Give up business for vedanta
நிறைந்த ஒளி

வேதாந்தத்திற்காக வியாபாரத்தை விட்டு விடுவதா

காலை

 

வந்திருப்பவர் ஒருவர் கேட்டார்: நான் எனது வியாபாரத் தொழிலை விட்டு விட்டு, வேதாந்தத்தைப் பற்றிய புத்தகங்கள் படிப்பதை தொடங்கட்டுமா?

பகவான்:

பொருட்களுக்கு தமக்கே உரிய, சுதந்திரமான, தற்சார்புடைய உள்ளமை இருந்தால், அதாவது அவை உமது உணர்வை விட்டு அகன்று எங்காவது உறைந்தால், பிறகு உங்களால் அவைகளை விட்டு விட்டு அகன்று செல்ல முடியும். ஆனால், உங்கள் உணர்வில் இல்லாமல் அவை தனியாக உறைவதில்லை. அவை தமது உள்ளமைக்கே உம்மையும், உமது எண்ணங்களையும் தான் ஆதாரமாகக் கொண்டுள்ளன. எனவே, நீங்கள் அவற்றிலிருந்து தப்பித்துக் கொண்டு எங்கே செல்ல முடியும்? 

வேதாந்த புத்தகங்களைப் படிப்பதைப் பற்றி என்னவெனில்,  நீங்கள் எத்தனைப் புத்தகங்களை வேண்டுமானாலும் படித்துக் கொண்டே போகலாம். அவை மீண்டும் மீண்டும், “உமக்குள் உறையும் ஆன்மாவை அறிந்துக் கொள்ளுங்கள்” என்று தான் சொல்ல முடியும். ஆனால் ஆன்மா புத்தகங்களில் கிடைக்காது. அதை நீங்களே தான், உங்களுக்குள் கண்டுபிடித்து அறிந்துக் கொள்ள வேண்டும்.

மாலை

 

பெரும்பாலும் அதே போன்ற கேள்வியை மாலையில் வேறொரு வருகையாளர் கேட்டார்.

பகவான் கூறினார்:

உலகத்தையும் பொருட்களையும் விட்டு ஓடி நீங்கள் எங்கே போக முடியும்? அவை மனிதனை விட்டு விலகிச் செல்ல முடியாத நிழல் போலத் தான்.

இது சம்பந்தமாக, தனது நிழலைப் புதைக்க விரும்பிய ஒரு மனிதனின் வேடிக்கையான கதை ஒன்று இருக்கிறது. அவன் ஒரு ஆழமான பள்ளம் ஒன்று தோண்டிவிட்டு, தனது நிழலை பள்ளத்தின் அடியில் பார்த்து விட்டு, தன்னால் நிழலை இவ்வளவு ஆழத்தில் புதைக்க முடிந்ததைப் பற்றி மிகவும் மகிழ்ந்தான். அவன் பள்ளத்தை மீண்டும் சிறிது சிறிதாக நிரப்பி வந்தான். முழுவதும் நிரப்பிய பின், தனது நிழல் மீண்டும் மூடிய பள்ளத்தின் மேல் தோன்றியதைக் கண்டு ஆச்சரியமும், ஏமாற்றமும் அடைந்தான். 

அதே போல், உமத உண்மையான தன்னிலையை, ஆன்மாவை உணர்ந்து அறியும் வரை, பொருட்களும் அவற்றைப் பற்றிய எண்ணங்களும் எப்போதும் உங்களுடனேயே தான் உறையும்.

 

தினம் தினம் பகவானுடன்
மார்ச் 16, 1945
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா

 

நிறைந்த ஒளி
வேதாந்தத்திற்காக வியாபாரத்தை விட்டு விடுவதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!