திரு ரமண மகாமுனிவர் அருளிய
அருணாசல பதிகம்
(எழுசீர்விருத்தம்)
1.
கருணையா லென்னை யாண்டநீ யெனக்குன்
காட்சிதந் தருளிலை யென்றா
லிருணலி யுலகி லேங்கியே பதைத்திவ்
வுடல்விடி லென்கதி யென்னா
மருணனைக் காணா தலருமோ கமல
மருணனுக் கருணனா மன்னி
யருணனி சுரந்தங் கருவியாய்ப் பெருகு
மருணமா மலையெனு மன்பே.
பொருள்:
மாண்புமிக்க அருணாசலம் என்னும் அன்புருவே, உலகுக்கு ஒளியூட்டும் சூரியனுக்கும் ஒளிதரக்கூடிய ஞானசூரியனாய் விளங்குபவனே! ஊற்றெடுத்து வற்றாத அருவியாய்ப் பெருகுகின்ற உனது அவ்வியாஜ கருணையினால் என்னை நீ ஆட்கொண்ட ருளினாய். இனி எனக்கு உனது சொரூப தரிசனத்தைக் கொடுத்து அருளாவிடில், அஞ்ஞான இருளில் துன்புற்று இந்த உலகத்தில், உன் அருள் தரிசனத்திற்காக ஏங்கிப் பதைப்புற்று சரீரத்தை விடும்படி நேரிடுமானால் என்னுடைய கதி என்னவாகும்? சூரியனைக் காணாது தாமரை மலர்ந்திடுமா? எனக்கு அருள்புரிவாயாக!
2.
அன்புரு வருணா சலவழன் மெழுகா
யகத்துனை நினைந்துநைந் துருகு
மன்பிலி யெனக்குன் னன்பினை யருளா
தாண்டெனை யழித்திட லழகோ
வன்பினில் விளையு மின்பமே யன்ப
ரகத்தினி லூறுமா ரமுதே
யென்புக லிடநின் னிட்டமென் னிட்ட
மின்பதெற் கென்னுயி ரிறையே.
பொருள்:
அன்பே சொரூபமான அருணாசலா! உன்னை நினைந்து தீயிலிட்ட மெழுகுபோல, நெகிழ்ந்து கனிந்து உருகும்படியான பூரண பக்தி இல்லாத எனக்கு, உன்னிடத்தில் அத்தகைய பக்தியை அனுக்கிரக்காமல் என்னைப் புறக்கணித்து அழிந்து போகும்படி கைவிடுவது உனக்கு அழகாகுமா? அன்பினில் விளைந்த ஆனந்தமயனே! மெய்யன்பர்களின் உள்ளத்தில் ஊறுகின்ற தெவிட்டாத அமுதமே! என் உயிருக்கும் உயிரான பிராண நாதனே! உனது விருப்பம் எதுவோ அதுவே எனது விருப்பமுமாகும். அதுவே எனக்கு இன்பமுமாகும்.
3.
இறையுனை நினையு மெண்ணமே நண்ணா
வெனையுன தருட்கயிற் றாலீர்த்
திறையுயி ரின்றிக் கொன்றிட நின்றா
யென்குறை யியற்றின னேழை
யிறையினிக் குறையென் குற்றுயி ராக்கி
யெனைவதைத் திடலெதற் கிங்ங
னிறைவனா மருணா சலவெண முடித்தே
யேகனா வாழிநீ டூழி.
பொருள்:
உயிர்களுக்கு இறைவனாகிய அருணாசல! உன்னைத் தியானிக்கும் எண்ணமே இல்லாத என்னை நீயே வலியவந்து உனதருட் கயிற்றால் இழுத்து வந்து (ஈசுவர-ஜீவ பேதபாவனை அற்றுப் போகும்படி) என்னைக் கொல்வதற்கென்றே நிற்கின்றாயே! எளியேன் என்ன தவறு செய்தேன்? இறைவா, என்னைக் கொல்வதற்கு இனியும் என்ன தடையிருக்கிறது? என்னை முற்றும் கொல்லாது குற்றுயிராக்கி சித்ரவதை செய்வது எதற்காக? நீ எண்ணியதைப் பூரணமாக நிறைவேற்றி எக்காலத்தும் நீ ஒருவனாகவே வாழ்ந்து ஒளிர்வாயாக!
