புனித மந்திரங்கள்
ரமண மகரிஷியுடன் உரையாடல்களின் 8வது உரையாடலில், மகரிஷி உறைக்கிறார்: “புனித மந்திரங்களை ஜபிக்க ஒருவர் தகுதியுள்ளவராக இருக்க வேண்டும். மேலும் அவர் இத்தகைய மந்திரத்தை சரியான விதத்தில் தீக்ஷை பெற்றிருக்க வேண்டும்.”
இவ்வாறு புனிதமான மந்திரங்களை எச்சரிக்கையாகவும் கவனமாகவும் காத்து வைக்க காரணங்கள் உள்ளன.
ஒருவர் தகுதியுள்ளவராக இருக்க வேண்டும்
ஒரு சிறிய உதாரணம் : மாணவர் ஒருவர் கல்லூரியில் சேர்ந்து கல்வியும் பட்டமும் பெற, முதலில் தமக்கு தகுதியான ஒரு இடத்தையும், சில சமயம் ஆசிரியரையும் கூட தேர்ந்தெடுத்து அங்கு சேர விண்ணப்பிக்கின்றார். முக்கியமாக, மாணவர் இதற்கு தகுதியுள்ளவராக இருக்க வேண்டும். முற்படு தேவையான வகுப்புகளை கடக்காமல், யார் வேண்டுமானாலும் இந்த பயிற்சியை எடுத்துக் கொள்ள முடியாது. இத்தைகைய தகுதியுள்ள மாணவர் தான் கல்லூரியில் சேர்ந்து படிக்க அனுமதி பெறுகிறார். மேலும் மாணவர், கற்றுக் கொள்ளவும், கற்றதை சரியாகப் புரிந்துக் கொள்ளவும், கற்றதை செயல்படுத்த விருப்பமுள்ளவராகவும் இருப்பது அவசியம்.
அதே போல், புனித மந்திரத்தை ஜபிக்க ஒருவருக்கு தகுதி இருக்க வேண்டும். ஒரு புனித மந்திரம், ஆழ்ந்த தியானம் செய்யவும், உள்ளத்தின் ஆழ்நிலையை, தன்னிலையை அறிந்து உணரும் துல்லியமான, உன்னத ஆன்மீக விஷயங்களை ஒரு சுருக்கமான செய்யுளில் வழங்குகிறது. ஒரு பெருங்கடல் அளவுள்ள தகவல்களை சில சொற்களில் அளிக்கிறது. எனவே, இதை ஒரு மகிமை வாய்ந்த ஆன்மீக ஆசிரியர் மேலும் விளங்கவைக்க தேவைப்படுகிறது. இது தான் நடைமுறையில் தீக்ஷை என்று வழங்கி வருகிறது. எனவே, மந்திரத்தைக் கற்றுக் கொள்ள விரும்புபவர் இத்தகைய தீக்ஷை பெற வேண்டும்.
ரகசியம் இருப்பதாகத் தெரிகிறதே, ஏன்?
முக்கியமாக, ஆன்மீக விஷயங்களில், இத்தகைய ஆழ்ந்த, மறை புதிரான புனித மந்திரங்கள் எல்லோருக்கும் எளிதாகக் கிடைத்து விட்டால், அவை தவறாகப் புரிந்துக் கொள்ளப் படலாம், தவறாக பயன்படுத்தப் படலாம். இவ்வளவு எச்சரிக்கையும், முன்காப்புணர்வும் இருக்கும் போதே, மறை நூல்களின் கருத்துக்கள், சொந்த வலிமை, செல்வம் முதலிய சயநல மேம்பாட்டிற்காக சிலரால் தீய முறையில் பிரயோகிக்கப் படுவது தெரிந்த விஷயம். இத்தகைய குழப்பத்தையும் கலவரத்தையும் தவிர்க்கவே, புனித மந்திரங்களும் மறை நூல்களும், தகுதியற்றவரிடமிருந்து காக்கப் பட்டுள்ளன. இதனால் இவை ஒரு ரகசியம் போல் காணப்படுகின்றன. ரகசியமாகத் தோன்றும் இந்த கேடயம், அறிவை பொது மக்களிடமிருந்து மறைப்பதற்காக வழங்கி வரவில்லை; தவறான மனிதரிடமிருந்து காப்பதற்காகவே வழங்கி வருகிறது.
