தெய்வீக சித்தத்தின் சக்தியை உணர்ந்துக் கொண்டு அமைதியாக இருங்கள்
சச்சிதானந்தம் என்றால் என்ன?

தெய்வீக சித்தத்தின் சக்தியை உணர்ந்துக் கொண்டு அமைதியாக இருங்கள்

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்

உரையாடல் 594.

ஒரு ஸ்பானிஷ் பெண்மணி, இங்கு தற்காலிகமாக தங்கிக்கொண்டிருக்கும் சுரங்கப் பொறியாளருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறாள். அவள் அதில் சில கேள்விகளை எழுப்பியிருக்கிறாள். அதில் ஒரு கேள்வி பின்வருமாறு.

“தனிப்பட்ட தான்மையானது, உலகளாவிய சொரூப ஆன்மாவில் இணைந்து ஒன்று சேர்ந்து விட்டால், பிறகு மனித குலத்தின் உயர்வுக்காக ஒருவர் எப்படி கடவுளிடம் பிரார்த்தனை செய்வது?”  இந்தக் கேள்வி வெளிநாட்டு சிந்தனையாளர்களுக்கு பொதுவாக இருக்கிறது.

மகரிஷி சொன்னார் :  

அவர்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்து விட்டு, பிறகு “Thy Will be done”, அதாவது “உங்களது சித்தமே நிறைவேறும்” என்று முடிக்கிறார்கள். கடவுளின் சித்தம் தான் நிறைவேறும் என்றால், அவர்கள் ஏன் பிரார்த்தனை செய்ய வேண்டும்? உண்மையில் தெய்வீக சித்தம் தான் எப்போதும், எல்லா சூழ்நிலைகளிலும் விளங்கி வருகிறது. மனிதர்கள் தங்களாலேயே செயல்பட முடியாது. தெய்வீக சித்தத்தின் சக்தியை உணர்ந்துக் கொண்டு அமைதியாக இருங்கள். 

ஒவ்வொருவரும் கடவுளால் கவனித்துக் கொள்ளப் படுகிறார். கடவுள் எல்லோரையும் உண்டாக்கியுள்ளார். நீங்கள் 2000 கோடியில் ஒருவர். கடவுள் இவ்வளவையும் கவனித்துக் கொள்ளும் போது உங்களை விட்டு விடுவாரா? பொது அறிவு கூட ஒருவர் கடவுள் சித்தப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று உறுதியாகத் தெரிவிக்கிறது.  

அதோடு கூட, உங்களது தேவைகளைப் பற்றி கடவுளுக்குத் தெரியப்படுத்த வேண்டிய அவசியமில்லை. அவரே அவற்றை அறிவார். அவற்றைப் பார்த்துக் கொள்வார்.

மேலும், நீங்கள் ஏன் பிரார்த்திக்கிறீர்கள்? ஏனெனில், உங்களால் உதவியொன்றும் செய்ய இயலாமல் இருப்பதால், மிகவும் உயர்ந்த சக்தியானது உங்களுக்கு உதவி அளிக்க வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள். என்ன, உங்களைப் படைத்தவருக்கும் பாதுகாப்பவருக்கும் உங்களுடைய பலவீனத்தைப் பற்றி தெரியாதா? அவருக்குத் தெரியப்படுத்துவதற்காக, உங்களது பலவீனத்தை நீங்கள் பறைசாற்ற வேண்டுமா?

ஒரு பக்தர்.: ஆனால் தம்மை உதவிக்கொள்பவர்களுக்கு கடவுள் உதவியளிக்கிறார். 

மகரிஷி.: நிச்சயமாக. உங்களையே உதவிக் கொள்ளுங்கள்; அதுவும் கூட கடவுளின் சித்தத்தால் தான். ஒவ்வொரு செயலும் கடவுளால் தான் தூண்டப்படுகிறது.  

மற்றவர்களுக்காக செய்யும் பிரார்த்தனையை பற்றி பேசும் போது, மேலோடு பார்த்தால், அது மிகவும் தன்னலமற்றதாகத் தோன்றுகிறது. ஆனால் அந்த உணர்வை ஆராய்ந்து பாருங்கள்; பிறகு அதில் கூட சுயநலத்தை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். 

நீங்கள் சந்தோஷமாக இருக்கவேண்டுமென்று தான், மற்றவர்களது சந்தோஷத்தை விரும்புகிறீர்கள். அல்லது நீங்கள் மற்றவர்கள் சார்பாக பரிந்து பேசி மத்தியஸ்தம் செய்ததற்காக, புகழ்ச்சியும் மதிப்பும் பெற விரும்புகிறீர்கள். கடவுளுக்கு ஒரு நடுவர் அல்லது இடைத் தரகர் தேவையில்லை. உங்கள் விவகாரத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்; பிறகு எல்லாம் நலமாக இருக்கும்.

பக்தர்.: கடவுள் தனது சித்தத்தை ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட நபரின் மூலமாக செயல்படுவதில்லையா?  

