தெய்வீக அருள் என்றால் என்ன? அதைப் பெறுவது எப்படி? (1)
ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள்
உரையாடல் 29.
ஒரு சமயம், மாலைப் பொழுது அமைதியாகவும் மேகமூட்டமாகவும் இருந்தது. சிறிதளவு தூறல் போட்டுக்கொண்டிருந்தது. அதனால் கொஞ்சம் குளிர்ச்சியாக இருந்தது. மகரிஷி வழக்கம் போல் ஸோபாவின் மேல் அமர்ந்திருந்தார். அவரெதிரில் பக்தர்கள் அமர்ந்திருந்தனர்.
உரையாடல் “ஈஸ்வர பிரசாதம்”, அதாவது “கடவுள் அருள்” பற்றி திரும்பியது. எங்கும் நிறைந்த சொருப சாம்ராஜ்யம் அடைய தெய்வீக அருள் அவசியமா? அல்லது, ஒரு ஜீவனின் நேர்மையான, தளர்வுறாத முயற்சிகள் மட்டுமே அந்த ஜீவனை பிறப்புக்கும் இறப்புக்கும் திரும்பாமல் உள்ள நிலையை அடைய வழிகாட்டுமா?” என்ற கேள்வி கேட்கப்பட்டது.
மகரிஷி, அவரது முகம் முழுவதையும் ஒளிர்வித்து, எங்கும் பரவி விளங்கி, அவரைச் சூழ்ந்திருந்த பக்தர்களின் மீது பிரகாசித்த ஒரு சொல்லொணாத புன்னகையுடன், மிகவும் உறுதியான தொனியுடனும், உண்மையின் முத்திரையுடனும் பதிலளித்தார்.
“தெய்வீக அருள் சொரூப ஞானத்திற்கு மிகவும் அவசியமானது. அது, ஒருவர் கடவுளை அறிந்து உணர வழிகாட்டுகிறது. ஆனால் இத்தகைய அருள், முக்தியின் பாதையில் இடைவிடாமல், மிகவும் கடினமாக உழைத்து முயற்சி செய்துள்ள ஒரு உண்மையான பக்தர் அல்லது யோகிக்கு மட்டுமே இணங்கி அளிக்கப்படுகிறது.
பக்தர்.: அலையாத, நிலையான அமைதியுள்ள, வெற்றிகரமான மனதை அடைய தெய்வீக அருள் தேவை என்று சொல்லப்படுகிறது. இது உண்மை தானா?
மகரிஷி.: நாமே கடவுள், ஈஸ்வரர் தான். ஈஸ்வர திருஷ்டி, அதாவது நம்மைக் கடவுளாகக் காண்பது, அதுவே தெய்வீக அருள் தான். எனவே கடவுளின் அருள் பெற நமக்கு தெய்வீக அருள் வேண்டியிருக்கிறது! மகரிஷி புன்சிரிக்கிறார். எல்லா பக்தர்களும் ஒன்றாகச் சிரிக்கின்றனர்.
பக்தர்.: ஈஸ்வர பிரசாதம், அதாவது தெய்வீக அருள்; இதிலிருந்து வேறுபட்டு ஈஸ்வர அனுக்கிரகம், அதாவது தெய்வீக தயவு என்றும் உள்ளது. இது உண்மையா?
மகரிஷி.: கடவுளைப் பற்றி நினைப்பது தான் தெய்வீக தயவு, ஈஸ்வர அனுக்கிரகம்! கடவுள் தமது தன்மையில் அருள் தான். கடவுளின் அருளால் தான் நீங்கள் கடவுளைப் பற்றி நினைக்கிறீர்கள்.
பக்தர்.: குருவின் அருள், கடவுளின் அருளினால் கிடைக்கும் விளைவில்லையா?
மகரிஷி.: அவை இரண்டுக்கும் இடையில் ஏன் வித்தியாசம் காண வேண்டும்? குரு கடவுளே தான்; கடவுளை விட்டு வேறு வித்தியாசமானவர் இல்லை.
~~~~~~~~
உரையாடல் 251.
