What is Divine Grace? How to get it? (3)
தெய்வீக அருள் என்றால் என்ன? அதைப் பெறுவது எப்படி? (4)
தெய்வீக அருள் என்றால் என்ன? அதைப் பெறுவது எப்படி? (2)

தெய்வீக அருள் என்றால் என்ன? அதைப் பெறுவது எப்படி? (3)

 

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்

~~~~~~~~

உரையாடல் 319.

கோவாவிலிருந்து ஒரு இந்து, திரு ஶ்ரீதர், கேட்டார்

பக்தர்:  “சமத்வம் யோகஹ உச்யதே”, அதாவது “உள்ள சமநிலை தான் யோகம்” என்பதில், அந்த “உள்ள சமநிலை” என்பது என்ன? 
மகரிஷி: அது பல்வகைமையில் உள்ள ஒருமையாகும் (unity in diversity). இப்போது பிரபஞ்சம் பல வகையாகத் தோன்றுகிறது. எல்லா பொருள்களிலும் உள்ள பொதுவான, சம அம்சத்தைப் பாருங்கள். அது செய்யப்பட்டால், எதிர்படமாக உள்ள ஜோடிகளில் சமத்துவம் தானாகத் தொடரும். சாதாரணமாக இது தான் சமத்துவம் என்று சொல்லப்படுகிறது. 

பக்தர்: பல வகையானவற்றில் பொதுவான அம்சத்தைக் காண்பது எப்படி?  
மகரிஷி: காண்பவர் ஒருவர் தான். காட்சிகள் காண்பவர் இல்லாமல் தோன்றுவதில்லை. மற்றவை எவ்வளவு மாறினாலும், காண்பவரில் மாற்றம் ஏதும் இல்லை. இவை எல்லாம் பலவித அம்சங்களில் வழங்கப்படும் ஒரே மெய்மை தான். 

திரு ஏக்நாத் ராவ்: அதற்கு அருள் தேவையா?

மகரிஷி: ஆமாம்.

பக்தர்: தெய்வீக அருள் பெறுவது எப்படி? 
மகரிஷி: சரணடைவதால். 

பக்தர்: அப்போதும் என்னால் அருளை உணர முடியவில்லை.  
மகரிஷி: உண்மையான நம்பிக்கை இல்லை. சரணாகதி வாய் மொழியில் மட்டுமோ அல்லது ஒரு நிபந்தனையுடனோ இருக்கக் கூடாது.   

பிறகு இந்த வாக்கியங்களை விளக்க, சாது ஜஸ்டினியனின் சில பத்திகள் படித்துக் காட்டப்பட்டன.

பிறகு மகரிஷி தொடர்ந்தார். பிரார்த்தனை வாய்மொழியில் இல்லை. அது உள்ளத்திலிருந்து வருகிறது. உள்ளத்தில் பொருந்தி உறைவது தான் பிரார்த்தனை. அதுவே அருளும் தான். 
ஒரு ஆழ்வார் சொல்கிறார்: “நான் எப்போதும் உங்களை நாடி தேடிக் கொண்டிருந்தேன். ஆனால் சுய சொரூபத்தை அறிந்து உணர்ந்த பிறகு, நீங்களே ஆன்மா தான் என்று அறிகிறேன். என்னுடைய எல்லாம் ஆன்மா தான், எனவே நீங்கள் தான் என்னுடைய எல்லாம்”.

பக்தர்: குறைபாடுகள், அறியாமை, ஆசைகள் – இவையெல்லாம் தியானத்திற்கு தடங்கள்கள் ஏற்படுத்துகின்றன. அவற்றை வெல்வது எப்படி? 
மகரிஷி: அவற்றால் தடுமாறாமல் இருப்பதால்.

பக்தர்: அருள் தேவைப் படுகிறது.
மகரிஷி: ஆமாம். அருள் தான் தொடக்கமும் முடிவும். மனம் அகமுகமாக திரும்புவது அருளால் தான். விடா முயற்சியும் அருள் தான். ஆன்ம ஞானமும் அருள் தான்.  “மாமேகம் சரணம் வ்ரஜா”, அதாவது “எம்மிடம் மட்டுமே சரணடைந்து விடு” என்ற அறிக்கைக்குக் காரணம் அது தான்.   ஒருவர் முற்றிலும் சரணடைந்து விட்டால், அருள் கேட்க என்ன பாக்கி இருக்கிறது? அவர் அருளால் விழுங்கப் படுகிறார்.  

