What is Self-Enquiry? How to do it? 2 (Tamil)
சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (3)
சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (1)

சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (2)

ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள்

~~~~~~~~

உரையாடல் 25.

பக்தர்: நான் யார்? அதை எப்படி கண்டுபிடிப்பது?

மகரிஷி: உங்களையே அந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்ளுங்கள்.

உடலும் அதன் செயல்பாடுகளும் ‘நான்’ இல்லை.

இன்னும் ஆழமாகப் போகும்போது, மனமும் அதன் செயல்பாடுகளும் ‘நான்’ இல்லை.

அடுத்த படி  இந்த கேள்வியிடம் எடுத்துக் கொண்டு செல்கிறது : “எங்கிருந்து எண்ணங்கள் எழுகின்றன?

எண்ணங்கள் தன்னிச்சையானவை, மேலோட்டமானவை, அல்லது பகுப்பாய்வு சார்ந்தவையாக உள்ளன. அவை புத்தியில் இயங்குகின்றன. அப்படியென்றால், யார் அவற்றை அறிகிறார்? எண்ணங்களின் உள்ளமையும், அவற்றின் தெளிவான கருத்துக்களும், அவற்றின் இயக்கங்களும் மனிதருக்கு தெளிவாகத் தெரிய வருகிறது. இந்த பகுப்பாய்வு, ‘எண்ணங்களின் உள்ளமையையும் அவற்றின் வரிசை முறையையும் காண்பவராக மனிதரின் தனித்துவம் இயங்குகிறது’, என்ற தீர்மானத்திற்கு வழிவகுக்கிறது. இந்த தனித்துவம் தான் தான்மை (ego), அல்லது சாதாரணமாக மக்கள் சொல்வது போல, ‘நான்’. புத்தி  என்பது ‘நான்’ என்பதன் உறை தானேயன்றி,  உண்மை ‘நான்’ அல்ல.

மேலும் ஆராய்ந்து பார்க்கும் போது இந்த கேள்விகள் எழுகின்றன :

“இந்த ‘நான்’ என்பது யார்? அது எங்கிருந்து வருகிறது? தூக்கத்தில் ‘நான்’ எதையும் அறியவில்லை. அது எழும் அதே சமயத்தில், தூக்கம் கனவாகவோ, விழிப்பாகவோ மாறுகிறது. ஆனால் தற்போது நான் கனவைப் பற்றி கவலைப் படவில்லை. இப்போது இந்த விழிப்பு நிலையில், நான் யார்?

நான் தூக்கத்திலிருந்து தோன்றியிருந்தால், பின் ‘நான்’ அறியாமையால் மூடப்பட்டிருந்தது. இத்தகைய அறிவில்லாத ‘நான்’, மறை நூல்கள் உறைப்பதும், சான்றோர்கள் உறுதிப்படுத்துவதுமானதாக இருக்க முடியாது. ‘நான்’ தூக்கத்திற்கும் கூட அப்பால் உள்ளேன். ‘நான்’ இப்போது, இங்கு, இருக்க வேண்டும்; அதோடு மட்டுமில்லாமல், நான் தூக்கத்திலும் கனவுகளிலும் கூட, அந்த நிலைகளின் குணங்கள் இல்லாமல் எப்போதுமே இருந்து வந்த ‘நான்’ தான். எனவே ‘நான்’ இந்த மூன்று நிலைகளுக்கும் அடிப்படையான, ஆனந்த நிலையையும் கடந்த, குறிப்பிட்ட குணங்கள் இல்லாத, கீழ்படிவமாக இருக்க வேண்டும். “

சுருங்கச் சொல்லப்போனால், ‘நான்’ ஐந்து உறைகளுக்கும் அப்பாற்பட்டதாகும். அடுத்தது, உண்மையான நான் என்று இல்லாத எல்லாவற்றையும் நிராகரித்தபின், மீதம் உள்ள பொருள் தான் ஆன்மா, உண்மை-உணர்வு-ஆனந்தம் (Sat-Chit-Ananda).

காணப்படும் பொருளெல்லாம் மறையும் வரை காண்பவரான நானைப் பார்த்தவாறு இருந்தால், காண்பவர் மேலும் மேலும் நுட்பமாக ஆவார்; பின்பு, வரையறையில்லாத காண்பவர் மட்டும் மிஞ்சி நிற்பார்.