4.
ஊழியில் வாழு மாக்களி லென்பா
லூதியம் யாதுநீ பெற்றாய்
பாழினில் வீழா தேழையைக் காத்துன்
பதத்தினி லிருத்திவைத் தனையே
யாழியாங் கருணை யண்ணலே யெண்ண
வகமிக நாணநண் ணிடுமால்
வாழிநீ யருணா சலவுனை வழுத்தி
வாழ்த்திடத் தாழ்த்துமென் றலையே.
பொருள்:
கருணைக் கடலாகிய இறைவனே! அஞ்ஞானமாகிய மாயையில் உழலாது இந்த எளியனைக் காப்பாற்றி, உனது சாயுச்சிய பதத்தில் நிலையாக வைத்தனையே! உலகத்தில் வாழும் மற்ற மனிதர்களைவிட என்னிடத்திலிருந்து என்ன லாபத்தை நீ அடைந்தாய்? உனது பேரருளை எண்ணுந்தோறும் எனதுள்ளம் மிகவும் வெட்கமடைகின்றது. அருணாசலனே நீ வாழ்க! உன்னைத் தலைவணங்கிப் போற்றித் துதிக்கின்றேன்.
5.
தலைவநீ யென்னைக் களவினிற் கொணர்ந்துன்
றாளிலிந் நாள்வரை வைத்தாய்
தலைவநின் றன்மை யென்னவென் பார்க்குத்
தலைகுனி சிலையென வைத்தாய்
தலைவநான் வலைமான் றனைநிக ராதென்
றளர்வினுக் கழிவுநா டிடுவாய்
தலைவனா மருணா சலவுள மேதோ
தமியனார் தனையுணர் தற்கே.
பொருள்:
தலைவனாகிய அருணாசலா! நீ என்னை யாரும் அறியாதபடி கவர்ந்து கொண்டுவந்து உனது திருவடி நிழலில் இன்றுவரையில் வாழ்ந்திருக்கச் செய்துவிட்டாய். உனது உண்மை சொரூபம் எத்தகையது என்று கேட்பவர்களுக்கு அதை உள்ளபடி விளக்க முடியாமல் என்னைக் கற்சிலைபோல் செய்துவிட்டாய். வலையில் சிக்கிய மானைப் போன்றுள்ள எனது சோர்வினுக்கு நாசம் உண்டாகும்படி எனக்கு அருள்செய்வாய். உனது திருவுள்ளம் எதுவோ அதனை அறிந்து கொள்வதற்கு உனது அடியவனாகிய நான்யார்? அதற்கான உரிமை எனக்கேது?
6.
தற்பர நாளுந் தாளினிற் றங்கித்
தண்டலர் மண்டுக மானேன்
சிற்பத நற்றே னுண்மல ரளியாச்
செய்திடி லுய்தியுண் டுன்ற
னற்பதப் போதி னானுயிர் விட்டா
னட்டதூ ணாகுமுன் பழியே
வெற்புரு வருண விரிகதி ரொளியே
விண்ணினு நுண்ணருள் வெளியே.
