பகவான் திரு ரமண மகரிஷி
திரு ரமண மகரிஷி. ரமண மகரிஷியைப் பற்றி தெரியாதவர்களுக்கு நான் பணிவுடன் ஒரு அறிமுகம் அளிக்க விரும்புகிறேன். தெரிந்தவர்களுக்கும் அவரைப் பற்றி எத்தனை முறைக் கேட்டாலும் அலுக்காது. ரமண மகரிஷி இந்தியாவில், பாரத நாட்டின் ஒரு மாபெரும் ஞானியாவார்.
திரு ரமணர் அன்பு, கருணை, புரிந்துக் கொள்ளல், மன அமைதி, பரிபூரணம் – இந்த எல்லா சிறந்த குணங்களையும் கொண்ட மகரிஷி. அவர் தெய்வத்தின் உருவகமாவார். உயர்ந்த பெற்றோர்களுக்கு அற்புத ஒளியுடன் தோன்றி, இந்த உலகத்தில் இன்னல்களில் சிக்கி தவிக்கும் ஆன்மாக்களுக்கு அடைக்கலம் அளிக்க மனித உருவில் தோன்றினார்.
அவரது பதினாராவது வயதில், ரமணர் தமது ஆத்மானுபாவத்தை, இன்பமே உருவான உண்மைத் தன்மையை, பூரணமாக உணர்ந்தார். அவர் வீட்டிலிருந்து அகன்று, புனிதமான அருணகிரியை, சிவபெருமானும் பார்வதி அன்னையும் உறையும், தமிழ் நாட்டில் உள்ள தலைசிறந்த திருவண்ணாமலையை அடைந்தார்.
தமது பரிபூரண மன அமைதியையும், சாந்தியையும் பிரகாசமாக பரவியபடி, எப்போதும் என்றென்றும் உறைகிறார் ரமணர். அவர் இன்றும் உறைகிறார் என்று நான் சொல்வதற்குக் காரணம் இது தான். ரமணர் இனி உடல் உருவில் இல்லாவிட்டாலும், திருவண்ணாமலைக்கு வருபவர்களுக்கும், அல்லது அவரது அறிவுரைகளைப் மனதில் பின்பற்றி, அவரது வழித்துணையை நாடும் பக்தர்களுக்கும், அவரது அன்பும், ஒளியும், அருளும், சூழலும் எங்கும் எப்போதும் கிடைக்கிறது; எல்லோருக்கும் எப்போதும் கிடைத்துக் கொண்டே இருக்கும். ஏனெனில், அவர் பரமாத்மா, எங்கும் நிறைந்திருக்கும் கடவுளின் சொரூபமாவார்.
அவரது அறிவுரைகள், கடவுள் என்னும் ஆனந்த ஆழ்நிலையை, தூய பேரின்ப தன்னிலையைப் பெறுவதற்கான அறிவையும் வழிமுறைகளையும் அளிக்கின்றன. அவர் உலக வாழ்வின் வெறுமையையும், ஆழமற்ற அர்த்தமற்ற தன்மையையும் வெளிப்படுத்துகிறார். உலகோடு உள்ள பந்தங்களாலும் எண்ணப்பிடிப்புகளாலும் விளையும் துயரங்களை விவரிக்கிறார். ரமணரைப் பற்றி ஒரு மிக சிறந்த பொருள் என்னவெனில், அவர் எல்லோரையும் சமமாக நடத்தினார் என்பது தான்.
