நம்பிக்கை என்றால் என்ன? கடவுள் நமக்கு வழிகாட்டுகிறாரா?
கடவுள் நம்பிக்கையின் மீது ரமண மகரிஷி உள்நோக்கும் நுண்ணறிவு அளிக்கிறார்.
ரமண மகரிஷியின் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள்
~~~~~~~~
உரையாடல் 1:
ஒரு வருகையாளர் கேட்டார்: கடவுள் நமக்கு வழிகாட்டுகிறார் என்று ஶ்ரீ பகவான் நேற்று சொன்னார். பிறகு எதைச் செய்வதற்கும் நாம் ஏன் எத்தனம் செய்ய வேண்டும்?
மகரிஷி.: உங்களை யார் செய்யச் சொன்னார்கள்? கடவுளின் வழிகாட்டுதலில் அந்த நம்பிக்கை இருந்திருந்தால் இந்தக் கேள்வி எழுந்திருக்காது.
பக்தர்.: உண்மை என்னவென்றால் கடவுள் நமக்கு வழிகாட்டுகிறார். பிறகு ஜனங்களுக்கு இத்தகைய அறிவுறுத்தல்களால் என்ன பயன்?
மகரிஷி.: அறிவுறுத்தல்களை நாடுபவர்களுக்காக அவை உள்ளன. உங்களுக்கு கடவுளின் வழிகாட்டுதலில் திடமான நம்பிக்கை இருந்தால், அதை விடாமல் பிடித்துக் கொள்ளுங்கள். அதோடு, உங்களைச் சுற்றி நடப்பதைப் பற்றி கவலைப் படாதீர்கள். மேலும், சந்தோஷம் இருக்கலாம், துயரம் இருக்கலாம், கடவுள் மீது நம்பிக்கையில் உறைந்து, இவை இரண்டையும் இலட்சியம் செய்யாமல் இருங்கள். கடவுள் நம்மையெல்லாம் கவனித்துப் பார்த்துக் கொள்கிறார் என்ற வலிமையான நம்பிக்கை இருந்தால் தான் அப்படி செய்ய முடியும்.
திரு. சோப்ரா கேட்டார்: “அப்படிப்பட்ட திடமான நம்பிக்கையை நான் பெறுவது எப்படி?”
மகரிஷி.: பார்த்தீர்களா? இந்த மாதிரி அறிவுறுத்தல்களை விரும்புபவர்களுக்காகத் தான் அறிவுறுத்தல்கள் உள்ளன. துன்பத்திலிருந்து விடுதலை அடைய சில பேர் நாடுகின்றனர். அவர்களிடம் கடவுள் நமக்கெல்லாம் வழிகாட்டுகிறார் என்றும், அதனால் நடக்கப்போவதைப் பற்றி ஒரு கவலையும் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் சொல்லப் படுகிறது. அவர்கள் சிறந்த விதமானவர்களாக இருந்தால், உடனே அதை நம்பி, கடவுள் மீது நம்பிக்கையில் திடமாக உறைகின்றனர்.
ஆனால் வேறு சிலர் இந்த வாக்கியத்தினால் மட்டும் அவ்வளவு எளிதாக நம்பிக்கை அடைவதில்லை. “கடவுள் யார்? அவருடைய தன்மை என்ன? அவர் எங்கே இருக்கிறார்? அவரை அடைவது எப்படி?” என்றெல்லாம் அவர்கள் கேட்கின்றனர்.
அவர்களை திருப்திபடுத்துவதற்காக, புத்திசார்ந்த விவாதம் தேவைப்படுகிறது. கருத்துக்கள் சொல்லப்படுகின்றன; அவற்றின் நலன்களும், தீமைகளும் விவாதிக்கப் படுகின்றன; பிறகு புத்திக்கு உண்மை தெளிவாக்கப்படுகிறது.
விஷயம் புத்தியினால் அறிந்துக் கொள்ளப் பட்டபின், தீவிரமான பக்தர் அதை நடைமுறையில் நிறைவேற்றத் தொடங்குகிறார். ஒரு உயர்ந்த சக்தி நமக்கு வழிகாட்டுகிறது என்ற உறுதியான நம்பிக்கையில் திடமாக உறையும் வரையில், அவர் ஒவ்வொரு கணமும் “யாருக்கு இந்த எண்ணங்கள்? நான் யார்?” என்றவாறு வாதிக்கிறார். அது தான் திடமான நம்பிக்கை. பிறகு அவரது சந்தேகங்கள் எல்லாம் நீங்குகின்றன. அவருக்கு வேறு அறிவுறுத்தல்கள் தேவைப்படுவதில்லை.
பக்தர்.: எங்களுக்கும் கடவுள் மீது நம்பிக்கை இருக்கிறது.
மகரிஷி.: அது திடமானதாக இருந்திருந்தால், ஒரு கேள்வியும் எழுந்திருக்காது. மனிதர் சர்வ வல்லமை படைத்த சக்தியிடம் உள்ள நம்பிக்கையில் பூரண சந்தோஷத்துடன் இருப்பார்.
பக்தர்.: ஆன்ம சொரூபத்தைப் பற்றிய சுய விசாரணை செய்வதும், மேற்சொன்ன நம்பிக்கையும் ஒன்றே தானா?
மகரிஷி.: ஆன்ம சொரூபத்தைப் பற்றிய சுய விசாரணையில், நம்பிக்கை, பக்தி, ஞானம், யோகம், இவை எல்லாம் அடங்கியுள்ளது.
