தியானத்தில் வலிகளையும் இன்னல்களையும் வெல்வது எப்படி
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (5) (கட்டுரை)

தியானத்தில் வலிகளையும் இன்னல்களையும் வெல்வது எப்படி

உரையாடல் 462.

ஒரு பெண்மணி மகரிஷியிடம் கேள்விகள் கேட்டு உதவி பெற மிகவும் ஆவலாக இருந்து வந்தாள். அவள் மிகவும் தயக்கத்துடன் அவரை அணுகி தனது இன்னல்களை மெதுவாக விவரித்தாள். அவளது சொற்கள் பின்வருமாறு.  

திடீர்ரென்று எழும் நெஞ்சுத் துடிப்புகளாலும், வேகமான மூச்சுகளாலும், ஒருமுக கவனம் செலுத்துவதற்கு நான் செய்யும் முயற்சிகள் தடுக்கப்பட்டு அல்லல் தருகின்றன. பிறகு என் எண்ணங்களும் விரைந்தோடி செல்கின்றன; அவை கட்டுப்படுத்த முடியாமல் போய் விடுகின்றன. என் உடல் நலம் நல்லபடியாக இருக்கும்போது, நான் சிறிது வெற்றிகரமாக ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட முடிகிறது; எனது மூச்சும் நிலைத்து நிற்கிறது. 

 என் தியானம் வெற்றிகரமாக உச்சநிலை அடைவதற்காக மகரிஷியின் அண்மையின் பலனைப் பெறுவதற்கு, நான் ரொம்ப நாளாக ஆவலாக இருந்து வந்துள்ளேன். எனவே நான் மிக அதிகமான எத்தனத்திற்குப் பிறகு இங்கு வந்தேன். இங்கு வந்த பிறகு என் உடல் நலம் கெட்டு விட்டது. என்னால் தியானம் செய்ய முடியவில்லை. நான் மனம் தளர்ந்து போனேன். சிறிய விரைவான மூச்சுக்களால் இன்னல் பட்ட போதும் நான் என் மனதை ஒரு முக கவனத்தில் ஆழ்த்த உறுதியுடன் முயற்சி செய்தேன். ஓரளவுக்கு வெற்றிகரமாக இருந்தாலும், அது எனக்கு திருப்தி அளிக்கவில்லை. நான் இந்த இடத்தை விட்டு அகன்றுச் செல்லும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த இடத்தை விட்டு விலகிச் செல்வதைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் நான் மேலும் மேலும் மனச்சோர்வு அடைகிறேன். இந்த கூடத்தில் ஜனங்கள் தியானம் செய்வதால் மன அமைதியும் சாந்தியும் அடைவதை நான் காண்கிறேன். ஆனால், எனக்கு அந்த மன அமைதி பாக்கியம் இல்லை. இதுவே என்னுள் ஒரு மனத்தளர்வை உண்டாக்குகிறது.

மகரிஷி: “என்னால் ஒரு முக கவனம் செலுத்த முடியவில்லை” என்ற எண்ணமே ஒரு தடங்கல் தான். இந்த எண்ணம் ஏன் எழ வேண்டும்?

பெண்மணி: ஒருவர் 24 மணி நேரமும் எண்ணங்களே எழாமல் இருக்க முடியுமா? நான் தியானம் செய்யாமலே இருக்க முடியுமா?

மகரிஷி: “மணி நேரங்கள்” என்றால் என்ன? அது ஒரு கருத்து தான். உங்களுடைய ஒவ்வொரு கேள்வியும் ஒரு எண்ணத்தால் தூண்டப்படுகிறது. உங்களது சுய தன்மை மன அமைதியும் சந்தோஷமும் தான். ஆன்ம ஞானத்திற்கு எண்ணங்கள் தான் தடங்கல்கள். ஒருவரது தியானமோ அல்லது ஒரு முக கவனமோ தடங்கல்களை அகற்றத் தானே அன்றி சொரூபத்தை அடைவதற்கு இல்லை. யாராவது தன் சொரூபத்தை விட்டு அகன்று இருக்கிறாரா? இல்லை!

