
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (6)
ரமண மகரிஷியின் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள்
~~~~~~~~
உரையாடல் 319.
பக்தர்: குறைபாடு, அறியாமை, இச்சை, இவற்றின் மாசு, தியானத்தின் வழியில் தடங்கல்கள் ஏற்படுத்துகின்றன. அவற்றை எப்படி வெற்றி கொள்வது?
மகரிஷி: அவற்றால் தடுமாறாமல் இருப்பதால்.
பக்தர்: அருள் தேவை.
மகரிஷி: ஆமாம். அருள் தான் தொடக்கமும் ஆகும், முடிவும் ஆகும். உள்முக திருப்பம் அருளால் தான். விடாமுயற்சி அருள் தான். ஆன்ம ஞானம் அருள் தான். “மாமேகம் ஷரணம் வ்ரஜா”, அதாவது “என்னிடம் சரணடைந்து விடு” என்று சொல்லப்படுவதற்கு காரணம் அது தான். ஒருவர் முழுவதுமாக சரணடைந்து விட்டால், அருள் வேண்ட ஏதாவது பகுதி மிஞ்சியிருக்குமா என்ன? அவர் அருளால் விழுங்கப் படுகிறார்.
பக்தர்: தடங்கல்கள் மிகவும் வலிமையாக உள்ளன. அவை தியானத்தை தடுக்கின்றன.
மகரிஷி: ஒரு உயர்ந்த சக்தி கண்டுணரப்பட்டு சரணடையப்பட்டால், அவை எப்படி உங்களை தடுக்கும்? அவை மிகவும் வலிமையாக உள்ளன என்று நீங்கள் சொன்னனால், அவை உங்களைத் தடுக்காமல் இருப்பதற்கு, அவற்றின் சக்தியின் மூலாதாரத்தைப் பற்றிக் கொள்ள வேண்டும்.
~~~~~~~~
உரையாடல் 223.
பக்தர்: தியானிக்கும் போது கூட மனம் ஏன் இதயத்தில் மூழ்குவதில்லை?
மகரிஷி: மிதக்கும் ஒரு பொருள், ஏதாவது சில உபாயங்கள் செய்யாமல், எளிதாக மூழ்காது. மூச்சுக் கட்டுப்பாடு மனதை அமைதியாக்குகிறது. மனம் கவனமாக இருக்கவேண்டும். சாந்தி நிலவும் போது கூட, இடைவிடாமல் தியானத்தில் ஈடுபட வேண்டும். பிறகு அது இதயத்தில் மூழ்கும். அல்லது மிதக்கும் ஒரு பொருள் கனமான எடைகளால் சுமையேற்றப் பட்டு, மூழ்கடிக்கப் படலாம். அதே போல், ஞானியரின் சகவாசம், மனதை இதயத்தில் மூழ்க வைக்கும்.
இத்தகைய சகவாசம் மனம் சார்ந்ததுமாகும், உடல் சார்ந்ததுமாகும். தெளிவாக வெளிப்பட்டு தெரியும் குருவின் சொரூபம், மனதை உட்புறம் தள்ளுகிறது. அவர் சாதகரின் இதயத்திலும் உள்ளார்; எனவே அவர் சாதகரின் உட்புற நோக்கமுள்ள மனதை இதயத்திற்குள் இழுக்கிறார்.
ஒருவர் தியானிக்க ஆரம்பித்த பின், அதன் கஷ்டத்தை உணரும்போது தான் இந்த கேள்வி கேட்கப்படுகிறது. அவர் சிறிதளவே மூச்சுக் கட்டுப்பாடு செய்யட்டும், பிறகு மனம் தூய்மையாக்கப் படும். பூர்வ மனப்போக்குகள் இருப்பதால், இப்போது மனம் இதயத்தினுள் மூழ்குவதில்லை. ஏனெனில், பூர்வ மனப்போக்குகள் தடங்கல்களாக நிற்கின்றன. அவை மூச்சுக் கட்டுப்பாட்டினாலோ, அல்லது ஞானியரின் சகவாசத்தினாலோ நீக்கப்படுகின்றன. உண்மையில், மனம் எப்போதுமே இதயத்தில் தான் உள்ளது. ஆனால் அது பூர்வ மனப்போக்குகளால், முரடாக, அடங்காமல், அலைந்துக் கொண்டு இருக்கிறது. மனப்போக்குகளை பயனற்றுப் போகச் செய்தால், மனம் அடங்கியும், அமைதி மிகுந்ததாகவும் இருக்கும்.