மகரிஷி.: கடவுள் எல்லோரிலும் இருக்கிறார்; மேலும் எல்லோர் மூலமாகவும் செயல்படுகிறார்.  ஆனால் அவரது உள்ளமையும் முன்னிலையும் தூய மனங்களில்   மேலும் நன்றாகக் கண்டு உணர்ந்துக் கொள்ள முடிகிறது.  

கடவுளின் செயல்களை தூய்மையற்ற மனங்களைக் கொண்டவர்களை விட தூய்மையான மனங்கள் கொண்டவர்கள் மிகவும் தெளிவாக பிரதிபலிக்கின்றனர்.  எனவே அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் என்று ஜனங்கள் சொல்கிறார்கள்.

ஆனால் அந்தத் தேர்ந்தெடுக்கப் பட்டவர் என்று மற்றவரால் சொல்லப்படுபவர் தானே அப்படி சொல்லிக் கொள்வதில்லை. அவர் ஒரு நடுவர் அல்லது மத்தியஸ்தர் என்று நினைத்துக் கொண்டால், பிறகு அவர் தனது தான்மையை வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாகிறது; அங்கு முழு சரணாகதி இல்லை என்பதும் தெளிவாகிறது.

பக்தர்.: பிராம்மணர்கள், குருக்கள், அல்லது கடவுளுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் உள்ளவர்கள் என்று கருதப்படுவதில்லையா?

மகரிஷி.: ஆமாம். ஆனால் யார் பிராம்மணர்? பிராம்மணர் என்பவர், பரப்பிரம்மத்தை உணர்ந்தவரார். இத்தகைய ஒருவருக்கு ஒரு தனிப்பட்ட தான்மை உணர்வு இருக்காது. அவர், தான் ஒரு நடுவராக செயல்படுவதாக நினைக்க மாட்டார்.

மேலும், பிரார்த்தனையைப் பற்றி, ஒரு ஞானி மற்றவர்களை தன்னிடமிருந்து வேறாக, வித்தியாசமாக, பார்ப்பதில்லை. அவரால் எப்படி பிரார்த்திக்க முடியும்? யாரிடம் பிரார்த்திப்பது? எதற்காகப் பிரார்த்திப்பது? அவருடைய முன்னிலையே எல்லோருக்கும் சந்தோஷத்தின் முழுமையான பூர்த்தியை அளிக்கும். 

மற்றவர்கள் உங்களை விட வேறானவர்கள் என்று நினைக்கும் வரையில், நீங்கள் அவர்களுக்காக பிரார்த்திக்கிறீர்கள். ஆனால் அந்த பிரிவினை அறியாமையாகும். உதவியற்ற நிலையில் இருப்பதாக உணர்வதற்கு இந்த அறியாமை தான் காரணமாகும்.  

நீங்கள் பலவீனமாக இருப்பதையும், உதவியற்ற நிலையில் இருப்பதையும் நீங்கள் அறிகிறீர்கள். பிறகு நீங்கள் மற்றவர்களுக்கு எப்படி உதவியளிக்க முடியும்? “கடவுளிடம் பிரார்த்திப்பதால்” என்று நீங்கள் சொன்னால், கடவுள் தமது விவகாரத்தை அறிவார்; மற்றவர்களின் சார்பில் உங்கள் மத்தியஸ்தம் அவருக்குத் தேவையில்லை.

நீங்கள் வலிமை அடைவதற்காக உங்களுக்கே உதவிக் கொள்ளுங்கள். அது முழுமையான சரணாகதியால் தான் செய்யப் படுகிறது. அதன் பொருள், நீங்கள் உங்களை கடவுளிடம் அர்ப்பணித்துக் கொண்டு விட வேண்டும். இந்த சரணாகதிக்குப் பிறகு நீங்கள் உங்களது தான்மையை வைத்துக் கொள்ள முடியாது. அதன் பின் நீங்கள் கடவுளின் சித்தத்திற்கு இசைந்து அதைப் பின்பற்றி வாழ்வீர்கள். எனவே, மௌனம் தான் எல்லா சாதனைகளிலும் மிகச் சிறந்த சாதனையாகும். 

எல்லா மதங்களின் எல்லா நதிகளும் தம்மை ஒப்படைத்துக் கொள்ளும் பெருங்கடல், மௌனமாகும். இவ்வாறு ஞானி தாயுமானவர் சொல்கிறார். மேலும், வைதீக வேத மதம் ஒன்று தான் தத்துவத்தையும் மத மார்க்கத்தையும்  ஒன்று சேர்க்கிறது என்றும் தாயுமானவர் சொல்கிறார்.  

உரையாடல் 596.

ஒரு வருகையாளர் கேட்டார் : கடவுள் நமக்கு வழிகாட்டுகிறார் என்று பகவான் மகரிஷி முன்பு சொன்னார். அப்படியென்றால், எதைச் செய்வதற்கும் நா ஏன் எத்தனம் செய்ய வேண்டும்?

மகரிஷி.: அப்படி செய்யும்படி உங்களை யார் கேட்டார்கள்? கடவுளின் வழிகாட்டுதலில் அந்த நம்பிக்கை இருந்திருந்தால், இந்த கேள்வி எழுந்திருக்காது.  

