Arunachala Ashtakam - Verse 3
அருணாசல பஞ்சரத்னம்
அருணாசல பதிகம்

அருணாசல அஷ்டகம்

அருணாசல அஷ்டகம்
(எண்சீர் விருத்தம்)

1.
அறிவறு கிரியென வமர்தரு மம்மா
வதிசய மிதன்செய லறிவரி தார்க்கு
மறிவறு சிறுவய ததுமுத லருணா
சலமிகப் பெரிதென வறிவினி லங்க
வறிகில னதன்பொரு ளதுதிரு வண்ணா
மலையென வொருவரா லறிவுறப் பெற்று
மறிவினை மருளுறுத் தருகினி லீர்க்க
வருகுறு மமயமி தசலமாக் கண்டேன்.

பொருள்:
அம்மா என்ன அதிசயம்! ஊனக் கண்ணுக்கு ஜடமான கல்மலைபோல் இந்த அருணாசலம் அமர்ந்திருக்கிறது. இதன் அருட்செயல்களோ எவராலும் அறிய முடியாதவை. அறிவு தெரியாத குழந்தைப் பருவத்திலிருந்தே, அருணாசலம் என்றால் எல்லாவற்றையும் விட மிகப் பெரியதென்று என் புத்தியில் தோன்றிக் கொண்டிருந்தது. அது திருவண்ணாமலையேயாகும் என்று உறவினர் ஒருவரால் அறிவிக்கப்பட்டும், அதன் உண்மைப் பொருளை உள்ளபடி நான் அறியவில்லை. பிறகு என் அறிவை மயக்குவித்து அது என்னைத் தன்னிடத்திற்குக் கவர்ந்து கொள்ளவும், அதனருகில் வந்தடைந்தபோது இந்த அருணாசலம் சலனமற்ற மலைவடிவாக இருப்பதைக் கண்டேன்.

Meaning:
Ah! What a wonder! It stands as an Insentient Hill made of rocks and stones. But its actions filled with Grace are mysterious, that no one can understand, past human understanding. From the age of innocence as a child, it had shone within my mind that Arunachala was something of surpassing grandeur beyond everything. But even when I came to know through another person that it was the same as Tiruvannamalai, I did not realize its real meaning. When it lured me and drew me up to it, stilling my mind, and I came close to it, I saw this Arunachala  standing unmoving in the form of a hill.

2.
கண்டவ னெவனெனக் கருத்தினு ணாடக்
கண்டவ னின்றிட நின்றது கண்டேன்
கண்டன னென்றிடக் கருத்தெழ வில்லை
கண்டில னென்றிடக் கருத்தெழு மாறென்
விண்டிது விளக்கிடு விறலுறு வோனார்
விண்டிலை பண்டுநீ விளக்கினை யென்றால்
விண்டிடா துன்னிலை விளக்கிட வென்றே
விண்டல மசலமா விளங்கிட நின்றாய்.

பொருள்:
அசலமான இக்கிரி உருவைக் கண்டதும், இந்த மலையைப் பார்த்தவன் யார் என்று மனதை உள்முகப்படுத்தி விசாரித்தவுடன், பார்த்தவனாகிய அகந்தை இல்லாமல் போய் எஞ்சி நின்ற ஆன்மா விளங்கக் கண்டேன். அதைப் பார்த்தேன் என்று சொல்வதற்கு நானென்ற அகந்தை உதிக்கவில்லை. அதைக் காணவில்லை என்று சொல்வதற்கு மட்டும் மனம் எங்கிருந்து கிளம்ப முடியும்? ஆதிகாலத்தில் நீயே உன் சொரூபத்தை தக்ஷிணாமூர்த்தியாய் மௌனத்தால் உணர்த்தினை. இப்போது இந்த அனுபூதி நிலையை விளங்க வைக்கும் திறமை படைத்தவன் எவன் இருக்கிறான்? இதை உணர்த்துவதற்கென்றே, ஆகாசத்திற்கும் பூமிக்குமாக ஓங்கி உயர்ந்து அருணாசலமாக பிரகாசித்து நிற்கின்றாய்.

Meaning:
When I saw the unmoving form of this Hill, and when I turned within and enquired “Who is the seer?”, I saw the Real Self existing without the ego as the seer. No “I” as the ego arose to say, ‘I saw that’. How then could the thought ‘I did not see’ arise? In the ancient days, You Yourself conveyed Your transcendent state as Dakshinamurti in Silence. Who is there now with the capability to explain this divine state in words?  Only to convey this, You stand as a Hill, shining from heaven to earth.

