திரு ரமண மகரிஷியின் இளமை காலம்
ஆருத்ரா தரிசனம் என்பது சிவ பெருமான், வானளாவிய அகண்ட ஞாலத்தில் நடனமாடும் திரு நடராஜர் என்ற ரூபத்தில் தோன்றிய திருவிழா. இந்த திருவிழா தமிழ் நாட்டின் திருச்சுழியில், பூமிநாதர் கோவிலில், டிஸம்பர் மாதம், 29ம் தேதி, 1879 வது வருஷத்தில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்தது. சிவபெருமானின் அலங்கரிக்கப் பட்ட திருவுருவம் சடங்கு முறைகளின் படி, பகலிலும் இரவிலும், தெருக்களில் ஊர்வலம் சென்று வந்தது. தெய்வம் மீண்டும் கோவிலுக்குள் நுழையும் அதே தருணத்தில், டிஸம்பர் மாதம் 30ம் நாளில், நள்ளிரவில், ஒரு மணிக்கு, கோவிலுக்கு அண்மையில் உள்ள ஒரு வீட்டில் ஒரு ஆண் குழந்தையின் முதல் அழுகுரல் கேட்டது. குழந்தையின் பாக்கியசாலியான பெற்றோர் திரு சுந்தரம் அய்யரும், அழகம்மாளும் ஆவர். புதுக் குழந்தைக்கு வெங்கடராமன் என்ற பெயர் வழங்கப்பட்டது. குழந்தை பிறந்த சமயத்தில், பெரும்பாலும் கண் பார்வை இழந்த ஒரு பெண்மணி உதவி வந்தாள். அவள் மிக்க அதிசயத்துடன், குழந்தையை ஓர் அபூர்வ சோதி சூழ்ந்திருப்பதாக சொன்னாள்.
வெங்கடராமனின் இள பருவம் மிக சாதாரணமாகத் தான் இருந்தது. அதே வயதுள்ள சிறுவர்களுடன் சேர்ந்து தமாஷிலும் விளையாட்டிலும் காலம் கடந்தது. வெங்கடராமனுக்கு ஆறு வயதானபோது, ஒரு சமயம், தந்தையின் சட்டம் சார்ந்த தாள்களை சிறு காகிதக் கப்பல்களாக அமைத்து தண்ணீரில் மிதக்க வைத்தார். தந்தை மிக்க கோபம் கொண்டு கண்டித்தார். இதனால் வெங்கடராமன் வீட்டை விட்டு சென்று விட்டார். பல நேரம் தேடி அலைந்த பின், கடைசியில், கோவிலின் அர்ச்சகர், தெய்வீக அன்னை தேவியின் திரு உருவச் சிலையின் பின்னால் இளஞ்சிறுவர் ஒளிந்திருப்பதைக் கண்டார். வெங்கடராமன், இள வயதிலேயே, உலக துயரங்கள் துன்புறுத்திய போது, தெய்வத்தின் அருளில் ஆறுதலை நாடினார்.
வெங்கடராமன் தொடக்கக் கல்வியை திருச்சுழியில் முடித்து விட்டு, மேலும் கல்வி பெற திண்டுக்கல் சென்றார். 1892 ம் வருடம், பெப்ரவரி மாதத்தில், அவரது தந்தை காலமானார். குடும்பம் இதனால் சிதறியது. வெங்கடராமனும் அவரது மூத்த சகோதரரும், தமது தந்தையின் சகோதரர் திரு சுப்பைய்யருடன் மதுரையில் வாழச் சென்றனர். சிறிய குழந்தைகள் அம்மாவுடன் தங்கினர். வெங்கடராமன் முதலில், ஸ்காட்ஸ் மிடில் ஸ்கூல் என்ற பள்ளிக்குச் சென்றார். அதன் பிறகு, அமெரிக்கன் மிஷன் ஹை ஸ்கூல் என்ற பள்ளியில் சேர்ந்தார்.