பொருள்:
பரம்பொருளே! செம்பொன் நிறமாக விரிந்து பரந்த கிரணங்களையுடைய தேஜோமய மலைவடிவ சொரூபமே! பல நாளாக உனது திருவடித் தாமரைகளில் இருந்தும், தாமரைத் தண்டின் அடியில் வசித்தும் அப்பூவின் தேனையருந்த வழியற்ற தவளையைப் போலானேன். ஞானானுபூதி நிலையாகிய நல்ல புஷ்பத்தின் தேனை உண்பதற்குப் பூவையே நாடும் வண்டாக என்னைச் செய்வாயேயானால், எனக்கு உய்யும் கதி கிடைக்கும். அப்படியின்றி உனது தூய பாதகமலங்களில் நான் உயிர் நீத்து விட்டேனாகில், அதனால் உனக்கு வரும் பழியானது, நட்ட கல்தூணைப்போல் என்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கும். ஆகாசத்தைக் காட்டிலும் நுட்பமான அருள் வெளியே! அருள்புரிவாயாக.
7.
வெளிவளி தீநீர் மண்பல வுயிரா
விரிவுறு பூதபௌ திகங்கள்
வெளியொளி யுன்னை யன்றியின் றென்னின்
வேறுயா னாருளன் விமலா
வெளியதா யுளத்து வேறற விளங்கின்
வேறென வெளிவரு வேனார்
வெளிவரா யருணா சலவவன் றலையில்
விரிமலர்ப் பதத்தினை வைத்தே.
பொருள்:
ஆகாசம், காற்று, நெருப்பு, தண்ணீர், மண் ஆகிய ஐம்பூதங்களும் அவற்றின் கலப்பால் தோன்றிய பௌதிகத் தோற்றங்களும், ஜீவராசிகளும், சிதாகாச சொரூபனாகிய உன்னையன்றி வேறு ஒன்றுமே இல்லையென்றால், உனக்கு வேறாக நான் ஒருவன் மட்டும் எப்படி இருக்க முடியும்? குற்றமற்றவனே! சிதாகாச சொரூபனாய் இதயத்தில் அபேதமாக நீ பிரகாசித்துக் கொண்டிருக்கையில், உனக்கயலாக நான் என்று தற்போத வடிவில் எழுகின்ற இந்த நான் யார்? உனது பரந்து விரிந்த மலர்ப்பாதத்தை எனது அகங்காரத் தலைமீது வைத்து அது அழிந்து போகும்படி நீ வெளிப்பட்டு வருவாய் அருணாசலா!
8.
வைத்தனை வாளா வையகத் துய்யும்
வழியறி மதியழித் திங்ஙன்
வைத்திடி லார்க்கு மின்பிலை துன்பே
வாழ்விதிற் சாவதே மாண்பாம்
பைத்தியம் பற்றிப் பயனறு மெனக்குன்
பதமுறு மருமருந் தருள்வாய்
பைத்திய மருந்தாப் பாரொளி ரருண
பருப்பத வுருப்பெறு பரனே.
பொருள்:
உலகப் பித்தாகிய மயக்கத்திற்கு மருந்தாகப் பிரகாசிக்கும் செம்பொன்நிற அருணாசலனே! இவ்வுலகில் சிறப்பாக வாழ்ந்து பயனடையும் வழியை அறியக்கூடிய புத்தியை அழித்து, என்னை எதற்கும் உதவாது சும்மா இருக்கும்படி செய்துவிட்டாய். இதனால் யாருக்கும் இன்பமில்லை. மாறாகத் துன்பமே! இத்தகைய வாழ்க்கையைவிட இறந்து ஒழிவதே உயர்வாகும். உனது ஆசையினால் பித்துப்பிடித்து எந்தப் பயனையும் பெறாத எனக்கு, உனது சாயுச்சியப் பதத்தை அடைவதற்கான அரிய மருந்தை அருள்வாயாக!
9.
பரமநின் பாதம் பற்றறப் பற்றும்
பரவறி வறியரிற் பரமன்
பரமுனக் கெனவென் பணியறப் பணியாய்
பரித்திடு முனக்கெது பாரம்
பரமநிற் பிரிந்திவ் வுலகினைத் தலையிற்
பற்றியான் பெற்றது போதும்
பரமனா மருணா சலவெனை யினியுன்
பதத்தினின் றொதுக்குறப் பாரேல்.