~~~~~~~~

உரையாடல் 43.

பக்தர்: பொய் நானிலிருந்து உண்மை நானை வேறுபடுத்தி அறிவது எப்படி?

மகரிஷி : தன்னை உணராதவர் யாராவது இருக்கிறார்களா? ஒவ்வொருவரும் அறிகிறார், இருந்தாலும் அறிவதில்லை. விசித்திரமான முரண்பாடுள்ள தோற்றம் கொண்ட மெய். 

மனம் உள்ளதா இல்லையா என்று விசாரணை செய்தால், மனம் இல்லை என்று தெரிய வரும். அது தான் மனக்கட்டுப்பாடு. இல்லையென்றால், மனம் இருப்பதாக எண்ணி ஒருவர் அதைக் கட்டுபடுத்த முயன்றால், அது மனம் மனதைக் கட்டுபடுத்துவதாகும். இப்படி செய்வது, ஒரு திருடன், திருடனை, அதாவது தன்னையே பிடிக்க, ஒரு போலீஸ்காரனாக ஆவதற்கு இணையாகும். மனம் இந்த விதத்தில் தான் தங்குகிறது; தன்னிடமிருந்தே நழுவிக் கொள்கிறது. 

~~~~~~~~

உரையாடல் 63.

உயர்ந்த பதவியில் உள்ள ஒரு அதிகாரி கேட்டார் :  பிந்திய தாழ்ந்த பதவியில் உள்ளவர்களுக்கு தன்னை விட அதிக பதவி உயர்வு கொடுக்கப்பட்டால், மனம் மிகவும் தவிக்கிறது.  இத்தகைய சூழ்நிலைகளில்,  ‘நான் யார்?’ என்ற விசாரணையால் இந்த  மனிதரின் மனதை சாந்தப்படுத்த முடியுமா? 

மகரிஷி : ஆமாம். நிச்சயமாக. ‘நான் யார்?’ என்ற விசாரணை மனதை உட்புறம் திருப்பி அதை அமைதியாக்கும். 

~~~~~~~~

உரையாடல் 106.

பக்தர்: பேரானந்தம் பெறுவது எப்படி?

மகரிஷி : பேரானந்தம் என்பது புதிதாகக் கிடைப்பதில்லை. அதற்கு மாறாக, நீங்கள் எப்போதுமே பேரானந்தம் தான். நிறைவு இல்லாத உணர்வால், இந்த இச்சை பிறக்கிறது.  யாருக்கு இந்த நிறைவில்லாத உணர்வு? விசாரியுங்கள். ஆழ்ந்த தூக்கத்தில், நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தீர்கள். இப்போது நீங்கள் அப்படியில்லை. அந்தப் பேரானந்தந்திற்கும் இந்த பேரானந்தம் இல்லாத தன்மைக்கும் இடையில் என்ன குறுக்கிட்டுள்ளது? அது தான் தான்மை. அதன் மூலத்தை நாடி தேடுங்கள்; நீங்கள் பேரானந்தம் தான் என்பதைக் கண்டுப்பிடித்துக் கொள்ளுங்கள். 