3.
நின்னையா னுருவென வெண்ணியே நண்ண
நிலமிசை மலையெனு நிலையினை நீதா
னுன்னுரு வருவென வுன்னிடின் விண்ணோக்
குறவுல கலைதரு மொருவனை யொக்கு
முன்னுரு வுனலற வுன்னிட முந்நீ
ருறுசருக் கரையுரு வெனவுரு வோயு
மென்னையா னறிவுற வென்னுரு வேறே
திருந்தனை யருணவான் கிரியென விருந்தோய்.

பொருள்:
என்னைப்போலவே உன்னையும் உருவமுள்ளவனாக நினைந்து உன்னை அடைய நான் அணுகவும், நீயோ இப்பிரபஞ்சத்தில் அருணாசலம் என்னும் மலைவடிவமாக இருக்கின்றாய். உனது சொரூபம் உருவமற்றது என்று தியானிப்பது, எங்கும் நீக்கமற நிறைந்த ஆகாசத்தைக் காண்பதற்கு, உலகு எங்கும் அலைந்து திரிகின்ற ஒருவனுடைய முயற்சிக்கு நிகராகும். உனது உண்மை சொரூபத்தை எண்ணமற்று உள்ளபடி உணரும்போது, சமுத்திரத்தை ஆழம் காண கடலில் மூழ்கிய சர்க்கரை பொம்மையின் உருவம் கரைவது போல மனம் தன் உருவத்தை இழக்கும். எனது ஆத்ம சொரூபத்தை நான் விசாரித்து அறியும்போது எனக்கென்று தனி உருவம் எது இருக்கிறது, அருணாசலம் என்னும் வானோர் புகழ் மலையாக விளங்குபவரே!

Meaning:
When I approach You, considering You as having a form, You stand in this universe as Arunachala in the form of a Hill. To contemplate on You with the mind, and look for Your essential form as formless, is like one who travels all over the earth to see the ever-present, all-pervading space. While dwelling without thought upon Your Real boundless nature, the mind loses its separate form (identity), like a doll of sugar that wants to see the depth of the ocean, but melts when it comes in contact with the ocean. And when I enquire within and come to realize my Real Self, where is a separate form (identity) for me, Oh You who stands as the towering Arunachala Hill!

4.
இருந்தொளி ருனைவிடுத் தடுத்திட றெய்வ
மிருட்டினை விளக்கெடுத் தடுத்திட லேகா
ணிருந்தொளி ருனையறி வுறுத்திடற் கென்றே
யிருந்தனை மதந்தொறும் விதவித வுருவா
யிருந்தொளி ருனையறி கிலரெனி லன்னோ
ரிரவியி னறிவறு குருடரே யாவா
ரிருந்தொளி ரிரண்டற வெனதுளத் தொன்றா
யிணையறு மருணமா மலையெனு மணியே.

பொருள்:
எங்கும் விளங்கிக் கொண்டிருக்கின்ற பரம்பொருளாகிய உன்னை விடுத்து, உனக்கயலாக ஒரு தெய்வத்தைத் தேடுவது கையில் விளக்குடன், இருட்டினைத் தேடுவதற்குச் சமானமாகும். சத்சித் பிரகாசமாகிய உனது உண்மையை அறிவிக்கும் பொருட்டே, ஒவ்வொரு மதத்திலும் நீ, அந்தந்த தெய்வங்களாகத் தோற்றமளிக்கின்றாய். இவ்வாறு பிரகாசிக்கும் உன்னை அறிந்து கொள்ளாதவர்கள் சூரியன் இருப்பதைக் காணமுடியாத பிறவிக் குருடரே ஆவார். ஒப்புயர்வற்ற அருணாசலம் என்னும் சுயம்பிரகாசமே! என் இதயத்தில் ஏகமாக எழுந்தருளி விளங்குவாயாக.

Meaning:
To search for God while ignoring You, who is the all-pervading Being-Consciousness, is like going with a lamp searching for darkness. Only to make Yourself known as the illuminating Being-Consciousness, You appear in different religions as the God of those religions. Those who do not realize You who shines like this, they are indeed those who were born blind who cannot see the Sun. Oh unparalleled, self-shining, brilliant gem, Arunachala! Abide and shine as my Self, as one without a second!

5.
மணிகளிற் சரடென வுயிர்தொறு நானா
மதந்தொறு மொருவனா மருவினை நீதான்
மணிகடைந் தெனமன மனமெனுங் கல்லின்
மறுவறக் கடையநின் னருளொளி மேவும்
மணியொளி யெனப்பிறி தொருபொருட் பற்று
மருவுற லிலைநிழற் படிதகட் டின்விண்
மணியொளி படநிழல் பதியுமோ வுன்னின்
மறுபொரு ளருணநல் லொளிமலை யுண்டோ.

