தெய்வீக அருள் என்றால் என்ன? அதைப் பெறுவது எப்படி? (4)
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
~~~~~~~~
உரையாடல் 547.
பக்தர்: முக்தி அடைவதற்கு குருவின் அருளின் முக்கியத்துவம் என்ன?
மகரிஷி: முக்தி உங்களுக்கு வெளியில் எங்கும் இல்லை. அது உள்ளுக்குள் தான் இருக்கிறது. ஒரு மனிதர் விமோசனம் அடைய தீவிரமாக ஏங்கினால், உள்ளுக்குள் உள்ள குரு அவரை உள்ளே இழுக்கிறார். வெளியில் உள்ள குரு அவரை ஆன்மாவினுள் தள்ளுகிறார். அது தான் குருவின் அருள்.
~~~~~~~~
உரையாடல் 591.
பக்தர்: ஆசானுக்கு மிக அருகில் உள்ள பக்தர்கள், அவருடைய தரிசனத்தினாலும், ஸ்பரிசத்தாலும் அருள் பெற முடியும். ஆனால், வெகு தூரத்தில் உள்ள பக்தர் அருள் பெறுவது எப்படி?
மகரிஷி: யோக திருஷ்டியினால்.
~~~~~~~~
உரையாடல் 618.
பக்தர்: சந்தேகங்கள் எழுந்துக் கொண்டே இருக்கின்றன. அதனால் தான் என் கேள்விகள்.
மகரிஷி: ஒரு சந்தேகம் எழுகிறது; பிறகு அது தீர்க்கப் படுகிறது. இன்னொரு சந்தேகம் எழுகிறது; அதுவும் தீர்க்கப் பட்டு, மற்றொரு சந்தேகத்திற்கு வழி வகுக்குகிறது. இவ்வாறே போய்க் கொண்டிருக்கிறது. எனவே, எல்லா சந்தேகங்களையும் தீர்ப்பது என்பது முடியாத விஷயம். யாருக்கு சந்தேகங்கள் எழுகின்றன என்று பாருங்கள். அவற்றின் மூலாதாரத்தை அடைந்து, அதில் உறையுங்கள். பிறகு அவை எழுவது நின்று விடும். அப்படித் தான் சந்தேகங்கள் தீர்க்கப் பட வேண்டும். கீதையில் சொல்லப்படுவது போல், “ஆத்ம சம்ஸ்த்தம் மனஹ் க்ருத்வா”, அதாவது, “மனதை ஆன்மாவின் மேல் பொருத்தி, சிறிதும் யோசனை செய்யாமல் இரு”.
பக்தர்: அதைச் செய்ய அருள் மட்டும் தான் எனக்கு உதவ முடியும்.
மகரிஷி: அருள் வெளிப்புறத்தில் இல்லை. உண்மையில், அருளுக்காக உள்ள உங்கள் ஆசையே உங்களுக்குள் ஏற்கனவே உள்ள அருளால் தான்.
~~~~~~~~
உரையாடல் 78.
பக்தர்: ஆன்ம ஞானம் அடைய எவ்வளவு காலம் ஒரு குரு தேவை?
மகரிஷி: “லகு”, அதாவது “லேசானது” இருக்கும் வரை “குரு”, அதாவது “கனமானது” தேவை. லகு என்பது ஒருவர் தானாக ஆன்மாவை வரையறுத்துக் கொண்டிருப்பதால் ஏற்படுகிறது. கடவுள் வழிபடப் படும்போது, நிலையான பக்தியை அளிக்கிறார். இது சரணாகதிக்கு வழி வகுக்கிறது. பக்தர் சரணடைந்தவுடன், கடவுள் குருவாக உருவெடுத்து தமது கருணையைக் காட்டுகிறார். கடவுளே உருவான குருவானவர், “கடவுள் உனக்குள் தான் இருக்கிறார். அவர் தான் ஆன்மா” என்று சொல்லி, பக்தருக்கு வழிகாட்டுகிறார். இது மனதை உட்புறம் திருப்ப வழிகாட்டுகிறது. பிறகு இறுதியில் ஆன்ம ஞானம் பெறவும் வழிகாட்டுகிறது.
~~~~~~~~
உரையாடல் 503.
ஒரு பண்புள்ள அமெரிக்கர், திரு ஜே. எம். லோரி என்பவர், ஆஸ்ரமத்தில் இரண்டு மாதமாக தங்கிக்கொண்டிருக்கிறார். அவர் கேட்டார்:
நான் இன்று இரவு இங்கிருந்து செல்கிறேன். இந்த இடத்தை விட்டு மனமில்லாமல் அகலுவதற்கு என் மனம் மிகவும் துன்புறுகிறது. ஆனால் நான் அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டும். நான் மகரிஷியிடம் ஒரு அறிவுரை கேட்கிறேன். என்னைப் பற்றி என்னை விடக் கூட மகரிஷி நன்றாகப் புரிந்துக் கொண்டிருக்கிறார். எனவே நான் மகரிஷியை விட்டு அகன்று இருக்கும் போது எனக்கு உதவ ஒரு அறிவுரை அளிக்க வேண்டும் என்று மகரிஷியை வேண்டுகிறேன்.
மகரிஷி: நீங்கள் கற்பனைச் செய்துக் கொண்டிருப்பது போல், ஆசான் உங்களுக்கு வெளியில் இல்லை. அவர் உள்ளுக்குள் இருக்கிறார்; உண்மையில், அவர் ஆன்மா தான். இந்த உண்மையை உணர்ந்துக் கொள்ளுங்கள். உங்களுக்குள் அவரைத் தேடுங்கள்; அவரை நீங்கள் காண்பீர்கள். பிறகு அவருடன் நீங்கள் நிரந்தரமான ஆன்மீகத் தொடர்பு வைத்துக் கொள்வீர்கள். அறிவுரை எப்போதும் இருக்கிறது. அது பேசாமல் இருப்பதே இல்லை. ஆசானை விட்டு நீங்கள் அகன்றுச் சென்றாலும், அது எப்போதும் உங்களை கைவிடாது. அதோடு, நீங்கள் எப்போதுமே ஆசானை விட்டு விலக முடியாது. நீங்கள் ஆசானில்லாமல் இருக்கவே மாட்டீர்கள்.
திரு லோரி, மகரிஷியின் போக்குகளை ஏற்கனவே அறிந்திருந்தும் கூட, இந்த பதிலினால் மிகவும் பாதிக்கப்பட்டதாகத் தோன்றினார். அவர் மனமுருகி போனது வெளிப்புறத் தோற்றத்தில் கூட தெரிந்தது. மகரிஷியின் அருள் எப்போதும் தன்னிடம் உறைய வேண்டும் என்று அவர் வேண்டிக் கேட்டுக் கொண்டார்.
மகரிஷி: குரு ஆன்மாவே தான் என்பதால், அருள் ஆன்மாவை விட்டு பிரியாமல் உள்ளது.
~~~~~~~~
உரையாடல் 317.
பக்தர்: ஆன்ம ஞானம் குருவின் அருளால் தான் என்று சொல்லப் படுகிறது.
மகரிஷி: குரு ஆன்மாவே தான்.
பக்தர்: கிருஷ்ணருக்கு சந்தீபனியும், ராமருக்கு வசிஷ்டரும் குருவாக விளங்கினார்கள்.
மகரிஷி: பக்தருக்கு குரு வெளிப்புறம் இருப்பதாக சொல்லப்படுகிறது. மனம் உட்புறமாக திரும்புவது குருவினால் கொண்டு வரப் படுகிறது. பக்தரின் மனம் வெளிப்புறமாக திரும்பி இருப்பதால், குருவிடமிருந்து கற்றுக் கொள்ள அவருக்கு அறிவுரை வழங்கப் படுகிறது. பிறகு அவர் காலப்போக்கில், குரு ஆன்மாவே தான் என்று கண்டுபிடித்துக் கொள்கிறார்.
பக்தர்: நான் குருவின் அருள் பெற முடியுமா?
மகரிஷி: அருள் எப்போதும் இருக்கிறது.
பக்தர்: ஆனால் நான் அதை உணரவில்லை.
மகரிஷி: சரணாகதி அருளைப் புரிந்துக் கொள்ளச் செய்யும்.
பக்தர்: நான் மனதார சரணடைந்து விட்டேன். என்னுடைய உள்ளத்தைப் பற்றி நான் தான் சிறந்த விதத்தில் எடை போட முடியும். ஆனாலும், நான் அருளை உணரவில்லை.
மகரிஷி: நீங்கள் சரணடைந்திருந்தால், இந்தக் கேள்விகள் எழாது.
பக்தர்: நான் சரணடைந்துள்ளேன். ஆனாலும் கேள்விகள் எழுகின்றன.
மகரிஷி: அருள் நிரந்தரமானது. உங்கள் முடிவு மாறும் இயல்புடையது. வேறெங்கு குறை இருக்க முடியும்?
பக்தர்: நான் சரணடைய தாங்கள் உதவ வேண்டும்.
மகரிஷி: தாயுமானவர் சொல்லியிருக்கிறார்: “என்னை, இவ்வளவு சம்பாஷணை செய்து, உங்கள் சொற்களை இவ்வளவு தூரம் புரிந்துக் கொள்ள வைப்பதற்கு உங்கள் மகிமையே மகிமை! ”
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா