தெய்வீக அருள் என்றால் என்ன? அதைப் பெறுவது எப்படி? (2)
ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள்
~~~~~~~~
உரையாடல் 127.
அமெரிக்க பொறியாளர் கேட்டார். எவ்வளவு தூரத்தில் இருக்கிறோம் என்பது அருளை பாதிக்குமா?
மகரிஷி .: காலமும் தூரமும் நமக்குள் தான் இருக்கிறது. நீங்கள் எப்போதும் உங்கள் சுய சொரூபத்தினுள் தான் இருக்கிறீர்கள். அதை காலமும் தூரமும் எப்படி பாதிக்கும்?
பக்தர்.: ரேடியோவில் அருகில் இருப்பவர்க வானொலி சீக்கிரம் கிடைக்கிறது. நீங்கள் இந்து, நாங்கள் அமெரிக்கர்கள். இதனால் அருளில் ஏதாவது வித்தியாசம் உண்டா?
மகரிஷி.: வித்தியாசம் கிடையாது.
~~~~~~~~
உரையாடல் 198.
பக்தர்.: குருவின் அருள் என்றால் என்ன? அது எப்படி செயல்படுகிறது?
மகரிஷி.: குரு ஆன்மா தான்.
பக்தர்.: அது ஆன்ம ஞானத்திற்கு எப்படி வழிகாட்டுகிறது?
மகரிஷி.: ஈஸ்வரோ குரூராத்மேதி. கடவுள், குரு, ஆன்மா எல்லாம் ஒன்றே தான்.
ஒரு மனிதர் திருப்தியில்லாமல் இருக்கிறார். உலகத்தில் திருப்தி இல்லாமல், கடவுளிடம் பிரார்த்தனைகள் செய்வதன் மூலம், தனது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள முனைகிறார். அவரது மனம் தூய்மையாகிறது. பிறகு அவர் தனது சரீர சம்பந்தமான ஆசைகளைத் தீர்த்துக் கொள்வதை விட அதிகமாக கடவுளை அறிந்துக் கொள்ள ஏங்குகிறார். அதற்குப் பிறகு கடவுளின் அருள் வெளிப்படத் தொடங்குகிறது. கடவுள் குருவின் ரூபத்தை எடுத்துக் கொண்டு பக்தரின் முன்பு தோன்றுகிறார். பக்தருக்கு உண்மையைக் கற்பிக்கிறார். தமது தொடர்பினாலும் அறிவுரைகளாலும் பக்தரது மனதை தூய்மையாக்குகிறார். பக்தரின் மனம் வலிமையாகிறது. அவரது மனதால் உட்புறம் திரும்ப முடிகிறது. தியானத்தின் மூலமாக அது மேலும் தூய்மையாகிறது. இறுதியில், ஒரு சின்னஞ்சிறிய அலை கூட இல்லாமல் அமைதியாக, நிலையாக நிற்கிறது. அந்த அசைவின்மை, அமைதி தான் ஆன்ம சுய சொரூபம்.
குருவானவர் வெளிப்புறத்திலும் இருக்கிறார், உட்புறத்திலும் இருக்கிறார். மனதை உட்புறம் திருப்ப வெளிப்புறத்திலிருந்து அவர் தள்ளுகிறார். உட்புறத்திலிருந்து மனதை ஆன்மாவிடம் இழுத்து, மனம் அமைதியடைய உதவுகிறார். அது தான் அருள்.
எனவே கடவுள், குரு, ஆன்மா – இவற்றினுள் வித்தியாசம் ஒன்றும் இல்லை.
~~~~~~~~
உரையாடல் 220.
திரு. B. C. தாஸ், ஒரு பௌதீக விரிவுரையாளர், கேட்டார் : மனதைக் கட்டுப்படுத்துவதால் தான் ஆழ்ந்த சிந்தனை செய்ய முடியும்; ஆழ்ந்த சிந்தனை செய்வதால் தான் மனதைக் கட்டுப்படுத்த முடியும். இப்படி சொல்வது ஒரு தீய வட்டம் (vicious circle) இல்லையா?
மகரிஷி.: அவை இரண்டும் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று சார்புள்ளவை.
