சச்சிதானந்தம் என்றால் என்ன?
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
========
உரையாடல் 25.
திரு பி.வி. நரசிம்மசுவாமி கேட்டார் : நான் யார்? அதை எப்படி கண்டுபிடிப்பது?
மகரிஷி: உங்களையே அந்த கேள்வியைக் கேட்டுக் கொள்ளுங்கள்.
உடலும் அதன் செயல்பாடுகளும் ‘நான்’ அல்ல.
இன்னும் சிறிது ஆழ்ந்து போனால், மனமும் அதன் செயல்பாடுகளும் ‘நான்’ அல்ல.
அடுத்த நிலைப்படி ,”எங்கிருந்து இந்த எண்ணங்கள் எழுகின்றன?” என்ற கேள்விக்கு கொண்டு வருகிறது.
எண்ணங்கள் புத்தியில் இயங்குகின்றன. பின், அவற்றை யார் உணர்கிறார்? இந்த தனித்துவம் தான் தான்மையாகும்; அதாவது ஜனங்கள் சாதாரணமாகச் சொல்லும் ‘நான்’ என்பதாகும்.
மேலும் விசாரணை செய்தால், “இந்த ‘நான்’ என்பது யார்? அது எங்கிருந்து வருகிறது?” என்ற கேள்விகள் எழுகின்றன.
‘நான்’ என்பது தூக்கத்தில் எதையும் உணரவில்லை. அது எழுந்த உடனேயே, தூக்கம் கனவாகவோ அல்லது விழிப்பாகவோ மாறி விடுகிறது. ஆனால், எனக்கு இப்போது கனவைப் பற்றி அக்கறையில்லை. இந்த விழிப்பு நிலையில் நான் யார்?
நான் தூக்கத்திலிருந்து பிறந்திருந்தால், பின் ‘நான்’ என்பது அறியாமையில் மூழ்கி இருந்தது. இத்தகைய அறிவு இல்லாத ‘நான்’, மறை நூல்கள் அறிவிப்பதும் சான்றோர்கள் உறுதியாக வலியுறுத்துவதுமாக இருக்க முடியாது .
‘நான்’ ‘தூக்கத்தையும்’ கடந்து உள்ளேன். ‘நான்’ இப்போது, இங்கு இருக்க வேண்டும். மேலும் ‘நான்’ எப்போதும், கனவுகளிலும் தூக்கத்திலும் கூட, ஆனால் அந்த நிலைகளின் குணங்கள் இல்லாமல், இருந்திருக்கிறேன். எனவே, ‘நான்’, இந்த மூன்று நிலைகளுக்கும் அடிப்படையான ஆதார படிவம்.
சுருங்கச் சொன்னால், ‘நான்’ இவை எல்லாவற்றிற்கும் அப்பால் உள்ளேன். எனவே, சொரூப தன்மை இல்லாதவற்றை எல்லாம் நீக்கிய பின், மிஞ்சி இருப்பது தான் சொரூபமாகும். அது தான் சச்சிதானந்தமாகும். சச்சிதானந்தம் என்பதன் பொருள் – சத், சித், ஆனந்தம் – மெய்மையான உள்ளமை, பிரக்ஞை உணர்வு, பேரானந்தம்.
========
உரையாடல் 295.
பக்தர்: தயவு செய்து ஆத்ம-பரமாத்ம-சச்சிதானந்தத்தை அறிய உதவி செய்ய வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மகரிஷி: ஆத்மா, பரமாத்மா, சச்சிதானந்தா, இவற்றின் பொருள் எல்லாம் ஒன்றே தான், அதாவது சொரூப ஆன்மா. சொரூபம் எப்போதும் நிரந்தரமாக உணரப்படுகிறது. இல்லையெனில், அதில் சுகம் ஏதும் இருக்காது. அது நிரந்தரம் இல்லையெனில், அதற்கு ஒரு ஆரம்பம் இருக்க வேண்டும். ஆரம்பம் இருந்தால், அதற்கு முடிவும் இருக்க வேண்டும். எனவே அது மாறும் இயல்புடையது தான். நிலையில்லாமல் தற்காலிகமாக இருக்கும் விஷயங்களைத் தேடுவதில் உபயோகம் ஏதுமில்லை. உண்மை என்னவெனில், சச்சிதானந்தம் என்பது எத்தனமற்ற, எப்போதும் அறிந்து உணர்கின்ற சாந்தி பூர்வமான நிலையாகும். விழிப்புடன் உணர்ந்தவாறு அதே சமயத்தில் யத்தனம் இல்லாமல் இருப்பது தான் பேரானந்த நிலையாகும். அதுவே சொரூப ஞானமாகும்.