மூச்சுக் கட்டுப்பாட்டினால், மனம் தற்போதைக்கு தான் அமைதியாக இருக்கும். ஏனெனில், மனப்போக்குகள் இன்னும் உள்ளன. மனம் சுய சொரூபமாக உருமாற்றப்பட்ட பின், மனம் ஒரு போதும் தொந்தரவு செய்யாது. இந்த விளைவு தியானத்தால் தான் அடையப் படுகிறது.
~~~~~~~~
உரையாடல் 293.
திரு. கே. கே. வி. அய்யர்:
பக்தர்: தியானத்தால் மனதில் உள்முகமாக போக வழியே இல்லை.
மகரிஷி: நாம் வேறு எங்கு இருக்கிறோம்? நாமே அது தான்.
பக்தர்: இருந்தாலும், நாங்கள் அதை அறிவதில்லை.
மகரிஷி: எதை அறியாமல் இருக்கிறீர்கள்? யாருடைய அறியாமை? சுய சொரூபத்தை அறியவில்லை என்றால், இரண்டு ஆன்மாக்கள் இருக்கிறதா?
பக்தர்: இரண்டு ஆன்மாக்கள் இல்லை. ஆனால் குறைபாடு இருப்பதை மறுக்க முடியாது. குறைபாடுகள் இருப்பதால்…
மகரிஷி: குறைபாடு மனதில் தான் உள்ளது. ஆழ்ந்த தூக்கத்தில் அதை உணருகிறீர்களா? நீங்கள் தூக்கத்தில் இருக்கிறீர்கள். உங்கள் உள்ளமையை அப்போது நீங்கள் மறுப்பதில்லை. அதே ஆன்மா தான் இப்போது, இங்கு, விழிப்பு நிலையில் உள்ளது. குறைபாடுகள் இருப்பதாக இப்போது நீங்கள் சொல்கிறீர்கள். இப்போது என்ன நடந்திருக்கிறது என்றால், இந்த இரண்டு நிலைகளில் வித்தியாசங்கள் உள்ளன. வித்தியாசங்கள் மனதினால் உள்ளன. தூக்கத்தில் மனம் இருக்கவில்லை. ஆனால் இப்போது அது இயங்குகிறது. மனம் இல்லாமல் இருக்கும்போது கூட ஆன்மா இருக்கிறது.
பக்தர்: இது புரிந்துக் கொள்ளப் பட்டாலும், உணரப்படவில்லை.
மகரிஷி: தியானம் செய்யச் செய்ய சிறிது சிறிதாக அது உணரப்படும்.
பக்தர்: தியானம் மனதினால் செய்யப் படுகிறது. அது சுய சொரூபத்தை வெளிப்படுத்த மனதை எப்படி அழிக்கும்?
மகரிஷி: தியானம் என்பது ஒரே ஒரு எண்ணத்தை மட்டும் பற்றிக் கொள்வதாகும். அந்த ஒரே எண்ணம் மற்ற எண்ணங்களை அகற்றுகின்றன. கவனச்சிதறல் மனதின் பலவீனத்திற்கு அறிகுறியாகும். இடையறாத தியானத்தினால் மனம் வலிமையடைகிறது. அதாவது தப்பி ஓடும் எண்ணங்களின் பலவீனம், எண்ணங்களே இல்லாத நிலையான பின்னணிக்கு இடம் கொடுக்கிறது. எண்ணம் இல்லாத இந்த விசாலமான பெரும் பரப்பு தான் ஆன்மா, சுய சொரூபம். தூய்மையாக உள்ள மனம் தான் ஆன்மா.
~~~~~~~
உரையாடல் 294.
பக்தர்: தியானம் செய்வது எப்படி?
