What is Self Enquiry? How to do it?
சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (2)

சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (1)

ரமண மகரிஷியின் அறிவுரைகளிலிருந்து சில பகுதிகள்

~~~~~~~~~

அருள் மொழிகள் 
நான் யார்?

எல்லா மறை நூல்களும், ஒன்று விடாமல், முக்தி அடைவதற்கு மனம் அடக்கப்பட வேண்டும் என்று பிரகடனம் செய்கின்றன. மனக்கட்டுப்பாடு தான் இறுதியான நோக்கம் என்று தெரிந்த பின், முடிவில்லாமல் அவற்றை படிப்பது பயனற்றது. 

இத்தகைய கட்டுப்பாட்டிற்கு என்ன தேவையென்றால், “நான் யார்?” என்ற சுய வினாவுதல் மூலமாக, ஒருவர் தனக்குள் சுய விசாரணை செய்வது தான். மறை நூல்களை படிப்பதால் மட்டுமே, ஆன்மாவை நாடி தேடுவதற்கான சுய விசாரணையை எப்படி செய்ய முடியும்?  

ஒருவர் ஞானக் கண்ணால் தனது ஆன்மாவை உணர்ந்து கொள்ள வேண்டும். ராமன் என்பவன் தன்னை ராமன் என்று உணர, ஒரு நிலைக்கண்ணாடி தேவையா? “நான்” என்று குறிப்பிடப்படுவது ஐந்து உறைகளுக்குள் உள்ளது. ஆனால், மறை நூல்கள் அவைகளுக்கு வெளியே உள்ளன. எனவே, ஐந்து உறைகளையும் கூட மொத்தமாக நிராகரிப்பதின் மூலம் உணர்ந்து கொள்ள வேண்டிய ஆன்மாவை, மறை நூல்களைப் படிப்பதின் மூலம் நாடுவது வீணானது. 

“பந்தத்தில் உள்ள இந்த நான் யார்?” என்று விசாரணை செய்வதும், தன் உண்மைத் தன்மையை அறிவதும் மட்டுமே தான் முக்தி.  மனதை இடைவிடாமல் உட்புறம் திருப்பி வைத்து, இப்படி ஆன்மாவில் உறைவது தான் ஆன்ம விசாரணை அல்லது சுய விசாரணையாகும். ஆனால், தியானம் என்பது, ஆன்மாவை “சத் சித் ஆனந்தம்” என்றவாறு,  தீவிரமான ஆர்வத்துடன்  ஆழ்ந்த சிந்தனை செய்வதாகும்.

~~~~~~~~~

திரு ரமண கீதை

மகரிஷி: ஆன்ம-விசாரணை அறிவைச் சார்ந்தது இல்லை. இது உட்புறம் உள்ளது, நுண்மையானது.

பக்தர்:  நான் எண்ணங்களை விலக்கிக் கொண்டே போனால், அதை நான் சுய விசாரணை என்று அழைக்க முடியுமா?

மகரிஷி:  அது ஒரு படிக்கல் என்று சொல்லலாம். ஆனால், உங்கள் ஆன்மாவைப் பற்றிக் கொண்டு,  எண்ண அலைகள், மன சலனங்களில்லாமல் இருக்கும்போது தான், உண்மையில் விசாரணைத் துவங்குகிறது.  

பக்தர்:  அப்படியென்றால், விசாரணை அறிவு சார்ந்தது இல்லை?  

மகரிஷி: இல்லை. அது உட்புற தேடல். 

பக்தர்: அது தான் தியானமா?

