Who Am I ? (13 - 15)
நான் யார் ? (16 - 18)
நான் யார்? (9 - 12)

நான் யார் ? (13 – 15)

ஸ்ரீ ரமண பகவான் அருண்மொழி

(வினா-விடை வடிவம்)

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய

 

நான் யார்? (தொடர்ச்சி)

  1. விஷயவாசனை நினைவுகள் அளவற்றனவாய்க் கடலில் அலை போலத் தோன்றுகின்றனவே; அவைகளெல்லாம் எப்போது நீங்கும்?

சொரூபத் தியானம் கிளம்பக் கிளம்ப நினைவு களெல்லாம் அழிந்துவிடும்.

 

  1. தொன்று தொட்டு வருகின்ற சகல விஷய வாசனைகளும் ஒடுங்கி, சொரூபமாத்திரமாய் இருக்க முடியுமா?

“முடியுமா, முடியாதா?” வென்கிற சந்தேக நினைவுக்கு மிடங் கொடாமல், சொரூபத் தியானத்தை விடாப் பிடியாய்ப் பிடிக்க வேண்டும். ஒருவன் எவ்வளவு பாபியா யிருந்தாலும், “நான் பாபியா யிருக்கிறேனே! எப்படிக் கடைத்தேறப் போகிறேன்?’ என் றேங்கி அழுது கொண்டிராமல், தான் பாபி என்னு மெண்ணத்தையு மறவே யொழித்து சொரூபத் தியானத்தி லூக்கமுள்ளவனாக விருந்தால் அவன் நிச்சயமாயுருப்படுவான். நல்ல மனமென்றும் கெட்ட மனமென்று மிரண்டு மனங்க ளில்லை; மன மொன்றே. வாசனைகளே சுப மென்றும், அசுப மென்று மிரண்டு விதம். மனம் சுப வாசனை வயத்தாய் நிற்கும்போது நல்ல மனமென்றும், அசுப வாசனை வயத்தாய் நிற்கும் போது கெட்ட மன மென்றும் சொல்லப்படும்.

பிரபஞ்ச விஷயங்களிலும் பிறர் காரியங்களிலும் மனதை விடக்கூடாது. பிறர் எவ்வளவு கெட்டவர் களாயிருந்தாலும், அவர்களிடத்தில் துவேஷம் வைக்கலாகாது. விருப்பு, வெறுப்பு இரண்டும் வெறுக்கத் தக்கன. பிறருக் கொருவன் கொடுப்ப தெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்ளுகிறான். இவ்வுண்மையை அறிந்தால் எவன்தான் கொடா தொழிவான்? தானெழுந்தால் சகலமும் எழும்; தானடங்கினால் சகலமு மடங்கும். எவ்வளவுக் கெவ்வளவு தாழ்ந்து நடக்கிறோமோ, அவ்வளவுக் கவ்வளவு நன்மையுண்டு. மனத்தை யடக்கிக் கொண்டிருந்தால் எங்கே யிருந்தாலு மிருக்கலாம்.

 

15 விசாரணை எதுவரையில் வேண்டும்?

மனத்தின்கண் எதுவரையில் விஷய வாசனைகளிருக்கின்றனவோ, அதுவரையில் நான் யார் என்னும் விசாரணையும் வேண்டும். நினைவுகள் தோன்றத் தோன்ற அப்போதைக்கப்போதே அவற்றை யெல்லாம் உற்பத்தி ஸ்தானத்திலேயே விசாரணையால் நசிப்பிக்க வேண்டும். ஒருவன் சொரூபத்தை யடையும் வரையில் நிரந்தர சொரூப் ஸ்மரணையைக் கைப்பற்றுவானாயின், அது வொன்றே போதும். கோட்டைக்குள் எதிரிகளுள்ள வரையில் அதிலிருந்து வெளியே வந்துகொண் டிருப்பார்கள்; வரவர் அவர்களை யெல்லாம் வெட்டிக் கொண்டே இருந்தால் கோட்டை கைவசப்படும்.

 

நான் யார் ? (16 - 18)
நான் யார்? (9 - 12)
நான் யார் ? (13 – 15)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!