~~~~~~~~

உரையாடல் 398.

பக்தர்: தியானப் பயிற்சியை விட அருள் இன்னும் அதிகப்  பயனுள்ளதாக இருக்காதா?  
மகரிஷி: குருவானவர் அறியாமையை அழிப்பதற்கு உதவுகிறாரே தவிர, உங்களிடம் ஆன்ம ஞானத்தை எடுத்துக் கொடுக்கிறாரா என்ன? 

பக்தர்: நாங்கள் அறிவில்லாதவர்கள். 
மகரிஷி: “நான் அறிவில்லாதவர்” என்று நீங்கள் சொன்னால், அதிலிருந்தே நீங்கள் விவேகமுள்ளவர் தான் என்று தெரிகிறது. ஒரு பைத்தியக்காரன், தன்னை ஒரு பைத்தியக்காரன் என்று சொல்லிக் கொள்வானா? குருவின் அருள் என்பது, தண்ணீரில் மூழ்குபவருக்கு ஒருவர் கைகொடுத்து உதவுவது போலாகும். அல்லது நீங்கள் உங்களது அறியாமையை அகற்றும் வழியை எளிதாக்கச் செய்யும் உதவியாகும்.      

பக்தர்: அது அறியாமையென்னும் நோயைக் குணப்படுத்துவதற்கு தரும் மருந்து போல் இல்லையா?

மகரிஷி: மருந்து எதற்காக தரப்படுகிறது? அது ஒரு நோயாளியை தனது சுயமான ஆரோக்கியத்திற்கு திருப்புவதற்காகத் தான் தரப்படுகிறது. இது  என்ன, குரு, அருள், கடவுள் என்றெல்லாம் பேச்சு? குரு என்ன, உங்கள் கையைப் பிடித்துக் கொண்டு, உங்கள் காதில் ஏதாவது ரகசியமாகச் சொல்கிறாரா?   நீங்கள் அவரை உங்களைப் போலவே இருப்பதாகக் கற்பனை செய்துக் கொள்கிறீர்கள். நீங்கள் ஒரு உடலுடன் இருப்பதால், தெளிவாகத் தெரியும்படி ஏதாவது செய்ய அவரும் ஒரு உடல் தான் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.  அவருடைய வேலை உள்ளுக்குள் இருக்கிறது.

குரு எப்படி அடையப் படுகிறார்?  எங்கும் நிறைந்துள்ள கடவுள், தமது அன்பார்ந்த பக்தரிடம் கருணை கொண்டு, அந்த பக்தரின் தர நிலைக்குத் தகுந்தபடி ஒரு குருவாக உருவெடுக்கிறார்.   பக்தர் குருவை அவர் ஒரு மனிதர் என்று நினைத்துக் கொண்டு, உடல்களுக்குள் இருக்கும் உறவு போன்ற உறவை எதிர்பார்க்கிறார்.  ஆனால், கடவுள் அல்லது ஆன்மாவே உருவான குருவானவர், உள்ளுக்குள்ளிருந்து வேலை செய்கிறார். அவர் மனிதரை, தனது வழிகளின் தவரான போக்கைக் காண உதவுகிறார். ஆன்ம ஞானம் பெறும் வரையில்  மனிதருக்கு சரியான பாதையில் செல்ல வழிகாட்டுகிறார்.

இத்தகைய ஆன்ம ஞானத்திற்குப் பிறகு பக்தர் பின்வருமாறு உணருகிறார். “நான் எவ்வளவு கவலைப் பட்டுக் கொண்டிருந்தேன். நான் ஆன்மாவே தான். முன்பு  போலவே தான் உள்ளேன், ஆனால் எதாலும் பாதிக்கப்படாமல் இருக்கிறேன். முன்பு துன்பத்தில் ஆழ்ந்திருந்தவன் இப்போது எங்கிருக்கிறான்? அவனை எங்கும் காணோம்!” 

