இளமையில் ஆன்மாவின் தேடல் நடைமுறையில் சாத்தியமா?
ஓம்... ॐ...என்றால் என்ன?

இளமையில் ஆன்மாவின் தேடல் நடைமுறையில் சாத்தியமா

 
இப்படி சிலருக்கு சந்தேகம் எழுகிறது. இந்த காலத்தில் இள வயதினர், பணம் பொருள் சேற்பது தான் வாழ்க்கையில் சந்தோஷம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது, ஆன்மாவின் தேடல் எல்லாம் இளமையில் நடைமுறைக்கு சாத்தியமா? இந்தக் கேள்வி எழுகிறது.
 
பொதுவாக, மற்றவர்களை எப்படி ஆன்மீகத்தில் ஈடுபடச் செய்வது என்ற முறையில் யாராவது கேள்வி கேட்டால், மகரிஷி  பின்வருமாறு பதில்கள் தருவார். 
 
ஒரு பக்தர்: நாம் மற்றவர்களை நாடி ஆன்மீகத்தில் அவர்களுக்கு உதவி அளிக்க வேண்டும்.
மகரிஷி: உங்களை உருவாக்கிய சக்தி தான் உலகத்தையும் உருவாக்கியிருக்கிறது. அந்த சக்தியால் உங்களை கவனித்துக் கொள்ள முடிந்தால், அதே போல் அதனால் உலகத்தையும் கவனித்துக் கொள்ள முடியும்.
 
வேறொரு பக்தர்: எனது நண்பர்களின் ஆன்மீக உறக்கத்தையும், பொதுவாக ஜனங்களின் ஆன்மீக உறக்கத்தையும் எப்படி நீக்குவது?
மகரிஷி: உங்களது ஆன்மீக உறக்கத்தை நீங்கள் நீக்கி விட்டீர்களா? உங்களுக்குள் உங்களது ஆன்மீக உறக்கத்தை நீக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள சக்தி, மற்றவர்களின் மீதும் இயங்கும். உங்களது ஆன்மீக உறக்கத்தை நீக்க நீங்கள் எத்தனம் செய்தால், அந்த சக்தி மற்றவர்களின் மீதும் வேலை செய்யும். முதலில் உங்களை கவனித்துக் கொள்ளுங்கள்.
பக்தர்: என்னுடைய ஆன்மீக உறக்கத்தை எப்படி நீக்குவது?
மகரிஷி: யாருக்கு ஆன்மீக உறக்கம்? விசாரியுங்கள். உள்முகமாகத் திரும்புங்கள். உங்களுடைய எல்லா விசாரணைகளையும் மெய்யான ஆன்மைவைத் தேடுவதில் திருப்புங்கள். பிறகு உங்களுக்குள் ஏற்படுத்தப்படும் சக்தி, மற்றவர்களின் மீதும் இயங்கும்.
 
இன்னொரு பக்தர்: மற்றவர்களுக்கு மேம்பட்ட சேவை செய்வதற்காக எங்கள் ஞானத்தை சீக்கிரம் எப்படிப் பெறுவது?
மகரிஷி: நம்மால் உதவ முடியாததால், நாம் பரமாத்மனிடம் முற்றிலும் சரணடைந்து விட வேண்டும். பிறகு அவர் நம்மையும் உலகத்தையும் கவனித்துக் கொள்வார்.
 
மேற்சொன்னவை மகரிஷியின் சில பதில்களாகும். இவையே போதுமானவை தான். இதற்கு மேல் விளக்கங்கள் தேவையில்லை. ஆனாலும், ஆரம்பத்தில் குறிப்பிட்ட கேள்விக்கு, அதாவது “இந்த காலத்தில் இள வயதினர், பணம் பொருள் சேற்பது தான் வாழ்க்கையில் சந்தோஷம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது, ஆன்மாவின் தேடல் எல்லாம் இளமையில் நடைமுறைக்கு சாத்தியமா?”, என்ற கேள்விக்கு பதில் அளிக்க, 
 
இதைப் பற்றி ரமண மகரிஷியின் அறிவுரைகளின் சாராம்சத்தை நான் பின்வருமாறு அளிக்கிறேன். கவனமாகக் கேளுங்கள்.
 