மகரிஷி: தியானம் என்பது உண்மையில் ஆத்மநிஷ்டை ஆகும். அதாவது ஆன்மாவாக உறைவது. ஆனால் மனதில் எண்ணங்கள் கடந்து செல்லும் போது, அவற்றை அகற்றுவதற்காகச் செய்யும் எத்தனம் தியானம் என்று சொல்லப்படுகிறது. ஆத்ம நிஷ்டை தான் உங்களுடைய உண்மைத் தன்மை. நீங்கள் உண்மையில் உள்ளபடி இருங்கள். அது தான் குறிக்கோள்.
பக்தர்: ஆனால் எண்ணங்கள் எழுகின்றன. எத்தனமெல்லாம் எண்ணங்களை நீக்குவதற்காகத் தானா?
மகரிஷி: ஆமாம். தியானம் ஒரே ஒரு எண்ணத்தின் மீது இருப்பதால், மற்ற எண்ணங்கள் அகற்றி வைக்கப் படுகின்றன. தியானம் என்பது எண்ணங்களை அகற்றி வைப்பதால், அந்த விதத்தில் அது எதிர்மறையானது தான்.
பக்தர்: “ஆத்ம ஸம்ஸ்த்தம் மனஹ் க்ருத்வா”, அதாவது, “மனதை ஆன்மாவில் பொருத்திக் கொண்டு”, என்று சொல்லப் படுகிறது. ஆனால் ஆன்மா எண்ணிப் பார்க்க முடியாதது.
மகரிஷி: நீங்கள் தியானிக்கவே ஏன் விரும்புகிறீர்கள்? அப்படி விரும்புவதால், “மனதை ஆன்மாவில் பொருத்திக் கொண்டு” என்று சொல்லப்படுகிறது. நீங்கள் ஏன் தியானமே செய்யாமல் இருக்கக் கூடாது? மனம் என்பது என்ன? எல்லா எண்ணங்களும் அகற்றப்பட்ட பின் அது “ஆன்மாவில் பொருந்தி உறைகிறது.”
பக்தர்: தியானம் செய்ய ஒரு உருவம் கொடுக்கப்பட்டால், அதன் மேல் என்னால் தியானிக்க முடியும். மற்ற எண்ணங்கள் அகற்றப் படும். ஆனால், ஆன்மா உருவமற்றது.
மகரிஷி: உருவங்கள் மீதோ அல்லது ஸ்தூலப் பொருள்களின் மீதோ தியானிப்பது, தியானம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், ஆன்மாவைப் பற்றி சுயவிசாரணை செய்வது நிதித்தியாசனம் ஆகும்.
~~~~~~~
உரையாடல் 297.
திரு. கோஹென் கேட்டார்: தியானம் என்பது விழிப்பு நிலையில் மனதால் செய்யப் படுவதாகும். கனவிலும் மனம் உள்ளது. பின் கனவில் ஏன் தியானம் இல்லை. அது இருக்க முடியுமா?
மகரிஷி: அதைக் கனவில் கேளுங்கள்.
சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு மகரிஷி தொடர்ந்து சொன்னார் : நீங்கள் இப்போது தியானம் செய்து, நீங்கள் யார் என்பதைக் கண்டுப்பிடிக்க வேண்டும் என்று சொல்லும்போது, அதைச் செய்வதற்கு பதிலாக, “கனவிலும் தூக்கத்திலும் ஏன் தியானம் இல்லை” என்று கேட்கிறீர்கள். யாருக்கு விழிப்பு நிலை இருக்கிறது என்பது கண்டுபிடிக்கப் பட்டால், அதே நபருக்கு தான் கனவும் தூக்கமும் உள்ளது என்பது தெளிவாகும். விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம், இவைகளுக்கெல்லாம் நீங்கள் தான் சாட்சியாக இருக்கிறீர்கள். அதாவது, அவை உங்கள் முன்னால் கடந்து செல்கின்றன. நீங்கள் இப்போது தியானத்தை விட்டு வெளியே இருப்பதால் இந்த கேள்விகள் எழுகின்றன. தியானத்தைப் பற்றிக் கொள்ளுங்கள். அதற்குப் பிறகு இந்த கேள்விகள் எழுகின்றதா என்று பாருங்கள்.