இந்தச் சிறுவர், பள்ளியின் பாடங்களைப் படிப்பதை விட விளையாட்டுகளில் ஈடுபடத்தான் அதிகமாக விருப்பினார். அவருக்கு அற்புதமான நினவுத்திறம் இருந்தது. அவரால், ஒரு பாடத்தை, ஒரு முறை படித்த உடனேயே, அதை மறுபடியும் அப்படியே ஒப்பிக்கும் ஆற்றல் இருந்தது. அவரிடம் இருந்த ஒரே ஒரு, விசித்திரமான, இயல்பற்ற ஒரு குணம் அவரது ஆழ்ந்த தூக்கம் தான். அவரது உறக்கம் மிகவும் ஆழ்ந்திருந்ததால், அவரை எழுப்புவது எளிதாக இல்லை. பகல் நேரத்தில் அவரை எதிர்க்கும் வலிமையற்றவர்கள், இரவில் வந்து, அவரை படுக்கையிலிருந்து இழுத்து, அவர் தூங்கிக் கொண்டிருந்த போதே மனமார அடித்தனர். அடுத்த நாள் இதெல்லாம் நடந்ததே தெரியாமல், அவருக்கு புதுச் செய்திகளாக இருந்தன.
இந்த இளம் சிறுவர் முதன்முதலாக அருணாசலம் என்பது உண்மையில் புவியில் ஒரு இடம் என்பதை அவர்களைச் சந்திக்க வந்த ஒரு விருந்தாளியிடமிருந்து அறிந்துக் கொண்டார். சிறுவர் அந்த விருந்தாளியை, “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டபோது, விருந்தாளி, “அருணாசலத்திலிருந்து வருகிறேன்” என்றார். சிறுவர் மிக்க உற்சாகத்துடன், “என்ன? அருணாசலத்திலிருந்தா? அது எங்கு இருக்கிறது?” என்று கேட்டார். இது கூடவா இந்த பையனுக்கு தெரியாது என்று நினைத்தபடி, விருந்தாளி சிறுவரிடம், “அருணாசலமும் திருவண்ணாமலையும் ஒன்றே தான்” என்றார். இந்த சம்பவத்தைப் பற்றி சில காலத்திற்கு பிறகு அவர் அருணாசலருக்கு எழுதிய ஒரு கவிதைப் பாடலில் குறுப்பிட்டுள்ளார்.
இது என்ன அற்புத விந்தை! அருணசலர் ஒரு உணர்வில்லாத மலையாக நிற்கிறார்! இந்த மலையின் செயல்கள் மனிதரின் அறிவுக்கு எட்டாத ஒரு விசித்திர புதிர். மிகச் சிறிய வயதிலிருந்தே என் மனதில், அருணாசலம் என்பது மிக்க மகிமையும் சிறப்பும் வாய்ந்தது என்று தெளிவாக ஒளிர்ந்தது. வேறொருவர் அருணாசலமும் திருவண்ணாமலையும் ஒன்று தான் என்று சொன்ன போது கூட, அதன் பொருளை நான் அறியவில்லை. அது என்னை தன்னிடம் ஈர்த்து, என் மனதை அசைவின்றி நிலைநிறுத்தியதும், நான் அதன் அண்மையில் வந்த போது, அது அசைவின்றி நிலையாக நிற்பதைக் கண்டேன்.
சில காலத்திற்கு பிறகு, அவர் முதன் முறையாக அறுபத்து மூவரின் சரித்திரங்களான பெரிய புராணத்தைப் படித்தார். இத்தகைய அன்பும், நம்பிக்கையும், தெய்வீக ஆர்வமும் இருக்கக் கூடுமென்பதைப் பற்றி அவர் பரவசம் நிறைந்த வியப்பால் மனம் கொள்ளாத மகிழ்ச்சி அடைந்தார். இறை பொருளுடன் இணைவதற்கு வழிகாட்டும் துறவைப் பற்றிய கதைகளால் இன்பம் நிறைந்த நன்றியுடன் அவருடைய மனம் சிலிர்த்தது. அந்த புனிதர்களைப் பின் பற்றி வாழ ஆவல் கொண்டார். இந்த சமயத்திலிருந்து, அவருள் ஒரு விழிப்புணர்வு தோன்றத் தொடங்கியது. இதைப் பற்றி அவருக்கே இயல்பான எளிமையுடன் அவர் உறைத்தார்: “முதலில் இதை நான் ஒரு சுர நோய் அல்லது காய்ச்சல் என்று நினைத்தேன். பிறகு, இது உண்மையென்றால் இது ஒரு சுகமான நோய் தான், இருந்து விட்டு போகட்டும் என்று முடிவு செய்தேன்.”