“ஒருவரின் உண்மையான தன்மை அமைதியும் சந்தோஷமும் தான். ஒருவரின் விதியின்படி அவரது வாழ்க்கையும் செயல்களும் தானாக நடைபெற்றுச் செல்லும். ஒருவரால் இதை மாற்ற முடியாது.  ஆனால் ஒருவரது மனப்போக்குகளின்படி, விழிப்பு நிலையில் ஒரு பொய்யான “நான்” என்னும் எண்ணம் மிகவும் வலிமையாக எழுந்து, தானே எல்லாவற்றையும் செய்வது போல கற்பனைச் செய்துக் கொண்டு, ஆசைகளையும் கவலைகளையும் பிரச்சனைகளையும் எழுப்பி, சந்தோஷத்தையும் மன அமைதியையும் அகற்றி துயரம் தருகிறது. இந்தப் பொய்யான “நான்” என்னும் தான்மைத் திருடனை மனதில் ஆழ்ந்து தேடினால்,அது மெய்யானதில்லாததால், அது மறைந்து விடும்.  பிறகு அதன் தொந்தரவும் இடையூறும் இல்லாமல், செயல்கள் தானாகவே மிகவும் திறம்பட நடைபெறும். எனவே எந்த வயதிலும், முக்கியமாக இளமையில், மனதை உட்புறம் திருப்பி “நான் யார்?” என்று சுய விசாரணை செய்வது, ஒருவரது விதியின்படி நடக்கும் செயல்களை மன அமைதியுடன் திறம்பட நிறைவேற்ற மிகுந்த உதவியும் சந்தோஷமும் அளிக்கும்.”
 
மகரிஷியின் அறிவுரைகளிலிருந்து மேலும் நாம் புரிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் பின்வருமாறு.

இளமையில் ஆன்மாவின் தேடல் நடைமுறையில் சாத்தியம் தான். இன்னும் சொல்லப்போனால், இளமையில் தான் எதையும் எளிதாகக் கற்றுக் கொள்ள முடியும்.  இதை நாம் எல்லோரும் அறிவோம். ஆன்மீகமும் அப்படித்தான். மிகவும் பிரசித்தி பெற்ற ஞானிகளில் பெரும்பாலானோர் மிகவும் இள வயதில் தான் ஆன்ம ஞானம் பெற்று பிரபலம் அடைந்தார்கள்.

இன்னொரு விஷயம் என்னவென்றால், உலக வாழ்க்கைக்கும் மனதினுள் செய்யும் உள்முக ஆன்ம விசாரணைக்கும் முரண்பாடு ஏதும் கிடையாது.  இளமையானவரானாலும், மற்ற வயதினரானாலும், பெண்ணோ, ஆணோ, வாழ்க்கையை உங்களது இயல்பான தன்மையின் படி நடத்திச் செல்லுங்கள். வலுக்கட்டாயமாக எதையும் மாற்ற வேண்டாம். எவரையும் வற்புறுத்தி மாற்றவும் முயல வேண்டாம்.

ஆனால் வாழ்க்கையை வழக்கம் போல் செலுத்திக் கொண்டு, அதே சமயத்தில், முடிந்த போதெல்லாம், ஆன்ம விசாரணைப் பற்றிய விஷயங்களைப் படித்தும், கேட்டும், பார்த்தும், சிந்தித்தும் சிறிது நேரம் செலுத்துங்கள். பிறகு உள்முக தியானமும், சுய விசாரணையும், ஆன்ம தேடலும் செய்வதற்கும் முயற்சியும் எத்தனமும் செய்யுங்கள். இப்படி கற்பதும், இத்தகைய எத்தனங்கள் செய்வதும், நாம் அறிந்தாலும் அறியாவிட்டாலும், நமது வாழ்க்கையின் விவகாரங்களை சரியான மனப்பாங்குடன் பார்க்கவும், திறமையுடன் வாழவும், இன்னல்களை சமாளிக்கவும் மிகுந்த உதவிகள் அளிக்கும்.