தற்காலத்தில் தீக்ஷை என்றால் என்ன பொருள்
ஒரு மகாமுனிவரின் சுருக்கமான, ஆனால் ஆழ்ந்த அறிவுரையைப் போல, காயத்ரி போன்ற ஒரு புனித மந்திரம் அளவிடற்கரிய, ஆழ்ந்த மந்திரமாகும். அது மனதை தூய்மைப்படுத்தவும், மனதின் கவனக்குவியத்திற்காகவும், மனதை ஒருமுகப்படுத்தவும் உபயோகப் படுத்தப் படுகிறது. மேலும், உள்முக சிந்தனைக்காகவும், ஆழ்நிலை ஆய்வுக்காகவும் தயார் செய்ய மனதைக் கட்டுப்படுத்தவும், சாந்தமாக்கவும் அது பயன்படுத்தப் படுகிறது. இந்த பேருலகத்தின் பொருளையும், நமது உள்ளமையின் அறிவையும், உண்மைத் தன்னிலைத் தன்மையின் நுண்ணறிவையும் விளக்குகிறது. அது ஆன்மீக வழிகாட்டுதலை சில சொற்களில் ஒளிர்விக்கிறது. எனவே ஒருவர் தம்மை இதற்காக தயார் செய்துக் கொள்ள வேண்டும். ஆன்மீக விருத்திக்காக சில உணவுகளை தவிர்க்க தயாராக இருக்க வேண்டும். இதை யாரும் அலட்சியமாக, சுயநல லாபத்திற்காகவோ அல்லது உலக ஆசைகளுக்காகவோ பயன்படுத்தக் கூடாது. அதற்கு மாறாக, ஆன்மீக நலத்திற்காகவும் மேம்பாட்டிற்காகவும் உபயோகிக்க வேண்டும். பக்தர் மந்திரத்தில் மறைந்திருக்கும் உண்மையான பொருளை ஆய்ந்து புரிந்துக் கொள்ள வேண்டும். ரமண மகரிஷி சொல்கிறார்: “சொற்களைச் சொல்வது மட்டும் போதாது. எண்ணங்களை விலக்க வேண்டும். எண்ணங்களை அகற்றுவதே ஞானம், மதிநுட்பம். அதுவே வரையற்ற, பூர்த்தியான உள்ளமையாகும்.”
பண்டைய இந்துத்துவ மரபில், உள்முக மனதுடன் ஆன்மீகத்தில் ஈடுபட விரும்பிய சாதகர்கள், ஒரு மேன்மையான ஞானியிடம் சென்று தீக்ஷைப் பெற்றனர். மந்திரங்களும் கற்றனர்.
தற்காலத்தில் இதன் பொருள் என்ன? பண்டைய குரு-சிஷ்ய பாரம்பரியமும், ஆசிரியர்-மாணவர் மரபும் இப்போது இந்தியாவில் கூட எல்லா இடத்திலும், எப்போதும் கிடைக்க முடியாது. அதுவும் இந்தியாவில் வாழாமல், வேறெங்கோ வாழ்பவர்களுக்கு இத்தகைய சலுகை கிடைப்பது மிகவும் கடினம். இந்த நிலையில், ஒருவர் இந்த புனித மந்திரங்களின் அற்புத பலனைப் பெறுவது எப்படி?
தற்காலத்தில், தீக்ஷையின் உண்மைப் பொருள் இது தான் : ஒருவர் ஒரு புனித மந்திரத்தின் உண்மைப் பொருளை அறிந்துகொள்ள நேர்மையான ஆர்வமும், இதற்காக நேரத்தை அர்ப்பணிக்கும் விருப்பமும் கொண்டவராக இருக்க வேண்டும். முதலில் அவர் இந்துத்துவ மறைநூல் சிலவற்றின் அறிவுரைகளையும், ஞானியரின் அறிவுரைகளையும் கற்க முயற்சி செய்ய வேண்டும். இது ஓரளவிற்கு தகுதி தரும். ஒரு மாபெரும் ஞானியின் வழிகாட்டுதலைப் பெற்று, அவரது அறிவுரைகளின் மனதைப் பொருத்தி, பக்தியுடன் கற்று, அவற்றை பின்பற்ற முயன்றால், பெரும் தகுதி உண்டாகும்.
இவ்வாறு முயற்சிகள் செய்து முன்னேறிய நேர்மையான ஒரு ஆன்மீக பக்தர் மிகவும் பணிவுடன் கடவுள் அல்லது குருவின் அருளுக்காக வணங்கவேண்டும். இவ்வாறு அவர் மந்திரத்தை ஜபிக்கும் தகுதியைப் பெற வேண்டும். தகுதியுடன் ஜபித்தால் நல்ல விளைவுகள் ஏற்படும். நாம் தகுதியுள்ளவர் என்ற தன்னுறுதியும் தன்னம்பிக்கையும் ஒருவருக்கு இருந்தால், அல்லது பாடுபட்டு பெற்றால், எதையும் யாரும் துணிகரமாக முயற்சி செய்யலாம்.
ஆன்மீகத்தில், மனதின் மேம்பாடும் முன்னேற்றமும் தான் முக்கியம். சுத்தமான பழக்க வழக்கங்கள் தேவையானாலும், வஞ்சகமில்லாத தூய மனம் தான் முதன்மையானது. ஆன்மீக முன்னேற்றத்திற்காக உள்ள சுத்தமான தாகமும், தூய பக்தியும், பணிவான தன்மையும் தான் ஒருவரை ஆன்மீகப் பாதையில் செல்ல தகுதியுள்ளவராக ஆக்கும். பண்டைய மரபின் தீக்ஷை முறைக்கு பதிலீடாக இதைத்தான் நாம் செய்ய முடியும்.
~ வசுந்தரா