பக்தர்.: உண்மையில் கடவுள் நமக்கு வழிகாட்டுகிறார். பிறகு இத்தகைய அறிவுரைகளால் ஜனங்களுக்கு என்ன பயன்?

மகரிஷி.: அறிவுரைகளை நாடுபவர்களுக்காக அவை இருக்கின்றன. கடவுளின் வழிகாட்டுதலின் நம்பிக்கையில் நீங்கள் உறுதியாக இருந்தால், அதை விடாமல் பிடித்துக் கொள்ளுங்கள்.  அதோடு கூட, உங்களைச் சுற் நடப்பதைப் பற்றி கவலைப் பட்டுக் கொள்ளாதீர்கள்.

மேலும், சந்தோஷம் இருக்கலாம், துயரம் இருக்கலாம். இரண்டையும் லட்சியம் செய்யாமல், கடவுள் நம்பிக்கையில் உறைந்து இருங்கள். கடவுள் நம்மையெல்லாம் கவனித்துக் கொள்கிறார் என்ற ஒருவரின் நம்பிக்கை மிகவும் வலிவாக, உறுதியாக இருந்தால் தான் அப்படி இருக்க முடியும். 

திரு சோப்ரா கேட்டார்: “அப்படிப் பட்ட உறுதியான நம்பிக்கையை எப்படிப் பெறுவது?

மகரிஷி.: இதைத் தான் முன்பு சொன்னேன். இப்படி அறிவுரைகளை நாடுபவர்களுக்காகத் தான் அவை அளிக்கப் படுகின்றன. 

சில நபர்கள், துயரத்திலிருந்து விடுதலையை நாடுகின்றனர். அவர்களிடம், “கடவுள் நமக்கு வழிகாட்டுகிறார்; எனவே நடப்பதைப் பற்றி எந்த கவலையும் இருக்க வேண்டிய அவசியமில்லை” என்று சொல்லப்படுகிறது. அவர்கள் சிறந்த விதமானவர்களாக இருந்தால், இதை உடனே நம்புகின்றனர்; பின் கடவுள் மீதுள்ள உறுதியான நம்பிக்கையில் உறைகின்றனர். 

ஆனால் வேறு நபர்கள் இந்த வெறும் வாக்கியத்தின் உண்மையைப் பற்றி அவ்வளவு எளிதாக நம்புவதில்லை. “கடவுள் யார்? கடவுளின் தன்மை என்ன? கடவுளை எப்படி அறிந்து உணர்வது?” என்றெல்லாம் அவர்கள் கேட்கிறார்கள்.

அவர்களைத் திருப்திபடுத்த புத்தி சார்ந்த உரையாடல் தேவைப் படுகிறது.  விஷயங்கள் சொல்லப் படுகின்றன; அவற்றின் நன்மைகளும் தீமைகளும் விவாதிக்கப் படுகின்றன; பின் புத்திக்கு இந்த உண்மைத் தெளிவாக்கப் படுகிறது. 

விஷயம் புத்தி சார்ந்து புரிந்துக் கொண்ட பின், தீவிரமான ஆன்மீகர், அதை நடைமுறையில் பின்பற்ற ஆரம்பிக்கிறார். அவர் ஒவ்வொரு கணமும், “இந்த எண்ணங்கள் எல்லாம் யாருக்கு வருகின்றன? நான் யார்?” என்ற விதத்தில் தனக்குள் விவாதிக்கிறார். “ஒரு மிகவும் உயர்ந்த சக்தி நமக்கு வழிகாட்டுகிறது” என்ற நம்பிக்கையில் அவர் உறுதியாக நிறுவும் வரையில் அவர் இப்படி செய்துக் கொண்டே இருக்கிறார். அது தான் நம்பிக்கையில் உள்ள உறுதியும் திடமும். பிறகு அவருடைய சந்தேகங்கள் எல்லம் தீர்ந்து விடுகின்றன. அதன் பிறகு அவருக்கு மேலும் அறிவுரைகள் தேவை இல்லை.

பக்தர்.: எங்களுக்குக் கூட கடவுள் மேல் நம்பிக்கை இருக்கிறது.

மகரிஷி.: அந்த நம்பிக்கை திடமாக இருந்திருந்தால், இந்த கேள்விகள் எழுந்திருந்திருக்காது. எல்லாம் வல்ல கடவுளின் மீதுள்ள நம்பிக்கையில் ஒருவர் பூரண சந்தோஷத்துடன் விளங்குவார்.

பக்தர்.: ஆன்மாவின் சுய விசாரணையும், மேற்சொன்ன திடமான நம்பிக்கையும் ஒன்றே தானா?

மகரிஷி.: ஆன்மாவின் சுய விசாரணையில் எல்லாம் உள்ளடங்கியுள்ளது; திடமான நம்பிக்கை, பக்தி, ஞானம், யோகம், எல்லாம்.

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
15th டிஸம்பர், 1938
உரையாடல்கள் 594 and 596.

 
சச்சிதானந்தம் என்றால் என்ன?
தெய்வீக சித்தத்தின் சக்தியை உணர்ந்துக் கொண்டு அமைதியாக இருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!