மிகவும் புத்திசாலியாகவும், அதே சமயத்தில் ஆழ்ந்து சிந்திப்பராகவும் தோன்றிய ஒரு உயர்குடி இயல்புள்ள பெண்மணி கேட்டார் :
பக்தர்.: மஹராஜ் ஜி, மன அமைதி அடைவது எப்படி என்று தெரிந்துக் கொள்ள நான் விரும்புகிறேன். தயவு கூர்ந்து, அருள் செய்து எனக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
மகரிஷி.: ஆமாம் – பக்தியும் சரணாகதியும்.
பக்தர்.: ஒரு பக்தராக இருக்க எனக்கு தகுதி இருக்கிறதா?
மகரிஷி.: எல்லொரும் ஒரு பக்தராக இருக்க முடியும். ஆன்மீக வழிகள் எல்லோருக்கும் பொதுவானது. வயதானவரானாலும், இளைஞரானாலும், ஆண் ஆனாலும், பெண் ஆனாலும், அவை யாருக்கும் மறுக்கப் படுவதில்லை.
பக்தர்.: அதைத் தான் தெரிந்துக் கொள்ள நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். நான் ஒரு இளம் வயதுள்ள ஒரு இல்லாள், குடும்ப நிர்வாகி. எனக்கு குடும்ப சம்பந்தமான, கிரகஸ்த தர்மத்தைச் சார்ந்த கடமைகள் உள்ளன. இத்தகைய நிலைப்பாட்டுடன் பக்தி முரண்படாமல் இசைவாக இருக்குமா?
மகரிஷி.: நிச்சயமாக. நீங்கள் என்ன? நீங்கள் உடல் இல்லை. நீங்கள் சுத்த சைதன்யம். கிரகஸ்த தர்மம், உலகம், இவையெல்லாம் அந்த சுத்த சைதன்யத்தில் தோன்றும் தோற்றப்பாடுகள் தான். இவற்றால் சுத்த சைதன்யம் பாதிக்கப்படாமல் இருக்கிறது. நீங்கள் உங்களது சுய சொரூபமாக இருப்பதை தடை செய்வது என்ன?
….
பக்தர்.: இது கஷ்டமாக தோன்றுகிறது. பக்தி மார்க்கத்தில் செல்லலாமா?
மகரிஷி.: அது ஒருவரது தனிப்பட்ட மனோநிலையையும், உபகரணங்களையும் பொருத்தது. பக்தியும் சுய விசாரணையும் ஒன்றே தான்.
பக்தர்.: நான் குறிப்பிடுவது, தியானம் பொன்றவை.
மகரிஷி.: ஆமாம். தியானம் ஒரு உருவின் மேல் இருக்கும். அது மற்ற எண்ணங்களைத் துரத்தி விடும். கடவுளைப் பற்றிய ஒரே எண்ணம் மற்றவற்றை எல்லாம் ஆதிக்கம் செய்யும். அது தான் ஒருமுக சிந்தனை. எனவே, தியானத்தின் குறிக்கோளும், சுய விசாரணையின் குறிகோளும் ஒன்றே தான்.
….
பக்தர்.: நான் பகவானின் அருளை வேண்டுகிறேன். நான் எனது இல்லத்திற்குத் திரும்பியதும், நான் பகவானை மறவாமல் நினவில் வைக்க விரும்புகிறேன். மிக்க அருள் கூர்ந்து, தயவுசெய்து, பகவான் எனது வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும்.
….
மகரிஷி.: அருளைப் பொறுத்தவரையில், அருள் உங்களுக்குள் தான் இருக்கிறது. அது வெளிப்புறத்தில் இருந்தால், அது உபயோகமற்றது. அருள் தான் சுய சொரூபம். நீங்கள் எப்போதும் அதன் இயக்கத்திற்கு வெளியில் இல்லை. அருள் எப்போதும் இருக்கிறது.
….