பொருள்:
பரம்பொருளாகிய அருணாசலா! உலகப்பற்றாகிய பந்தங்கள் நீங்கும்படியாக உன் சரணார விந்தங்களைப் பற்றிக் கொள்கின்ற மெய்யறிவு இல்லாத அவிவேகிகளில் நானே முதன்மையானவன். என்னை உய்விக்கும் பொறுப்பை உன்னுடையதாகவே ஏற்றுக் கொண்டு, என் செயல்கள் யாவும் அறவே ஓயும்படி செய்தருள்வாயாக. எல்லாவற்றையும் தாங்கிடும் உனக்கு எதுதான் பாரமாகும்? மதிமயக்கத்தினால் உன்னைவிட்டுப் பிரிந்து உலக பந்தத்தை என் தலையில் சுமந்துகொண்டு இதுவரை நான் அடைந்த துயரம் போதும். அருணாசலா! இனிமேலாவது என்னை உன் திருவடிகளின் பாதுகாப்பிலிருந்து விலக்குவதற்கு நினையாது கருணை புரிவாயாக!
10.
பார்த்தனன் புதுமை யுயிர்வலி காந்த
பருவத மொருதர மிதனை
யோர்த்திடு முயிரின் சேட்டையை யொடுக்கி
யொருதன தபிமுக மாக
வீர்த்ததைத் தன்போ லசலமாச் செய்தவ்
வின்னுயிர் பலிகொளு மிஃதென்
னோர்த்துய்மி னுயிர்கா ளுளமதி லொளிரிவ்
வுயிர்க்கொலி யருணமா கிரியே.
பொருள்:
உலகத்தில் வாழும் மக்களே! கண்டேன் ஒரு அதிசயத்தை! தன்னை நினைக்கும் உயிரைக் கவர்ந்து இழுக்கக்கூடிய காந்த சக்தியை உடைய மலை இது. இதை ஒருதரம் நினைக்கக் கூடிய ஜீவனின் மனச் சலனங்களை ஒடுக்கி, தன்போலவே சலனமறச் செய்து, அதனைத் தனக்கு உணவாக உண்டு விடுகிறது! இது என்ன ஆச்சரியம்! உள்ளத்தில் உயிருக்கு உயிராய் விளங்கும் இந்த அருணாசலத்தையே இடைவிடாது மனதில் நினைந்து (அழிவற்ற பூரண வாழ்வை அடைவீராக) உய்வீராக!
11.
கிரியிது பரமாக் கருதிய வென்போற்
கெட்டவ ரெத்தனை கொல்லோ
விரிதுய ராலிப் பிழைப்பினில் விழைவு
விட்டுடல் விட்டிட விரகு
கருதியே திரிவீர் கருத்தினு ளொருகாற்
கருதிடக் கொலாமலே கொல்லு
மருமருந் தொன்றுண் டவனியி லதுதா
னருணமா திரமென வறிவீர்.
பொருள்:
அருணாசலத்தைப் பரம்பொருளாக நினைத்து என்னைப் போன்று (அகங்காரம்) கெட்டு அழிந்து போனவர்கள் எத்தனை பேர்களோ! பெருகிவரும் துன்பங்களினால் வாழ்க்கையில் வெறுப்புற்று, சரீரத்தை ஒழித்து விடுவதற்கு உபாயம் கிடைக்குமா, என்று எண்ணித் திரிகின்றவர்களே! இறப்பதற்கு ஒரு உபாயம் உங்களுக்கு கூறுகின்றேன். தேகத்தைக் கொல்லாமலே, (தேகாத்ம பாவத்தைக்) கொல்லக்கூடிய அருமையான மருந்து ஒன்று இந்த உலகத்திலேயே இருக்கிறது. அந்த அருள் மருந்துதான் அருணாசலமென்னும் மாண்புடைய மலையாகும் என்று அறிவீராக!
(From Sri Ramananasramam Website)