திரு ரமண மகாமுனிவர் அருளிய
அருணாசல நவமணிமாலை
(வெண்பா)
1.
அசலனே யாயினு மச்சவை தன்னி
லசலையா மம்மையெதி ராடு மசல
வுருவிலச் சத்தி யொடுங்கிட வோங்கு
மருணா சலமென் றறி.
பொருள்:
பரமேச்வரன் சுபாவத்தில் சலனமற்றவரே ஆனாலும், சிதம்பர பொற்சபையில் பராசக்தியின் எதிரில் நடனம் ஆடுகின்றார். ஆனால் அந்தப் பராசக்தி இங்கு அருணாசல சொரூபத்தில் ஒன்றி ஒடுங்கவும், இந்த க்ஷேத்திரம் மிகுந்த சிறப்புடன் ஓங்கி ஒளிர்கின்றது என்று அறிக.
(கட்டளைக் கலித்துறை)
2.
சத்திய சிற்சுக மன்றிப் பரவுயிர் சாரயிக்க
மர்த்தவத் தத்வ மசியரு ணப்பொரு ளாமசலத்
தர்த்தங் கனமது வாகுஞ்செவ் வாடக வாரொளியா
முத்தி நினைக்க வருளரு ணாசல முன்னிடவே.
பொருள்:
செம்பொன் போல ஒளிவீசும் ஜோதி சொரூபமானதும், நினைத்த மாத்திரத்தில் முக்தியை அளிக்கக் கூடியதுமான அருணசல என்ற பதத்தில் அருண என்பதன் பொருள்: சத்-சித்-ஆனந்தம்; ஜீவ-பிரம்ம-ஐக்கியம்; அது நீயாக இருக்கிறாய் (தத்வமசி) என்பதாகும். அசல என்றால் அசையாத மிகவும் மகிமையும், மாண்பும் உடையதாம்.
(விருத்தம்)
3.
அருணா சலத்திலுறு கருணா கரப்பரம
னருணார விந்த பதமே
பொருணாடு சுற்றமொடு வருணாதி பற்றியுள
மருணாட லற்று நிதமுந்
தெருணா டுளத்தினின லருணாடி நிற்குமவ
ரிருணாச முற்று புவிமேற்
றருணா ருணக்கதிரி னருணாளு முற்றுசுக
வருணால யத்தி லிழிவார்.
பொருள்:
கருணைக் கடலாகிய அருணாசல இறைவனின் செந்தாமரை திருவடிகளின் அருளையே நாடி நிற்கும் பக்குவிகள், இந்த உலகில் வாழும் போதே ஊர், உடமை, உறவினர், ஜாதி, வர்ணம் ஆகியவற்றில் மோகத்தை ஒழித்து, எப்போதும் தெளிவையே நாடிய உள்ளத்தால் அஞ்ஞானம் அழியப்பெற்று, உதயசூரியனின் இளங் கிரணங்களைப் போன்ற மென்மையான அருளை அடைந்து எப்போதும் பேரின்பக் கடலில் மூழ்கியிருப்பர்.
(வேறு)
4.
அண்ணா மலையுனை யெண்ணா னெனவெனை
யண்ணாந் தேங்கிட வெண்ணாதே
மண்ணா மலவுட லெண்ணா வகமென
மண்ணா மாய்ந்திட வொண்ணாதே
தண்ணா ரளிசெறி கண்ணா டொருகிறி
பண்ணா தென்னிரு கண்ணாளா
பெண்ணா ணலியுரு நண்ணா வொளியுரு
வண்ணா லென்னக நண்ணாயே.
பொருள்:
அண்ணாமலையே! எனது கண்களுக்கு இனிமையானவனே! பெண், ஆண், நடுநிலை என்னும் பேத உருவங்களைக் கடந்தவனே! உன்னை நினைக்காதவன் என்று, என்னை நீ அண்ணாந்து ஏங்கும்படி செய்யாதே. மண்ணோடு மண்ணாய்ப் போகும் இந்த உடலையே நான் என்று எண்ணி, நான் மண்ணாக மடிந்துபோவது உன் அருளுக்கு ஏற்புடையது அல்ல. குளிர்ச்சி மிகுந்த உன் கருணை நோக்கால் என்னைக் கடாக்ஷித்து, வஞ்சனை செய்யாது, ஜோதி உருவாகிய பரமேச்வரனே! எனது உள்ளத்தில் விளங்குவாயாக.
(வேறு)
5.
சீரான சோணகிரி சிறக்க வாழுஞ்
சிற்சொருப னாமிறையே சிறிய னேன்றன்
பேரான பிழையெல்லாம் பொறுத்துக் காத்துப்
பின்னுமிவன் பாழிதனில் வீழா வண்ணங்
காரான கருணைவிழி கொடுப்பா யின்றேற்
கடும்பவத்தி னின்றுகரை யேற மாட்டே
னேரான துண்டோதாய் சிசுவுக் காற்று
நிகரற்ற நலனுக்கு நிகழ்த்து வாயே.