புதிதாகப் பெற ஒன்றும் இல்லை. அதற்கு மாறாக நீங்கள் பேரானந்தத்தை விட வேறானவர் என்று எண்ணும் அறியாமையை நீங்கள் அகற்றி விட வேண்டும். யாருக்கு இந்த அறியாமை? தான்மைக்கு. தான்மையின் மூலத்தை தடம்பின்பற்றுங்கள். பிறகு, தான்மை தொலைந்து விடும், பேரானந்தம் மிஞ்சி இருக்கும். அது நிலையானது. இப்போது, இங்கே, நீங்கள் “அது” தான். எல்லா சந்தேகங்களையும் தீர்க்க இது தான் முக்கிய திறவுகோல். சந்தேகங்கள் மனதில் எழுகின்றன. மனம் தான்மையால் பிறக்கிறது. தான்மையின் மூலத்தைத் தேடுங்கள், பிறகு ஆன்மா வெளிப்படுத்தப்படும். அது மட்டுமே உள்ளது. பிரபஞ்சம் என்பது விரிவாக்கப் பட்ட ஆன்மா தான். அது ஆன்மாவை விட வேறு இல்லை. 

~~~~~~~~

உரையாடல் 108.

மகரிஷி : உப்புக் கல்லில் உள்ள உப்பு, கண்ணுக்கு தெரிகிறது. அது கரைந்த கரைசலில் தெரிவதில்லை.  ஆனாலும், அதன் சுவை இருப்பது அறியப்படுகிறது. அதே போல், மெய்மை, அறிவினால் உணரப்படாவிட்டாலும், வேறு விதத்தில் உணரப்படலாம், அதாவது, மனதைக் கடந்த நிலையில்.  

பக்தர்: எப்படி?

மகரிஷி : கண்கட்டப்பட்டு கொள்ளைக்காரர்களால் காட்டில் விட்டு விடப்பட்ட ஒரு மனிதன், விசாரித்தவாறு தன் இல்லத்திற்கு திரும்புவது போல, அறியாமையால் கண்கட்டப் பட்டுள்ள ஒரு மனிதன், இவ்வாறு கண்கட்டப் படாமல் இருப்பவர்களை விசாரித்து, தனது மூலத்தை நாடி தேடி, அந்த இடத்திற்கு திரும்புகிறான். 

~~~~~~~~

உரையாடல் 174.

பக்தர்: தான்மையின் மூலத்தைக் கண்டுபிடிக்க இரண்டு வழிமுறைகள் இருக்கிறதா? 

மகரிஷி : இரண்டு மூலங்கள் இல்லை, இரண்டு வழிமுறைகள் இல்லை. ஒரே ஒரு மூலாதாரம் தான் உள்ளது, ஒரே ஒரு வழிமுறை தான் உள்ளது.  

பக்தர்: தியானத்திற்கும் ஆன்ம விசாரணைக்கும் என்ன வித்தியாசம்? 

மகரிஷி : தான்மையை வைத்துக் கொண்டால் தான் தியானம் செய்ய முடியும். அதில் தான்மை இருக்கிறது, தியானம் செய்யப்படும் பொருளும் இருக்கிறது. இந்த வழிமுறை மறைமுகமானது. ஆனால், ஆன்மா ஒன்றே ஒன்று தான். தான்மையை, அதாவது தான்மையின் மூலத்தை, நாடி தேடுவதால், தான்மை மறைந்து போய் விடுகிறது. மிஞ்சி இருப்பது தான் ஆன்மா. இந்த வழிமுறை நேரடியானது. 

பக்தர்: பின் நான் என்ன செய்ய வேண்டும்?

மகரிஷி : ஆன்மாவைப் பற்றிக் கொள்ள வேண்டும்.

பக்தர்: எப்படி?

மகரிஷி : இப்போது கூட நீங்கள் ஆன்மா தான். ஆனால், தான்மை உணர்வை, வரையறையில்லாத உணர்வாக குழப்பப்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள். இந்த பொய்யான இணைப்பு அறியாமையால் தான் உள்ளது.  தான்மை அகலும் போது அறியாமையும் அகன்று விடுகிறது. தான்மையை அழிப்பது ஒன்று தான் சாதிக்கப்பட வேண்டும்.  ஞானம் ஏற்கனவே இருக்கிறது. ஞானம் அடைய முயற்சி ஒன்றும் அவசியமில்லை. ஏனெனில், வெளிப்புறமானது ஒன்றுமில்லை, புதிதானது ஒன்றுமில்லை. ஆன்மா எப்பொதும், எங்கும், இப்போதும், இங்கும், உள்ளது.

தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா

சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (3)
சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (1)
சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (2)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!