நான் யார் ? (16 – 18)
ஸ்ரீ ரமண பகவான் அருண்மொழி
(வினா-விடை வடிவம்)
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய
நான் யார்? (தொடர்ச்சி)
16 சொரூபத்தின் இயல்பு என்ன?
யதார்த்தமா யுள்ளது ஆத்ம சொரூப மொன்றே. ஜக, ஜீவ, ஈச்வரர்கள் சிப்பியில் வெள்ளிபோல் அதில் கற்பனைகள்; இவை மூன்றும் ஏக காலத்தில் தோன்றி, ஏக காலத்தில் மறைகின்றன.
நான் என்கிற நினைவு கிஞ்சித்தும் இல்லாத விடமே சொரூபமாகும். அதுவே மெளன மெனப்படும். சொரூபமே ஜகம்; சொரூபமே நான்; சொரூபமே ஈச்வரன்; எல்லாம் சிவ சொரூபமே.
17 எல்லாம் ஈசன் செய லன்றோ ?
இச்சா ஸங்கல்ப யத்தன மின்றி யெழுந்த ஆதித்தன் சன்னிதி மாத்திரத்தில் காந்தக்கல் அக்கினியைக் கக்குவதும், தாமரை யலர்வதும், நீர் வற்றுவதும், உலகோர் தத்தங் காரியங்களிற் பிர விருத்தித்து இயற்றி யடங்குவதும், காந்தத்தின் முன் ஊசி சேஷ்டிப்பதும்போல், ஈசன் சன்னிதான விசேஷ மாத்திரத்தால் நடக்கும் முத்தொழில் அல்லது பஞ்ச கிருத்தியங்கட் குட்பட்ட ஜீவர்கள் தத்தம் கர்மானுசாரம் சேஷ்டித் தடங்குகின்றனர். அன்றி, அவர் சங்கல்ப ஸஹித ரல்லர்; ஒரு கருமமும் அவரை யொட்டாது. அது, லோக கர்மங்கள் சூரியனை யொட்டாததும், ஏனைய சதுர் பூதங்களின் குணா குணங்கள் வியாபகமான ஆகாயத்தை யொட்டாததும் போலும்.
18 பக்தருள் மேலான பக்தர் யார்?
எவன் தன்னையே, கடவுளாகிய சொரூபத்தினிடத்தில் தியாகம் செய்கிறானோ அவனே சிறந்த பக்திமான். ஆத்ம சிந்தனையைத் தவிர வேறு சிந்தனை கிளம்புவதற்குச் சற்று மிடங்கொடாமல் ஆத்ம நிஷ்டாபரனா யிருப்பதே தன்னை ஈசனுக் களிப்பதாகும்.
ஈசன்பேரில் எவ்வளவு பாரத்தைப் போட்டாலும், அவ்வளவையும் அவர் வகித்துக் கொள்ளுகிறார். சகல காரியங்களையும் ஒரு பரமேச்வர சக்தி நடத்திக் கொண்டிருக்கிறபடியால், நாமு மதற் கடங்கி யிராமல், “இப்படிச் செய்ய வேண்டும் அப்படிச் செய்ய வேண்டுமென்று சதா சிந்திப்பதேன்? புகை வண்டி சகல பாரங்களையும் தாங்கிக் கொண்டு போவது தெரிந்திருந்தும் அதிலேறிக் கொண்டு போகும் நாம் நம்முடைய சிறிய மூட்டையையும் அதிற் போட்டுவிட்டுச் சுகமா யிராமல், அதை நமது தலையிற் றாங்கிக் கொண்டு ஏன் கஷ்டப்பட வேண்டும்?