பொருள்:
மணிகளால் ஆன மாலையினுள்ளே ஊடுருவி இருக்கும் நூலைப்போல், உயிர்களுக்கு உயிராகவும் அந்தந்த மதங்களின் தெய்வங்களாகவும் ஒருவனாகிய நீயே விளங்கிக் கொண்டிருக்கின்றாய். மாணிக்கத்தைத் தீட்டி அதன் அழுக்கை நீக்கி பிரகாசிக்கச் செய்வதைப்போல, மெய்யுணர்வை இழந்த மனத்தை, ஆத்ம விசாரம் என்னும் சாணைக் கல்லில் தீட்டினால் உனது அருட்பிரகாசம் தோன்றும். தீட்டிய மாணிக்கக் கல்லின் பிரகாசத்தைப்போல ஆத்மாகாரம் அடைந்த மனதிற்கு வேறெந்த பற்றுதலும் படிவதில்லை. புகைப்படக் கருவியிலுள்ள உருவத்தைப் பதித்துக் கொள்ளும் தகட்டின்மீது (film) சூரியஒளி பட்டுவிட்டால், பிறகு அதில் புகைப்பட உருவம் பதியுமோ? அருணாசலம் என்னும் ஒளிமலையே! உன்னைத் தவிர மனதில் பற்றக்கூடிய வேறொரு பொருள் உண்டோ?

Meaning:
As the string in a necklace of gems, it is the non-dual You in Your unity who penetrates all the diversity of Life in all beings and the God of all religions. Like a gem that it is cut and polished, if the (impure) mind is worked against the wheel of the (pure) mind to free itself of its flaws, it will take on the light of Your Grace and shine like a sparkling gem. A mind that has attained such brilliance will have no attachment to anything else, unaffected by any external object. When once a photographic plate has been exposed to the sun, can it receive impressions afterwards? Oh great, dazzling Aruna Hill! Is there anything apart from You?

6.
உண்டொரு பொருளறி வொளியுள மேநீ
யுளதுனி லலதிலா வதிசய சத்தி
நின்றணு நிழனிரை நினைவறி வோடே
நிகழ்வினைச் சுழலிலந் நினைவொளி யாடி
கண்டன நிழற்சக விசித்திர முள்ளுங்
கண்முதற் பொறிவழி புறத்துமொர் சில்லா
னின்றிடு நிழல்பட நிகரருட் குன்றே
நின்றிட சென்றிட நினைவிட வின்றே.

பொருள்:
இதயமென்னும் ஒரே பொருளாகிய நீ மட்டுமே உண்மை யாகும். உன்னிடத்தில் உனக்கு அன்னியமல்லாத ஓர் அற்புத சக்தியினின்று உனது சித்பிரகாசத்தோடு கூடிய, அணுவைப் போன்ற அதிநுட்ப நிழல் கூட்ட நினைவுகள் தோன்றி, பிராரப்த வினையினால் இயக்கப்பட்டுத் திரைப்படக் காட்சியைப் போல, ஆத்ம பிரதிபிம்ப மனஒளியாகிய கண்ணாடியால் உள்ளிலும், கண்முதலான இந்திரியங்களின் வழியாக வெளியிலும் நாம ரூப உலக சித்திரங்கள் காணப்படுகின்றன. அருட்பிரகாச மலையே! உலகத் தோற்றங்கள் இருந்தாலும் மறைந்தாலும் உன்னைத் தவிர இவைகள் வேறல்லவே!

Meaning:
You are Yourself the One Being, ever aware as the self-luminous Heart! In You there is a mysterious, wonderful power (shakti) which is not apart from You. From it proceeds the phantom of the mind, emitting its latent subtle dark mists of memories, which illumined by Your light reflected on them, appear within as though whirling in the vortices, or whirlwinds of Prarabdha. Later developing into the psychic worlds and reflected like a mirror within, they are then projected externally as the material world and transformed into concrete objects which are magnified by the outgoing senses and move about like pictures in a cinema show. These pictures, whether they appear or disappear, they are not different from, Oh Hill of Grace!

 7.
இன்றக மெனுநினை வெனிற்பிற வொன்று
மின்றது வரைபிற நினைவெழி லார்க்கெற்
கொன்றக முதிதல மெதுவென வுள்ளாழ்ந்
துளத்தவி சுறினொரு குடைநிழற் கோவே
யின்றகம் புறமிரு வினையிறல் சன்ம
மின்புதுன் பிருளொளி யெனுங்கன விதய
மன்றக மசலமா நடமிடு மருண
மலையெனு மெலையறு மருளொளிக் கடலே.