~~~~~~~~
உரையாடல் 2:
ஒரு வருகையாளர் பகவானைக் கேட்டார். ஜனங்கள் கடவுளுக்கு சில பெயர்களைக் கொடுத்து விட்டு, அந்த நாமம் புனிதமானது என்றும், ஒருவர் அந்த நாமத்தை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தால், அது அந்த நபருக்கு புண்ணியம் அளிக்கும் என்றும் சொல்கிறார்கள். இது உண்மையாக இருக்க முடியுமா?
மகரிஷி.: ஏன் கூடாது? உங்களுக்கு ஒரு பெயர் உள்ளது; அந்த பெயருக்கு நீங்கள் பதிலளிக்கிறீர்கள். ஆனால் உங்கள் பெயர் அதன் மேல் எழுதப்பட்டு உங்களது உடல் பிறக்கவில்லை; அது யாரிடமும் எனக்கு இன்னின்ன பெயர் உள்ளது என்றும் சொல்லவில்லை. ஆனாலும் உங்களுக்கு ஒரு பெயர் கொடுக்கப் படுகிறது; அந்த பெயரைச் சொல்லி அழைத்தால் நீங்கள் பதிலளிக்கிறீர்கள். ஏனெனில், நீங்கள் உங்களை அந்தப் பெயருடன் ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். எனவே அந்தப் பெயர் ஏதோ ஒன்றைக் குறிக்கிறது; அது வெறும் கற்பனை இல்லை. அதே போல், கடவுளின் பெயரும் பயனுள்ளது. அதை மீண்டும் மீண்டும் உரைப்பது, அது குறிப்பிடுவதை நினைவுபடுத்திக் கொள்வதாகும். அதனால், அது பயனுள்ளது.
மகரிஷியின் இந்த அறிவுரையால் அந்த வருகையாளர் திருப்தி பட்டதாகத் தெரியவில்லை. இறுதியில், அவர் விடை பெற விரும்பினார். அப்போது ஶ்ரீ பகவானின் அருளை வேண்டினார். ஶ்ரீ பகவான் கேட்டார்: நம்பிக்கை இல்லாமல், அருள் தருவதாக உறுதியளிக்கும் வெறும் சொற்களின் சத்தங்கள் உங்களை எப்படி திருப்தி படுத்தும்?
~~~~~~~~
உரையாடல் 3:
மகரிஷி.: பிறப்பையும் இறப்பையும் வெல்லும் எத்தனத்தில், மனிதர் தன்னைக் காக்க மிகவும் உயர்ந்த சக்தியை நாடுகிறார். இவ்வாறு கடவுளிடம் நம்பிக்கையும் பக்தியும் பிறக்கிறது. கடவுளை எப்படி வழிபடுவது? சிருஷ்டிக்கப்பட்டது சக்தியற்றது; சிருஷ்டிப்பவர் சர்வ வல்லமைப் படைத்தவர். இத்தகைய சக்தியை எப்படி அணுகுவது? அவருடைய பாதுகாப்பில் தன்னை ஒப்படைத்துக் கொள்வது ஒன்று தான் மனிதருக்கு மிச்சம் உள்ளது; பூரண சரணாகதி தான் ஒரே வழி. எனவே மனிதர் கடவுளிடம் சரணடைந்துக் கொள்கிறார். சரணாகதி என்பது, மனதில், தன்னையும் தன் உடைமைகளையும் கருணையே உருவான கடவுளிடம் சமர்ப்பித்து விடுவதாகும்.
~~~~~~~~
உரையாடல் 4:
பக்தர்.: உண்மைத் தன்னிலையைப் பற்றி புத்தியில் புரிந்துக்கொள்வது, அதாவது ஒரு புத்தி சார்ந்த அறிவு தேவையா?
மகரிஷி.: ஆமாம். இல்லையெனில் கடவுள் தான் எல்லாம், ஆன்மா தான் எல்லாம் என்று ஒருவரிடம் சொன்ன உடனேயே அந்த நபர் ஏன் கடவுளையோ ஆன்மைவையோ உணருவதில்லை? அவரிடம் கொஞ்சம் தயக்கம் இருப்பதை அது காட்டுகிறது. அவருடைய நம்பிக்கை திடமாவதற்கு முன்னால், அவர் தனக்குள்ளேயே வாதித்து, உண்மைத் தன்னிலையைப் பற்றி சிறிது சிறிதாக தன்னை நம்ப வைத்துக் கொள்ள வேண்டும்.
~~~~~~~~
உரையாடல் 5:
பக்தர்.: மனம் இதயத்தில் இருக்கும் போது எல்லா எண்ணங்களும் எப்படி நிற்கின்றன?
மகரிஷி.: மனத்திட்பத்தின் வலிமையினாலும், அப்படி நிகழும் என்ற ஆசானின் அறிவுரைகளில் உள்ள திடமான நம்பிக்கையாலும்.
பக்தர்.: இந்த செயல்பாட்டினால் விளையும் நன்மை என்ன?
மகரிஷி.:
(1) மனத்திட்பத்தின் கட்டுப்பாடு – ஒருமுக சிந்தனையின் வளர்ச்சி.
(2) கட்டுக்கடங்கா உணர்ச்சிகளின் கட்டுப்பாடு – உணர்ச்சிளைக் கட்டுப்படுத்துவதன் வளர்ச்சி.
(3) ஒழுக்கமுள்ள செயல்கள் செய்வதன் அதிகரிப்பு – சமத்துவம்; எல்லோரையும் சமமாக நடத்துவது.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா