நான் யார்? (9 – 12)
ஸ்ரீ ரமண பகவான் அருண்மொழி
(வினா-விடை வடிவம்)
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய
நான் யார்? (தொடர்ச்சி)
- மனதின் சொரூபத்தை விசாரித்தறியும் மார்க்கம் என்ன ?
இந்த தேகத்தில் நான் என்று கிளம்புவதெதுவோ அதுவே மனமாம். நான் என்கிற நினைவு தேகத்தில் முதலில் எந்த விடத்தில் தோன்றுகிறதென்று விசாரித்தால், ஹ்ருதயத்தி லென்று தெரிய வரும். அதுவே மனதின் பிறப்பிடம். ‘நான், நான்’ என்று கருதிக் கொண்டிருந்தாலும் கூட அவ்விடத்திற்கு கொண்டுபோய் விட்டுவிடும். மனதில் தோன்றும் நினைவுக ளெல்லாவற்றிற்கும் நான் என்னும் நினைவே முதல் நினைவு. இது எழுந்த பிறகே ஏனைய நினைவுகள் எழுகின்றன. தன்மை தோன்றிய பிறகே, முன்னிலை, படர்க்கைகள் தோன்றுகின்றன; தன்மை யின்றி முன்னிலை படர்க்கைக ளிரா.
- மனம் எப்படி யடங்கும்?
நான் யாரென்னும் விசாரணையினாலேயே மனமடங்கும்; நான் யாரென்னும் நினைவு மற்ற நினைவுகளை யெல்லா மழித்து தீயைக் கிளரும் தடிபோல் முடிவில் தானுமழியும். பிறகு சொரூபதரிசன முண்டாகும்.
- நான் யா ரென்கிற நினைவை சதா காலமும் பிடிக்கும் உபாயம் என்ன?
பிற வெண்ணங்களெழுந்தால் அவற்றைப் பூர்த்தி பண்ணுவதற்கு எத்தனியாமல் அவை “யாருக் குண்டாயின”? என்று விசாரிக்க வேண்டும். எத்தனை எண்ணங்கள் எழினுமென்ன? ஜாக்கிரதையாய் ஒவ்வோரெண்ணமும் கிளம்பும்போதே “இது யாருக்குண்டாயிற்று?” என்று விசாரித்தால் “எனக்கு” என்று தோன்றும். “நான் யார்” என்று விசாரித்தால் மனம் தன் பிறப்பிடத்திற்குத் திரும்பிவிடும்; எழுந்தவெண்ணமு மடங்கி விடும். இப்படிப் பழகப் பழக மனதிற்குத் தன் பிறப்பிடத்தில் தங்கி நிற்கும் சக்தியதிகரிக்கின்றது. சூஷ்மமான மனம், மூளை இந்திரியங்கள் வாயிலாய் வெளிப்படும்போது ஸ்தூலமான நாம ரூபங்கள் தோன்றுகின்றன; ஹ்ருதயத்தில் தங்கும்போது நாம் ரூபங்கள் மறைகின்றன. மனத்தை வெளிவிடாமல் ஹ்ருதயத்தில் வைத்துக் கொண்டிருப்பதற்குத்தான் அகமுகம் அல்லது அந்தர் முகம் என்று பெயர். ஹ்ருதயத்திலிருந்து வெளியிடுவதற்குத்தான் பகிர் முகமென்று பெயர். இவ்விதமாக மனம் ஹ்ருதயத்தில் தங்கவே, எல்லா நினைவுகளுக்கும் மூலமான ‘நான்’ என்பது போய், எப்பொழுதுமுள்ள ‘தான்’ மாத்திரம் விளங்கும். எதைச் செய்தாலும் நான் என்கிற அகங்காரமற்றுச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் எல்லாம் சிவ ஸ்வரூபமாய்த் தோன்றும்.
12 மன மடங்குவதற்கு வேறு உபாயங்க ளில்லையா?
விசாரணையைத் தவிர வேறு தகுந்த உபாயங்களில்லை. மற்ற உபாயங்களினால் அடக்கினால், மனமடங்கினாற்போலிருந்து மறுபடியும் கிளம்பிவிடும். பிராணாயாமத்தாலும் மன மடங்கும்; ஆனால் பிராண னடங்கியிருக்கும் வரையில் மனமு மடங்கியிருந்து, பிராணன் வெளிப்படும்போது தானும் வெளிப்பட்டு வாசனை வயத்தாயலையும். மனத்திற்கும் பிராணனுக்கும் பிறப்பிட மொன்றே. நினைவே மனதின் சொரூபம்; நான் என்னும் நினைவே மனதின் முதல் நினைவு; அதுவே யகங்காரம். அகங்கார மெங்கிருந்து உற்பத்தியோ, அங்கிருந்துதான் மூச்சும் கிளம்புகின்றது, ஆகையால் மன மடங்கும்போது பிராணனும், பிராண னடங்கும்போது மனமு மடங்கும். ஆனால் சுழுத்தியில் மன மடங்கி யிருந்தபோதிலும் பிராண னடங்கவில்லை. தேகத்தின் பாதுகாப்பின் நிமித்தமும், தேகமானது மரித்து விட்டதோ வென்று பிறர் ஐயுறாவண்ணமும் இவ்வாறு ஈச்வர நியதியால் ஏற்பட்டிருக்கிறது. ஜாக்கிரத்திலும் சமாதியிலும் மன மடங்குகிறபோது பிராண னடங்குகிறது. பிராணன் மனதின் ஸ்தூல ரூபமெனப்படும். மரணகாலம் வரையில் மனம் பிராணனை உடலில் வைத்துக் கொண்டிருந்து, உடல் மரிக்குங் காலத்தில் அதனைக் கவர்ந்து கொண்டு போகின்றது. ஆகையால் பிராணாயாமம் மனத்தை யடக்க சகாயமாகுமே யன்றி மனோநாசஞ் செய்யாது.
பிரணாயாமம் போலவே மூர்த்தித் தியானம், மந்திர ஜபம், ஆகார நியம் மென்பவைகளும் மனத்தை அடக்கும் சகாயங்களே.
மூர்த்தித் தியானத்தாலும், மந்திர ஜபத்தாலும் மனம் ஏகாக்கிரத்தை யடைகிறது. மனமானது சதா சலித்துக் கொண்டே யிருக்கும். யானையின் துதிக்கையில் ஒரு சங்கிலியைக் கொடுத்தால் அது எப்படி வேறொன்றையும் பற்றம் லதையே பற்றிக் கொண்டு செல்லுமோ, அப்படியே மனதையும் ஏதோ ஒரு நாமம் அல்லது ரூபத்திற் பழக்கினால் அதையே பற்றிக் கொண்டிருக்கும். மனம் அளவிறந்த நினைவுகளாய் விரிகின்ற படியால் ஒவ்வொரு நினைவும் அதிபலவீனமாகப் போகின்றது. நினைவுக ளடங்க வடங்க ஏகாக்கிரத் தன்மை யடைந்து, அதனாற் பலத்தை யடைந்த மனத்திற்கு ஆத்ம விசாரம் சுலபமாய் சித்திக்கும். எல்லா நியமங்களினுஞ் சிறந்த மித சாத்வீக ஆகார நியமத்தால் மனத்தின் சத்வ குணம் விருத்தியாகி ஆத்மவிசாரத்திற்கு சகாய முண்டாகிறது.