அருள் தான் சுய சொரூபம். “நீங்கள் பகவானை ஞாபகம் வைத்துக் கொண்டால், அது ஆன்மா உங்களை அப்படிச் செய்யத் தூண்டுவதால் தான்” என்று நான் ஏற்கனவே சொல்லி விட்டேன். அருள் ஏற்கனவே இருக்கிறது, இல்லையா? அருள் உங்களுக்குள் இயங்காத ஒரு நொடி கூட உள்ளதா? நீங்கள் அதை நினைவில் வைத்துக் கொள்வது தான் அருளுக்கு முன்னோடியானது. அது தான் பதிலும், அது தான் ஊக்கம் அல்லது தூண்டுதல், அது தான் ஆன்ம சுய சொரூபம், அது தான் அருள். கவலைப் படுவதற்குக் காரணம் ஏதும் இல்லை.
….
பக்தர்.: அப்படியானால் நான் உலக வாழ்வில் இருந்துக் கொண்டே ஆன்மீக சாதனையில் ஈடுபடவேண்டும். சரி, நான் இந்த ஜன்மத்தில் ஆன்ம ஞானம் பெற முடியுமா?
மகரிஷி.: இதற்கு ஏற்கனவே பதில் சொல்லப்பட்டது. நீங்கள் தான் ஆன்மா. உண்மையான, தீவிரமான எத்தனங்கள் எப்போதும் தோல்வி அடையாது. வெற்றி நிச்சயமாக விளையும்.
~~~~~~~~
உரையாடல் 217.
திரு. ஏ. போஸ், மும்பயில் உள்ள ஒரு பொறியாளர் கேட்டார்: பகவான் எங்களைப் பற்றி உணர்ந்து அருள் காட்டுகிறாரா?
மகரிஷி.: நீங்கள் கழுத்து வரையில் தண்ணீரில் மூழ்கி இருந்தும், தண்ணீருக்காக கத்துகிறீர்கள். இப்படி சொல்வது, கழுத்து வரையில் தண்ணீரில் மூழ்கியிருக்கும் ஒருவருக்கு தாகம் எடுக்கிறது என்று சொல்வதற்கு இணையாகும். அல்லது, தண்ணீரில் உள்ள ஒரு மீனுக்கு தாகம் எடுக்கிறது என்றோ, அல்லது, தண்ணீருக்கே தாகம் எடுக்கிறது என்றோ சொல்வதற்கு ஒப்பாகும்.
~~~~~~~~
உரையாடல் 505.
பாபு ராஜேந்திர பிரசாத் சொன்னார்: நான் மகாத்மா காந்தியின் அனுமதியுடன் இங்கு வந்திருக்கிறேன். நான் சீக்கிரம் அவரிடம் திரும்பிச் செல்ல வேண்டும். ஶ்ரீ பகவான் அவருக்காக என்னிடம் ஒரு அறிவுரை கொடுக்க முடியுமா?
மகரிஷி.: ஆத்யாத்ம சக்தி அவருள் வேலை செய்துக் கொண்டிருக்கிறது; அவருக்கு வழிகாட்டிச் செல்கிறது. அது போதும். வேறென்ன வேண்டும்?
~~~~~~~~
உரையாடல் 496.
ராமகிருஷ்ணா மிஷனைச் சேர்ந்த ஒரு சுவாமி கேட்டார்:
பக்தர்.: ஆன்மா ஒன்று தான்; இருந்தாலும் இப்போது எனக்குள்ள இன்னலிலிருந்து என்னால் விடுபட முடியவில்லை.
மகரிஷி.: இதைச் சொல்வது யார்? ஒன்றே ஒன்றாக இருக்கும் ஆன்மாவா? கேள்வி தன்னிடமே முரண்படுகிறது.
பக்தர்.: ஆன்ம ஞானத்திற்கு அருள் தேவை.
மகரிஷி.: இப்போது ஒரு மனிதரான நீங்கள், ஒரு உயர்ந்த சக்தி உங்கள் வழிகாட்டுகிறது என்று புரிந்துக் கொள்வது, அருளால் தான். அருள் உங்களுக்குள் இருக்கிறது. ஈஸ்வரோ குரூராத்மேதி. அதாவது ஈஸ்வரர் என்பதன் பொருளும், குரு என்பதன் பொருளும் ஒன்றே தான்.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா