு மதிப்பிற்குரிய, தகுதியான கோயில் கட்டப் பட்டது. இன்றும் அங்கு தினமும் வழிபாடு நடைபெற்று வருகிறது.
ரமணர், தமக்கு ஒரு தனிபட்ட சலுகையும் காட்டப் படுவதற்கு இடம் அளிக்கவில்லை, அனுமதியும் கொடுக்கவில்லை. முக்கியமாக உணவுக் கூடத்தில், அவர் இதை உறுதியாக பிடிவாதமாக கடைப்பிடித்தார். சில சமயங்களில் யாராவது அவருக்கு ஒரு மருந்தோ அல்லது சத்தான திரவியமோ அளித்தால் கூட, அதை எல்லோருடனும் சமமாக பகிர்ந்துக் கொள்ள விரும்பினார். ஆஸ்ரமத்தின் நிர்வாகத்தைப் பற்றியும் ரமணருக்கு அக்கரையில்லை, விருப்பமும் இல்லை. ஆஸ்ரமத்தில் விதிகள் அமைக்கப் பட்டால், அவற்றை பின்பற்றுவதில் அவர் தான் முதலாவதாக இருந்தார். ஆனால் அவரோ ஒரு விதியும் அமைக்கவில்லை. அவரது நடவடிக்கைகள் ஆன்மீகத்தைச் சார்ந்தே இருந்தன. தொடர்ச்சியாக, மேலும் மேலும் அதிகரித்து வந்த பக்தர்களால் சூழ்ந்திருந்த ரமணர், அந்த பக்தர்களால் அமைந்த குடும்பத்திற்கு மௌனமாக, அமைதியாக, வழிகாட்டி வந்தார்.
எல்லோருடைய கவனத்தின் மையமும், பக்தர்கள் ரமண மகரிஷியுடன் அமர்ந்து வந்த பழைய கூடத்தில் தான் இருந்தது. அந்த கூடத்தின் சிறந்த, மகிமை வாய்ந்த மௌனம் ரமணரின் அருளால் வியாபித்து விளங்கியது. தெய்வீக அன்பு அவரது கண்களில் பிரகாசித்தது. அவசியமான போது, அவரது வலிய, சக்தி வாய்ந்த மொழிகள் வந்திருந்தவர்களுக்கு விளக்கமும், தெளிவும், ஞானமும், ஆதரவும் அளித்து ஒளிர்வித்தன. எல்லோரும் ஒரே விதமாக தான் ஆழ்நிலை சிந்தனை செய்ய வேண்டுமென்றோ, அல்லது ஒரே சமயத்தில் தான் ஆன்மீக ஆய்வில் ஈடுபட வேண்டுமென்றோ விதிகள் எதுவும் நிர்ணயிக்கப் படவில்லை. முதல் சில வருடங்களில், ஆஸ்ரமத்தின் கதவுகள் மூடப் படவே இல்லை. இரவில் கூட, பக்தர்கள் அவரது அருளையும் அறிவுரைகளையும் நாடி வர முடிந்தது.
எல்லா வருகையாளர்களும், எப்போதும், எந்த சமயத்திலும் தம்மை அணுக முடிய வேண்டும் என்று கவலைப் பட்டு, ரமணர் ஆஸ்ரமத்தை விட்டு அகலாமல் இருந்தார். காலையிலும் மாலையிலும் தினமும் மலையின் மீதும், சாதுக்களின் உறைவிடத்திற்கும் நடந்து போய் வருவதைத் தவிர, மற்ற எந்த நேரத்திலும், அவர் ஆஸ்ரமத்தை விட்டு அகன்றுச் செல்லவே இல்லை. முதல் சில வருடங்களில், சில சமயம் அவர், மலை முழுவதையும் சுற்றி விளங்கிய சாலையில் நடந்து கிரி பிரதட்சிணம் செய்தார்.
ஒரு நாள், ரமணரது இடது கையில், கொடிய நோய் ஒன்று உருவாகியது. பல தீவிரமான மருத்துவ சிகிச்சைகள் செய்த பின்னும், சில காலத்தில், அவரது உடல் உருவின் முடிவு நேரம் அணுகி வருவது அனைவருக்கும் புரிந்தது. நோயுற்ற போது ரமணரின் சௌகரியத்திற்காக எழுப்பப் பட்ட அறையின் வெளிப்புறத்தில் இருந்த தாழ்வாரத்தில், ஒரு நாள் மாலையில், பக்தர்கள் தன்னியல்பாக, அக்ஷர மண மாலையென்னும் பாடலின் அடிகளை, “அருணாசல சிவ” என்று பாடத் தொடங்கினர். அதைக் கேட்டு, திரு ரமண மகரிஷியின் கண்கள் திறந்து பிரகாசித்தன. அவர் அன்பும் ஆதரவும் அருளும் நிறைந்த மிருதுவான, சிறிய புன்னகை ஒன்று செய்தார். அவரது கண்களின் வெளிப்புறங்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் உருண்டோடியது. ஒரு நீண்ட மூச்சு. பிறகு ஒன்றுமில்லை.
அதே தருணத்தில், எட்டு மணி நாற்பத்தேழு நிமிட நேரத்தில், ஒரு மாபெரும் நட்சத்திரம், வட கிழக்கு திசையில், அருணாசல மலையின் சிகரத்தை நோக்கி வானில் மெதுவாக கடந்து சென்றது. வெகு தூரத்தில் இருந்த மும்பை மாநகரில் கூட, பெரும்பான்மையோர் இந்த ஒளிமிக்க நட்சத்திரம் வானில் பிரகாசித்துச் செல்வதைக் கண்டனர். அதன் அற்புத தோற்றத்தையும், வானில் கடந்து செல்லும் விசித்திர விதத்தையும் கண்ட அவரது பக்தர்கள், இது தமது மகா குருவின் உடலுருவின் மறைவு தான் என்று முடிவு செய்தனர்.
இப்போதும் திரு ரமண மகரிஷியின் சக்தியும் வல்லமையும் சிறிதளவும் குறையவில்லை. ரமணர் இன்றும் விளங்கும் உணர்வு மிகவும் வலிவாக தோன்றுகிறது என்று ஆஸ்ரமத்திற்கு வருபவர்கள் அடிக்கடி சொல்லி வந்தார்கள். இன்னும் சொல்லப் போனால், இந்த உலகில் எந்த இடத்தில் வாழ்ந்தாலும், ரமணரை மனதால் அணுகும் பக்தர்களுக்கு அவரது அருளும் வழிகாட்டுதலும் தவறாமல் கிடைத்து வருகிறது. ஏனெனில் அவர் தூய ஆன்மாவை பிரதிபலித்து விளங்குகிறார்.
திரு ரமண மகரிஷி தமது உடல் உருவை விட்டு விடுவதற்கு முன்பு, பக்தர்கள் அவரிடம் சென்று, அவர் நீண்ட காலம் இருக்க வேண்டும், ஏனெனில் அவர்களுக்கு ரமணரது மேன்மையான உதவி தேவை என்று சொன்னார்கள். ரமணர் பதில் அளித்தார் : “போவதா? நான் எங்கே போக முடியும்? நான் எப்போதும் இங்கேயே தான் இருப்பேன்.”