Work not hindrance to meditation
"நான் செய்கிறேன்" என்ற மனநிலை இல்லாமல் பணிகள் செய்வது எப்படி
ரமண மகரிஷி : தன்னலமற்ற பணி புரிதல்

தியானத்திற்கு பணிகள் தடங்கல் இல்லை

(ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள்)

~~~~~~~~

உரையாடல் 17.

பக்தர்.: தொழில் அல்லது பணிகளில் ஈடுபடுவது தியானத்திற்குத் தடங்கலா?

மகரிஷி.: இல்லை. சுய சொரூபத்தை உணர்ந்த ஞானிக்கு, ஆன்மா மட்டுமே மெய்யாகும். பணிகள் எல்லாம் ஆன்மாவை பாதிக்காத, நிகழ்வு சார்ந்தவை மட்டுமே ஆகும். ஒரு ஞானிக்கு செயல்படும்போது கூட, காரியஸ்த்தராக இருக்கும் உணர்வு இருக்காது. அவருடைய செயல்கள், யோசனை செய்யாமல் தானாக நிகழும். அவர் இணைப்போ பற்றுகையோ இல்லாமல், அவற்றிற்கு ஒரு சாட்சி போல் உறைவார். 

ஞானியின் செயலுக்கு ஒரு குறிக்கோள் கிடையாது. ஞான பாதையில் பயிற்சி செய்யும் ஒருவர் கூட, பணிகளில் ஈடுபட்டவாறே தியானம் பயிற்சி செய்யலாம். தொடக்க நிலைப் படிகளில் உள்ள ஒருவருக்கு இது கஷ்டமாக இருக்கலாம். ஆனால் சிறிதளவு பயிற்சி செய்த பிறகு, சீக்கிரத்தில் செயல் விளைவு உண்டாகும். பணிகள் தியானத்திற்குத் தடங்கலாக இருக்காது.  

பக்தர்.: அந்த பயிற்சி என்ன? 

மகரிஷி.: தான்மையின் மூலாதாரமான “நான்” என்பதைப் பற்றி இடைவிடாத தேடலாகும்.  “நான் யார் ?” என்று கண்டுபிடியுங்கள். தூய “நான்” தான் மெய்மையாகும்; வரையற்ற, பூர்த்தியான சச்சிதானந்தமாகும். அது மறக்கப்படும்போது, எல்லா துயரங்களும் எழுகின்றன. அது கெட்டியாக பற்றிக் கொள்ளப்படும்போது, துயரங்கள் மனிதரை பாதிக்காது.  

~~~~~~~~

உரையாடல் 313.

திரு. க்ரீன்லீஸ்: “உள்ளுக்குள் உள்ள கடவுளை” தேடுவதில் ஈடுபட்டிருக்கும்போது, வெளிப்புற பணிகள் தானாகவே நிகழும் என்று பகவான் நேற்று சொன்னார். திரு சைதன்யரின் வாழ்க்கையில், அவர் ஆன்ம உருவான பகவான் கிருஷ்ணரை நாடியவாறே தமது மாணவர்களுக்கு விரிவுரை அளித்துக் கொண்டிருந்தபோது, தமது உடல் எங்கிருக்கிறது என்று தெரியாமல், கிருஷ்ணரைப் பற்றி பேசிக்கொண்டே போனார், என்று சொல்லப்படுகிறது. இது, பணியை தானாகவே நடக்க விடுவது பத்திரமாக இருக்குமா என்ற ஒரு சந்தேகத்தை எழுப்புகிறது.  ஒருவர் உடல்சார்ந்த பணியின் மேல் பாதி கவனம் வைத்துக் கொள்ள வேண்டுமா? 

மகரிஷி.: எல்லாமே ஆன்ம சொரூபம் தான். இப்போது நான் உங்களைக் கேட்கிறேன். நீங்கள் ஆன்ம சொரூபத்தை விட்டு அகன்று இருக்கிறீர்களா? சுய சொரூபத்தை விட்டு அகன்று பணிகள் நடைபெறுமா? அல்லது உடல் சுய சொருபத்தை விட்டு அகன்று இருக்கிறதா? இவை எதுவுமே ஆன்மாவை விட்டு விலகி இருக்க முடியாது. ஆன்ம சுய சொரூபம் எங்கும் நிறைந்தது, உலகளாவியது. எனவே, ஒருவர் தன் விருப்பப்படி பணியில் ஈடுபட்டாலும், ஈடுபடாவிட்டாலும், எல்லா செயல்களும் நடைபெறும். பணிகள் தானாகவே நிகழும். ஆன்ம சுய சொரூபத்தின் மேல் கவனம் செலுத்துவது பணியின் மேல் கவனம் செலுத்துவதாகும்.  