அவை அடுத்தடுத்து, ஒன்று மற்றதுடன் செல்ல வேண்டும். பயிற்சியும் வைராக்கியமும் விளைவை படிப்படியாக கொண்டு வரும். மனம் வெளிப்பட்டு காட்சிப்படுத்துவதை கண்காணித்து அடக்குவதற்காக வைராக்கியம் கடைப்பிடிக்கப்படுகிறது; மனதை உட்புறம் திருப்புவதற்காக பயிற்சி செய்யப்படுகிறது. கட்டுப்பாட்டுக்கும், தியானத்திற்கும் எப்போதும் ஒரு போராட்டம் நடக்கிறது. இது எப்போதும் இடைவிடாமல் உள்ளுக்குள் நடந்துக் கொண்டிருக்கிறது. சரியான சமயத்தில் தியானம் வெற்றி அடையும்.
பக்தர்: எப்படி ஆரம்பிப்பது? உங்கள் அருள் அதற்கு தேவைப்படுகிறது.
மகரிஷி: அருள் எப்போதும் இருக்கிறது. மகரிஷி ஒரு மேற்கோள் அறிவித்தார். “குருவின் அருளில்லாமல் வைராக்கியம் பெற முடியாது, உண்மைச் சுயநிலையை உணர முடியாது, ஆன்மாவில் உறைய முடியாது.”
மகரிஷி: பயிற்சி, எத்தனம் தேவை. இந்த பயிற்சி, முரடாக உள்ள ஒரு எருதை, இங்கும் அங்கும் அலையாமல் இருக்க வைக்க, அதன் தொழுவத்தில் அதற்கு ருசிகரமான, சுவையான புல்லை அளித்து ஆசை காட்டுவது போலாகும்.
பிறகு மகரிஷி திருவாசகத்திலிருந்து ஒரு செய்யுளை படித்துக் காட்டினார். அது மனதிடம் ஒருவர் சொல்வது போலாகும். “ரீங்காரம் செய்யும் தேனியே! இத்தனைக் கணக்கில்லாத மலர்களிடமிருந்து மிக மிகச் சிறிய தேன் துளிகளைத் திரட்டிக் கொள்ள ஏன் இவ்வளவு சிரமங்கள் எடுத்துக் கொள்கிறாய்? மிக அதிகமான அளவு தேனை சேகரித்து வைத்துள்ள ஒரு முழு களஞ்சியத்தை வைத்துக் கொண்டுள்ள ஒருவர் இருக்கிறார். அவைப் பற்றி நினைப்பதாலும், அவரைப் பற்றி பேசுவதாலும் மட்டுமே அதை நீ அடையலாம். உட்புறம் நோக்கி, அவரிடம் ஹ்ரீங்காரம் செய்.”
~~~~~~~~
உரையாடல் 13.
திருமதி பிக்கட் கேட்டார். ஆன்ம ஞானம் பெற ஒரு ஆசான் தேவையா?
மகரிஷி.: அறிவுரைகள், சொற்பொழிவுகள், தியானம், இவற்றையெல்லாம் போன்ற எல்லாவற்றையும் விட ஆசானின் அருளால் தான் ஆன்ம ஞானம் விளையும். மற்றவையெல்லாம் இரண்டாம்பட்சமான உதவிகள். ஆனால் ஆசானின் அருள் தான் முதன்மையான, முக்கியமான காரணம்.
~~~~~~~~
உரையாடல் 80.
மகரிஷி.: தன்னலமில்லாமல் செய்யப்படும் செயல்கள் மனதைத் தூய்மையாக்கி, அதை தியானத்தின் மேல் பொருத்த உதவுகிறது. பக்தர்.: ஒருவர் இடைவிடாமல் தியானம் செய்துக் கொண்டே இருந்தால் என்ன?
மகரிஷி.: செய்துப் பாருங்கள். மனப்போக்குகள் உங்களை அப்படி செய்ய விடாது. படிப்படியாக, ஆசானின் அருளினால் மனப்போக்குகள் பலவீனமாவதால் தான் தியானம் செய்ய இயலும்.
~~~~~~~~