Ramana
ரமணாஸ்ரமம் ஏற்பட்டது
அருணாசலத்திற்கு பயணம்

Young-Ramana

அருணாசலத்தில் ரமணரின் வாசம்

 

திரு ரமண மகரிஷி திருவண்ணாமலையில் முதலில் பல இடங்களில் வாசம் செய்தார். பிறகு அருணாசல மலையின் பல குகைகளில் தங்கினார். கடைசியாக தற்போது திரு ரமணாஸ்ரமம் என்று வழங்கும் திருத்தலத்தில் மகாமுக்தி அடையும் வரை வசித்தார். அவர் விதிமுறைப்படி சந்நியாசம் எடுத்துக் கொள்ளவே இல்லை. மேலும் அவர் யாரையும் தமது சீடராகவோ, மாணவர்களாகவோ சொல்லிக் கொள்ளவும் இல்லை. திருவண்ணாமலையை அடைந்த நாளிலிருந்து மகாமுக்தி அடையும் வரை, திரு ரமணர் தமது அன்பார்ந்த அருணாசலத்தை விட்டு அகலவே இல்லை.

முதன் முதாலாக திருவண்ணாமலையில் ரமணர் தங்கிய இடம் அதன் மாபெரும் கோவிலாகும். சில வாரங்களுக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்தார். ஆனால் அவர் அமைதியாக அமர்ந்திருந்தபோது, சில கொடிய சிறுவர்கள் அவர் மீது கற்களை தூக்கி எறிந்து தொல்லை செய்தனர். அதனால் அவர் கீழ்புரத்தில் இருந்த பாதாள லிங்கம் என்று சொல்லப்பட்ட கிடங்கில் அடைக்கலம் புகுந்தார். அங்கு கதிரவனே எட்டாததால் வெளிச்சமின்றி கும்மிருட்டாக இருந்தது. அங்கு ரமணர் ஆடாமல் அசையாமல் ஆன்மாவின் ஆழ்நிலையில் முற்றிலும் தம்மை மறந்து அமர்ந்தார். அவரை எறும்புகளும் பூச்சிகளும் கடித்து துன்புறுத்தியதையும் கூட அவர் உணரவில்லை.

ஆனால் அந்த குறும்புத்தனமான சிறுவர்கள் விரைவில் அவரது புதிய புகலிடத்தை அறிந்துகொண்டனர். அங்கு போய் மீண்டும் அவர் மீது கல்லை அடித்து பொழுது போக்கினர். அந்த நாட்களில் திருவண்ணாமலையில் மேன்மை மிக்க திரு சேஷாத்ரி ஸ்வாமிகள் வாழ்ந்து வந்தார். அவர் சில சமயங்களில் ரமணரின் மீது கவனம் செலுத்தி வந்தார். சிறுவர்களை அங்கிருந்து துரத்தி வந்தார். ரமணரோ மிக ஆழ்ந்த தியானத்தில், இன்பவாரியில் மூழ்கியிருந்ததால், இறுதியில் சில பக்தர்கள் வந்து அவரை பாதாளத்திலிருந்து தூக்கி, அருகிலிருந்த திரு சுப்ரமண்ய ஸ்வாமி கோவிலுக்கு கொண்டு வந்ததைக் கூட அவர் அறியவில்லை. அந்தக் கோவிலில், இரண்டு மாதங்களுக்கு அவர் தமது உடல் நிலையை கவனிக்காமல், தம்மை அறவே மறந்து வசித்து வந்தார்.

அவரை சாப்பிட வைக்க, உணவை பலவந்தமாக வாயில் போட வேண்டியிருந்தது. அதிருஷ்டவசமாக அவரை கவனித்துக் கொள்ள யாராவது இருந்து வந்தனர். ரமணர் பிறகு அருகிலிருந்த பல நந்தவனங்களுக்கும், சோலைகளுக்கும், கோவில்களுக்கும் சென்று வசித்து வந்தார்.  அங்கிருந்த மாமர சோலையில் தான் அவரது தந்தையின் சகோதரர் திரு நெல்லியப்ப அய்யர் ரமணரைக் கண்டுபிடித்தார். நெல்லியப்ப அய்யர் ரமணரை தம்முடன் மானாமதுரைக்கு அழைத்துச் செல்ல எவ்வளவோ முயற்சிகள் செய்தார். ஆனால், இளம் மகரிஷி அதற்கு ஒப்பவில்லை. வந்திருப்பவரிடம் ரமணருக்கு ஒருவித விருப்பமும் இல்லை. எனவே, நெல்லியப்ப அய்யர் மிகவும் ஏமாற்றத்துடன் மானாமதுரைக்கு திரும்பி சென்றார்.  ஆனால், இந்த விஷயத்தை, ரமணரின் புனித அன்னையிடம் தெரிவித்தார்.