பக்தர்.: நான் வேலையின் மேல் கவனம் செலுத்தாவிட்டால், அது இடர்ப்படும்.
மகரிஷி.: நீங்கள் உங்களை உங்கள் உடலுடன் இணைத்துக் கொண்டிருப்பதால், வேலை உங்களால் செய்யப்படுவதாக நினைக்கிறீர்கள். ஆனால், உடலும் அதன் நடவடிக்கைகளும், வேலையும் கூட, ஆன்மாவை விட்டு அகன்று இல்லை.

நீங்கள் வேலையின் மேல் கவனம் செலுத்தினால் என்ன, செலுத்தாவிட்டால் என்ன? நீங்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நடந்து போவதாக வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒவ்வொரு காலடி மீதும் கவனம் செலுத்துவதில்லை. ஆனாலும், சில நேரத்திற்குப் பிறகு, உங்களை உங்களது சேருமிடத்தில் காண்கிறீர்கள். பார்த்தீர்களா, நடந்து போகும் பணி எப்படி உங்கள் கவனம் இல்லாமலே நிகழ்கிறது என்று? இதே போல் தான் மற்ற வேலைகளும் நடைபெறுகின்றன.  

~~~~~~~~

உரையாடல் 78.

மகரிஷி.: ஆன்ம சொரூப ஞானம் பெறும் வரை எத்தனம் தேவை. அதற்குப் பிறகும் கூட, சுய சொரூபம் தானாகவே தெளிவாக வேண்டும். இல்லையென்றால், ஆனந்தம் பூரணமாக இருக்காது. தன்னிச்சையான நிலை வரும் வரை, ஏதாவது ஒரு விதத்தில் எத்தனம் இருந்தே ஆக வேண்டும்.  

பக்தர்.: எங்களது தினசரி வாழ்க்கை இத்தகைய எத்தனங்களுடன் இணைவொத்ததில்லை.

மகரிஷி.: நீங்கள் செயல்படுவதாக ஏன் நினைக்கிறீர்கள்? இங்கு உங்களது வருகையை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வீட்டை விட்டு ஒரு வண்டியில் சென்று, பிறகு ரயிலில் பயணம் செய்து, பின் இங்கு ரயில் நிலையத்தில் இறங்கி, மீண்டும் ஒரு வண்டியில் வந்து, இந்த ஆசிரமத்தை வந்து அடைந்தீர்கள். உங்களைக் கேட்டால், நீங்கள் தான் இந்த பயணம் முழுவதையும் செய்ததாகச் சொல்கிறீர்கள். இது உண்மையா?  நீங்கள் உள்ளபடி இருந்தவாறே, பயணத்தின் வழி முழுவதும் வண்டிகளும் வாகனங்களும் தான் நகர்ந்துச் சென்றுக் கொண்டிருந்தன என்பது உண்மை இல்லை? அந்த நடமாட்டங்களையெல்லாம் உங்களுடையதாகக் குழப்பிக்கொண்டிருப்பது போல், மற்ற பணிகளைப் பற்றியும் குழப்பம் உள்ளது. அவை உங்களுடையவை இல்லை. அவை கடவுளின் செயல்களாகும். 

~~~~~~~~

உரையாடல் 268.

பக்தர்.: என் பணிகள் என்னுடைய பெரும்பாலான நேரத்தையும் சக்தியையும் உபயோகப்படுத்துகின்றன. பல சமயங்களில் “ஆன்ம சிந்தனையில்”, சுய சொரூப தியானத்தில் ஈடுபடுவதற்கு மிகுந்த சோர்வு உண்டாகிறது.