இந்த காலத்தில் உள்ள இள வயதினர் பகுத்தறிவில் நம்பிக்கை கொண்டவர்கள். “ஒன்றை ஏன் செய்ய வேண்டும்?  செய்வதால் நமக்கு என்ன பலன் கிடைக்கும்?” என்று அவர்கள் யோசிப்பார்கள். எனவே இள வயதினருக்கு ஒரு விஷயம் விளக்கப் பட வேண்டியது மிகவும் முக்கியம். அது என்னவென்றால், ஆன்மாவின் தேடலும், ஆன்மீக விசாரணைகளும், தியானம், பக்தி போன்றவையும், எங்கோ இருக்கும் ஒரு கடவுளை வணங்குவதற்காகவோ, அல்லது சாதாரண உலக வாழ்க்கையை உடனடியாக அடியோடு துறந்து விடுவதற்காகவோ இல்லை. அதற்கு பதிலாக, இந்த சாதனங்களைப் பின்பற்றுவது, உலக வாழ்க்கையைத் திறம்பட நடத்துவதற்காகவும், மன வலிமைப் பெறுவதற்காகவும், உண்மையான நீண்ட சந்தோஷத்தைப் பெறுவதற்காகவும், வாழ்வில் திடிரென்று ஏற்படக்கூடிய கொடுமையான நிகழ்வுகளைச் சமாளிக்கும் மனோபலத்தைப் பெறவும் தான். இவை எல்லாம் செய்வதால் அவர்களுக்கு உலக விஷயங்களிலும் பலன் கிடைக்கும் என்று  இள வயதினருக்கு புரிய வைக்க வேண்டும். பிறகு அவர்கள் ஊக்கத்துடன், உற்சாகத்துடன் ஆன்மீகத்தில் ஈடுபடுவார்கள்.  நமது உடல் நலனுக்காகவும், மன நலனுக்காகவும், சந்தோஷத்துக்காகவும் தான் உள்முக ஆன்மீக விசாரணையில் ஈடுபடுகிறோம் என்று அறிந்துக் கொண்டால், இள வயதினர் அதில் நாட்டம் கொள்வார்கள். உண்மையில், எந்த வயதினரும் இதையெல்லாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

இப்போது மகரிஷியுடன் பக்தர்கள் கொண்ட உரையாடல்களிலிருந்து சில பகுதிகளை வழங்குகிறேன்.

 
உரையாடல் 268.
 
டாக்டர் சையத்: என்னுடைய தொழிலும் பணிகளும் எனது பெரும்பான்மையான நேரத்தையும் சக்தியையும் எடுத்துக் கொள்ளச் செய்கின்றன. பெரும்பாலும் நான் ஆன்ம சிந்தனையில் ஈடுபடுவதற்கு களைப்பும் சோர்வும் அடைகிறேன். 
 
மகரிஷி: “நான் பணி செய்கிறேன்” என்ற உணர்வு தான் தடங்கலாகும். “பணி செய்வது யார்?” விசாரியுங்கள். நினைவு படுத்திக் கொள்ளுங்கள், “நான் யார்?” இப்படி செய்தால், பணிகள் உங்களை பந்தப் படுத்தாது. அவை தானாகவே நடைபெற்றுச் செல்லும். வேலையைச் செய்வதற்கோ அல்லது வேலையைத் துறக்கவோ எத்தனம் செய்யாதீர்கள். உங்களது எத்தனம் தான் பந்தம். எது நடக்க வேண்டுமோ, அது நடந்தே தீரும்.
 
நீங்கள் வேலை செய்யாமல் இருப்பது உங்கள் விதியானால், நீங்கள் வேலைக்காக வேட்டையாடினாலும் கூட அது கிடைக்காது. நீங்கள் வேலைச் செய்வது உங்கள் விதியானால், அதில் ஈடுபட நீங்கள் நிர்பந்தப்படுத்தப் படுவீர்கள். உங்கள் விருப்பப்படி உங்களால் துறக்கவோ வைத்துக் கொள்ளவோ முடியாது.
 

உரையாடல் 251.

புத்திசாலியாகவும் ஆழ்ந்து சிந்திப்பவராகவும் தென்பட்ட ஒரு இளம் உயர்குடி பெண்மணி மகரிஷியிடம் சொன்னாள் :

மஹராஜ் ஜி, நீங்கள் எல்லோரையும் விட மிகவும் கருணையானவரும் உன்னதமானவருமான ஆன்மா என்று நாங்கள் கேள்விப்பட்டுள்ளோம். மிக காலமாக உங்கள் தரிசனத்தைப் பெற நாங்கள் விரும்பியிருக்கிறோம். நான் ஒரு இளம் பெண். எனக்கு வேண்டியதெல்லாம் இருப்பதால் நான் அதைப் பற்றி சந்தோஷம் அடைகிறேன். ஆனால் எனக்கு உண்மையான சந்தோஷத்தைத் தரும் மன அமைதி இல்லை. அதை அடைய உங்களது அருளைப் பெறுவதை நாடி நான் இங்கு வந்துள்ளேன்.

மகரிஷி: பக்தி உங்களது விருப்பத்தை நிறைவேற்றும்.