========
உரையாடல் 433.
மகரிஷ: மனம் என்பது ஒரு மாயை. மெய்மை மனதுக்கு அப்பால் விளங்குகிறது. மனம் செயல்படும் வரையில், இரட்டைத் தன்மை, மாயை முதலியவை உள்ளன. இவை கடக்கப்பட்ட பின், மெய்மை பிரகாசித்து வெளிப்படுகிறது. அது பிரகாசித்து வெளிப்படுகிறது என்று சொல்லப் பட்டாலும், தானாக பிரகாசித்து விளங்குவது தான் சொரூபம்.
பக்தர்: அது தான் சச்சிதானந்தம். இல்லையா?
மகரிஷி: உச்ச உயர்வான சக்தியானது, பொய்யானது இல்லை, உணர்வற்றது இல்லை, ஆனந்தமற்றது இல்லை, என்பதைக் குறிப்பிடத்தான் சச்சிதானந்தம் என்று சொல் சொல்லப்படுகிறது. நாம் இந்த நிகழ்வுகள் சார்ந்த உலகத்தில் இருப்பதால், ஆன்மாவைப் பற்றி சச்சிதானந்தம், அதாவது உள்ளமை, உணர்வு, ஆனந்தம் என்று பேசுகிறோம்.
…
சத் என்னும் மெய்மையான உள்ளமை, மெய்மைக்கும் பொய்மைக்கும் அப்பால் உள்ளதைக் குறிப்பிடுகிறது.
சித் என்னும் பிரக்ஞை உணர்வு, உணர்வுக்கும் ஜடத்துக்கும் அப்பால் உள்ளதைக் குறிப்பிடுகிறது.
ஆனந்தம் என்னும் பேரானந்தம், ஆனந்தத்துக்கும் துன்பத்துக்கும் அப்பால் உள்ளதைக் குறிப்பிடுகிறது.
அப்படியென்றால் அது என்ன?
மெய்மையான உள்ளமை, மெய்மைக்கும் பொய்மைக்கும் அப்பால் இருந்தாலும், அது மெய்மை என்று தான் ஒத்துக் கொள்ளப் பட வேண்டும்.
ஞானம் என்ற சொல்லுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். ஞானம் என்பது ஞானத்துக்கும் அறியாமைக்கும் அப்பால் இருந்தாலும், அது ஞானம் தானே தவிர அறியாமை இல்லை. அதே போல் தான் சச்சிதானந்தமும்.
ரமணாஸ்ரமத்திலிருந்து கடிதங்கள்
# 40
ஒரு பக்தர் மகரிஷியைக் கேட்டார். அஸ்தி, பாதி, ப்ரியம் என்றால் என்ன?
மகரிஷி பதிலளித்தார்.
‘அஸ்தி’ என்றால் உண்மை அல்லது மெய்மை, அதாவது எது உள்ளதோ அது.
‘பாதி’ என்றால் பிரகாசிக்கும் ஒளிர்வு.
‘ப்ரியம்’ என்றால் ஆனந்தம் அல்லது சந்தோஷம்.
அது தான் சச்சிதானந்த சொரூபம்.
அதாவது உண்மையான உள்ளமை, பிரகாசிக்கும் பிரக்ஞை உணர்வு, பேரானந்தம் – இவற்றைக் கொண்ட ஒருவரது மெய்யான தன்மை அல்லது சொரூபம் தான் சச்சிதானந்த சொரூபம்.