மகரிஷி.: “நான் செயல்படுகிறேன்” என்ற உணர்வு தான் தடங்கலாகும்.  “நான் யார்?” என்று விசாரியுங்கள். ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள், “செயல்படுவது யார்?” வேலை உங்களை பிணைக்காது. அது தானாகவே நடைபெறும். வேலை செய்வதற்கோ, வேலையை விட்டு விடுவதற்கோ எத்தனம் செய்யாதீர்கள். உங்கள் எத்தனம் தான் பிணைப்பு. எது நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ, அது நடந்தே தீரும்.  
நீங்கள் வேலை செய்யாமல் இருக்கவேண்டும் என்பது உங்கள் தலைவிதியாக இருந்தால், நீங்கள் வேலைக்காக எவ்வளவு தீவிரமாக தேடினாலும், அது கிடைக்காது.  நீங்கள் வேலை செய்ய வேண்டும் என்பது உங்கள் தலைவிதியாக இருந்தால், உங்களால் அதை விட்டு விட முடியாது; நீங்கள் அதில் ஈடுபட நிர்பந்தப்படுத்தப்படுவீர்கள். எனவே உயர்வான சக்தியிடம் விட்டுவிடுங்கள். நீங்கள் உங்கள் இஷ்டப்படி பிடித்துக் கொள்ளவோ நிராகரிக்கவோ முடியாது

~~~~~~~~

உரையாடல் 227.

மகரிஷி மலையிலிருந்து இறங்கி வந்துக் கொண்டிருந்த போது, பணியாளர் ஒருவர் ஆசிரமத்திற்கு சற்று வெளியில், தம்முடைய வேலையை நிறுத்திவிட்டு, மகரிஷிக்கு நமஸ்காரம் செய்ய விழைந்தார்.

அப்போது மகரிஷி சொன்னார் : “உன்னுடைய கடமையில் ஈடுபடுவது தான் உண்மையான நமஸ்காரம்.”

அப்போது மகரிஷியின் உதவியாளர் கேட்டார்: “அது எப்படி?”

மகரிஷி.: தனது கடமையை கவனத்துடன் செய்வது தான் கடவுளுக்கு அளிக்கும் மிக்க உயர்வான சேவையாகும். 
(பிறகு புன்சிரித்தவாறே மகரிஷி கூடத்திற்குள் நுழைந்தார். )

~~~~~~~~

உரையாடல் 535.

ஒருமுறை அண்ணாமலை சுவாமி ஒரு கேள்வி கேட்டார்: தினந்தோறும் வேலையில் ஈடுபட்டிருக்கும்போது, தெய்வத்தை வழிபடும் மன நிலையில் இருப்பது எப்படி? 
மகரிஷி பதில் அளிக்க வில்லை. பத்து நிமிடங்கள் கழிந்தன.  

சில சிறுமிகள் பகவானின் தரிசனம் பெற வந்தனர். அவர்கள் பாடவும் நடனமாடவும் தொடங்கினர். அவர்களது பாடலின் பொருள் என்னவென்றால், “நாங்கள் கிருஷ்ணரின் நினைவை இழக்காமலே, மோர் கடைவோம்.”

மகரிஷி சுவாமியின் பக்கம் திரும்பி, அவரது கேள்விக்கு இது தான் பதில் என்று சொன்னார். இதற்குப் பெயர் தான் பக்தி, யோகா, கர்மா என்றும் சொன்னார். 

~~~~~~~~

உரையாடல் 653.

பக்தர்.: நாங்கள் எங்கள் கடமையைச் செய்ய வேண்டுமா இல்லையா? 

மகரிஷி.: ஆமாம் – நிச்சயமாக. நீங்கள் உங்கள் கடமையை செய்யாமல் இருக்க முயன்றால் கூட, நீங்கள் அதைச் செய்ய நிர்பந்தப்படுத்தப்படுவீர்கள். உடல் எந்த பணிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளதோ, அந்தப் பணி பூர்த்தி செய்யப்படட்டும். 

திரு கிருஷ்ணரும் கீதையில் சொல்கிறார், அர்ஜுனர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவர் போரில் ஈடுபட நிர்பந்தப்படுத்தப்படுவார். உங்களால் செய்யப்பட வேண்டிய வேலை இருந்தால், உங்களால் அதை விட்டு அகல முடியாது. அதோடு, உங்களால் வேலை செய்யப்படவேண்டிய தேவை இல்லையென்றால், அதாவது, உங்களுக்காக வரையறுக்கப்பட்ட பணி செய்து முடிக்கப்பட்டவுடன், அதைத் தொடர்ந்து உங்களால் செய்ய இயலாது. சுருங்கச் சொன்னால், பணிகள் நடைபெற்றுச் செல்லும், அதில் உங்கள் பங்கை, உங்களுக்கு அளிக்கப்பட்ட பங்கை, நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். 

பக்தர்.: வேலை எப்படி செய்யப்பட வேண்டும்? 

மகரிஷி.: ஒரு நடிகர், விருப்பு வெறுப்பு எதுவும் இல்லாமல், ஒரு நாடகத்தில் தனது கதாபாத்திரத்தை நடிப்பது போல்.

"நான் செய்கிறேன்" என்ற மனநிலை இல்லாமல் பணிகள் செய்வது எப்படி
ரமண மகரிஷி : தன்னலமற்ற பணி புரிதல்
தியானத்திற்கு பணிகள் தடங்கல் இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!