What is Heart? It is the Reality.
தெய்வீக அருள் என்றால் என்ன? அதைப் பெறுவது எப்படி? (1)
நம்பிக்கை என்றால் என்ன? கடவுள் நமக்கு வழிகாட்டுகிறாரா?

இதயம் என்றால் என்ன? அது உண்மை சுயநிலை தான்.

இதயம் அல்லது ஹ்ருதயம் என்பதைப் பற்றி ரமண மகரிஷியின் விவரமான விளக்கங்கள் இங்கு வழங்கப்படுகின்றன. கருத்து ஒரே விதமாக இருந்தாலும், உரையாடல்கள் வெவ்வேறு சமயங்களில், வெவ்வேறு நபர்களுடன் நிகழ்கின்றன. 

========

சில உரையாடல்களில் மகரிஷி பின் வருமாறு தெளிவாக்கினார்.


மகரிஷி: இதயம் என்பது சாதாரணமாக மார்பின் இடது பக்கத்தில் இருக்கும் தசை உறுப்பாக கருதப்படுகிறது. நவீன “உளவியல் சார்ந்த பத்திரிகை” இடது புறம் உள்ள ஸ்தூல உறுப்பையும், வலது புறம் உள்ள இதய நடு மையத்தையும் குறிப்பிடுகிறது. கிறிஸ்துவ வேத நூலான “பைபிள்”, ஒரு முட்டாளின் இதயம் இடது புறத்தில் உள்ளதாகவும், ஞானமுள்ள மனிதனின் இதயம் வலது புறத்தில் உள்ளதாகவும் சொல்கிறது. “யோக வசிஷ்டம்” பின்வருமாறு சொல்கிறது : இரண்டு இதயங்கள் உள்ளன; ஒன்று சத்-சித்-ஆனந்தம் (சச்சிதானந்தம்); மற்றொன்று இரத்த நாளமாகும்.

========

மகரிஷி: நீங்கள் இதயத்தை மனதால் அறிய முடியாது. பிறகு மகரிஷி, தனது மார்பு பிரதேசத்தின் வலது பக்கத்தைச் சுட்டிக் காட்டியபடி சொன்னார் : இதய மையம் இதோ இங்கு உள்ளது என்று நான் சொல்லும் போது, அதை நீங்கள் கற்பனையால் உணர முடியாது. கற்பனை செய்வதை விட்டு விட்டு, உங்களது சுய சொரூபமாக இருப்பது தான் ஒரே நேரடியான வழி. அதை உணரும்போது, நீங்கள் தானாகவே அங்கு இதய நடு  மையம் இருப்பதை உணருவீர்கள்.   இது தான், மறை நூல்களில் ஹ்ருத்-குஹ-அருள், அதாவது, “இதய குகையில் உள்ள அருள்”, “உள்ளம்”, “உள்ளது”, “ஹ்ருதயம்”, என்றெல்லாம் குறிப்பிடப்படும் நடு மையமான இதயம் ஆகும். 

========

மகரிஷி: நான் உங்களை உடலில் எங்கிருந்து “நான்” எழுகிறது என்று பார்க்கச் சொல்கிறேன். ஆனால் “நான்” என்பது மார்பின் வலது பக்கத்தில் எழுகிறது என்றும், அதில் ஒன்று சேர்ந்து இணைகிறது என்றும் சொல்வது உண்மையில் சரியில்லை. ஏனெனில், “இதயம்” என்பது உண்மை சுய சொரூபத்திற்கு இன்னொரு பெயராகும். அது உடலில் உட்புறமும் இல்லை, வெளிப்புறமும் இல்லை. அதற்கு “உள்ளும்” “புறமும்” கிடையாது. ஏனெனில் அது மட்டுமே உள்ளது. 

========

மகரிஷி: வேதங்களிலும் மறை நூல்களிலும், இதயம் என்பது “நான்” என்னும் கருத்து எழும் இடத்தை குறிப்பிடுவதற்காக உபயோகிக்கப் படுகிறது. அது என்ன, ஒரு தசைப் பந்திலிருந்தா எழுகிறது? அது நமக்குள் நடுவில் எங்கிருந்தோ எழுகிறது. இந்த “நான்” என்பதற்கு ஒரு குறிப்பிட்ட இடம் கிடையாது. எல்லாமே ஆன்மா தான். அதைத் தவிர வேறு எதுவும் கிடையாது. எனவே, நாம் “நான்” என்று கருதும் நமது முழு உடம்பையும், முழு பிரபஞ்சத்தையுமே “இதயம்” என்று குறிப்பிடலாம். ஆனால் பக்தருக்கு உதவியளிக்க, அவருக்கு பிரபஞ்சத்திலும் உடலிலும் ஒரு திட்டவட்டமான பகுதியை குறிப்பிட வேண்டும். எனவே, இதயம் ஆன்மாவின் இருக்குமிடமாக சுட்டிக்காட்டப் படுகிறது. ஆனால், உண்மையில், நாம் எங்கும் இருக்கிறோம், இருப்பதெல்லாம் நாம் தான், வேறு எதுவுமே இல்லை.