Item 117
ஒரு பக்தர் கேட்டார். பிரம்மன் என்பது சத்-சித்-ஆனந்த சொரூபம் என்று சொல்லப் படுகிறது. அதன் பொருள் என்ன?
மகரிஷி பதிலளித்தார்: “ஆமாம். அது உண்மை தான். இருப்பது சத் என்னும் உள்ளமை அல்லது மெய்மை தான். அது தான் தூய சொரூப ஆன்மா அல்லது பிரம்மனாகும். அந்த சத் என்னும் உள்ளமையின் பிரகாசம் தான் சித் என்னும் பிரக்ஞை உணர்வு. உள்ளமையின் தன்மை தான் ஆனந்தம் என்ற பேரானந்தமாகும். இவை எல்லாம் மெய்மையை விட்டு வேறில்லை. இவை மூன்றும் சேர்ந்து சத்-சித்-ஆனந்தம் என்று உணரப்படுகிறது.
தினம் தினம் பகவானுடன்
மகரிஷி சொன்னார், “ நாம் எல்லோரும் உண்மையில் சச்சிதானந்தத்தில் தான் இருக்கிறோம். ஆனால் நாம் பந்தப்பட்டிருப்பதாக கற்பனை செய்துக் கொண்டு இந்த துயரங்களை எல்லாம் அனுபவிக்கிறோம்.”
தேவராஜ முதலியார் கேட்டார், “நாங்கள் ஏன் அப்படி கற்பனை செய்கிறோம்? இந்த அறியாமை அல்லது அக்ஞானம் எங்களுக்கு ஏன் வருகிறது?
மகரிஷி சொன்னார், “யாருக்கு இந்த அறியாமை வந்திருக்கிறது என்று விசாரணை செய்யுங்கள். பிறகு அது உங்களுக்கு வரவே இல்லை என்றும், நீங்கள் எப்போதுமே சச்சிதானந்தமாகத் தான் இருக்கிறீர்கள் என்பதையும் நீங்கள் கண்டு பிடிப்பீர்கள்.
தான் ஏற்கனவே இருக்கும் தன்மையை அடைவதற்குத் தான் ஒருவர் என்னவெல்லாமோ தவங்கள் செய்கிறார். தான் குறைபாடுகளால் பந்தப் பட்டிருப்பதாகவும், உலக வாழ்வின் இன்னல்களால் பிணிக்கப் பட்டிருப்பதாகவும் நினைத்துக் கொண்டிருக்கும் வெறும் விபரீத புத்தி அல்லது தவறான கருத்தை நீக்குவதற்கு தான் எல்லா எத்தனங்களும் செய்யப் படுகின்றன.”
Unakku neye unmaiyaga iru,
Please explain this ubadesam
சாதாரணமாக ‘நான்’ என்று சொல்லப்படுவது ஒருவரது மெய்யான சொரூபம் இல்லை. அது ‘நான்’ என்ற தான்மை அகங்கார எண்ணம் தான். இதிலிருந்து தான் எல்லா கற்பனை எண்ணங்களும் எழுகின்றன. எல்லாவற்றிற்கும் அப்பால் இருக்கும் நிரந்தமான மெய்யான “சச்சிதானந்தம்” தான், அதாவது, “உள்ளமை-விழிப்புணர்வு-பேரானந்தம்” தான் ஒருவரது உண்மையான தன்மையாகும், அது தான் மெய்யான “நான்” ஆகும். இதை அறிந்து உணர விரும்புபவர், பொய்யான ‘நான்’ எங்கிருந்து எழுகிறது என்று மனதுக்குள் தேடினால், எல்லா எண்ணங்களும் அடங்கிவிடும், இறுதியில் ‘நான்’ எண்ணமும் மறைந்து போய் விடும். பிறகு அங்கு எப்போதும் உள்ள சச்சிதானந்த ஆன்ம சொரூபம் பிரகாசித்து விளங்குவது வெளிப்படும். இது தான் ரமண மகரிஷியின் போதனை. இது தான் தனக்கு தானே உண்மையாக இருப்பதன் பொருள். ~ வசுந்தரா.