ஒருவரது மெய்யான சொரூப தன்மை சாந்தி என்று அறிவிக்கப்படுகிறது. அந்த சாந்தி கிடைக்கவில்லை என்றால், அதை உணராமல் இருப்பது சுய தன்மைக்கு அந்நியமாக இருக்கும் ஒரு எண்ணம் தான். இத்தகைய அந்நிய கற்பனைகளை அகற்றுவதற்காகதான் ஒருவர் தியானப் பயிற்சி செய்கிறார். 

எனவே, ஒரு எண்ணம் எழுந்த உடனேயே, அது அழிக்கப் பட வேண்டும்.

ஒவ்வொரு முறை ஒரு எண்ணம் எழும் போதும், அதனால் இழுக்கப் பட்டு அதனுடன் சென்று விடாதீர்கள்.

உங்கள் சொரூபத்தை மறக்கும்போது நீங்கள் உங்களது உடலை உணருகிறீர்கள். ஆனால் நீங்கள் உங்கள் சுய தன்மையை மறக்க முடியுமா? நீங்கள் சொரூபமாகவே இருந்துக் கொண்டு அதை எப்படி மறக்க முடியும்? அப்படியென்றால் ஒன்றை இன்னொன்று மறப்பதற்கு இரண்டு சொரூபங்கள் இருக்க வேண்டும். இது அபத்தம்.

எனவே சுய தன்மையான சொரூபம் மனச் சோர்வு அடைவதில்லை; அது குறைபாடானதில்லை; அது எப்போதும் சந்தோஷமாக இருக்கிறது. அதற்கு மாறாக உள்ள உணர்வு, உண்மையில் திண்மை ஏதும் இல்லாத ஒரு வெறும் எண்ணம் தான்.

எண்ணங்கள் இல்லாமல் இருங்கள். ஒருவர் ஏன் தியானம் செய்ய முயல வேண்டும். மெய்யான சொரூபமாக இருப்பதால், ஒருவர் எப்போதும் ஞானம் அடைந்து தான் உள்ளார். எண்ணங்கள் இல்லாமல் மட்டும் இருங்கள், அவ்வளவு தான்.

நீங்கள் உங்களது உடல் நிலை உங்களது தியானத்தை அனுமதிப்பதில்லை என்று நினைக்கிறீர்கள். இந்த மனத் தளர்வின் மூலம் தடம் பின்பற்றி பார்க்கப் பட வேண்டும். இந்த மனச்சோர்வின் மூலம், மெய்யான சொரூபத்தை உடலுடன் தவறாக சம்பத்தப்படுத்தி இணைத்துக் வைத்துக் கொண்டிருப்பது தான். 

நோய் சொரூபத்திற்கு இல்லை. அது உடலுக்குத் தான் இருக்கிறது. ஆனால் உடல் உங்களிடம் வந்து, தனக்கு நோய் இருப்பதாக சொல்லவில்லை. நீங்கள் தான் சொல்கிறீர்கள். ஏன்? ஏனென்றால், நீங்கள் உங்களை உங்கள் உடலுடன் தவறாக இணைந்துக் கொண்டிருக்கிறீர்கள்.

உடல் என்பதே ஒரு எண்ணம் தான். நீங்கள் உண்மையில் எப்படி இருக்கிறீர்களோ, அப்படியே இருங்கள். மனத் தளர்வு அடைவதற்குக் காரணமே இல்லை.

இந்த சமயத்தில் அந்தப் பெண்மணியை யாரோ அழைக்கவே, அவள் அங்கிருந்து அகன்று சென்றாள்.

ஆனால், அவளது கேள்வி மீண்டும் மற்ற பக்தர்களால் தொடரப்பட்டது. அது பின் வருமாறு.

பக்தர்: மகரிஷியின் பதில்கள் எங்களை மேலும் கெள்விகள் கேட்க அனுமதிப்பதில்லை. அதற்குக் காரணம் எங்கள் மனம் அமைதியாக இருப்பது இல்லை. ஆனால், எங்களால் விவாதம் செய்ய முடிவதில்லை, அவ்வளவு தான். ஆனால், எங்கள் அதிருப்திக்கு முடிவு ஏற்படவில்லை. உடல் சார்ந்த நோய்கள் அகல, மனம் சார்ந்த நோய்கள் அகல வேண்டும். எண்ணங்கள் அகலும் போது, இந்த இரண்டு நோய்களும் அகல்கின்றன. எத்தனமில்லாமல் எண்ணங்கள் அகலுவதில்லை. தற்போதைய மன பலவீனத்துடன் எத்தனம் செய்ய முடியாது. மனம் வலிமை அடைய அருள் தேவைப்படுகிறது. அருள் சரணாகதி அடைந்த பிறகு தான் வெளிப்பட வேண்டும். எனவே, எல்லா கேள்விகளும், தெரிந்தோ தெரியாமலோ, திரு பகவானின் அருளை வேண்டுவதில் தான் முடிவடைகிறது.