மகரிஷி தொடர்ந்தார். இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்? ஆசானின் சொற்களைப் பின்பற்றி செயல்பட வேண்டும். உள்ளுக்குள்  செயல்பட வேண்டும். குரு உட்புறமும் இருக்கிறார், வெளிப்புறமும் இருக்கிறார்.  உங்களை அகமுகமாக திருப்ப அதற்குத் தகுந்த சூழ்நிலைகள் ஏற்படுத்துகிறார். உங்களை உள்ளுக்குள் மையத்திற்கு இழுக்க உட்புறத்தைத் தயார் செய்கிறார். எனவே, அவர் வெளியிலிருந்து தள்ளுகிறார்; நடு மையத்தில் பொருந்தி உறைய உட்புறத்திலிருந்து இழுக்கிறார்.

பக்தர்: அருள் என்பது குருவின் அன்பளிப்பு இல்லையா?  
மகரிஷி: கடவுள், அருள், குரு எல்லாம் ஒன்றே தான். அவை நிரந்தரமானவை, எங்கும் வியாபித்து உள்ளவை. ஆன்மா ஏற்கனவே உள்ளே இல்லையா? அது ஒரு குரு தன் பார்வையால் கொடுப்பதா என்ன? அப்படி ஒரு குரு நினைத்தால், அவரை குருவென்று அழைப்பதற்கு அவருக்குத் தகுதியில்லை.  

~~~~~~~~

உரையாடல் 518.

ஒரு பண்டிதர் அருளின் இயக்கத்தைப் பற்றி கேட்டார்.  அருள் என்பது, குருவானவர் பக்தரின் மனதில் ஏதாவது செய்வதா, அல்லது அது வேறு ஏதாவதா?  

மகரிஷி: இருப்பதற்குள் மிகவும் உயர்வான அருள் மௌனம் தான். அதுவே மிகவும் உயர்ந்த உபதேசமும் ஆகும்.   

பக்தர்: மௌனம் தான் சத்தமான பிரார்த்தனை என்று விவேகானந்தர் கூட சொல்லியிருக்கிறார்.    
மகரிஷி: பக்தரின் மௌனத்திற்கு அது சரி தான். ஆனால், குருவின் மௌனம் சத்தமான உபதேசம். அது மிகவும் உயர்ந்த அருளும் ஆகும். தொடுவது, கண் பார்வை போன்ற மற்ற தீட்சைகள், மௌனத்திலிருந்து தான் வருவிக்கப் படுகின்றன. எனவே அவையெல்லாம் இரண்டாம்பட்சமானவை. மௌனம் தான் பிரதானமானது. குரு மௌனமாக இருந்தால், பக்தரின் மனம் தானாகவே தூய்மை அடைகிறது.     

பக்தர்: ஒருவர் உலக இன்னல்களினால் துன்புறும்போது, கடவுளிடமோ குருவிடமோ பிரார்த்தனை செய்வது சரியா? 
மகரிஷி: சந்தேகமின்றி.

~~~~~~~~

உரையாடல் 425.

மகரிஷி: மனத்திண்மையும் அதைப் போன்ற மற்றவையும் பயிற்சியினால் பெறப்படுகிறது.          

பக்தர்: வெற்றி பெறுவது குருவின் அருளினால் இல்லையா?  
மகரிஷி: ஆமாம், அது அவரது அருளினால் தான். உங்கள் பயிற்சியே இத்தகைய அருளினால் தான் உள்ளது, இல்லையா? பலன்கள் பயிற்சியின் விளைவாகும். அவை பயிற்சியை தானாகவே தொடரும்.  கைவல்யத்தில் ஒரு வரிசை இருக்கிறது. அது என்னவென்றால், “குருபரனே! நீங்கள் என்னுடைய பல ஜன்மங்களில் எப்போதும் என் மேல் கவனம் செலுத்திக் கொண்டு, நான் முக்தி அடையும் வரை என்னுடைய  நடவடிக்கைகளை நியமித்துக் கொண்டிருந்தீர்கள்.”

பிறகு மகரிஷி தொடர்ந்து சொன்னார். சமயம் வரும்போது, ஆன்மா வெளிப்புறத்தில் குருவாக வெளிப்படுகிறது. மற்ற சமயங்களில், அது  தேவையானதைச் செய்தவாறு,  எப்போதும் உள்ளுக்குள் உறைகிறது.

~~~~~~~~

 

தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா 

 

தெய்வீக அருள் என்றால் என்ன? அதைப் பெறுவது எப்படி? (4)
தெய்வீக அருள் என்றால் என்ன? அதைப் பெறுவது எப்படி? (2)
தெய்வீக அருள் என்றால் என்ன? அதைப் பெறுவது எப்படி? (3)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!