பொருள்:
அருணாசலம் எனப் புகழுடன் சிறந்து விளங்கும், ஞானவடிவாகிய பரமேச்வரனே! சிறியவனாகிய நான் செய்த பெரும் பிழைகளைப் பொருட்படுத்தாது, என்னை ரக்ஷித்து, அஞ்ஞானமய உலக பந்தங்களில் நான் வீழ்ந்து மாய்ந்து போகாவண்ணம், மேகம் போன்று வர்ஷிக்கும் உன் கருணை கடாக்ஷத்தை அருள்வாயாக. இல்லாவிடில் கொடிய பிறவி எனும் துன்பக் கடலிலிருந்து மீண்டு முக்திக் கரையை நான் அடைய மாட்டேன். ஒருதாய் தன் குழந்தைக்குச் செய்யும் நிகரில்லாத நன்மைகளைப் போன்று நீயும் எனக்கு அருள்வாயாக.
(வேறு)
6.
காமாரி யென்றுநீ யன்பரா லென்றுமே
கதித்திடப் படுகின்றா
யாமாமெ யுனக்கிது வாமாவென் றையுறு
மருணாச லேச்சுரனே
யாமாயி னெங்ஙனந் தீரனே சூரனே
யாயினும் வல்லனங்கன்
காமாரி யாகுமுன் காலரண் சரண்புகு
கருத்தினுட் புகவலனே.
பொருள்:
அருணாசலேச்வரனே! நீ காமனை எரித்தவன் (காமாரி) என்று பக்தர்களால் போற்றப்படுகின்றாய். ஆமாம்! ஆமாம்! இது உண்மையே என்றால் உனக்கிந்தப் பெயர் பொருத்தம்தானா என்று சந்தேகப்படுகின்றேன். இப்பெயர் உனக்குப் பொருத்தமாயின், காமன் எவ்வளவுதான் வீரமும் துணிவும் உடையவன் ஆனாலும், அந்தச் சரீரமற்ற காமனை எரித்தவனாகிய உன் பாதத்தையே பாதுகாப்பாகக் கொண்ட பக்தனின் மனதில் அந்தக் காமன் எப்படிப் புக முடியும்?
(வேறு)
7.
அண்ணா மலையா யடியேனை
யாண்ட வன்றே யாவியுடற்
கொண்டா யெனக்கோர் குறையுண்டோ
குறையுங் குணமு நீயல்லா
லெண்ணே னிவற்றை யென்னுயிரே
யெண்ண மெதுவோ வதுசெய்வாய்
கண்ணே யுன்றன் கழலிணையிற்
காதற் பெருக்கே தருவாயே.
பொருள்:
அண்ணாமலையானே! அடியவனாகிய என்னை என்று நீ ஆட்கொண்டாயோ அன்றே, எனது உயிரையும் உடலையும் அடிமையாக்கிக் கொண்டாய். எனக்கு இனி ஒரு குறையும் இருக்க முடியுமோ? உன்னை அன்றி குணங்களையும் குறைகளையும் சிந்திக்க மாட்டேன். என் உயிருக்கும் உயிரே! உனக்குப் பிரியமானது எதுவோ அதையே நீ எனக்கு செய்தருள்வாய். கண்ணுக்கும் கண்ணான தெய்வமே! உனது திருவடித் தாமரைகளில் உறைய பக்திப் பெருக்கைத் தந்து அருள்வாயாக.
(வேறு)
8.
புவிக்குட் பொங்கிடும் புவிச்சொற் புங்கவன்
புரிக்குட் புண்ணியன் சுழிக்குட் சுந்தரன்
றவற்குச் சுந்தரஞ் சதிக்குற் பன்னனந்
தலத்திற் புன்புலன் சழக்கிற் றுன்புறுந்
தவிக்குத் துஞ்சிடும் படிக்குத் தன்னுளந்
தழைக்கத் தன்பத மெனக்குத் தந்தனன்
சிவக்கச் சின்மயஞ் செழிக்கத் தன்மயஞ்
செகத்திற் றுன்னுசெம் பொருப்புச் செம்மலே.
பொருள்:
இந்த உலகில் உள்ள சிவ க்ஷேத்திரங்களுக்குள் சிறந்த திருச்சுழியில் உள்ள தர்ம தம்பதியரான சுந்தரனுக்கும் சுந்தரிக்கும் நான் பிறந்தனன். உலக வாழ்வில் புலன்களின் கொடுமையில் துன்பப்படும் முன்னமே எனது உள்ளம் பேரின்பத்தில் தழைக்கும்படியாக, உலகில் ஞான ஒளிபரவவும், சொரூபப் பிரகாசம் செழிக்கவும் விளங்கும் செம்பொருப்பு செம்மலாம் அருணாசலன், தனது சிவ சாயுச்சியப் பதவியை எனக்குத் தந்தருளினான்.
(கட்டளைக் கலித்துறை)
9.
அம்மையு மப்பனு மாயெனைப் பூமியி லாக்கியளித்
தம்மகி மாயையெ னாழ்கடல் வீழ்ந்துயா னாழ்ந்திடுமுன்
னென்மன மன்னி யிழுத்துன் பதத்தி லிருத்தினையால்
சின்மய னாமரு ணாசல நின்னருட் சித்ரமென்னே.
பொருள்:
ஞான தேஜோமய அருணாசலனே! நீயே தாயாகவும் தந்தையாகவும் இருந்து, என்னைப் பிறப்பித்துக் காத்தருளினாய். மகாமாயையென்னும் பிறவிக் கடலில் விழுந்து நான் மூழ்கிப் போகும் முன்னம், நீ என் மனத்தின்கண் தோன்றி, என்னை உன்பால் ஈர்த்து உன் சொரூப நிலையில் அமர்வித்தனையே! உனது திருவருளின் விந்தை என்னென்று சொல்லுவேன்!
(From Sri Ramananasramam Website)