மகரிஷி புன்சிரித்தார். பிறகு சொன்னார் : ஆமாம்.

பக்தர்: சரணாகதி என்பது பக்தியாகும். ஆனால் திரு பகவான் ஆன்மாவின் சுய விசாரணைக்கு அதிக இசைவு தருவது தெரிந்தது. இதனால் கேட்பவருக்குக் குழப்பம் ஏற்படுகிறது.

மகரிஷி: சரணாகதி முழு ஞானத்துடன் செய்யப் படும் போது தான் சரணாகதியின் விளைவு உண்டாகும். இத்தகைய ஞானம் சுய விசாரணைக்குப் பிறகு தான் வரும். அது சரணாகதியில் முடிவடையும்.

பக்தர்: தனிப்பட்ட தான்மையைக் கடந்த பிறகு தான் உச்ச உயர்வான உள்ளமையான ஆன்மாவின் அறிவு வரும். இது தான் ஞானம். பிறகு சரணாகதிக்கு என்ன தேவை?

மகரிஷி புன்சிரிப்புடன் சொன்னார்: ஆமாம். ஞானத்திற்கும் சரணாகதிக்கும் வித்தியாசம் இல்லை. 

பக்தர்: பிறகு கேள்வியாளர் எப்படி திருப்தி படுவார்? இதற்கு வேறு வழி ஒன்றே தான்; அது ஞானியருடன் மனத் தொடர்பு கொள்வது அல்லது கடவுள் பக்தி.

மகரிஷி புன்சிரிப்புடன் சொன்னார்: ஆமாம்.

உரையாடல் 343.

மகரிஷி: உடல் வலி உடல் உணர்வைத் தான் தொடருகிறது. அது உடல் உணர்வின்றி இருக்க முடியாது. உடலை உணராமல் இருக்கும் மனம், உடலின் வலிகளையும் சுகங்களையும் உணர முடியாது. வலிகள் தான்மையைச் சார்ந்து உள்ளன. “நான்” இல்லாமல் அவை இருக்க முடியாது. ஆனால் அவை இல்லாமல் “நான்” இருக்க முடியும்.

உரையாடல் 540.

பக்தர்: புலன் சார்ந்த சுகங்களை விட தியானத்தில் அதிக சுகம் இருக்கிறது. ஆயினும் மனம் புலன் சார்ந்த சுகங்களின் பின்னால் ஓடுகிறதே தவிர, தியானத்தை நாடுவதில்லை. அது ஏன்?

மகரிஷி: சுகமும் துக்கமும் மனதின் அம்சங்கள் தான். நமது இன்றியமையாத உண்மைத் தன்மை சந்தோஷம் தான். ஆனால் நாம் நமது சொரூபத்தை மறந்து விட்டு, உடலோ மனமோ தான் சொரூபம் என்று கற்பனை செய்துக் கொள்கிறோம். இந்த தவறான இணைப்பு தான் துயரத்தை எழச் செய்கிறது.

உரையாடல் 608.

மகரிஷி: நமது அனுபவங்கள் எல்லாம் எண்ணங்களே தவிர வேறென்ன? சுகமும் துக்கமும் வெறும் எண்ணங்கள் தான். அவை நம்முள் இருக்கின்றன. நீங்கள் எண்ணங்களே இல்லாமல், ஆனால் உணர்வுடன் இருந்தால், நீங்கள் அந்த பூரணமான ஆன்மா தான்.

 

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (5) (கட்டுரை)
தியானத்தில் வலிகளையும் இன்னல்களையும் வெல்வது எப்படி

Leave a Reply

Your email address will not be published.

↓
error: Content is protected !!