சில காலம் கழித்து, தெய்வீக அன்னை அழகம்மாள், தமது மூத்தப் புதல்வரான திரு நாகஸ்வாமியுடன் திருவண்ணாமலைக்கு வந்தார். ரமணர் அப்போது அருணாசலத்தின் கிழக்குப் புரத்தில் இருந்த பவழக்குன்றில் தங்கியிருந்தார். கண்களில் கண்ணீர் பொழிய, அழகம்மாள் ரமணரை தம்முடன் திரும்பிப் போகும்படி மன்றாடினார். ஆனால், மகரிஷி ரமணர் திரும்பி போவதாக இல்லை. அன்னையின் கண்ணீர் கூட அவரைத் தொடவில்லை. மிகவும் அமைதியாக, ஆடாமல் அசையாமல் மௌனத்தில் அமர்ந்திருந்தார். இப்படி பல நாட்கள் அன்னை கலங்குவதைக் கண்டு வந்த ஒரு பக்தர், ரமணரிடம், அவர் சொல்ல நினைப்பதைக் குறைந்த பட்சம் ஒரு காகிதத்திலாவது எழுதிக் காட்டும்படி விண்ணப்பம் செய்தார்.  மகரிஷி ஒரு காகிதத் துண்டில், பின் வருமாறு எழுதினார்.

ஆண்டவராகிய கடவுள், அவரவர்களின் கடந்த செயல்களுக்குத் தகுந்தபடி அவர்களின் தலை விதியை நிர்ணயித்து கடைப்பிடிக்கிறார். எது நடக்கக் கூடாது என்று தலைவிதியில் நிர்ணயிக்கப் பட்டுள்ளதோ அது எவ்வளவு முயன்றாலும் நடக்காது. எது நடக்க வேண்டும் என்று தலைவிதியில் நிர்ணயிக்கப் பட்டுள்ளதோ அது, அதை நிறுத்த எவ்வளவு முயன்றாலும் நடந்தே தீரும். இது நிச்சயம். எனவே, சிறந்த வழி எதுவென்றால், அமைதியாக இருப்பது தான்.

மனமுடைந்த அன்னை அழகம்மாள், ஆழ்ந்த துயரத்துடன் மானாமதுரைக்குத் திரும்பி சென்றார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சில காலம் கழித்து, ரமணர் அருணாசல மலையின் சரிவுகளில் இருந்த பலவித குகைகளில் வசிக்க ஆரம்பித்தார். அவர் எல்லா குகைகளை விட அதிக காலம், பதினேழு வருஷங்களுக்கு, கீழ்ப்புரம் கிழக்கு சரிவில் இருந்த விரூபாட்ச குகையில் தான் வாசம் செய்தார். மலையில் வசித்து வந்த முதல் வருஷங்களில், ரமணர் பெரும்பாலும் அமைதியாக, மௌனமாக இருந்து வந்தார்.  அவரது ஆன்ம ஒளி விரைவில் அவரைச் சுற்றி பல பக்தர்களைக் கவர்ந்தது. ஆன்மீக பக்தர்கள் மட்டுமின்றி, சாதாரண மனிதர்கள், சிறுவர் சிறுமியர், மேலும் மிருகங்கள் கூட அவரால் கவரப் பட்டு, அவரை அணுகினர். மிகச் சிறிய வயதுள்ள குழந்தைகள், ஊரிலிருந்து வந்து, மலை மீது ஏறி, விரூபாட்ச குகையில் ரமணர் அருகில் அமர்ந்தும், அவரைச் சுற்றி விளையாடியும் பொழுது போக்கி விட்டு, மிக்க மகிழ்ச்சியுடன், சந்தோஷமாக திரும்பிச் சென்றனர். அணில்களும், குரங்குகளும் அவரிடம் வந்து, அவரது கையிலிருந்து உணவு உண்டன.

ரமணரின் தாயார் அதற்குப் பிறகு பலமுறைகள் அவரைப் பார்க்க வந்தார். ஒரு சமயம் உடல்நிலை கெட்டு, பல வாரங்கள் நோயினால் துன்புற்றார். முன்பு ரமணர், தலைவிதியின் தவிர்க்கமுடியாத விதிமுறையைப் பற்றி அன்னைக்கு ஒரு காகிதத்தில் எழுதியிருந்த போதும், தமது தாயாரின் நோயை குணப்படுத்தும்படி வேண்டி, விண்ணப்பித்து, அருணாசல பரம்பொருளுக்கு ஒரு கவிதை எழுதினார்.  மேலும் திருமதி அழகம்மாளின் உடல்நிலையை சரிப்படுத்தி இயல்பான நல்ல நிலைக்குக் கொண்டு வர, அக்கறையுடன் கவனித்து, பராமரித்து, சேவை செய்து வந்தார். அவரது கவிதையின் முதல் வரிசை பின்வருமாறு அமைந்தது.

பெருங்கடலின் அலைகள் போல் அடுத்தடுத்து வரும் எல்லா பிறப்புகளின் நோய்களையும் தீர்க்க ஒரு மபெரும் மலையின் வடிவில் வந்த மருந்தே! இறைவா! உமது திருவடியையே கதியாக சரணடைந்திருக்கும் எனக்கு அருள் செய்து, எனது அன்னையின் கடுஞ்சுரத்தை குணமாக்கி காக்க வேண்டும்! 

தெய்வீக அன்னை அழகம்மாளின் உடல்நிலை தேறியது. மானாமதுரைக்கு திரும்பிச் சென்றார்.  ஆனால் சில காலம் கழித்து அன்னை மீண்டும் திருவண்ணாமலைக்கு வந்த போது, இந்த முறை தனது வாழ்வு முழுவதும் கடைசி வரை, ரமணருடனேயே தங்குவதென்று முடிவு செய்துக் கொண்டு வந்தார்.  அதற்குப் பிறகு, அழகம்மாளின் கடைசி புதல்வர் திரு நாகசுந்தரம் அவரைத் தொடர்ந்து வந்து சேர்ந்தார்.  தாய் வந்த பிறகு, ரமணர் விரூபாட்ச குகையிலிருந்து அகன்று, அங்கிருந்து மலையில் சற்று உயரத்தில் இருந்த ஸ்கந்தாஸ்ரமத்துக்கு சென்றார். இங்கு அன்னை மிகவும் தீவிரமான, ஆழ்ந்த, ஆன்மீக பயிற்சிகள் பெற்றார். அங்கு தங்கியிருந்த பக்தர்களின் சிறிய குழுவிற்கு சமையல் செய்து, உணவளித்து வந்தார். திரு நாகசுந்தரம்,  நிரஞ்சனானந்த ஸ்வாமி என்ற பெயர் ஏற்றுக் கொண்டு, துறவியானார்.

சுமார் ஆறு வருடங்களுக்குப் பிறகு, தாயின் உடல்நிலை மோசமாகியது. ரமணர் மிகுந்த அன்புடனும், அக்கறையுடனும் அன்னையை கவனித்துக் கொண்டார். சில சமயம் இரவெல்லாம் தூங்காமல், தாயின் அருகில் அமர்ந்து கண்காணித்து வந்தார்.  சில நாட்களில் அன்னையின் இறுதி வந்து சேர்ந்தது. ஆனால், அழகம்மாள் தமது தெய்வீக செல்வரின் அருளாலும் உழைப்பாலும் முக்தி பெற்றார். முக்தி பெற்ற ஆன்மாக்கள் அடக்கம் செய்யப் பட வேண்டும் என்ற சம்பிரதாயம், மரபு இருந்தது.  மலையின் மீது இது அனுமதிக்கப் படாததால், மலையின் கிழக்குப் புரத்தில், அடிவாரத்தில், அன்னையின் அடக்கம் நிகழ்ந்தது. ஸ்கந்தாஸ்ரமத்திலிருந்து அங்கு செல்ல ஒரு மணி நேரத்தை விட குறைவாக இருந்ததால், ரமணர் அடிக்கடி அங்கு சென்று வந்தார். பிறகு ஒரு நாள், அங்கேயே வசிக்க ஆரம்பித்தார். இப்படியே திருத்தலமான ரமணாஸ்ரமமம் ஏற்பட்டது.

ரமணர் உறைத்தார்:  “என்னுடைய உத்தேசத்தால் நான் ஸ்கந்தாஸ்ரமத்திற்கு செல்லவில்லை. ஏதோ ஒரு சக்தி என்னை இங்கு பொறுத்தியது. நான் அதைக் கீழ்படிந்து நடந்தேன்.”

ரமணாஸ்ரமம் ஏற்பட்டது
அருணாசலத்திற்கு பயணம்
அருணாசலத்தில் ரமணரின் வாசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!