திரு ரமண மகரிஷி பக்தர்களுடன் தமது ஆழ்ந்த மௌனத்தாலும் அமைதியாலும் தொடர்பு கொண்டு தமது அருளைப் பொழிந்தார். மிக தீவிரமான பக்தர் ஒருவர் கேட்டால் தான், அவர் சில சமயம் அறிவுரைகள் வழங்கினார், அல்லது சிறிய நூல்களும் கவிதைகளும் அளித்து அருள் செய்தார். ஆனால், அந்த சில அறிவுக் களஞ்சியங்களுக்கு, அளவே இல்லாத செல்வமும், பொக்கிஷங்களும் கூட இணையாகாது. ஏனெனில், மிகுந்த வலியினால் துன்புறுத்தும் ஒரு காயத்தில், இனிமையான மருந்து வைக்கும் போது தொன்றும் தணிவையும் நிவாரணத்தையும் போல, ரமணரின் அறிவுரைகள், நமக்கு அன்பும், சுகமும், உதவியும், நற்கதியும் அளிக்கின்றன. செல்வத்தாலும் பணத்தாலும் உண்மை அன்பையும் சந்தோஷத்தையும் வாங்க முடியுமா?
ஞானிகளுக்கும் ஞானியான இந்த மகிமை வாய்ந்த பெருமானின் பேரழகு என்னவெனில், அவரது அருள் அருகில் இருப்பவர்களுக்கும், வெகு தூரத்தில் இருப்பவர்களுக்கும் சமமாக கிடைத்து வந்தது. அந்த அருள் இன்னும் எல்லொருக்கும் கிடைத்து வருகிறது. ஆனால் அவரது அற்புதமான அருளுக்கு மிக மேன்மையான சான்று என்னவெனில், அவரது அருள், ஆண், பெண், செல்வந்தர், ஏழை, அறிஞர், எளியவர், இளமை, முதுமை என்ற வேறுபாடுகளைப் பார்க்காமல் எந்த சாதி மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், எல்லோருக்கும் ஒரே விதத்தில், பாரபட்சமின்றி கிடைக்கிறது என்ற உண்மை தான்.
எனக்கு ரமணருடைய அறிவுரைகள், கடுமையான வெய்யில் தகிக்கும் ஒரு நாளன்று, இனிமையான சுகமான தென்றல் வீசுவது போல என் வழியில் வந்தன. அவரது சூழலும், அமைதியும், கையில் உள்ள நெல்லிக்கனி போல் என்னை வந்தடைந்தன. உடல் உருவில் அவர் இல்லாவிட்டாலும், அவரது சொற்களைப் பின்பற்றவும், அவரது இனிய தன்மையைப் பற்றி நினைக்கவும் மிக இயல்பாகவும் அமைதி வாய்ந்ததாகவும் இருந்தது. ஏதோ ஒரு விதத்தில், எனக்கு எப்போதும் அவரை நம்ப முடியும், புகலடைய முடியும் என்று தோன்றியது. இத்தகைய மிக பெரும் ஞானி, பல மேன்மை வாய்ந்த குரு, முனிவர், மகாத்மா, பக்தர் ஆகியோர் பாராட்டி வழிபடும் மகரிஷி, எனக்கு வழிகாட்டி என்னை உய்விக்க வந்ததை நான் பணிவுடனும் நன்றியுடனும் உணர்கிறேன்.
மிகப் பெரிய சான்றோருக்கும், பக்தர்களுக்கும், மகாத்மாக்களுக்கும் தோன்றிய இத்தகைய மாபெரும் கடவுள், என்னைப் போன்ற எளியவளுக்கு அருள் செய்ய வந்தது என் மனதைத் தொடுகிறது. நான் இதயப் பூர்வமாக திரு ரமணருக்கு என் நன்றியைத் தெரிவிக்கிறேன். இதற்குப் பிறகு நான் எதைப் பற்றி குறை சொல்ல முடியும்? இதை விட முக்கியமானது என்ன இருக்கிறது?
ஒன்று நான் உறுதியுடன் சொல்ல முடியும். ரமணர் எனது சிறந்த நண்பராவார். உண்மை என்னவெனில், அவரவர்களுக்கு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், ரமணர் எல்லோருக்குமே சிறந்த நண்பர் தான். இதில் சந்தேகமே இல்லை.