
33. உலகம் மாயையா அல்லது மெய்மையா
ஒரு வருகையாளருடன் உரையாடல்.
பக்தர்: “மிக உயர்ந்த ஆன்ம சுய சொரூபம் (பிரம்மம்) மெய்மையாகும். உலகம் மாயையாகும்” என்பது திரு சங்கராசாரியாரின் வழக்கமான வாக்கியமாகும். ஆனால், வேறு சிலர், “உலகம் மெய்மை தான்” என்று சொல்கிறார்கள். இதில் எது உண்மை?
மகரிஷி: இரண்டு வாக்கியங்களும் உண்மை தான். அது ஆன்மீக வளர்ச்சியின் பலவித நிலைப்படிகளைப் பொருத்து குறிப்பிடப்படுகிறது. அது வெவ்வேறு நோக்கங்களிலிருந்து சொல்லப்படுகிறது.
பயற்சி செய்பவர், “எது மெய்யோ அது எப்போதும் விளங்குகிறது” என்ற சொற்பொருள் விளக்கத்துடன் தொடங்குகிறார். பிறகு அவர் உலகத்தை, அது மாறிக்கொண்டே இருப்பதால், மெய்யானது இல்லை என்று நீக்கி விடுகிறார். இது மெய்யாக இருக்க முடியாது. ‘இது இல்லை; இது இல்லை’.
ஆன்மீகர் இறுதியில் ஆன்மாவை அடைகிறார்; அங்கு ஒருமை மட்டுமே விளங்குவதைக் காண்கிறார். பிறகு அவருக்கு, முதலில் மெய்யில்லை என்று நிராகரிக்கப் பட்டது, ஒருமையின் ஒரு பகுதியாக இருப்பது தெரிய வருகிறது. மெய்மையில் அமிழ்வுற்றதால், உலகமும் மெய் தான். ஆன்ம ஞானத்தில் “உள்ளமை” மட்டுமே உள்ளது; உள்ளமையைத் தவிர வேறொன்றுமே இல்லை.
மேலும், மெய்மை வேறொரு அர்த்தத்தில் உபயோகிக்கப் பட்டு, சில சிந்தனையாளர்களால் சாதாரண விதத்தில் பொருட்களைச் சார்ந்து குறிப்பிடப்படுகிறது. அவர்கள், ஆத்யாசிகா, அதாவது பிரதிபலிக்கப்பட்ட மெய்மை, வெவ்வேறு பாகைகள் அல்லது அளவுகளைக் கொண்டது என்று சொல்கிறார்கள். அவை பின்வருமாறு.
(1) வியவஹாரிக சத்யா (தினசரி வாழ்க்கை) – உதாரணம் : இந்த நாற்காலி என்னால் பார்க்கப் படுகிறது; எனவே இது மெய்யானது.
(2) பிராதிபாஸிக சத்யா (மாயையானது) – உதாரணம் : சுருட்டப் பட்ட கயிற்றில் பாம்பின் மாயத் தோற்றம். அப்படி நினக்கும் ஒருவருக்கு அந்த தோற்றம் மெய்யானது. இந்த நிகழ்வு அல்லது தோற்றப்பாடு ஒரு குறிப்பிட்ட சமயத்தில், சில சந்தர்ப்பங்களில் மட்டும் தோன்றுகிறது.
(3) பரமார்த்திக சத்யா (யாவுங்கடந்தது) – உதாரணம் : மெய்மை சிறிதும் மாறாமல் எப்போதும் ஒரே விதமாக விளங்குகிறது.
மேற்சொன்ன மூன்றும் பிரதிபலிக்கப்பட்ட மெய்மையின் வெவ்வேறு பாகைகள் என்று சிலர் சொல்கின்றனர்.
மெய்மை என்பது பொதுவான விதத்தில் உபயோகப்படுத்தப் பட்டால், உலகம் தினசரி வாழ்வு, மாயை இவை இரண்டையும் கொண்டதாக சொல்லப் படலாம்.
ஆனால், சிலர் தினசரி வாழ்வின் மெய்மையைக் கூட மறுக்கிறார்கள். அவர்கள் அதை மனதின் ஒரு வெளிப்பாடு என்று கருதுகிறார்கள். அவர்களின் படி, அது ஒரு மாய தோற்றம் தான்.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1
பிப்ரவரி 4, 1935
உரையாடல் 33.