========

ஒரு பக்தருடன் ரமண மகரிஷியின் உரையாடல்.

மகரிஷியை ஒரு படித்த இளைஞர் கேட்டார். “உயிரியல் அறிஞர்கள் இதயம் இடது புறத்தில் உள்ளது என்று நிர்ணயித்திருக்கும் போது, நீங்கள் எப்படி இதயம் வலது புறத்தில் இருக்கிறது என்று சொல்கிறீர்கள்?” இளைஞர் அதிகாரப்பூர்வமான ஆதாரம் கேட்டார். 

மகரிஷி : உண்மைதான். உடலின் இதயம் இடது பக்கத்தில் தான் உள்ளது; இதை மறுக்க முடியாது. ஆனால், நான் குறிப்பிடும் இதயம் உடல் சார்ந்த்ததில்லை. அது வலது பக்கத்தில் தான் உள்ளது. இது எனது அனுபவம்; வேறு ஆதாரம் எனக்குத் தேவையில்லை. இருந்தாலும், இதற்கு ஆதாரத்தை ஒரு மலையாள ஆயுர்வேத நூலிலும், சீதா உபநிஷதத்திலும் காணலாம்.

(மகரிஷி சீதா உபநிஷதத்தின் மந்திர வரிசையை மேற்கோள் காட்டினார். மலையாள ஆயுர்வேத நூலிலிருந்து செய்யுள் வரிசையை உறைத்தார்.)

========

இன்னொரு உரையாடல்.

மகரிஷி: நீங்கள் எப்போதும் ஆன்மாவில் தான் இருக்கிறீர்கள். அதை அடைவதற்கு ஒன்றும் இல்லை.

பக்தர்: நீங்கள் இதயத்தை தியானத்தின் இருப்பிடமாக சொல்லியிருக்கிறீர்கள்? 

மகரிஷி: ஆமாம், அதுவும் தான்.

பக்தர்: இதயம் என்றால் என்ன?

மகரிஷி: அது ஆன்மாவின் மையம். ஆன்ம சொரூபம் மையங்களின் மையமாகும். இதயம் என்பது மனம் சார்ந்த மையம்; உடல் சார்ந்த மையம் இல்லை.  

========

வேறொரு உரையாடல்.

பக்தர்: இதயம் என்றால் என்ன?

மகரிஷி: ஏதாவது ஒன்று சொல்லவேண்டுமென்றால், அது ஆன்மாவின் இருப்பிடம் என்று சொல்லலாம். 

பக்தர்: அது உடலில் உள்ள இதயமா?

மகரிஷி: இல்லை. அது “நான் – நான்” என்பது எழுவதின் இருப்பிடமாகும்.

குறிப்பு: ரமண மகரிஷி தான்மையை “நான்” என்றும், உண்மை சுய சொரூபத்தை “நான் – நான்” என்றும் குறிப்பிடுகிறார். 

========

இன்னொரு உரையாடல்.

ஒருவர் இதயம் எங்கிருக்கிறது என்றும், சொரூப ஞானம் என்றால் என்ன என்றும் கேட்டார். 

மகரிஷி: இதயம் என்பது உடல் சார்ந்ததில்லை; ஆன்மீகத்தைச் சார்ந்தது. ஹ்ருத், அயம், இரண்டும் சேர்ந்து ஹ்ருதயம் ஆகிறது. இந்த இதயம் தான் நடு மையம். அதிலிருந்து தான் எண்ணங்கள் எழுகின்றன, அதில் தான் அவை ஜீவிக்கின்றன, அங்கு தான் அவை தீர்ந்து போகின்றன.  மனதின் உள்ளடக்கம் எண்ணங்களாகும்; அவை பிரபஞ்சத்தை உருவாக்குகின்றன. இதயம் எல்லாவற்றிற்கும் மையமாகும்.  “யதோ வா இமானி பூதானி ஜாயன்த்தே”, அதாவது, “எதிலிருந்து ஜீவர்கள் உயிர் பெறுகின்றனரோ” இத்தியாதி, அது தான் உபநிஷதங்களில் குறிப்பிடப்படும் “பிரம்மன்” ஆகும். அது தான் இதயம். “பிரம்மன்” தான் இதயம்

பக்தர்: இதயத்தை உணர்வது எப்படி? 

மகரிஷி: ஒரு நொடிக்குக் கூட ஆன்ம சொரூபத்தை உணராதவர் யாருமே இல்லை. ஏனெனில் சுய நிலையை விட்டுப் பிரிந்திருப்பதாக யாரும் ஒத்துக் கொள்வதில்லை. அவரே தான் ஆன்மா. ஆன்மா இதயத்தில் உள்ளது.