பொருள்:
நான் என்று தோன்றும் அகங்காரவடிவ முதல் எண்ணம் எழவில்லையானால் வேறு எதுவுமே இல்லை. அந்த எண்ணம் அற்றுப்போகும் வரையிலும், மற்ற எண்ணங்கள் தோன்றினால் அது யாருக்கு என்று விசாரித்தால், எனக்கு என்று தோன்றும். இந்த நான் என்பது எங்கிருந்து உதிக்கிறது? என்று விசாரித்து, அந்த இடத்தில் மூழ்கி இதய சிம்மாசனத்தை அடையப்பெற்றால், ஈடு இணையற்ற அருட்கொடையின் ஆணையைச் செலுத்தி, உலகனைத்தையும் அருளாட்சி புரியும் இறைவனாக நீயே திகழ்வாய். பிறகு உள்-வெளி, பிறப்பு-இறப்பு, சுகம்-துக்கம், இருட்டு-வெளிச்சம் என்று இரட்டைகளாகத் தோன்றும் யாவும் மறைந்துவிடும். இதய மன்றத்தில் நான்; நான் என அசல தாண்டவமிடும் அருணாசலமென்னும் எல்லையற்ற அருள் ஒளிக்கடலே! 

Meaning:
When there is no I-thought, then there will be no other thought. Until that time, when other thoughts arise, (asking), ‘To whom?’ (will call forth the reply), ‘To me.’ He who pursues this closely, questioning ‘What is the origin of the I?’ and diving inwards reaches the seat of the mind (within) the Heart, he becomes the sovereign Lord of the Universe. There is no (longer any) dream of such dualities as in and out, right and wrong, birth and death, pleasure and pain, or light and darkness. Oh boundless ocean of Grace and effulgence called Arunachala, dancing motionless within the court of the Heart! 

8.
கடலெழு மெழிலியாற் பொழிதரு நீர்தான்
கடனிலை யடைவரை தடைசெயி னில்லா
துடலுயி ருனிலெழு முனையுறு வரையி
லுறுபல வழிகளி லுழலினு நில்லா
திடவெளி யலையினு நிலையிலை புள்ளுக்
கிடநில மலதிலை வருவழி செல்லக்
கடனுயிர் வருவழி சென்றிட வின்பக்
கடலுனை மருவிடு மருணபூ தரனே.

பொருள்:
கடலிலிருந்து எழுந்த மேகம் பொழிந்த நீரானது, கடலாகிய தனது இருப்பிடத்தைச் சென்றடையும்வரை தடை செய்யப் பட்டாலும் நிற்காது. அதுபோல உன்னிடத்தில் தோன்றுகின்ற ஜீவர்கள் மீண்டும் உன்னை வந்து அடையும் வரையில், பிராரப்த வினையினால் பல பிறப்புகள் எடுத்து எவ்வளவு காலம் உழன்று திரிந்தாலும் அங்கு நின்றுவிட மாட்டார்கள். உன்னை வந்தடைந்தே தீர்வார்கள். ஆகாசத்தில் எவ்வளவு காலம் எத்தனை உயரப் பறந்து திரிந்தாலும் பறவையால் அங்கு நிலைபெற முடியாது. அதுவந்து தங்குவதற்கான இடம் பூமியைத் தவிர வேறெதுவுமில்லை. அதுபோல உன்னிடத்தில் இருந்து உதித்து, உலக இன்ப-துன்பங்களில் உழலும் ஜீவர்களும், தாம் வந்த வழியை உள்முக நோக்கால் அறிந்து சென்றிட பேரின்பக் கடலாகிய உன்னை அடைந்துவிடுவர்.

Meaning:
The waters rise up from the sea as clouds, then fall as rain and run back to the sea in streams; nothing can keep them from returning to their source. Likewise the Jiva (individual soul) rising up from You cannot be kept from joining You again, though it may stray many times along the way. A bird which rises from the earth and soars into the sky can eventually find no place of rest except the earth. So indeed must all retrace their paths. And when the Jiva finds its way back to its source, it will sink and be merged in You, O Arunachala, You the Ocean of Bliss!

அருணாசல பஞ்சரத்னம்
அருணாசல பதிகம்
அருணாசல அஷ்டகம்

One thought on “அருணாசல அஷ்டகம்

  • January 24, 2018 at 8:42 am
    Permalink

    The best way in spiritual..

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!