மகரிஷி: எண்ணங்களால் தாக்கப்படாமல் உள்ள ஒரு நிலையில் தொடர்ந்து இருப்பது தான் அப்பியாசம் அல்லது சாதனை (பயிற்சி); அதில் கூர்ந்து கவனித்தவாறு இருக்கிறீர்கள். ஆனால், இந்த நிலமை மேலும், மேலும் தீவிரமாகவும் ஆழ்ந்து வளரும்போது, உங்களுடைய முயற்சியும், பொறுப்புக்களும் உங்களிடமிருந்து நீக்கி எடுத்துக் கொள்ளப்படுகின்றன; அது தான் ஆரூடம்; சித்தி அடையும் நிலை.  

~~~~~~~~

அருள் மொழிகள் 
சுய விசாரணை

“நான் வந்தேன்”, “நான் சென்றேன்”, “நான் செய்தேன்”, அல்லது “நான் இருந்தேன்” என்பது போன்ற உணர்ச்சிகளிலெல்லாம் வெளிப்படுத்தப்படும் “நான்” என்னும் உணர்வு, எல்லா உயிர்களுக்கும் இயல்பானது தான், இல்லையா? இந்த உணர்வு என்ன என்று கேள்வி கேட்கும்போது, அசைவுகளும், நகர்தலும் போன்ற செயல்பாடுகளெல்லாம் உடலுடன் சம்பந்தப்பட்டிருப்பதால், உடல் “நான்” என்ற உணர்வுடன் இணைந்து இருப்பதை அறிகிறோம். உடலானது இந்த “நான் – உணர்வு” ஆகுமா?  அது பிறப்புக்கு முன்னால் இருக்கவில்லை, அது ஐந்து தனிமங்களைக் கொண்டது, அது தூக்கத்தில் இருப்பதில்லை, அது இறுதியில் உயிரற்ற உடலாகிறது. இல்லை, அது நான் – உணர்வாக இருக்க முடியாது. 

தற்காலிகமாக உடலில் எழும் இந்த “நான்” என்னும் உணர்வு, தான்மை அகங்காரம், அறியாமை, அசுத்தம், அல்லது தனிப்பட்ட ஆன்மா என்றெல்லாமும் அழைக்கப் படுகிறது. எல்லா மறை நூல்களின் நோக்கமும் இந்த ஆன்மாவைப் பற்றி விசாரணை செய்வது தான். தான்மை – உணர்வை அழிப்பது தான் முக்தி என்று அவற்றில் உறுதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பின்பும் ஒருவர் எப்படி இந்த அறிவுரையை அலட்சியம் செய்ய முடியும்?

ஒரு கட்டையைப் போல் உணர்வின்றி இருக்கும் உடல், “நான்” என்பதாக பிரகாசித்து செயல்பட முடியுமா? முடியாது! அதனால், இந்த உடலை உண்மையிலேயே உயிரற்றது போல் கிடத்தி வையுங்கள். “நான்” என்ற சொல்லை முணுமுணுக்கவும் செய்யாதீர்கள். ஆனால், இப்போது இதயத்தினுள் “நான்” என்று பிரகாசிப்பது என்ன என்று கூர்ந்து விசாரியுங்கள். அப்போது, இடைவிடாமல், நிற்காமல் செல்லும் எண்ணங்களின் ஓட்டத்திற்கு அடிப்படையாக, ஒரு தொடர்வான, உடைபடாத, இடையறாத, மௌனமான, தன்னிச்சையான விழிப்புணர்வு, “நான் – நான்” என்று இதயத்தில் எழுகிறது.   அதை ஒருவர் பிடித்துக்கொண்டு, அமைதியாக, அசையாது இருந்தால், அது உடலில் உள்ள “நான்” என்னும் உணர்வை அடியோடு அழித்துவிடும். பிறகு அதுவே, எரியும் கற்பூரத்தின் நெருப்பு போல் மறைந்து விடும்.  ஞானிகளும், மறை நூல்களும் இதை தான் முக்தி என்று பிரகடனம் செய்கின்றனர். 

~~~~~~~~

உள்ளது நாற்பது
வரிசைகள் : 14, 23, 29, 30, 32

14. “நான்” என்னும் முதல் நபர் இருந்தால், பிறகு இரண்டாவது, மூன்றாவது நபர்கள், நீ, அவர், எல்லோரும் இருப்பார்கள். நான் என்பதன் தன்மையைப் பற்றி விசாரிப்பதால், “நான்” அழிகிறது. அதோடு கூட, “நீ” என்பதும், “அவர்” என்பதும் அழிகின்றன. மிஞ்சியிருக்கும் நிலை, வரையறையில்லாத உள்ளமையாக பிரகாசிக்கும் நிலை தான் ஒருவரின் இயல்பான தன்மை, ஆன்மா. 

23. உடல் “நான்” என்று சொல்வதில்லை. ஆழ்ந்த தூக்கத்திலும் கூட “நான்” இருப்பதைப் பற்றி யாரும் மறுத்து விவாதம் செய்ய மாட்டார்கள்.  நான் வெளிப்பட்டதும், மற்ற எல்லாம் வெளிப்படுகிறது. கூர்ந்த மனதுடன், எங்கிருந்து இந்த “நான்” எழுகிறது என்று விசாரணை செய்ய வேண்டும். 

29. ஆன்ம ஞானம் அடைவதற்கு வழிகாட்டும் ஒரே ஒரு விசாரணை என்னவென்றால், உள்முக நோக்குள்ள மனதால், “நான்” என்ற சொல்லை சொல்லாமல்,  “நான்” என்பதன் மூலாதாரத்தை நாடி தேடுதலே ஆகும். “நான் இது இல்லை”, “நான் அது தான்” என்று தியானம் செய்வது, சுய விசாரணைக்கு ஒரு சகாயமாக இருக்கலாம். ஆனால், அது சுய விசாரணை ஆகாது.  

30. “நான் யார்” என்று மனதினுள் ஒருவர் விசாரித்தால், அவர் இதயத்தை அடைந்தவுடனே தன்னியல்பாக “நான் – நான்” என்று  சுய நிலை மெய்மை வெளிப்படும் போது,  தனிப்பட்ட “நான்” நாணி, தலை குனிந்து, விழுந்து விடும். மெய்மையானது “நான்” என்று வெளிப்பட்டாலும், அது தான்மை இல்லை; அது பரிபூரணமான உள்ளமை, வரையறையில்லாத ஆன்மா. 

32. மறை நூல்கள் “நீதான் அது” என்று பிரகடனம் செய்தாலும், “நான் அது, நான் இது இல்லை” என்று தியானம் செய்வது மன பலவீனத்திற்கு ஒரு அறிகுறி தான். ஏனென்றால், நீங்கள் எப்போதும் “அது” தான். செய்யவேண்டியது என்னவென்றால், ஒருவர் தாம் உண்மையில் யார் என்று ஆய்வு செய்து, ‘அது’வாகவே உறைவது தான்.   

~~~~~~~~

தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா

சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (2)

சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (1)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!