பக்தர்: எனக்குத் தெளிவாகவில்லை.

மகரிஷி: ஆழ்ந்த தூக்கத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். விழித்திருக்கும் போதும் நீங்கள் இருக்கிறீர்கள். ஒரே ஆன்மா தான் இரண்டு நிலைகளிலும் உள்ளது. உலகத்தை உணர்வதும் உணராமல் இருப்பதும் தான் ஒரே வித்தியாசம். உலகம் மனதுடன் எழுகிறது, மனதுடன் அஸ்தமமாகிறது.  எது எழுகிறதோ, பிறகு மறைகிறதோ, அது ஆன்ம சொரூபம் இல்லை. ஆன்மா இதை விட வேறானது; அது மனதை எழச் செய்வித்து, பிறகு அதைத் தாங்கிக் கொண்டு, பிறகு முடிவடையச் செய்கிறது. எனவே ஆன்மா தான் அடிப்படையான ஆதாரம். 

நீங்கள் யார் என்று உங்களைக் கேட்டால், நீங்கள் உங்கள் கையை மார்பின் வலது பக்கத்தில் வைத்து, “நான்” என்று சொல்கிறீர்கள். உங்களை அறியாமல் நீங்கள் ஆன்மாவைச் சுட்டிக் காட்டுகிறீர்கள். இவ்வாறு ஆன்மா தெரிய வருகிறது. ஆனால் ஒரு மனிதர் துன்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்; ஏனெனில் அவர் உடலையும், மனதையும் உண்மை சொரூபத்துடன் குழப்பிக் கொண்டிருக்கிறார். இந்தக் குழப்பத்திற்கு  தவறான அபிப்பிராயங்கள் தான் காரணம். தவறான கருத்துக்களை நீக்குதல் மட்டுமே தேவைப் படுகிறது. இந்த நீக்கம் ஆன்ம சொரூப ஞானத்தை விளைவிக்கிறது.  

========

வேறொரு உரையாடல்.

ஒரு ஸ்பானிஷ் பெண்மணி கேட்டார்.  நீங்கள் இதயம் வலது பக்கத்தில் இருப்பதாகச் சொல்கிறீர்கள். அது எப்படி என்று விளக்கம் தர முடியுமா?

ஶ்ரீ பகவான், பிலடெல்பியாவின் உளவியல் பத்திரிகையிலிருந்து ஒரு பகுதியை, அந்த பெண்மணி படிப்பதற்காக அவளிடன் கொடுத்தார்.

பிறகு சொன்னார். “நான்” எங்கிருந்து எழுகிறதோ, அந்த இடம் தான் இதயமாகும். 

பக்தர்: அதாவது, உடல் சார்ந்த இதயத்திலிருந்து ஆன்மீக இதயம் வேறுபட்டது என்று குறிப்பிடுகிறீர்களா? 

மகரிஷி: ஆமாம். இது ஶ்ரீ ரமண கீதையின் ஐந்தாவது அத்தியாயத்தில் விளக்கப் பட்டிருக்கிறது.

பக்தர்: இதயத்தை உணரும் ஒரு நிலைப்படி ஏதாவது உள்ளதா? 

மகரிஷி: இது எல்லோருடைய அனுபவத்திலும் உள்ளது. ஒவ்வொருவரும் “நான்” என்று சொல்லும் போது, தனது மார்பின் வலது புறத்தைத் தொடுகிறார்.

========

இன்னொரு உரையாடல்.

ஒரு நீதிபதி கேட்டார்: இதயம் வலது புறத்தில் உள்ளதாகச் சொல்லப் படுகிறது. உடலில் அது இடது புறத்தில் உள்ளது.

மகரிஷி: ஆன்மீக அனுபவத்தைப் பற்றி பேசப்படுகிறது. 

பக்தர்: அது என்ன, மனம் சார்ந்த இதயமா? 

மகரிஷி: ஆமாம்.

பக்தர்: அது வலது புறத்தில் உள்ளது என்பதை எப்படி அறிவது?

மகரிஷி: அனுபவத்தின் மூலமாக.

பக்தர்: அதற்கு ஏதாவது அறிகுறி இருக்கிறதா? 

மகரிஷி: உங்களையே சுட்டிக்காட்டிக் கொண்டு பாருங்கள். 

 

தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா

தெய்வீக அருள் என்றால் என்ன? அதைப் பெறுவது எப்படி? (1)
நம்பிக்கை என்றால் என்ன? கடவுள் நமக்கு வழிகாட்டுகிறாரா?

இதயம் என்றால் என்ன? அது உண்மை சுயநிலை தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!