பெண்மணி.: அந்த மன சாந்தியைப் பெறுவது எப்படி என்று தெரிந்துக் கொள்ள நான் விரும்புகிறேன். தயவு கூர்ந்து எனக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

மகரிஷி: சரி…பக்தியும் சரணாகதியும்.

பெண்மணி.: ஆன்ம பக்தி செய்வதற்கு எனக்கு தகுதி இருக்கிறதா?

மகரிஷி.: எல்லோரும் பக்தராக இருக்க முடியும்.  ஆன்மீக நடவடிக்கைகள் எல்லோருக்கும் பொதுவானது. ஒருவர் வயதானவரானாலும், இள வயதினரானாலும், ஆணானாலும், பெண்ணானாலும், அது யாருக்கும் மறுக்கப் படுவதில்லை.  

பெண்மணி.: அதைப் பற்றித்தான் நான் தெரிந்துக் கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறேன். நான் இளமையான பெண். ஒரு இல்லாள்.  இந்த நிலமைக்கான கடமைகள் உள்ளன. ஆன்ம பக்தி இத்தகைய நிலமையில் சாத்தியமா, இசைவானதா?  

மகரிஷி.: நிச்சயமாக. நீங்கள் யார்? நீங்கள் உடல் இல்லை. நீங்கள் தூய்மையான பிரக்ஞை உணர்வு. குடும்ப தர்மமும், உலகமும் அந்த தூய பிரக்ஞை உணர்வில் எழும் வெளிப்பாடுகள் தான். தூய உணர்வு பாதிக்கப் படாமல் நிலவுகிறது. நீங்கள் உங்களது சொந்த சொரூபத்தில் இருப்பதைத் தடுப்பது எது?  

ஆன்மா சொரூபம் எப்போதும் உள்ளது. ஆன்மா நீங்களே தான். உங்களைத் தவிர வேறெதுவுமே இல்லை. உங்களை விட்டு அகன்று எதுவுமே இருக்க முடியாது. சாத்தியமா, இசைவானதா என்று கேள்வி எழ வேண்டிய அவசியமில்லை.

உரையாடல் 253.

திரு எப். ஜி. பியர்ஸ், ஒரு பள்ளியின் முதன்மை ஆசிரியர் மகரிஷியைக் கேட்டார். 

உள்ளது நாற்பது அனுபந்தத்தின் 36வது செய்யுளில்,  “ஆன்ம விசாரணை செய்வதால் அழிக்கப்படாத தான்மையைக் கொண்ட படித்த நிபுணர்களை விட படிக்காதவர்கள் சிறந்தவர்கள்”, என்று பகவான் மகரிஷி சொல்கிறீர்கள். அதை நானும் உண்மையென்று நம்புகிறேன்.

அப்படி இருக்கும்போது, பள்ளிக்கூட ஆசிரியரான நான், புத்தி சார்ந்த அறிவை விட முக்கியமான ஆன்ம விசாரணையைத் தடை செய்யாமல் கல்வி கற்பிக்கும் பணிகளை எப்படித் தொடருவது?  அவை இரண்டும் ஒன்றுக்கொன்று இசைவானதா?  இல்லையென்றால்,  மனதினுள் மெய்யான உண்மையை தேடுவதற்கு, எந்த வயதிலிருந்து, எந்த விதத்தில், இள வயதினருக்குச் சிறந்த முறையில் ஊக்கமளிப்பது?

மகரிஷி.: கல்வி கற்பதன் கர்வமும், கல்வி கற்றதைப் பற்றிய பாராட்டுதலை வேண்டுதலும் தான் கண்டிக்கப் படுகிறதே தவிர,  கல்வியும் படிப்பும் கண்டிக்கப் படுவதில்லை. உண்மையையும் பணிவையும் நாடித் தேடும் கல்வியும், படிப்பும் நல்லது தான். 

இதிலிருந்தெல்லாம் நமக்குத் தெரிவது என்னவென்றால், எவ்வளவு சீக்கிரம் நாம் ஆன்மீக சுய விசாரணை செய்ய ஆரம்பிக்கிறோமோ, அவ்வளவு சீக்கிரம் நமக்கும் மற்றவர்களுக்கும் உலகத்துக்கும் நன்மையும் சந்தோஷமும் அமைதியும் உண்டாகும்.”

ஓம்... ॐ...என்றால் என்ன?

இளமையில் ஆன்மாவின் தேடல் நடைமுறையில் சாத்தியமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!